என் மலர்tooltip icon

    ஒடிசா

    • அக்னி 4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
    • அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    புவனேஷ்வர்:

    இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

    அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    • சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
    • கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகளுக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 -த்தை கடந்துள்ளது.
    • ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம் இன் மனைவி ஜிங்கியா [58 வயது] டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சலுக்கு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜூல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரம்-ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
    • ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார்.

    அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் கராக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
    • ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    எனது பெற்றோரின் காதல் கதை என்று ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    சமீர் ரிஷூ மொஹந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெற்றோரை பற்றிய மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.

    அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் ஜப்பானை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த மொஹந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், எனது தாயார் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஒடிசா மாநிலம் பூரி பகுதிக்கு வந்த அவருக்கு அந்த பகுதி மிகவும் பிடித்துப் போனது. இதனால் படிப்பை முடித்த பிறகு பூரியில் குடியேற விரும்பிய அவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் போதிய வருமான ஆதாரம் இல்லை. எனவே பூரி பகுதியில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டல் கட்ட விரும்பினார்.

    ஆனால் எனது தாய் வெளிநாட்டவர் என்பதால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. அப்போது தான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு ஓட்டலை கட்டினர். அந்த ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    இந்த ஓட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மை தான் என்று முடித்தார். அவரது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

    • ஒடிசா கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
    • ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பிறகு இன்று சட்டசபை கூடியது. ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உரையுடன் சட்டசபை தொடங்கியது. அப்போது கவர்னரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து பிஜு தனதா தளம் கட்சியினர் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராம சந்திர கதம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸின் மகன் லலித் தாஸ் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், "அரசு அதிகாரி மீது வன்முறையில் ஈடுபட்ட கவர்னரின் மகன் மீது பாஜக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ஒடிசா கவர்னரின் மகன் லலித் குமார் தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை பொறுப்பு அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாண்டியன் கட்சியை பிளவுப்படுத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
    • மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் பட்நாயக் உறுதி அளித்ததாக செய்தி வெளியானது.

    ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பாண்டியன் முக்கிய காரணம் என பிஜு ஜனத தளம் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே கட்சியை பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலங்களவையில் பாஜவு-க்கு ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பாண்டியன் குறித்த தகவல் முற்றிலும் பொய் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில் "இது முற்றிலும் பொய், அவதூறு, விளைவை ஏற்படுத்தக்கூடியது. நான் முன்னதாக கூறியதுபோல் அதிகாரியாக பணியாற்றிய போதும், கட்சியில் பணியாற்றியபோதும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றியுள்ளார். அதற்காகவே அறியப்பட்டவர். மதிக்கப்படுகிறார். பாண்டியனுடன் விசயத்தில் அவரை வைத்து விளையாட வேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கேட்டுக்கொள்கிறேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பிஜு ஜனதா தளம் மாநிலங்களவையில் பாஜக-வுக்கு ஆதரவு கொடுக்கும் என அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக துணைத்தலைவர் பிரஞ்சி நாராயன் திரிபாதி "பாஜக பிஜு ஜனதா தளத்திடம் இருந்து உதவி கேட்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் மெஜாரிட்டி உள்ளது" என்றார்.

    • அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது.

    இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு வாக்கில் இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு (விம்சார்) பரிந்துரைக்கப்பட்டார்.

    விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரெஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

    "இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது," என்று விம்சார் மருத்துவமனை இயக்குநர் பாப்ராஹி ரத் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் விருது.
    • முன்னாள் முதல் மந்திரி பிஜு பட்நாயக் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் துணிச்சலான விருது. இது ஒடிசா மக்கள் நிகழ்த்திய அற்புதமான துணிச்சலான செயல்களை அங்கீகரிக்கிறது.

    ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி மறைந்த பிஜு பட்நாயக்கின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது வாழ்நாளில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் பல துணிச்சலான செயல்களை வெளிப்படுத்தினார்.

    பிஜு பட்நாயக் விருது ஆண்டுதோறும் மிகச்சிறந்த துணிச்சலான செயலுக்காக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் பிஜு பட்நாயக் விருது இனி ஒடிசா ராஜ்ய கிரிடா சம்மான் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்காக ரூ.3 லட்சம், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரூ. 2லட்சம் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர்.
    • கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    புரி:

    ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் (ரத்ன பண்டார்) கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை கடைசியாக கடந்த 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு இருந்தது.

    இந்த சூழலில் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜனதா அரசு ரத்ன பண்டாரை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டது.

    சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர். அன்றைய தினம், ரத்ன பண்டாரின் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைத்து தற்காலிக ரகசிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் ரத்ன பண்டார் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரசின் உயர்மட்டக்குழுவினர் காலை 9.51 மணிக்கு ரத்ன பண்டாரை திறந்தனர்.

    அதன் பின்னர் ரத்ன பண்டாரின் உட்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக ரகசிய அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

    ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவின் தலைவரும், ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் வைத்த கோரிக்கையின் பேரில் புரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேப், ரத்ன பண்டாரில் இருந்து தற்காலிக ரகசிய அறைக்கு ஆபரணங்கள் மாற்றப்பட்டதை நேரில் ஆய்வு செய்தார்.

    இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் ரத்ன பண்டாரில் பாம்புகள் இருக்கலாம் என நம்பப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    ரத்ன பண்டாரின் உள்அறையில் இருந்து ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மாற்றும் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய உடையுடன் ரத்ன பண்டாருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக பூரி கலெக்டர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் தெரிவித்தார்.

    ×