search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்: அண்ணாமலை
    X

    தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்: அண்ணாமலை

    • 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜனதாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகிவிட்டது.

    2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜனதா பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டி விடுவோம். ஆந்திராவிலும் நல்ல எண்ணிக்கையில் இடம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×