search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது
    X

    நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது

    • நாகாலாந்து அரசியலில் இத்தனை கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
    • அனைத்து கட்சிகளும் அக்கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.

    கோகிமா :

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இக்கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), நாகா மக்கள் முன்னணி, குடியரசு கட்சி (அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    நாகாலாந்து அரசியலில் இத்தனை கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும். லோக் ஜனசக்தியும், குடியரசு கட்சியும் மாநில அரசியலுக்கு புதிய கட்சிகள் ஆகும். தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இருப்பினும், அனைத்து கட்சிகளும் அக்கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.

    லோக் ஜனசக்தி, குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை ஏற்கனவே ஆதரவு கடிதம் வழங்கி விட்டன. 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசும் ஆதரவு கடிதம் அளித்து விட்டது. நாகா மக்கள் முன்னணி இன்னும் இறுதி முடிவு எடுக்காதபோதிலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக அதன் எம்.எல்.ஏ. அச்சும்பெமோ கிகோன் தெரிவித்தார். இப்படி அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிப்பதால், எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமையப் போகிறது.

    கடந்த 2015 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதேபோல், எதிர்க்கட்சி இல்லாத அரசுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை அரசின் பதவிக்காலத்துக்கு நடுவிலேயே அமைந்தன. புதிய சட்டசபையும், அரசும் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமைவது இதுவே முதல்முறை ஆகும்.

    Next Story
    ×