search icon
என் மலர்tooltip icon

  பெண்கள் உலகம்

  மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் வழிமுறைகள்
  X

  மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் வழிமுறைகள்

  • திட்டமிட்ட காரியங்கள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும்.
  • தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும்.

  திட்டமிட்ட காரியங்கள், வேலைகள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும். அந்த பின்னடைவில் இருந்து மீள முடியாமல் மனம் தடுமாற்றமடையும். அன்றைய நாளே கடினமானதாக மாறிவிடும். எதன் மீதும் நாட்டம் இருக்காது. அந்த சமயத்தில் அமைதியாக இருக்கும் திறனை வளர்த்து கொள்வது அவசியமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

  தியானம்

  நெருக்கடியான சமயத்தில் தியான பயிற்சி மேற்கொள்வது மனதை இலகுவாக்கும். அதன் மீது முழு கவனத்தையும் செலுத்தும்போது எண்ணங்கள் ஒருநிலைப்படும். பதற்றம் குறையும். கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மீள முடியும். மனமும் சாந்தமாகும். மனதை நிலைநிறுத்துவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாக தியானம் கருதப்படுகிறது. ஆதலால் அந்த சமயத்தில் தியானம் சிறந்த தேர்வாக அமையும்.

  ஆழ்ந்த சுவாசம்

  ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். மன அழுத்தத்தையோ, துன்பத்தையோ சந்திக்கும் போது, ஆழமாக சுவாசிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, சில வினாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்பு வாய் வழியாக வெளியேற்றவும்.

  வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனதை ஒருநிலைப்படுத்த வித்திடும்.

  ஆதரவு

  சிரமங்களை எதிர்கொள்ளும் போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், நம்பகமான சக ஊழியர்களிடம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனதை ஆசுவாசப்படுத்தும். அவர்களின் ஆதரவான பேச்சு மனதை வலுப்படுத்தும். நெருக்கடியான மனநிலையில் இருந்து மீண்டு இயல்புக்கு திரும்ப வழிவகை செய்யும்.

  ஓய்வு

  சரியான ஊட்டச்சத்துக்கள், வழக்கமான உடற்பயிற்சிகள், போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடினமான காலகட்டத்தில் பலரும் சரிவர சாப்பிடமாட்டார்கள். உடற்பயிற்சியை விட்டுவிடுவார்கள். தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள்.

  அந்த சமயத்தில் குறைந்தபட்சம் மனதிற்கு ஓய்வாவது கொடுக்க வேண்டும். சவாலான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள ஓய்வு அவசியமானது. எளிமையான உடற்பயிற்சிகள் மீது கவனத்தை திருப்பலாம். அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராவதற்கு வழிவகை செய்யும்.

  தகவல்கள்

  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏராளமான தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. மன நெருக்கடியில் தவிக்கும்போது எதிர்மறையான தகவல்கள்தான் அதிகம் கண்களுக்கு புலப்படும். அதுசார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்குதான் ஆர்வம் மேலிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அவை கவலையை மேலும் அதிகப்படுத்தி நிலை குலைய செய்துவிடும்.

  சிக்கலை தீர்க்கும் திறன்

  பிரச்சினையின் மீது கவனம் செலுத்தாமல், அதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். சிக்கல்களை சமாளிக்கக்கூடிய வழிமுறைகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். இந்த அணுகுமுறை சிந்தனை, செயல்திறனை அதிகரிக்கச்செய்யும்.

  நினைவுகள்

  சவாலான நேரங்களில் வாழ்வில் நடந்த நேர்மறையான விஷயங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள். அது பற்றி சிந்தித்து மனதை பின்னோக்கி சுழல விடுங்கள். கடந்த கால நிகழ்வுகள், மகிழ்ச்சியான தருணங்கள் மனதை லேசாக்கும்.

  மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது சவாலாக இருந்தால் மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

  Next Story
  ×