என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
    • இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.

    சவாய் மாதோபூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

    இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர்.
    • யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த 100-வது நாள் யாத்திரையில், இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்-மந்திரிமுகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருதாகத் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா, இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல்காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

    ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
    • 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண விருந்துக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன.

    இதில் திருமணம் நடந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிலிண்டர்கள் வெடித்ததில் ரத்தன்சிங் என்ற 5 வயது சிறுவனும், குஷ்பு என்ற 4 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

    சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கியாஸ் சிலிண்டர்களால் ஏற்பட்ட கசிவு காாரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குப்தா கூறும்போது, "இது மிகவும் மோசமான விபத்து. காயமடைந்த 50 பேரில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதி எம்.பி.யுமான கஜேந்திரசிங் செகாவத் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    காயம் அடைந்தர்களை இன்று மாலை முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார்.

    • சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார்.
    • ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இருந்து 92 -வது நாளாக தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்தில் அவர் 17 நாட்கள் 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புந்தாவில் தங்குகிறார்.

    இந்தநிலையில் சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.

    சோனியா காந்திக்கு நாளை பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதையொட்டி ராகுல்காந்தி நாளை நடை பயணம் செல்லவில்லை. நாளை மறுநாள் ( 10-ந்தேதி) மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.

    • தேர்தல் வாக்குறுதியின்டி நாங்கள் சொன்னதை செய்வோம் என ராகுல் காந்தி பேசினார்.
    • 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். பல மாநிலங்களில் சுமார் 2,400 கி.மீ. தூரத்தைக் கடந்து தற்போது 90 நாளைக் கடந்து ராஜஸ்தானில் அவரது நடைபயணம் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுகிறது.

    அங்கு 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    ராஜஸ்தானில் 8 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தும் அதனை நிறைவேற்றவில்லை.

    அந்தத் திட்டத்தினை மாநில அரசு தனது சொந்த நிதியில் செயல்படுத்த திட்டமிட்டபோதும் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.

    • சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
    • அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.

    ஜாலாவர்:

    கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது: 


    தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.

    வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1

    1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போலீசார் விசாரணையில் கூலிப்படை மூலம் கணவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • மனைவியை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு.

    கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி ஷாலு தனது உறவினர் ராஜூவுடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதை போலீசார் சாலை விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கும் நிறைவு பெற்றுவிட்டது.

    இதற்கிடையே ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூ.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இந்த விவரம் போலீசாருக்கு தெரிந்தபோது விபத்து வழக்கை மீண்டும் விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் அது விபத்து அல்ல என்றும், மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும், தெரியவந்தது.

    தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அவர் சாலை விபத்து போல நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

    கூலிப்படை மூலம் அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

    • பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இந்தியா வருகை
    • இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் இதில் கலந்து கொள்கின்றன.

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் முதன்முறையாக இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழு ராஜஸ்தான் சென்றடைந்தது.

    நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும்.

    இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிய உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • டீசல் இல்லாததால் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சை நோயாளி உறவினர்கள் தள்ளிச் சென்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா (40). நேற்று வீட்டில் இருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. டீசல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் மயக்க நிலையில் இருந்த தேஜ்யா ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடு வழியில் நின்றதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்றதால் ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளும் பயிற்சியில் ஈடுபட்டன.
    • சுகோய், ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் பங்கேற்பு.

    இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்று வந்தது.

    கருடா-VII என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பிரான்ஸ் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் அம்சங்களுடன் கூடிய போர் விமானம் போன்றவைகள் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும்,மி-17 ரக ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. 


    இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே தொழில் முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத் திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பயிற்சியின் போது இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப் போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழலை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன்.
    • அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன்.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார். 

    பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.

    "காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்ட மீரா தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.

    இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.

    கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.

    • சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன.
    • கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான்.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது. குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.

    ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.

    இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது.

    ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.

    இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.

    கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    ×