என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிற்றுந்து சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
    • சிலர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட காலத்திற்கு சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால், பல லட்சம் பேர் மெரினாவில் திரண்டனர். விமான சாகச நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இறுதியில் அரங்கேறிய கூட்ட நெரிசல், உயிரிழப்பு பொது மக்களை கொதிப்படைய செய்ததோடு, பல கேள்விகளை கேட்க செய்துள்ளது.



    மாநில தலைநகரில் கேளிக்கை நிகழ்வொன்று ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது? யார் யார் என்னென்ன கூறினார்கள்? கலந்து கொண்டவர்கள் கூறியது என்ன? குளறுபடிகளுக்கு காரணம் என்ன?

    விமான சாகச நிகழ்ச்சியில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளலாம், அதற்குரிய ஏற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம் என்று விமானப்படை துணை தளபதி தெரிவித்து இருந்தார்.

    சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. எனினும், சிற்றுந்து சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று அங்கு வந்தவர்களில் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சாகச நிகழ்ச்சியை காண வருவோருக்கு மெட்ரோ ரெயில்வே சார்பில் முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் இயக்கப்பட்டன. இதனால் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


     

    மெட்ரோ போன்றே புறநகர் ரெயில் சேவையும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் இயக்கப்பட்டன. அதிக கால இடைவெளியியில் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டதால், ரெயில் நிலையங்களில் மக்கள் நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் ரெயில்களில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் சிலர் தண்டவாளங்களில் ஆபத்தை உணராமல் நடந்து சென்றனர்.

    மக்கள் கூட்டம் அதிகரித்து வந்த போதிலும், அவர்களை கட்டுப்படுத்த போதுமான தடுப்புகள், காவலர்கள் இல்லாதது, நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என நிகழ்ச்சியை காண வந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதோடு நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு அதிக இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றும் நிகழ்ச்சி முடிந்து வெளியேறுவதற்கு போதுமான வழிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

     மக்கள் கடற்கரையை விட்டு வெளியேற அதிகளவில் வெளியேறும் வழித்தடங்கள் அமைக்கப்படாதது, பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

    சாகச நிகழ்ச்சிக்காக பல்வேறு அரசு துறைகள் இணைந்து செயல்பட்டன. அதீத வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளால் தான் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறும் போது, "விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் டேன்க் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது என்றார்.

    பல லட்சம் பேர் கூடுவார்கள் என்ற இடத்தில் அத்தியாவசிய வசதிகளுக்கு போதிய முன்னேற்பாடுகளை செய்ய தவறியது, நிகழ்ச்சியை காண வந்தவர்களை ஒழுங்குப்படுத்த தவறியது, நிகழ்ச்சிக்கு பிறகு பொது மக்கள் நடந்து வெளியே செல்லும் பாதையிலேயே வாகனங்களை அனுமித்தது, அதே பாதையில் அரசு அதிகாரிகள் வாகனங்கள் கடந்து செல்ல முற்பட்டது என சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் அங்கிருந்து பத்திரமாக வீடு திரும்புவதே சாகசமாகி போனது!! 

    • பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம்
    • ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயம்

    சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

    மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என்றும், இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். 'கியூ ஆர்' கோடு மூலமாகவும் நுழைவுச்சீட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு - ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள்.
    • திமுக அரசுக்கு என்னுடைய வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படையின் வீர தீர செயல் நிகழ்ச்சியின்போது கூட்டநெரிசலில் சிக்கி, உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு ஐந்துபேர் உயிரிழந்திருக்கிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பதும், வீர தீர நிகழ்ச்சி ஐந்து உயிர்களின் பேரிழப்போடு நிறைவுபெற்றிருப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்."

    "15 இலட்சம் பார்வையாளர்களை வரவழைத்து, அதிகப்படியாகப் பார்க்கப்பட்ட வான்படை வீர தீர நிகழ்ச்சியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அவ்வளவு இலட்சம் பேருக்கான முன்னேற்பாட்டை செய்யாத மாநிலத்தை ஆளும் திமுக அரசின் நிர்வாகத்தோல்வியே ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஓரிடத்திலே இத்தனை இலட்சத்துக்கும் மேலான மக்கள் கூடினால், அங்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இலவசக் குடிநீர், கழிவறை வசதிகள், முதியோர்-பெண்கள்-குழந்தைகளுக்கான குடில்கள், போக்குவரத்து ஒழுங்கு, மருத்துவ ஏற்பாடுகள், போதிய மீட்புக்குழுக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் சரிவர அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படாததே மக்களைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, ஐந்து உயிர்களைப் போக்கியிருக்கிறது."

    "ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும், பொதுக்கூட்டத்துக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, கெடுபிடி செய்யும் ஆட்சியாளர் பெருந்தகைகள், கடற்கரையில் 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள் எனும் அடிப்படைக்கேள்விக்கு என்னப் பதிலுண்டு? ஒக்கி புயலில் சிக்குண்டு எங்கள் மீனவச் சொந்தங்கள் நடுக்கடலில் தத்தளித்தபோது வராத வான்படை, குரங்கணி காட்டுத் தீவிபத்தில் மாட்டிக்கொண்ட எங்கள் பிள்ளைகளை மீட்க வராத உலங்கு ஊர்திகள், இப்போது கடற்கரையில் வேடிக்கைக் காட்டுவதன் மூலம் தமிழினத்திற்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன? கடந்த 29ஆம் தேதி அன்று வான்படை துணைத் தளபதி ஊடகத்தினரிடம் 15 இலட்சம் மக்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்யவிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிற நிலையில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்துவிட்டது என்று இன்று திசை திருப்புவதன் காரணம் என்ன?"

    "'திராவிட மாடல்' என தற்பெருமை பேசும் திமுகவின் ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், வன்முறைத்தாக்குதல்கள், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம், வரைமுறையற்ற மது, கள்ளச்சாராயம் என சட்டம்-ஒழுங்கு ஒருபக்கம் சந்தி சிரிக்கையில், மறுபக்கம், மக்கள் ஒன்றுகூடும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வைக்கூட உயிரிழப்பு இல்லாது நடத்த வக்கற்று அரசின் நிர்வாகம் தறிகெட்டு நிற்கிறது. விடுமுறை நாளில் மனமகிழ்வடைய கேளிக்கைக்காக கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் பிணமாய் வீடுதிரும்புவதென்பது ஏற்கவே முடியாதப் பேரவலம்; சகிக்கவே முடியாத பெருங்கொடுமை. மொத்தத்தில், ஐந்துபேரின் மரணமென்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலையாகும். நாடு தழுவிய அளவில் கவனம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக்கூட சரிவர ஒருங்கிணைத்து நடத்தத் தவறிய ஆளும் திமுக அரசுக்கு என்னுடைய வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • ஒத்துழைப்பு, வசதிகளை செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது.
    • இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நேற்றைய சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் வந்ததே நெரிசல் ஏற்பட காரணம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "சென்னையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது."

    "விமான சாகச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது."

    "இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்,". என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நேற்றைய சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

    "இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன."

    "இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களாய் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    நேற்று சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையம் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


    • வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள்.
    • 5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    விமானப் படையினர் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் மரணம் நிகழாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இது தமிழக அரசுக்கு படிப்பினை.

    கடந்த காலங்களில் மாலை நேரத்தில் தான் விமான கண்காட்சி நடந்தது. ஆனால் நேற்று உச்சி வெயிலில் விமான சாகசம் நடந்தது ஏன் என்பது தான் எங்களுடைய கேள்வி?

    தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும்.

    வெயில் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியும். அப்படி இருக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய உச்சி வெயிலில் எதற்காக சாகசம் நடந்தது என்று விமானப் படை தெளிவுபடுத்த வேண்டும்.

    15 லட்சம் பேரும் ஒரே இடத்தில் கூடிய இடத்திலோ அல்லது செல்லும்போதும் மரணம் அடையவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் ஒருமுறைக்கு, பல முறை யோசித்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை. பாதுகாப்பு வசதி சரியாக செய்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமானப்படைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது.
    • உச்சி வெயில் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியானதை நியாயப்படுத்த முடியாது.

    * விமானப்படைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

    * உச்சி வெயில் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

    * இதுபோன்ற மரணங்கள் நடக்க தமிழக அரசு இனிமேல் வாய்ப்பு கொடுக்கக்கூடாது.

    * விசாரணை ஆணையம் அமைத்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.

    * உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    * உயிரிழந்தோரின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும் என்று அவர் கூறினார்.

    • கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
    • உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

    சென்னை:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை.

    கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

    2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    டி சர்ட் பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது டி சர்ட் போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது டி சர்ட் போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

    கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்." என்று அவர் கூறினார்.

    • 5 பேர் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னும் வரவில்லை.
    • அதிமுக ஆட்சியில் 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.

    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வான்சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் பலியான விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.

    * 5 பேர் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னும் வரவில்லை.

    * ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தின்போது 6 பேர் உயிரிழந்த வரலாறு உள்ளது. அதனால் உயிரிழப்பில் அரசியல் செய்யாதீர்.

    * மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தரப்பட்டது.

    * அதிமுக ஆட்சியில் 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.

    * கும்பகோணம் மகாமக நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்களே? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம்.

    விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதற்கேற்றார் போல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

    தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை, மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோருக்கு கவலையாக உள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ.3000 கோடி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம். அது திருமாவளவன், முதல்-அமைச்சர் இணைந்து அரங்கேற்றிய நாடகம் தான். வெளிநாடு சென்று உரிய முதலீடுகளை கொண்டு வராததால் முதல்-அமைச்சர், திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    கனிமொழி டுவிட்டர் பதிவில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்து கூறியுள்ளார். தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் சொல்லியிருக்கிறார்.

    கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மக்கள் சுதந்திரமாக நடமாடு கிறார்கள். சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.

    வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன் முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • காவல் நிலையம் திறக்கப்பட்டு இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    திருப்பூர் மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்தது.


    இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையம் மற்றும் தெற்கு மகளிர் காவல் நிலையம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக புகார் அளிக்கவும், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும் ஏராளமானோர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து சென்றனர். போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் புதிய காவல் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 7000 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாக கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வீரபாண்டி காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    ×