என் மலர்
டெல்லி
- வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் முரண்பாடு என விமர்சனம்.
- தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை மாற்றியதாக கட்சிகள் விமர்சனம் செய்தன.
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரியவந்தது. மேலும், முதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் எனத் தெரிவித்தனர். பின்னர் பதிவான வாக்கு சதவீதம் அதிகரித்து வெளியிடப்பட்டது.
இதனால் 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என என்ஜிஓ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக் வந்தது. அப்போது நீதிபதிகள் "ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிடமுடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும்.
தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். அமைப்பு (தேர்தல் ஆணையம்) மீது கொஞ்ச் நம்பிக்கை வைப்போம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.
- சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் போர், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மற்றும் சில நாடுகளில் எழுந்துள்ள எல்லை பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் 3-வது உலக போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் பலரும் கணித்துள்ளனர்.
ஏற்கனவே பாபா வாங்கா உள்ளிட்டவர்கள் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலை தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் இது தொடர்பாக தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.
மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம்.
அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஜூன் 18-ந்தேதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 10-ந்தேதியோ அல்லது 29-ந்தேதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தனது வலைதள பக்கத்தில் கூறி உள்ளார்.
- உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் 6 சிகரங்களை தொட்டு சாதனை படைத்துள்ளார்.
- வரும் டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.
புதுடெல்லி:
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும். வெகுசிலரே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்து உள்ளனர்.
தற்போது மிக இளம்வயதில் இந்த சிகரத்தை தொட்ட இந்திய பெண்ணாக சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி. கடற்படையில் அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன் என்பவரின் மகளான காம்யா, நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திருக்கிறார். அவர் தற்போது 12-ம் வகுப்பு படித்துவருகிறார். 16 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்டதையடுத்து, மிக இளம்வயதில் எவரெஸ்ட் ஏறிய இந்திய பெண்மணி மற்றும் உலக அளவில் இளம் வயதில் சிகரம் தொட்ட 2-வது பெண்மணி என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார்.
மேலும், இவர், உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் 6 சிகரங்களை தொட்டு சாதனை படைத்துள்ளார். வரும் டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். காம்யாவின் சாதனையை, இந்திய கடற்படை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளது.
#IndianNavy congratulates Ms Kaamya Karthikeyan d/o Cdr S Karthikeyan on becoming the youngest #Indian & the second youngest girl in the world to summit Mt Everest from the Nepal side.
— SpokespersonNavy (@indiannavy) May 23, 2024
Kaamya has exhibited immense courage & fortitude in summiting the highest peaks in six of the… https://t.co/t4FLsiOFUZ pic.twitter.com/WHNoPAAYOi
- 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
- 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது.
- தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.
ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜனதாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகிவிட்டது.
2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜனதா பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டி விடுவோம். ஆந்திராவிலும் நல்ல எண்ணிக்கையில் இடம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
- போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது.
- செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணையதள குற்றங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 6 லட்சத்து 80 ஆயிரம் செல்போன் இணைப்புகள் மோசடியாக பெறப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது, போலியான அடையாள ஆவணங்கள், முகவரி ஆவணங்கள், சுயவிவர ஆவணங்களை பயன்படுத்தி, இந்த செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், அந்த செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அப்படி சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், அந்த செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.
- டெல்லியில் உள்ள 7 தொகுதிக்கும் ஒரேகட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று டெல்லி மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக ராகுல் காந்தி பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பயணத்தின்போது மக்களுடன் அவர் உரையாடினார். மக்களும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
- மயோபியா என்பது கிட்டப்பார்வை குறைபாடு என அறியப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
புதுடெல்லி:
உலக மயோபியா விழிப்புணர்வு வாரம் மே 22 முதல் 26 வரை கொண்டாடப்படுகிறது இதில் மயோபியா நோய் பற்றியும், இந்தியாவில் அதன் பாதிப்பு வரும் காலத்தில் மோசமாக இருக்கப் போவதையும் பல்வேறு டாக்டர்கள் கணித்துள்ளனர்.
மயோபியா என்பது கிட்டப்பார்வை குறைபாடு என அறியப்பட்டு வருகிறது. அதாவது, அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் உள்ளவை மங்கலாக தெரியும் நோயாகும்.
கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் 5-15 வயதுடைய குழந்தைகள் 3 பேரில் ஒருவர் வீதம் மயோபியாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். 2050-ம் ஆண்டுக்குள் பாதிப்பு அளவு இரட்டிப்பு அடைந்து இருவரில் ஒருவருக்கு மயோபியா ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மயோபியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்கலான பார்வை, தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம், கண் சோர்வு, தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படும். கணினி, செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு இதுபோன்று தோன்றினால் அது மயோபியா ஏற்படுவதன் அறிகுறிகள் ஆகும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக குழந்தைகள் செல்போன், கணினி பயன்படுத்துவதை விட்டு வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல்.
- உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நாளை மறுதினம் 25-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு (ஆம் ஆத்மி) வாக்களித்து ஏழு தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என டெல்லி மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சோனியா காந்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் கூறியிருப்பதாவது:-
இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து போரிடுவதாகும். இந்த போரில் உங்களுடைய பங்கை நீங்கள் ஆற்ற வேண்டும்.
உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும். பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கும். பிரகாசமான எதிர்காலத்தோடு சமநிலையை உருவாக்கும். டெல்லியில் உள்ள ஏழு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
- ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆறாம் கட்டமாக நாளை மறுதினமும், 7வது கட்டமாக ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.
உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.
- 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
- இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிகளில் 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், 5ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 62.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
மாநில வாரியாக விவரங்கள்:
பீகார்- 56.76 சதவீதம்
மகாராஷ்டிரா- 56.89 சதவீதம்
மேற்கு வங்காளம்- 78.45 சதவீதம்
ஒடிசா - 73.50 சதவீதம்
ஜார்கண்ட்- 63.21 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 59.10 சதவீதம்
லடாக்- 71.82 சதவீதம்
உத்தரபிரதேசம்- 58.02 சதவீதம்
- வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்.
- அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.
பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.






