search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சேவல் சண்டையால் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு
    X

    சேவல் சண்டையால் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு

    • ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன.
    • ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டை களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. இந்த இடங்களில் துரித உணவு மையங்கள் டீக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது.

    சில அரங்கங்களில் மதுபானம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் விற்கப்பட்டன.

    சேவல்களுக்கு ஆற்றல் மிக்க உணவுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் சேவல்களுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டது.


    காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாககட்டப்பட்டது.

    இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில் நேற்று ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.

    இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    சங்கராந்தி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    இது குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

    நான் சேவல் சண்டையில் முதலில் ஒரு லட்சத்தை இழந்தேன். ஆனால் அதற்கு பிறகு பணம் கட்டி ரூ.3 லட்சம் வென்றேன் என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் சேவல் சண்டைகளில் பணம் வென்றதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×