என் மலர்tooltip icon

    கேரளா

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    நடிகர் சித்திக் மீது நடிகை கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் குறிப்பிட்ட அறையில் நடிகர் சித்திக் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தி ருக்கிறது.

    மேலும் நடிகையின் நண்பர் அளித்துள்ள வாக்கு மூலம், சம்பவத்திற்கு பிறகு நடிகை மனநல மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்றது உள்ளிட்ட சம்பவங்கள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் நடிகர் சித்திக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது.

    • குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் வசிப்பவர் அமர் பதுர் சவுத் (வயது 45). நேபாளத்தை சேர்ந்த இவர், தனது குடும்பத்தினருடன் புலம் பெயர்ந்து கேரளாவில் வசித்து வந்தார்.

    இவரது மகன் ரோஷன் சவுத் (20). இவரது மனைவி பார்வதி (21). இவருக்கு குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை திடீரென மாயமானது.

    இந்த நிலையில் தனது குழந்தையை கணவர் மற்றும் அவரது பெற்றோர் தான் கொன்று புதைத்து விட்டனர் என்று போலீசில் பார்வதி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், தான் கர்ப்பத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடையவில்லை.

    இதனால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். இதற்காக சில மருந்துகளையும் கொடுத்தனர். இதன் காரணமாகவே எனக்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அதன்பிறகும் அவர்கள் கோபம் குறையாமல் குழந்தையை கொன்று விட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அமர் பதுர் சவுத், அவரது மனைவி மஞ்சு, மகன் ரோஷன் சவுத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பார்வதியிடம் விசாரணை நடத்தியபோது அவர், ரோஷணுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 267 பேர் தொடர்பு பட்டியலில் இருந்த நிலையில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் இருந்தனர்.
    • இவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார்.

    இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 267 பேர் தொடர்பு பட்டியலில் இருந்த நிலையில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் இருந்தனர்.

    இவர்களிடம் 6 மாதரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரம் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் மேலும் சில மாதரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், அது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டியை கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

    பழம்பெரும் நடிகை மற்றும் ஓய்வுபெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய அந்த கமிட்டியின் முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தங்களின் விசாரணை அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசிடம் ஹேமா கமிட்டி கொடுத்தது.

    ஆனால் அந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அறிக்கையை அரசு வெளியிட்டது. அதில் சினிமா வாய்ப்புக்காக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது அம்பலமானது.

    இது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஹேமா கமிட்டியின் முழுமையான விசாரணை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தம் 3,896 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து 5 நாட்களாக நடந்தது.

    இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அதன்படி ஹேமா கமிட்டியிடம் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் 20 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படுகிறது.

    அவர்களை 10 நாட்களுக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் என்பதால், அவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    வாக்கு மூலம் அளித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட நடவடிக்கையை விரும்புவோரின் வாக்குமூலத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வுகுழு தெரிவித்திருக்கிறது.

    எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவிலேயே விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    • மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது.
    • தொற்று பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக சுகாதாரத் துறையினரின் கள ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென இறந்து விட்டார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது. அங்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

    அதே நேரத்தில் நிபா வைரஸ் பாதித்து பலியான வாலிபரின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்தனர். அவர் தங்கியிருந்த பகுதி, சென்றுவந்த இடங்கள், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது உடனிருந்த ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    தொடர்பு பட்டியலில் உள்ள தொற்று பாதித்தவரின் தாய், சிகிச்சை அளித்த மருத்துவர், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' என்றே வந்திருக்கிறது. இது சுகாதாரத்துறையினருக்கு நிம்மதியை தந்திருக்கிறது.

    இந்நிலையில் தொற்று பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது தொடர்பு பட்டியலில் 266 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 81 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர்.

    தொடர்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 176 பேர் முதன்மை தொடர்பு பட்டியலிலும், 90 பேர் இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலிலும் இருக்கின்றனர். முதன்மை தொடர்பு பட்டியிலில் இடம்பெற்றுள்ளவர்களில் 133 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அனைவரின் உடல்நிலையையும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நிபா அறிகுறி உள்ளவர்களாக கருதப்படும் 21 பேர் பெருந்தல்மன்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 6 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக சுகாதாரத் துறையினரின் கள ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. மாம்பாடு, திருவாலி, வண்டூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று 1,044 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 8 ஆயிரம் வீடுகளில் தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகள் ஆகும்.
    • விமான நிலையங்கள், துறைமுகங்களில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

    ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் மலப்புரம் திரும்பிய 38 வயதுடைய நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குரங்கம்மை பாதிப்பு இருக்குமோ என அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அந்த நபர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால், சுகாதார அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வெகுதூரம் துரத்திச்சென்று லாரியை மடக்கினார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு டிரெய்லர் லாரி வந்தது.

    அந்த லாரி சைக்கிளில் சென்ற ரமேசன் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்நிலையில் அந்த வழியாக நடிகை நவ்யா நாயர் தனது காரில் வந்தார்.

    அவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றதை பார்த்தார். அவர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை தனது காரில் பின் தொடர்ந்தார். காரின் ஹாரனை அடித்து லாரியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.

    ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இருந்தபோதிலும் நடிகை நவ்யா நாயர் விடாமல் வெகுதூரம் துரத்திச்சென்று அந்த லாரியை மடக்கினார்.

    இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை நவ்யா நாயர் தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் போலீசார் சென்றனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசனை நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தங்களின் வாக னத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலில் துறவூர் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .

    பின்பு மேல் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் ரமேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.
    • அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா தகழி பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. சம்பவத்தன்று இவர் தனது நெற்றியில் எற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அஞ்சலி என்ற பெண் மருத்துவர், சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஷைஜூவை கைது செய்தனர்.

    • முதன்மை தொடர்பு பட்டியலில் மட்டும் 126பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • மாம்பாடு கிராம பஞ்சாயத்தில் 590 வீடுகள், வண்டூரில் 447, திருவாலியில் 891 என மொத்தம் 1,928 வீடுகளில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கேரளாவில் 'நிபா' வைரசுக்கு வாலிபர் பலிதிருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது. பின்பு 2019, 2021, 2023 மற்றும் இந்த ஆண்டிலும் நிபா வைரஸ் பரவியது. இந்நிலையில் அங்கு தற்போதும் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார். அவரது உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், புனேயில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது.

    மேலும் மலப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று 2 முறை அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மலப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூட்டம் கூட தடை, திருமணம்-இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டாயமாக குறைக்க வேண்டும், காய்கறிகள்-பழங்களை நன்றாக கழுவி சுத்தம்செய்த பிறகே பொதுமக்கள் சமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் தொற்று பாதித்து பலியான வாலிபரின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்தனர். அதில் 74 சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 175பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    முதன்மை தொடர்பு பட்டியலில் மட்டும் 126பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அதிகம் ஆபத்து உள்ளவர்களாக குறிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நிபா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களாக கருதப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உதவும் விதமாக மலப்புரத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் தொற்று பரவலை முழுமையாக கண்டறியும் வகையில் இறந்த வாலிபரின் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள இடங்களில் சுகாதாரத்துறையினர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாம்பாடு கிராம பஞ்சாயத்தில் 590 வீடுகள், வண்டூரில் 447, திருவாலியில் 891 என மொத்தம் 1,928 வீடுகளில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாம்பாடு மற்றும் வண்டூரில் தலா 10 பேருக்கும், திருவாலியில் 29 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கல்வி நிலையங்கள், டியூசன் சென்டர்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவைகள் இயங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    • நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை எப்போதும் அதிகளவில் இருக்கும்.

    இந்த ஆண்டு நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வயநாடு நிலச்சரிவு உயிர்ப்பலி காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

    எனவே வழக்கம் போல் மது விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் உத்ராடம் வரையிலான 9 நாட்களில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனை குறைந்தே உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரம் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

    • கடந்த வாரம் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
    • பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தா

    மலப்புரம்:

    கேரளாவில் 2018 தொடங்கி கடந்த 2023-ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் பாதித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதித்து குணமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி மிரட்டி வருகிறது. அதாவது மலப்புரம் மாவட்டம் வண்டூர் அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    கடந்த வாரம் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர், அங்குள்ள 4 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அடுத்தடுத்து சென்று சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர், பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் மாதிரி பரிசோதனைக்காக கோழிக்கோட்டில் உள்ள அரசு வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பரிசோதனையின் முடிவில் அவர், நிபா வைரஸ் பாதித்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதனை உறுதிப்படுத்தும் வகையில் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புனே வைராலஜி ஆய்வகமும் நிபா வைரஸ் பாதிப்பை உறுதி செய்தது.

    • போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
    • இட்லி சாப்பிடும் போட்டியில் 60 பேர் பங்கேற்றனர்.

    கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.

    இப்போட்டியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 50 வயது முதியவர் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை வாயின் உள்ளே திணித்துள்ளார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.

    பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ×