என் மலர்
ஆந்திர பிரதேசம்
- லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம்.
- மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திருப்பதி:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, 'அயோத்தியின் நேரடி புகைப்படங்கள்' வீடியோ இருப்பதாகக் கூறி, ஆன்லைனில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.
இது ஐதராபாத் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் "ஜனவரி 22-ந் தேதி 'அயோத்தியின் நேரடிப் புகைப்படங்கள்' அல்லது அது போன்ற உள்ளடக்கம் கொண்ட பல லிங்க் மொபைல் சாதனங்களில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற இணைப்புகளை நீங்கள் திறக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.
லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகள் கொள்ளையடிக்கப்படலாம்.
மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
- ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம், சிர்சில்லா ஜவுளி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ரேகா.
கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
8 கிராம் தங்கம், 20 கிராம் பட்டு இழைகள் கொண்டு 20 நாட்களில் பட்டுப் சேலை விஷேசமாக தயார் செய்துள்ளனர்.
அதில் ஸ்ரீராமரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
புடவையின் ஒரு புறத்தில் அயோத்தி ராமர் கோவில், ஸ்ரீராம பட்டாபிஷேகம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என தெலுங்கிலும், மறுபுறம் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலும் நெய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீராமரின் படங்கள் புடவையின் விளிம்பில் வைக்கப்பட்டு, சேலையின் மீதமுள்ள பகுதி ஸ்ரீ ராமர் பிறந்தது முதல் முடிசூட்டு விழா வரையிலான ராமாயண காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் நெய்யப்பட்டுள்ள பட்டுப் புடவையை வரும் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்டுகின்றனர்.
பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
- ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
- சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
- உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.
இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
- சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.
இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.
இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.
- லட்டுவை ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
- லட்டுடன் நாகபூஷன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் அயோத்தி நோக்கி நடை பயணமாக செல்கின்றனர்.
திருப்பதி:
அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பல்வேறு பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் அயோத்தி ராமருக்கு பிரத்தியேகமாக 1265 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்துள்ளார்.
இவர் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். ராமஜென்ம பூமியில் அவதரிக்க உள்ள ராமருக்கு பிரத்தியேகமாக லட்டு தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி 1265 கிலோ எடையுள்ள லட்டுவை தயார் செய்துள்ளனர்.

இந்த லட்டுவை ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இன்று லட்டு பயணம் தொடங்கியது.
லட்டுடன் நாகபூஷன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் அயோத்தி நோக்கி நடை பயணமாக செல்கின்றனர்.
இந்த லட்டு தயாரித்த சுவீட் மாஸ்டர் துஷா சன் கூறுகையில்:-
நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். எனக்கு இவ்வளவு பெரிய வேலை கிடைப்பது இதுவே முதல்முறை. மிகவும் கடினமாக உழைத்து இந்த பெரிய லட்டுவை செய்துள்ளோம்.
- ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன.
- ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டை களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. இந்த இடங்களில் துரித உணவு மையங்கள் டீக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது.
சில அரங்கங்களில் மதுபானம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் விற்கப்பட்டன.
சேவல்களுக்கு ஆற்றல் மிக்க உணவுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் சேவல்களுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டது.

காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாககட்டப்பட்டது.
இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில் நேற்று ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.
இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
சங்கராந்தி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.
இது குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,
நான் சேவல் சண்டையில் முதலில் ஒரு லட்சத்தை இழந்தேன். ஆனால் அதற்கு பிறகு பணம் கட்டி ரூ.3 லட்சம் வென்றேன் என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் சேவல் சண்டைகளில் பணம் வென்றதாக தெரிவித்துள்ளனர்.
- 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.
- ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
நாளை காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இந்த டிக்கெட்டுகளை வரும் 20-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.
இதே போல் வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் 750 பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 23-ந் தேதி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதே போல் அன்று மாலை தங்கும் விடுதி முன்பதிவு தொடங்குகிறது.
இந்த வசதியினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 73,016 பேர் தரிசனம் செய்தனர். 20,915 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- இந்திய வானிலை அமைப்புக்கு சொந்தமானது ‘இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள்.
- ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் கடந்த 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் 'எக்ஸ்போசாட்' என்ற 'எக்ஸ்-ரே போலரிமீட்டர்' என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6-ந்தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்14 என்ற ராக்கெட்டில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைகோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3 டிஆர் இவை ஏற்கனவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப்பாதையில் உள்ளன. அடுத்ததாக தற்போது இன்சாட்-3 டிஎஸ் விண்ணில் ஏவப்பட உள்ளது.
கடந்த ஆண்டு மே 29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.
நடப்பாண்டில் வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுக்கான சோதனை ராக்கெட் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து விண்வெளிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதற்கும் பாதுகாப்பானதா? என்பதை உறுதிப்படுத்த பல சுற்று சோதனைகள் நடத்த உள்ளது.
- ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார் ஷர்மிளா
- திங்கள் அன்று கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர அரசியலில் சகோதரன்-சகோதரி போட்டி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர்.
- பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர்.
நேற்று ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
- இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
- ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் நேற்று சங்கராந்தி பண்டிகை கோலபாலமாக கொண்டாடப்பட்டது. சங்கராந்தி பண்டிகையையொட்டி நடத்தப்படும் சேவல் சண்டை தொடங்கியது.
கிருஷ்ணா, என்.டி.ஆர், மேற்கு கோதாவரி கிழக்கு, கோதாவரி, கோணசீமா , ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னவரம், சிஞ்சிநாடா, பூபால பள்ளி, திருவூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
டிஜிட்டல் திரைகள் பேனர்கள் கடைகள் ஓட்டல்கள் துரித உணவகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.

பல்வேறு கிராமங்களில் இருந்து ரூ.2 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட விலையுயர்ந்த சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் திரளாக வந்திருந்தனர்.
சேவல்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை பந்தயமாக கட்டினார். இதனால் ஒரே நாளில் பல கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.
நேற்று ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல கோடி வரை பந்தயம் நடைபெறும் என சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






