என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • திருமணம் நடந்த நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டுள்ளது.
    • திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் வினோத வழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும். ராஜஸ்தானில் இது ஒரு சமூக நடைமுறையாக குகடி பிரடா என்ற பெயரில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என போலீசில் புகார் அளித்து உள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டுகின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார்.

    அவருக்கு பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி திருமணம் நடந்து உள்ளது. இதன்பின், அதே நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு உள்ளது. கன்னித்தன்மை சோதனையில் அவர் தோல்வி அடைந்துள்ளார். அதன்பின்னர், இரவு வரை மணமகன் வீட்டாரின் விவாதம் நீடித்து உள்ளது. பயத்தில் அந்த பெண் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் அடித்து உள்ளனர்.

    அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பற்றி அறிந்ததும், கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவரது கணவன் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். பின்னர் இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. மே 31-ந்தேதி கோவிலில் நடந்த பஞ்சாயத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.

    இதுபற்றி தனது கணவர், உறவினர்களுக்கு எதிராக அந்த பெண், போலீசில் கடந்த சனிக்கிழமை புகார் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது.
    • நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலையில் வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது. பின்னர் அவர்கள் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ஓரிடத்தில் அமரவைத்தனர்.

    பின்னர் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 23 கிலோ தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றை சில நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் சிட்டாக பறந்து சென்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த மிகப்பெரும் கொள்ளையால் அதிர்ச்சியில் உறைந்த நிதி நிறுவன அதிகாரிகள், பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை தாக்குவது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை கைது செய்யும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டனர். குறிப்பாக நகர எல்லைகளை மூடி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
    • அதன் காரணமாக இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

    வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார்.

    இது குறித்து ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

    ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.

    நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் (ராகுல் காந்தி) இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும்.

    கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார்.

    சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ்.

    கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளனர்.

    இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளனர்.

    • ராகுல் காந்தி தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

    இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்திக்குத்தான் கட்சியில் ஒருமித்த ஆதரவு உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை கருதி, அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.

    பெரும்பாலானோர் வீட்டிலேயே உட்கார்ந்து விடுவார்கள். அது கட்சிக்கு பாதிப்பாகி விடும். நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் கடந்த 32 ஆண்டுகளாக பிரதமராகவோ, மத்திய மந்திரியாகவோ, முதல்-மந்திரியாகவே ஆனது இல்லை. பிறகு ஏன் மோடி, அக்குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்?

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது. காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது மற்றொரு வாகனம் மோதல்.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வாகனம் ஒன்று மோதியதாக சுமேர்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஷ்வர் பாடி தெரிவித்துள்ளார். 


    இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானின் பாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. துயரமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.

    ஜெய்பூர்

    பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.

    மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.

    • தலித் சிறுவன் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.
    • சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் தினமும் நடக்கின்றன.

    லக்னோ :

    ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.

    9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.

    இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இதுபோன்று வலி ஏற்படுத்தும் சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய தினமும் நடக்கின்றன. தலித் மக்கள் உள்ளிட்டோரின் உயிர், கவுரவத்தை காக்க காங்கிரஸ் அரசு தவறுவதையே சிறுவனின் சாவு காட்டுகிறது. எனவே ராஜஸ்தானில் தற்போதைய அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
    • ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது.

    இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.

    சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    ஜெய்ப்பூர் :

    நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று ஒன்று கூடி தேசபக்தி பாடல்களை பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று ஒரு கோடி மாணவர்கள் 25 நிமிட நேரம் வந்தே மாதரம், சரே ஜஹான் சே ஆச்சா, தேசிய கீதம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள்.

    இது உலக சாதனையாக நேற்று பதிவாகி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், "லண்டனில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, மாநில அரசிடம் சான்றிதழை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது, "புதிய தலைமுறையினர் சகோதரத்துவம், தியாகம் ஆகிய விழுமியங்களைப் புகுத்த வேண்டும், அதுவே நாட்டின் எதிர்காலம் ஆகும்" என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும்.

    இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் இன்று இந்த கோவிலில் கியாரஸ் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்படும் கட்டு ஷியாம்ஜியை இன்று தரிசனம் செய்தால் சிறப்பானது என்று நம்பப்படுகிறது.

    இதையடுத்து இந்த கோவிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் கூடி இருந்தனர். கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர்.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் முண்டியடித்த படி கோவிலுக்குள் நுழைந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் விழுந்த போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 2 பெண்களும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கட்டு ஷியாம்ஜி கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்கள் துயரம் அடைந்த குடும்பங்கள் மீது உள்ளன' என்று கூறி உள்ளார்.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'சிகாரில் கட்டு ஷியாம்ஜி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது மிகவும் சோகமானது, துரதிருஷ்டவசமானது.

    அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
    • மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

    ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.

    ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பலியாகினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    இரவு 9 மணியளவில் அந்த போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது. விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் பலியாகினர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    விமான விபத்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

    ×