என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை தினமும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

    தவிர்க்க வேண்டியவை:

    * மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.

    * பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன்மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.

    * பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.

    * பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம்.

    * பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

    * காரமான உணவுகள் என்பது சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.

    * துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    • உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.
    • கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார்.

    கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கூட கருச்சிதைவு ஏற்படலாம். எனவே நீங்கள் புள்ளி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்த பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிர்ச்சி மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் முதலில், கருச்சிதைவின் போது மனச்சோர்வின் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

    அறிகுறிகள்

    * எரிச்சல் அல்லது விரக்தி உணர்வு

    * சோகம், வெறுமை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

    * பெரும்பாலான அல்லது அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது

    * வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவும் கவலையாகவும் இருப்பது

    * தூங்குவது மற்றும் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது

    * பயனற்ற அல்லது குற்ற உணர்வு

    * விஷயங்களை நினைவில் வைத்து கவனம் செலுத்துவதில் சிரமம்

    * மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள்

    * சீரற்ற வலிகள்

    மேற்கூறிய அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், ஒரு பெண் குணமடைய மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

    கருச்சிதைவுக்குப் பிறகு, கோபம், மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. ஆனால் கருச்சிதைவுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பம் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது விரும்பத்தகாத அனுபவத்தையும் குற்ற உணர்வையும் போக்க உதவும். இருப்பினும், மனச்சோர்வு கடுமையாக இருந்தால், மருத்துவர்களிடம் செல்லலாம்

    சிகிச்சைமுறை

    * ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல், சிறிது ஓய்வுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தல் உடலைக் குணப்படுத்தும்

    * மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க ஆண்டிடிரசண்ட்ஸ்

    * துக்கத்தை ஆரோக்கியமான முறையில் சமாளிக்க உதவும் உளவியல் சிகிச்சை

    * எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT), அதாவது உங்கள் மூளைக்கு லேசான மின்சாரத்தை பயன்படுத்துதல், ஆனால் இது மன அழுத்தத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

    • கர்ப்ப காலத்தில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
    • கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சியை பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் உங்களுக்குத் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம் தேவை. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற மேக்ரோ நியூட்ரியண்ட்களை நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மற்றும் கரு வளர்ச்சிக்கு உதவுகின்றன, மேலும் உங்கள் குழந்தையின் உயிரணு வளர்ச்சி, எலும்பு மற்றும் உறுப்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமாகும்.

    ஃபோலேட்

    ஃபோலேட் ஒரு பி வைட்டமின் ஆகும், இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஃபோலிக் அமிலம் என்பது பெரும்பாலான மக்கள் உட்கொள்ளும் ஃபோலேட்டின் செயற்கை வடிவமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் பிறவி குறைபாடுகள், பிளவு அண்ணம் மற்றும் இதயக் குறைபாடுகள் போன்ற பிறவி குறைபாடுகளின் அபாயத்தை குறைக்க கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 600 யூஜி ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

    இரும்புச்சத்து

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் இரும்புச்சத்துக்கான தேவை கணிசமாக அதிகரிக்கிறது, ஏனெனில் தாயின் ரத்த அளவு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கிறது. இது ஆக்சிஜன் போக்குவரத்து மற்றும் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடி, உங்கள் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும்.

    வைட்டமின் டி

    சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதோடு, நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

    மெக்னீசியம் சத்து

    கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சி குன்றிய மற்றும் முன்கூட்டிய பிறப்பையும் ஏற்படுத்தும். பச்சை இலை காய்கறிகள், அத்திப்பழங்கள், வாழைப்பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை உண்ணலாம்.

    மீன் எண்ணெய்

    மீன் எண்ணெயில் டிஹெச்ஏ மற்றும் இபிஏ ஆகிய இரண்டு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை. குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் தாயின் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கருவின் கண் வளர்ச்சிக்கும் நன்மை தரும்.

    புரோபயாடிக்

    புரோபயாடிக்குகள் குடலில் வாழும் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நட்பு பாக்டீரியா. தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தின் மூலம் செரிமான பிரச்சினையைத் தடுக்க புரோபயாடிக்குகளை எடுப்பதி ஆச்சரியமில்லை. அவை ஒன்பது மாதங்கள் மற்றும் அதற்கு பிறகும் எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

    • பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள்.
    • வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இல்லத்தரசிகளின் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்த உதவுபவை வீட்டு உபயோகப் பொருட்கள். தேவைகளைப்பொறுத்து இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள். ஆனால் இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை வசதி பலரும் எளிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்க உதவுவதுதான் இ.எம்.ஐ. கார்டு. அவ்வாறு இ.எம்.ஐ. கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....

    பண்டிகை காலங்களில் எல்லா நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்குவார்கள். அவற்றால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் இ.எம்.ஐ. கார்டு மூலம் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுபோன்ற தருணங்களில் கவனமாக இருந்து, தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

    இ.எம்.ஐ. கார்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். உங்கள் 'கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது இ.எம்.ஐ. கார்டுக்கான மதிப்பு மற்றும் உங்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடும்.

    இ.எம்.ஐ-கார்டு மூலம் வாங்கிய பொருட்களுக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்காமல், முன்சுட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதிக முன்பணம் செலுத்தினால் கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ. கட்டணம் குறையும். எனவே உங்களால் எவ்வளவு முன்பணம் செலுத்த முடியும் என்பதை முதலில் தீர்மாளியுங்கள்.

    அதன் பின்பு, அதற்கு ஏற்ற வகையில் இ.எம்.ஐ கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதே நல்லது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடனை திருப்பி செலுத்தும் தவணை காலத்தை தீர்மானியுங்கள், நீண்ட கால தவணை அவகாசம் காலப்போக்கில் வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பை உண்டாக்கும். மூலம் உங்கள் பணம் விரயமாகும்.

    பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இ.எம்.ஐ சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்ததை மட்டும் தேர்வு செய்யுங்கள். மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது.

    எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பிட்டு திட்டம் உதவும். சில இ.எம்.ஐ. கார்டு திட்டங்களில் ஹிட்டன் காஸ்ட்' எனும் மறைமுகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை கவனமுடன் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது. பெரும்பாலான நிறுவனங்களில் வட்டி விகிதத்தை தவிர பிராசசிங் சார்ஜ்' எனும் செயலாக்க கட்டணமும் நிர்ணயிக்கப்படும்.

    இது வங்கி மற்றும் பண பரிவர்த்தனையைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். எனவே நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை ஒப்பிட்டு பார்த்த பிறகே தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு பொருட்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், இ.எம்.ஐ. திட்டங்களின் மூலம் அவற்றை வாங்கும் போது வழங்கப்படுவது இல்லை.

    உதாரணமாக இவ்வகை திட்டங்களின் மூலம் வாங்கும் டிவியின் விலை நேரடியாக சலுகை மூலம் வாங்கும் டிவியின் விலையை விட அதிகமாக இருக்கக்கூடும். எனவே இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • திட்டமிட்ட காரியங்கள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும்.
    • தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும்.

    திட்டமிட்ட காரியங்கள், வேலைகள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும். அந்த பின்னடைவில் இருந்து மீள முடியாமல் மனம் தடுமாற்றமடையும். அன்றைய நாளே கடினமானதாக மாறிவிடும். எதன் மீதும் நாட்டம் இருக்காது. அந்த சமயத்தில் அமைதியாக இருக்கும் திறனை வளர்த்து கொள்வது அவசியமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    தியானம்

    நெருக்கடியான சமயத்தில் தியான பயிற்சி மேற்கொள்வது மனதை இலகுவாக்கும். அதன் மீது முழு கவனத்தையும் செலுத்தும்போது எண்ணங்கள் ஒருநிலைப்படும். பதற்றம் குறையும். கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மீள முடியும். மனமும் சாந்தமாகும். மனதை நிலைநிறுத்துவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாக தியானம் கருதப்படுகிறது. ஆதலால் அந்த சமயத்தில் தியானம் சிறந்த தேர்வாக அமையும்.

    ஆழ்ந்த சுவாசம்

    ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். மன அழுத்தத்தையோ, துன்பத்தையோ சந்திக்கும் போது, ஆழமாக சுவாசிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, சில வினாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்பு வாய் வழியாக வெளியேற்றவும்.

    வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனதை ஒருநிலைப்படுத்த வித்திடும்.

    ஆதரவு

    சிரமங்களை எதிர்கொள்ளும் போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், நம்பகமான சக ஊழியர்களிடம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனதை ஆசுவாசப்படுத்தும். அவர்களின் ஆதரவான பேச்சு மனதை வலுப்படுத்தும். நெருக்கடியான மனநிலையில் இருந்து மீண்டு இயல்புக்கு திரும்ப வழிவகை செய்யும்.

    ஓய்வு

    சரியான ஊட்டச்சத்துக்கள், வழக்கமான உடற்பயிற்சிகள், போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடினமான காலகட்டத்தில் பலரும் சரிவர சாப்பிடமாட்டார்கள். உடற்பயிற்சியை விட்டுவிடுவார்கள். தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள்.

    அந்த சமயத்தில் குறைந்தபட்சம் மனதிற்கு ஓய்வாவது கொடுக்க வேண்டும். சவாலான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள ஓய்வு அவசியமானது. எளிமையான உடற்பயிற்சிகள் மீது கவனத்தை திருப்பலாம். அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராவதற்கு வழிவகை செய்யும்.

    தகவல்கள்

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏராளமான தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. மன நெருக்கடியில் தவிக்கும்போது எதிர்மறையான தகவல்கள்தான் அதிகம் கண்களுக்கு புலப்படும். அதுசார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்குதான் ஆர்வம் மேலிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அவை கவலையை மேலும் அதிகப்படுத்தி நிலை குலைய செய்துவிடும்.

    சிக்கலை தீர்க்கும் திறன்

    பிரச்சினையின் மீது கவனம் செலுத்தாமல், அதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். சிக்கல்களை சமாளிக்கக்கூடிய வழிமுறைகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். இந்த அணுகுமுறை சிந்தனை, செயல்திறனை அதிகரிக்கச்செய்யும்.

    நினைவுகள்

    சவாலான நேரங்களில் வாழ்வில் நடந்த நேர்மறையான விஷயங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள். அது பற்றி சிந்தித்து மனதை பின்னோக்கி சுழல விடுங்கள். கடந்த கால நிகழ்வுகள், மகிழ்ச்சியான தருணங்கள் மனதை லேசாக்கும்.

    மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது சவாலாக இருந்தால் மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    • எந்தவொரு காரியத்தை செய்வதற்கும் சரியான திட்டமிடுதல் அவசியம்.
    • மனப்பக்குவத்துடனே களம் இறங்க வேண்டும்.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கும் சரியான திட்டமிடுதல் அவசியம். அதுவே செய்யும் வேலையை வரைமுறைப்படுத்துதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து செயல்பட வழிகாட்டும். நிதானமாக இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியையும் சரியாக எடுத்து வைக்கவும், குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யவும் துணைபுரியும். அப்படி திட்டமிட்டு வேலை செய்யும்போது ஒருசில விஷயங்களில் சமரசம் தேவைப்படலாம்.

    உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஏதேனும் சிக்கல் எழும்போது அதனை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்லும் நிலை வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், `நான் எடுத்து வைத்த அடியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்' என்று பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமில்லை. சில மாற்றங்களை செய்தே தீர வேண்டும் எனும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    அதை விடுத்து வேறு என்ன மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று சிந்திப்பது திட்டமிட்டு செய்துவரும் வேலைக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும். எந்த வேலையும் திட்டமிட்டபடியே சுமுகமாக முடிந்துவிடுவதில்லை. இடையூறுகள் ஏற்படும்போது அதற்கேற்ப திட்டத்திலும் மாற்றங்களை செய்து எப்படி விரைவாக செய்து முடிக்கலாம் என்று சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

    நாம் நம்முடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி விட்டதாக மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ?' என்று கவலைப்பட தேவையில்லை. எந்தவொரு காரியத்தையும் தொடங்கும்போதே மாற்றங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடனே களம் இறங்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கிடைக்கும். சூழ்நிலைகளுக்கு தக்கபடி சாதுரியமாக செயல்படும் மனத்தெளிவும் பிறக்கும்.

    அதைவிடுத்து பிடிவாத குணத்தோடு இருந்தால் மனம் அலைபாயும். `எப்படி செய்து முடிக்கப்போகிறோமோ' என்ற பதற்றத்துடனேயே வேலையில் முழுகவனத்தை பதிக்க முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும். பிடிவாதத்தை தளர்த்துவதால் பலவீனமாகிவிட்டோமோ? என்று அச்சப்படதேவையில்லை. யதார்த்தங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு சுமுகமாக செயல்படுவதே புத்திசாலித்தனம். எடுத்த காரியமும் சுலபமாக முடியும்.

    • பி.எச். அளவு குறைவாக இருந்தால் அரிப்பு உண்டாகும்.
    • இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் இருப்பது நல்லது.

    பெண்கள் பிறப்புறுப்பில் வறட்சி, தொற்று, பி.எச். அளவு குறைவாக இருந்தால் அரிப்பு உண்டாகும். அதனை தடுப்பதற்கான சில வழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    வேப்பிலை

    வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீர் குளுமையானதும் அந்த தண்ணீர்ல் பிறப்புறுப்பை கழுவலாம். இவ்வாறு செய்யும் போது அங்கு தங்கி உள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள் அழியும்.

    கற்றாழை

    கற்றாழை ஈரப்பதம் நிறைந்தது. அதோடு பூஞ்சைகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. எனவே அதன் சதை பகுதியை எடுத்து பிறப்புறுப்பு பகுதியில் அரிக்கும் இடங்களில் தடவலாம். அதை அப்படியே உண்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.

    பூண்டு

    பூண்டுக்கு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் அதிகம் உண்டு. எனவே பூண்டை தட்டி அதை வைட்டமின் ஈ எண்ணெய்டன் கலந்தும் தேய்த்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய்யை அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி வந்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

    இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் இருப்பது நல்லது. காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். கழிவறையை பயன்படுத்திய பிறகும், குளித்த பிறகும் பிறப்புறுப்பில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான்.
    • வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்சினை.

    பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதாவது ஒருசில பிரச்சினையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான்.

    வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம். இந்த பிரச்சினை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்கள் வெள்ளைப்படுதல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில், நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்த திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பை பாதுகாக்கும். பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பை பாதித்தால், அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும்.

    நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்சினை ஏற்படலாம்.

    பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவும். எனவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

    தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும்கூட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இது அடுத்த சில தினங்களில் சரியாகிவிடும். பயப்படத் தேவையில்லை. பாதிப்பில்லாத இந்த வெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாட்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்கள் மற்றும் கர்ப்பமான நேரங்களில் மட்டுமே ஏற்படும்.

    வெள்ளைப்படுதலுக்குக் காரணமான, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிகமுக்கியமான சில தொற்றுகள் குறித்தும், அது ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

    அறிகுறிகள்

    * சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

    * பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் சிவந்து காணப்படுவது

    * பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்

    * உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி

    தடுக்கும் வழிகள்

    * பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலை தடுக்கலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

    * உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை தேர்வு செய்வது நல்லது. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    * காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை இருந்தாலும், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

    * நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம். எனவே கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    * மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.

    • பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது.
    • வயிற்றுப்பகுதி தளர்ந்து விடுவதால் ஸ்ட்ரேச் மாக்ஸ் ஏற்படுகிறது.

    குழந்தை பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையை மட்டுமல்ல தாயின் உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு உயிரை வளர்க்க தன்னுள் இடம் கொடுப்பதால் பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது.

    ஸ்ட்ரேச் மாக்ஸ்

    தாயின் வயிற்றிற்குள் ஒரு குழந்தை ஒன்றல்ல, இரண்டல்ல 10 மாதங்கள் முழுமையாக வளர்கிறது. குழந்தை வளர வளர அதற்கு ஏற்ற அளவிற்கு பெண்ணின் வயிறும் வளர்கிறது. கர்ப்ப காலத்தில் விரிவடையும் தோலானது, குழந்தை பெற்ற பிறகு வயிற்றுப்பகுதி தளர்ந்து விடுவதால் அதில் வரிவரியாக ஸ்ட்ரேச் மாக்ஸ் ஏற்படுகிறது.

    மார்பகத்தில் மாற்றம்

    கர்ப்பம் தரித்த பெண்களின் மார்பக அளவு முன்பை விட இரண்டு மடங்கு அளவுகள் கூடுகிறது. இதற்கு காரணம் குழந்தை பெற்ற பிறகு, அதற்கான பால் உற்பத்தி அதிகரிப்பதால் மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பால் சுரக்கும் காலம் வரை மார்பகங்கள் பெரியதாக காணப்படும் அதன்பின்னர் தளர்ந்துவிடுகிறது.

    கட்டுப்பாடு இல்லாமல் போதல்

    குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்களது சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. இதனால் கர்ப்ப காலத்தைப் போலவே அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத உணர்வு போன்றவை ஏற்படும்.

    வயிறு வீக்கம்

    பிரசவத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் உடல் மாற்றங்களில் வயிற்று வீக்கம் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், வயிறு மற்றும் கருப்பை அளவு அதிகரிக்கத் தொடங்குவதால் வயிறு குழந்தை பிறந்த உடனேயே இயல்பு நிலைக்கு திரும்பாது. உடற்பயிற்சியின் மூலமே வயிற்று சதை பகுதியை இறுகச்செய்ய முடியும்.

    இடுப்பு பகுதி விரிவடையும்

    கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது, ஒரு பெண்ணின் எலும்பு அமைப்பும் மாறுகிறது. பிரசவித்தின் போது குழந்தையை உடலில் இருந்து வெளியே தள்ளுவதை எளிதாக்குவதற்கு இடுப்பு எலும்பு விரிவடைகிறது. எனவே, பல பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகு அவர்களின் இடுப்பு பகுதி விரிவடைந்து காணப்படும்.

    முதுகு மற்றும் பிறப்புறுப்பு வலி

    பிரசவ காலத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் முதுகு மற்றும் பிறப்புறுப்பில் வலியை அனுபவிக்கின்றனர். இது தற்காலிகமானது தான் என்றாலும், வலி தொடரும் பட்சத்தில் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

    முடி உதிர்வு

    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு ஆகும். மகப்பேறுக்குப் பிறகு குழந்தையை கவனிக்கும் தாய்மார்கள், தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் சரியான ஊட்டச்சத்து இல்லாததால் அவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

    • கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம்.
    • கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியம்.

    பொதுவாக குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பை மெதுவாக அதன் கர்ப்பத்துக்கு முந்தைய வடிவில் சுருங்க உதவுகின்றன. ஆனால் கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம். கர்ப்பகாலத்தில் கூடுதலாக எடுத்துகொள்ளும் உணவு கொழுப்பு வடிவில் மீண்டும் சேமிக்கப்படுகிறது. அதனால் தான் தொப்பை கொழுப்பு பிடிவாதமாக கரையாமல் எடை குறைப்பதில் சிக்கல் நேரிடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியமாகிறது.

    பிரசவத்துக்கு பிறகு வயிற்றை பலூன் போல நினைத்து பாருங்கள். குழந்தை வளரும் போது, உங்கள் வயிறு மெதுவாக விரிவடைகிறது. இப்போது குழந்தை வெளியே வரும் போது பலூன் சட்டென்று சுருங்காது. அதில் உள்ள காற்று மெதுவாக வெளியேறுகிறது. நீங்கள் கவனித்திருந்தால் பலூன்கள் சுருங்கி, காற்றின் பெரும்பகுதி வெளியேறும் போது சிறிது காற்றை தாங்கும். அந்த காற்றை வெளியேற்ற முயற்சிக்க செய்தாலே தொப்பை இல்லாமல் செய்யலாம்.

    பிரசவத்துக்கு பிறகு தாயின் வயிறு பழைய நிலைக்கு திரும்புவது சட்டென்று நடந்துவிடுவதில்லை என்பதால் முதலில் இது குறித்து கவலை கொள்ளாதீர்கள். சிலருக்கு ஒரு மாதத்தில் வயிறு பழைய நிலைக்கு திரும்பலாம்.

    எளிமையாக குறிப்புகள்

    * பிரசவத்துக்கு பிறகு மட்டுமல்ல பொதுவாக உடற்பயிற்சியின் எளிமையான பயிற்சி நடைபயிற்சி தான். ஒரே நேரத்தில் இல்லை என்றாலும் இது உடல்வலி, தலைவலி போன்றவற்றிலிருந்து மீண்டு வரும் பொது நன்மை அளிக்கும்.

    * உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற மெலிந்த புரதம், மசாலா, க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துவரலாம். நச்சு நீங்கினால் உடல் எடை பழைய நிலைக்கு திரும்பும்.

    * நீங்கள் செய்யும் எளிமையான மூச்சு பயிற்சி காற்றை இழுத்து உங்கள் வயிற்றில் வைத்திருக்கும் சுவாச பயிற்சியாகும். இது வழக்கமாக தாள சுருக்கங்கள் உங்கள் வயிற்றை தொனிக்க உதவுகிறது.

    * உடல் எடை இழப்புக்கான பாடி ரேப்களை போலவே தொப்பை அல்லது மகப்பேறு பெல்ட்களும் உங்கள் வயிற்றை இழுத்து கருப்பை அதன் அசல் அளவுக்கு சுருங்க உதவும். இது நம் முன்னோர் கால வயிற்றில் துணி கட்டும் முறைதான். தொப்பை குறைய பயன்படுத்தப்படும் பழமையான வழி இது.

    * உடல் எடை குறைக்கும் போது மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்றை குறிவைத்து வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் மசாஜ் செய்யுங்கள்.

    • திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
    • எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.

    மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

    நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

    * கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

    * கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

    * உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

    * உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    * உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    ×