என் மலர்
ராஜஸ்தான்
- காரை நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- கார் மூலம் நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு.
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
- ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
இதை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த அந்த கட்சியின் பல தலைவர்கள் விலகினார்கள். கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரை மேற் கொண்டு வருகிறார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் 24 முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8-ந்தேதி யாகும். தேவைப்பட்டால் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும். முடிவுகள் அக்டோபர் 19-ந்தேதி வெளியாகும்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் டெல்லியில் இருந்ததால் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தியை தலைவராக்கும் தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. மற்ற மாநில காங்கிரஸ் குழுக்கள் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது.
- சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது அவர்கள் ஆய்வு செய்ததில் சிறுமி 60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது. பின்னர், மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையின் குழுக்கள் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது.
ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பின் தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது. சிறுமிக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் சிறுமியை உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தௌசா மாவட்ட ஆட்சியர் கும்மர் உல் ஜமான் சவுத்ரி தெரிவித்தார்.
- ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
- அசோக் கெலாட் அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர் :
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் நேற்று, பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்திய ஒற்றுமை பயணத்தில் அவர்களுக்கு (பா.ஜனதாவினர்) என்ன பிரச்சினை? அவர்கள் ரூ.2½ லட்சத்துக்கான மூக்கு கண்ணாடியும், ரூ.80 ஆயிரத்தில் மப்ளரும் அணிந்து கொண்டு, ராகுல் காந்தியின் டி-ஷர்ட் குறித்து பேசுகிறார்கள். உள்துறை மந்திரி அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம்' என தெரிவித்தார்.
பா.ஜனதாவினர் டி-ஷர்ட் அரசியல் செய்வதாக சாடிய அசோக் கெலாட், இந்திய ஒற்றுமை பயணத்துக்கு கிடைத்து வரும் சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
- மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வலுவிழந்து இருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். இதன் காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை கிழக்கு ராஜஸ்தானில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
- வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.
ஜோத்பூர்:
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:
இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.
- திருமணம் நடந்த நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டுள்ளது.
- திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் வினோத வழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும். ராஜஸ்தானில் இது ஒரு சமூக நடைமுறையாக குகடி பிரடா என்ற பெயரில் இருந்து வருகிறது.இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என போலீசில் புகார் அளித்து உள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டுகின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார்.
அவருக்கு பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி திருமணம் நடந்து உள்ளது. இதன்பின், அதே நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு உள்ளது. கன்னித்தன்மை சோதனையில் அவர் தோல்வி அடைந்துள்ளார். அதன்பின்னர், இரவு வரை மணமகன் வீட்டாரின் விவாதம் நீடித்து உள்ளது. பயத்தில் அந்த பெண் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் அடித்து உள்ளனர்.
அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பற்றி அறிந்ததும், கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவரது கணவன் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். பின்னர் இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. மே 31-ந்தேதி கோவிலில் நடந்த பஞ்சாயத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.
இதுபற்றி தனது கணவர், உறவினர்களுக்கு எதிராக அந்த பெண், போலீசில் கடந்த சனிக்கிழமை புகார் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது.
- நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலையில் வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது. பின்னர் அவர்கள் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ஓரிடத்தில் அமரவைத்தனர்.
பின்னர் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 23 கிலோ தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றை சில நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் சிட்டாக பறந்து சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த மிகப்பெரும் கொள்ளையால் அதிர்ச்சியில் உறைந்த நிதி நிறுவன அதிகாரிகள், பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை தாக்குவது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை கைது செய்யும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டனர். குறிப்பாக நகர எல்லைகளை மூடி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
- அதன் காரணமாக இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார்.
இது குறித்து ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:
ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.
நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் (ராகுல் காந்தி) இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும்.
கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார்.
சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ்.
கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளனர்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளனர்.
- ராகுல் காந்தி தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்திக்குத்தான் கட்சியில் ஒருமித்த ஆதரவு உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை கருதி, அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
பெரும்பாலானோர் வீட்டிலேயே உட்கார்ந்து விடுவார்கள். அது கட்சிக்கு பாதிப்பாகி விடும். நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் கடந்த 32 ஆண்டுகளாக பிரதமராகவோ, மத்திய மந்திரியாகவோ, முதல்-மந்திரியாகவே ஆனது இல்லை. பிறகு ஏன் மோடி, அக்குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்?
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது. காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது மற்றொரு வாகனம் மோதல்.
- படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வாகனம் ஒன்று மோதியதாக சுமேர்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஷ்வர் பாடி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. துயரமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
- மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.
ஜெய்பூர்
பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.
மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.






