என் மலர்
நாகலாந்து
- தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
- போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
'கூகுள் மேப்' மூலமாக வழி தவறி சென்றதால், ஏரிக்குள் கார் பாய்ந்தது, ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிள் மூழ்கியது என பல விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 'கூகுள் மேப்' மூலமாக திருடனை பிடிக்க வந்த போலீசாருக்கே தொழிலாளர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் நாகாலாந்தில் அரங்கேறி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட தனிப்படை போலீசார், கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு திருடனை தேடி வந்தனர். இதில் 3 பேர் மட்டுமே சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் சாதாரண உடையில் சென்றனர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் திருடன் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆனால் போலீசாருக்கு, அந்த தேயிலைத்தோட்டம் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. உடனே 'கூகுள் மேப்' உதவியை நாடினர். அது தவறாக வழிகாட்டியதால் நாகாலாந்து மாநிலம் மோகோக்சங் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் போலீசார் வழிதவறி சென்று விட்டனர்.
அங்கிருந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களிடம் கொள்ளையன் பற்றி விசாரித்தனர். ஆனால் போலீசாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அங்கிருந்த தொழிலாளர்கள் போலீசாரை நையப்புடைத்து தர்ம அடி கொடுத்தனர். வலி தாங்காத போலீசார் அலறி துடித்தனர்.
இந்த தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய போலீஸ்காரர் அளித்த தகவலின்பேரில், நாகாலாந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசாம் போலீசாரை பத்திரமாக மீட்டனர். மேலும் போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருடனை பிடிக்க சென்ற இடத்தில், போலீஸ்காரர்களையே தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் அசாமிலும், நாகாலாந்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது.
- ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது 3500 முதல் 4000 பவுண்டுகள் வரை மதிப்புடையது
நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ [Neiphiu Rio] மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறந்தவரின் உடல் மீதிகள் நாகா இனத்தவருக்கே சொந்தம் என்றும் இது தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மண்டை ஓட்டை ஏலம் விடும் இந்த மனிதத்தன்மை அற்ற செயல் மன ரீதியாக நாகா இனத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளது என்று நாகாலாந்து முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்போது நாகா இனத்தவர் சந்தித்த கொடுமைகளை இந்த ஏலம் பிரதி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது பிரிட்டன் நாணயம் மதிப்பில் 3500 முதல் 4000 பவுண்டுகள் [சுமார் 4 லட்சம் ரூபாய்] வரை மதிப்புடையது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் தொடர்பாக நாகா மக்கள் நல்லிணக்க அமைப்பான [FNR] தெரியப்படுத்தியதை அடுத்து நாகாலாந்து முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மாநில கட்சியான NDPP ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கனமழை பெய்ததால் பயணிகள் மழையில் நனைந்து விடாமல் இருக்க விமானநிலையத்தில் இருந்து பஸ் கதவுகள் வரை ஊழியர்கள் குடை பிடித்தபடி வரிசையாக நின்றனர்.
- வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் விமான ஊழியர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பருவமழை காலம் தொடங்கியுள்ளநிலையில் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்தநிலையில் நாகாலாந்து மாநிலம் டிம்மபூரில் கனமழை கொட்டியது. இதனையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக தனியார் விமானம் புறப்பட தயாரானது. விமான நிலையத்தில் இருந்து ஓடுதளத்தில் புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்த விமானத்திற்கு சென்றடைவதற்காக பஸ்சில் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது கனமழை பெய்ததால் பயணிகள் மழையில் நனைந்து விடாமல் இருக்க விமானநிலையத்தில் இருந்து பஸ் கதவுகள் வரை ஊழியர்கள் குடை பிடித்தபடி வரிசையாக நின்றனர். இதனால் பயணிகள் அனைவரும் மழையில் நனையாமல் பஸ்சில் ஏறினர்.
இதுகுறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் விமான ஊழியர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
- வீடியோ 31 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3,200-க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாகலாந்து மாநிலத்தின் பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை மந்திரியுமான டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். இவரது பதிவுகள் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் நெட்டிசன்கள் மத்தியில் அவரது பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில், தற்போது அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஜிம் வீடியோ பயனர்களை ரசிக்க செய்கிறது. அதில், மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் ஜிம்மில் உள்ள ஏர் வாக்கர் கருவியில் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. 'இதயம் இன்னும் குழந்தையாக உள்ளது' என்ற தலைப்பில் திரைப்பட பின்னணி இசையுடன் பகிரப்பட்ட அந்த வீடியோ 31 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3,200-க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
दिल तो Baccha है जी! pic.twitter.com/ED6m4thJ4n
— Temjen Imna Along(Modi Ka Parivar) (@AlongImna) March 14, 2024
- ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் தொடங்கியது.
- 2-ம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்கு ராகுல் காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கோஹிமா:
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நாகாலாந்து சிறிய மாநிலம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்ற மாநில மக்களைப் போலவே உங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
- ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார்.
- இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும்.
கோஹிமா:
மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலம் தவு பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தனது பயணத்தின்போது, நாகா கோகோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கிரிடி தியுனுவோ தெரிவித்தார்.
ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். இன்று (செவ்வாய்க்கிழமை), விஸ்வேமா கிராமத்தில் இருந்து நாகாலாந்து யாத்திரையைத் தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப்போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.
இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். இது 6,713 கி.மீ தூரம், பெரும்பாலும் பஸ்களில் மட்டுமல்லாமல் நடந்தே பயணித்து, மார்ச் 20 அல்லது 21 அன்று மும்பையில் முடிவடையும்.
- திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
- மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.
நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.
- சமூக விஷயங்கள் குறித்தும், தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் குறித்தும் டெம்ஜென் இம்னா அலோங் டுவிட் செய்வது வழக்கம்.
- மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் தனது டுவிட்டர் பக்கத்தில் யோகா வகுப்பில் கலந்து கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார்.
நாகாலாந்தை சேர்ந்த மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சமூக விஷயங்கள் குறித்தும், தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் குறித்தும் இவர் டுவிட் செய்வது வழக்கம். நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்ற இவரை சமூகவலைதளங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் யோகா வகுப்பில் கலந்து கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன், "சமோசா முதல் சவாசனா வரை! இது வெறும் யோகா அல்ல, இது யோகாவின் விதிமீறல், என்னுடைய தருணம்" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த டுவிட் வைரலாகி வருகிறது.
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கி சிதறிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.
இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலி மற்றும் 3 பேர் பலத்த காயம் உட்பட பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடம் எப்போதும் "பகலா பஹார்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது.
காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இத்தனை வயது ஆனாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார்.
- உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நாகலாந்து:
இன்றளவில் 90 வயதை தாண்டினாலே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணம் அடைந்தார். இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார். கண்கள் நன்றாக தெரிந்தது. காதுகளும் நன்றாக கேட்டது. இது வரை இவர் ஆஸ்பத்திரி பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
புபிரே புகா மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டடு இன்று பதவி ஏற்றார்.
- திரிபுராவில் பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும் பதவியேற்பு விழா நடக்கிறது.
அதன்படி, மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. கவர்னர் சத்யதேவ் நாராயன் பதவி பிரமாணம் செய்து வைக்க, மீண்டும் முதல்வராக கான்ராட் சர்மா பதவியேற்றுக் கொண்டார்.
2 துணை முதல்வராக மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் புதிய அமைச்சரவையில் பதவியேற்பு விழா நடந்தது.
பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்.டி.பி.பி.) தலைவர் நெய்பியு ரியோ முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திரிபுரா மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.
முன்னதாக நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை நடைபெறும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- நாகாலாந்து அரசியலில் இத்தனை கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
- அனைத்து கட்சிகளும் அக்கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.
கோகிமா :
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இக்கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), நாகா மக்கள் முன்னணி, குடியரசு கட்சி (அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
நாகாலாந்து அரசியலில் இத்தனை கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும். லோக் ஜனசக்தியும், குடியரசு கட்சியும் மாநில அரசியலுக்கு புதிய கட்சிகள் ஆகும். தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இருப்பினும், அனைத்து கட்சிகளும் அக்கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.
லோக் ஜனசக்தி, குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை ஏற்கனவே ஆதரவு கடிதம் வழங்கி விட்டன. 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசும் ஆதரவு கடிதம் அளித்து விட்டது. நாகா மக்கள் முன்னணி இன்னும் இறுதி முடிவு எடுக்காதபோதிலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக அதன் எம்.எல்.ஏ. அச்சும்பெமோ கிகோன் தெரிவித்தார். இப்படி அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிப்பதால், எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமையப் போகிறது.
கடந்த 2015 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதேபோல், எதிர்க்கட்சி இல்லாத அரசுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை அரசின் பதவிக்காலத்துக்கு நடுவிலேயே அமைந்தன. புதிய சட்டசபையும், அரசும் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமைவது இதுவே முதல்முறை ஆகும்.