என் மலர்
மேற்கு வங்காளம்
- டாஸ் வென்ற பெங்களுரு பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கொல்கத்தா 204 ரன்களை குவித்தது.
கொல்கத்தா:
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரஹமதுல்லா குர்பாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து திணறியது.
அடுத்து இறங்கிய ரிங்கு சிங், ஷர்துல் தாக்குர் ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
குறிப்பாக, ஷர்துல் தாக்குர் 20 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரிங்கு சிங் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் 32 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியில் மிரட்டிய ஷர்துல் தாக்குர் 29 பந்தில் 3 சிச்கர், 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்குகிறது.
- மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
- காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார்.
இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென்று ராஜூஜா சென்ற காரை வழிமறித்தனர். உடனே கார் நிறுத்தப்பட்டது.
உடனடியாக மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜூஜா பலத்த காயம் அடைந்தார். மேலும் துப்பாக்கி சூட்டில் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
உயிருக்கு போராடிய ராஜூஜா மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜூஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தை பர்த மான் போலீஸ் சூப்பிரண்டு கம்னா சிங் சென் பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டார். ராஜூஜாவை கொன்ற மர்மநபர்கள் யார்? அவர் எதற்காக கொல்லப் பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் நடந்த உடனேயே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி காலத்தில் ராஜூஜா சட்டவிரோதமாக நிலக்கரி வர்த்தகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
- மோதலின் போது சிலர் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- ஊழல் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுவதாக பேசினார்
- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.
கொல்கத்தா:
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
முதல் நாளான இன்று கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது, மேடையில் வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, அந்த வாஷிங் மெஷினில் கருப்பு துணியை போட்டால் வெள்ளையாக மாறும் என்று கூறி, ஒரு துணியை போட்டு, வெள்ளை துணியை எடுத்து காட்டுகிறார். அப்போது "வாஷிங் மெஷின் பாஜக" என திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "பாஜக வாஷிங் மெஷினாக மாறிவிட்டது. ஊழல் செய்தவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் பட்டியலை தயார் செய்தால், அவர்கள் அனைவரும் அங்கே (பா.ஜ.க.வில்) இருப்பதை பார்க்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய அவர்களின் பிரசங்கங்களை நான் கேட்க வேண்டுமா?
முதல்வரின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
- நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்தார்.
- ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
கொல்கத்தா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, திரவுபதி முர்முவை 'தங்க மங்கை' என வர்ணித்தார். மேலும் அவர் பேசியதாவது:
பல்வேறு சமூகங்கள், சாதிகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாடு கொண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியலமைப்பின் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டு ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒரு பேரழிவில் இருந்து இதை பாதுகாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
- ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக மம்தா பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சிகள்தான் பாஜக-வின் முக்கிய இலக்காக உள்ளது. மத்திய அமைச்சரவையில் கிரிமின்னல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.' என மம்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- மத்திய அரசின் பட்ஜெட்டில் மேற்கு வங்காளத்திற்கு எதுவும் அளிக்கவில்லை.
- மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா:
ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்ட மெகுல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இனி அந்த ஆபத்து அவருக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
100 நாட்கள் வேலைக்கான உரிய தொகையை தராமல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுடைய மாநிலத்திற்கு என்று எதுவும் அளிக்கப்படவில்லை.
அதனால் மேற்கு வங்காள மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து வரும் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தப்படும்.
ஒரு சில நபர்களே இந்த நாட்டை நடத்திச் செல்கின்றனர். அதானி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் அவர்களது சிறந்த நண்பர்களாக உள்ளனர். அந்த மக்களுக்காக மட்டுமே பா.ஜ.க. வேலை செய்து வருகிறது என தெரிவித்தார்.
- ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
- காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.
பகரம்பூர்:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி-சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரசை மம்தாபானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். முர்ஷிதா பாத் மாவட்டத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் அவர் தொலைபேசியில் தொண்டர்களிடம் கூறியதாவது:
ராகுல்காந்தியில் கருத்தால் பாராளுமன்றத்தை முடக்கி அவரை ஹீரோவாகும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுகிறது. தனது சொந்த நலனுக்காக பா.ஜனதா அப்படி செய்கிறது. ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள காவி முகாம் முன் ஒரு மறைமுகமான புரிதலுடன் அந்த கட்சி இருக்கிறது.
காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியதாக திரினாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
- முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசாங்கத்தை நவ்சாத் சித்திக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அகவிலைப்படியை உயர்த்த கோரி மாநில அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. நவ்சாத் சித்திக் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அப்போது வாலிபர் ஒருவர் எம்.எல்.ஏ.வை மறித்து தகராறு செய்து கன்னத்தில் அறைய முயன்றார். பின்னர் நவ்சாத் சித்தித்தை தள்ளி விட்டார். உடனே அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தாக்கினர். போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
முதல்-மந்திரி மம்தாபானர்ஜி அரசாங்கத்தை நவ்சாத் சித்திக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த பேரணியின் போது அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி கோப்பை வென்றது.
கொல்கத்தா:
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியும், பெங்களுரு எப்.சி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியின் 14வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடஸ் முதல் கோல் அடித்தார்.
முதல் பாதியின் முடிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 5வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடஸ் 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- கொல்கத்தாவில் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
- மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.
கொல்கத்தா:
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இந்த கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமான தூரத்தில் வைக்க வேண்டும் என்றே இந்த தலைவர்கள் விரும்புகின்றனர்.
- உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
- ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,
குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.
கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.






