என் மலர்
கர்நாடகா
- சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு.
- லோக்ஆயுக்தாவின் மைசூரு கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
லோக்ஆயுக்தா அமைப்பின் மைசூரி கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளை அழித்ததாக அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
1983-ல் இருந்து மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர். மைசூரு தாலுகா பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். 2000-த்தில் டவுண் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தார். அதன்பின் 8 வருடம் கழித்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மைசூரு நகர்ப்புற திட்டத்திற்கான ஒரு இடத்தை கொடுத்ததற்கான மதிப்புமிக்க இடத்தில் 14 மனைகள் சித்தராமையா மனைவி பி.என். பார்வதி பெயருக்கு ஒதுக்கபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் மாநில அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மனைகள் தனது மனைவியின் சகோதரர் பரிசாக கொடுத்தது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சித்தராமையா மனைவி 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பும் அதை திரும்பி வாங்க ஒப்புக் கொண்டது.
- உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
- நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்க வும் இன்று 4-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்ட ப்பட்டு போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- நவராத்திரியையொட்டி கோவிலுக்கு அருகே துர்கா அம்மன் சிலை நிறுவி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடமாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிலுக்கு அருகே பந்தல் அமைத்து துர்கா அம்மன் சிலையை நிறுவி சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அந்த வகையில் பெங்களூரு நகரில் உள்ள பகுதியிலும் நவராத்திரியையொட்டி கோவிலுக்கு அருகே துர்கா அம்மன் சிலை நிறுவி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாமி தரிசனத்தில் கலந்து கொண்டிருந்த ஐ.டி ஊழியர் ஒருவர் ஒரு கையில் லேப்டாப்பை திறந்தபடியும் மறுகையில் செல்போனை வைத்து கொண்டு வேலை பார்த்தபடியும் பூஜையில் கலந்து கொண்டார்.
இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியானது. அதில், 'கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?", "முழு மனதுடன் வேலையை செய்யுங்கள்" உள்ளிட்ட கருத்துகளை பதிவிட்டு இதனை இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.
- பெங்களூரு நகரத்திற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
- பெங்களூரு மாநகரில் இன்று பெய்த கனமழையால் சாலைகள் முழுக்க வெள்ளக்காடாகின.
தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் வடதமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கொட்டும் கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று பெய்த கனமழையால் சாலைகள் முழுக்க வெள்ளக்காடாகின. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து பெங்களூருவிற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
- நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
- இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு இந்து அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை வழக்கில் சிக்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தனர். இருவருக்கும் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமின் கிடைத்த நிலையில், இருவரும் கடந்த 11 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து சொந்த ஊரான விஜயபுராவுக்கு சென்ற பரசுராம் மற்றும் மனோகர் ஆகிய இருவருக்கும் உள்ளூர் வாசிகளான இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்த இருவரை இந்து அமைப்பினர் சத்ரபதி சிவாஜி சிலை அருகே அழைத்து சென்று இருவருக்கும் மாலை அணிவித்தனர். அதன்பிறகு அருகில் அருந்த கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள இருவருக்கு உள்ளூரில் இந்து அமைப்பினர் வரவேற்பு கொடுத்த சம்பவம் முகம் சுளிக்க செய்தது.
- மாணவர்களிடையே அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் வகையில் கொண்டாட்டங்களை கட்டாயமாக நடத்த வேண்டும்.
- சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை போன்று நவம்பர் 1-ந் தேதியும் பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் கலச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 1-ந் தேதி கர்நாடகாவிற்கு முக்கியமான நாள். அன்றைய தினத்தை மாநிலதினமாக (கர்நாடக ராஜ்யோத்சவா) கொண்டாடுறோம். கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் பெருமையை வளர்க்கும் வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், மற்றும் கல்வி மையங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றைய தினம் கட்டாயமாக கர்நாடகா மாநில கொடியை ஏற்றி வைக்க கர்நாடக வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் உத்தரவிடுகிறேன்.
தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் கன்னட மொழி மீது மாணவர்களிடையே அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் வகையில் கொண்டாட்டங்களை கட்டாயமாக நடத்த வேண்டும். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை போன்று நவம்பர் 1-ந் தேதியும் பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் கலச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
நவம்பர் 1-ந் தேதியன்று கன்னட மொழியை கொண்டாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த நாள் மாநிலம் உருவானதை குறிக்கிறது. மேலும் கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகைகளின் படங்களை சிறிய பேனர் போல் அச்சிட்டு தனது தோட்டத்தில் கம்புகளை நட்டு தொங்கவிட்டுள்ளார்.
- வெள்ளரிக்காய் தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
ஊரு கண்ணு... உறவு கண்ணு... நல்ல கண்ணு... நொள்ள கண்ணு... என குழந்தைகளுக்கு தாய்மார்கள் கண்திருஷ்டி கழிப்பதை பார்த்து இருப்போம்.
அதுபோல் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பயிர்களுக்கும் கண் திருஷ்டி படாமல் இருக்க பிய்ந்து போன துடைப்பம், காலணியை தொங்கவிடுவது வழக்கம்.
பொதுவாக முருங்கைக்காய் அதிகம் விளையும் பட்சத்தில் கண்திருஷ்டி படக்கூடாது என்பதற்காக முருங்கை மரத்தில் பிய்ந்து போன துடைப்பம், காலணியை தொங்கவிடுவது பழங்காலம் தொட்டே நடைமுறையில் உள்ளது. அதுபோல் தோட்டங்களிலும் வெள்ளரிக்காய், கொய்யா பழம், நெல்லிக்கனி, தேங்காய் அதிகமாக விளைந்திருந்தாலும் இதே பாணியை விவசாயிகளும் கடைபிடிப்பது வாடிக்கையானது. மேலும் சோள காட்டு பொம்மையையும் வைப்பதும் நமக்கு தெரிந்த விஷயம்.
இந்த வாடிக்கையிலும் வேடிக்கையான விஷயம் நம்ம கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. அதாவது வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயி, அதன் மீது கண்பட கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை கம்புகளில் கட்டி தொங்கவிட்டுள்ளார். அடடே... இது கொஞ்சம் புதுசா இருக்கே.. என தோன்றுகிறதா...

ஆம்.... இந்த நூதன சிந்தனை கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா காரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு தோன்றியது. இதன் விளைவாக தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள வெள்ளரிக்காய் மீது கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை தொங்கவிட்டுள்ளார்.
அதாவது ராதிகா பண்டிட், ராகிணி திவேதி, ராஸ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, சோனல் உள்ளிட்ட நடிகைகளின் படங்களை சிறிய பேனர் போல் அச்சிட்டு தனது தோட்டத்தில் கம்புகளை நட்டு தொங்கவிட்டுள்ளார். இவ்வாறு செய்தால் தோட்டத்திற்கு வருவோரின் கண்கள் வெள்ளரிக்காய் மீது படாமல், நடிகைகளை தான் பார்க்கும், இதன் மூலம் வெள்ளரிக்காய் மீது கண்திருஷ்டி படாமல் விளைச்சல் அதிகரித்து நல்ல மகசூல் கிடைக்கும் என அந்த விவசாயி கருதியதாகவும், அதனால் இந்த யோசனையை அவர் நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தனது வெள்ளரிக்காய் தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
- புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்
- நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தகவல்.
கர்நாடக மாநிலத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நகரத்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் மஞ்சுநாதன் என்பவர் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளான்.
புறாக்களை பயன்படுத்தி தான் கொள்ளையடிக்கும் முறை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளான்.
மஞ்சுநாதன் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது, வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், இலக்கை எட்டியவுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் மீது இரண்டு புறாக்களை விடுவிப்பான்.
பறவைகள் பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து, சிறிய கவனத்தை ஈர்க்கும். ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் புறாக்களை எதிர்கொண்டால், மஞ்சுநாதன் அங்கு செல்வதில்லை. ஒரே வேளை புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.
பூட்டிய வீட்டை அடையாளம் கண்டவுடன், மஞ்சுநாத் இரும்பு கம்பியை பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இவ்வாறு, நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையை தொடர்ந்து, மஞ்சுநாதன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை போலீசார் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்விக்கியில் ஊழியர் பாலராஜ் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
- பாலராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு நகரில் கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் பாலராஜ் என்பவர் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜின் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர், "பெங்களூருவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அணைத்து உதவிகளையும் எங்களது குழுவினர் செய்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு நாங்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். உணவுப் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. ஸ்விக்கி ஆப்பில் உள்ள அனைத்து உணவகங்களும் FSSAI உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி சென்று கொண்டிருந்த இருந்த பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேருந்து ஜன்னலில் சிறுத்தை தலையை விட்டு பார்க்கிறது. இதனைப் பார்த்த அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டு அலறத் தொடங்கினர்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே கடந்த ஜூன் மாதம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சிறுத்தை சஃபாரியை தொடங்கி வைத்தார். இதனால் உயிரியல் பூங்காவிற்கு வரும் மக்கள் வனவிலங்குகளை மிக அருகில் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
- சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக திரும்ப திரும்ப குற்றம்சாட்டு வருகிறார்.
- அவரது பெயரில் நீங்கள் செய்ய தவறால் அவர் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள்.
கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட பணிகளையும், காங்கிரஸ் செய்த வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு, மத்திய மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று மத்திய கனரக தொழில் துறை மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக திரும்ப திரும்ப குற்றம்சாட்டு வருகிறார். மூடா முறைகேடு வழக்கில் அவரது மனைவி பெயரை இழுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்.
நீங்கள் வீட்டில் இருந்த உங்களுடைய மரியாதைக்குரிய மனைவியை இழுத்து விட்டீர்கள். இது நாங்களும், எதிர்க்கட்சிகளும் அல்ல. அவரது பெயரில் நீங்கள் செய்ய தவறால் அவர் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள்.
முதல்-மந்திரி சித்தராமையா எனக்கு குதிரை கொடுத்ததாகவும், அந்த குதிரையில் ஏறி சவாரி செய்ய தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார். அடிக்கடி அவரை பார்த்து எதிர்க்கட்சிகள் வயிறு எரிவதாக கூறி வருகிறார். வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் நிதிமுறைகேடு செய்தது யார்?. மாநிலத்தில் இந்த முறை எதிர்பார்ப்பை மீறி மழை பெய்து வருகிறது. ஆனால் ஏரி, குளங்களை நிரப்பும் வேலையை இந்த அரசு செய்யவில்லை.
எங்கள் கட்சியின் 38 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தோம். கூட்டணி ஆட்சியில் காங்கிரசார் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்படி இருந்தும் நான் முதல்-மந்திரியாக இருந்த 14 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்திருந்தேன். தற்போது மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கூட்டணி ஆட்சியில் நான் 14 மாதங்களில் செய்த வளர்ச்சி பணிகள் குறித்தும், தற்போது சித்தராமையா தலைமையிலான 15 மாதங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளேன். இதற்கு சித்தராமையா தயாரா?.
பெங்களூருவில் மழை வந்தாலே வீடுகள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனை தடுக்க இந்த ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு கிடைத்து பல மாதங்கள் ஆகி விட்டது.
தற்போது அரசியல் காரணங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சித்தராமையா பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டனர். பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட டி.கே.சிவக்குமார் கெடு விடுத்திருந்தார்.
சாலை பள்ளங்கள் மூடப்படவில்லை. தற்போது பெய்யும் மழையால் இன்னும் என்னவெல்லாம் ஆனது என்பதே தெரியவில்லை. முதல்-மந்திரிக்கும், மந்திரிகளுக்கும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






