என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • விதவிதமான அணிகலன்கள் புதுவரவாக வந்துகொண்டு இருக்கின்றன.
    • புட் ஜூவல்லரி தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

    என்னுடைய வாட்ரோப் முழுவதும் டசன் கணக்கில் ஆடைகளை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையில்லை. அதற்கு ஏற்ற அணிகலன்களை அணிந்தால்தான் அந்த ஆடைகளுக்கு சிறப்பு.

    பாரம்பரிய நகைகள், நவீன நகைகள் என ஒவ்வொரு நாளும் விதவிதமான அணிகலன்கள் புதுவரவாக வந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சற்றே வித்தியாசமான வடிவமைப்புடன் தயார் செய்யப்படும் நகைகள், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.

    அந்த வகையில் உணவை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்படும் புட் ஜூவல்லரி (உணவு அணிகலன்கள்) தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு அச்சு அசலாக உணவு வகைகளை உணவு அணிகலன்களாக வடிவமைக்கிறார்கள். ஐஸ்கிரீம். ஆம்லெட், டோனட் என கண்களைக் கவரும் சில உணவு அணிகலன்களின் தொகுப்பு இதோ...

     

    • ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
    • நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு.

    நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. அப்படி இறந்தவர்களை நாம் கனவில் காணும் போது ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

    * இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.

    * இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசீர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

    * இறந்துபோன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பெண் குழந்தைகள் பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.

    * இறந்தவர்களுடன் பேசுவதுபோல் கனவு கண்டால் பேரும், புகழும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

    * நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இறப்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் நம்மைவிட்டு விலகப்போகிறது என்று அர்த்தம்.

    * இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவதுபோல் கனவுகண்டால் நல்லதல்ல. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.

    * இறந்துபோனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.

    * இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பதுபோல் கனவு கண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

    * இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்றுபொருள்.

    * தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால் நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்

    • மிதமான ஷாம்புவையே பயன்படுத்துவது சிறந்தது.
    • சிறிதளவாவது எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்.

    குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளை பின்பற்ற வேண்டும்.

    * குளிக்க செல்லும்போது காய்ந்த தலை முடியில் குளிக்க கூடாது. சிறிதளவாவது எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்.

    * மிதமான ஷாம்புவையே பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக ஷாம்புவை அப்படியே தலையில் தேய்த்து குளிக்க கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஷாம்புவை ஊற்றி கலக்கிய பின்னர் தலைமுடியில் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * முதலில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி விட்டு கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி கழுவிக்கொள்வது நல்லது.

    * தலையை கழுவும் போது முடியை கீழ்நோக்கி வைத்துக்கொண்டு கழுவ வேண்டும். நேராக நின்றுகொண்டு ஷவரில் தலையை கழுவினால் முடியின் வேர்கள் பலமற்றதாகிவிடும்.

    * ஈரமான முடியை தலையில் உச்சியில் வருமாறு துண்டை கட்டிக்கொள்ள வேண்டும். பின்னால் கொண்டையாக முடியை சுற்றக்கூடாது.

    * ஈர முடியை 15 நிமிடங்களில் உலர்த்திக்கொள்ள வேண்டும். ஒருமணிநேரத்திற்கு ஈரமாக முடிந்துகொண்டு வேலை செய்வது தலையில் நீர்கோர்த்துக்கொள்ளும்.

    * ஈர முடியை துண்டால் அடித்து துவட்டாமல் கை விரல்களால் பிரித்து சிக்கெடுத்து உலர்த்த வேண்டும்.

    * உலர்ந்த முடியை விரித்து போட்டபடி இருப்பது முடியை கரடுமுரடாக மாற்றிவிடும்.

    • வாழ்வியலின் அடையாளமாகவும் அமைவதும் உண்டு.
    • அணிபவரின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

    பெண்களின் மனதையம் தோற்றத்தையும் மெருகூட்டி காட்டும் வகையில் பலவகையான ஆடை, ஆபரணங்கள் வடிவமைக்கப்படுகின்றன. குறியீடுகள், பறவைகள், விலங்குகள் என்று பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் அவை அணிபவரின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையிலும், வாழ்வியலின் அடையாளமாகவும் அமைவதும் உண்டு.

    அந்த வகையில் மீன் உருவமானது செல்வச்செழிப்பு, குழந்தைப்பேறு, உணர்வு, படைப்பாற்றல், மறுபிறப்பு. அதிர்ஷ்டம், மாற்றம், ஆரோக்கியம், அமைதி, புத்திசாலித்தனம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாகும்.

    மீன் வடிவ நகைகள் இந்த உணர்வுகளை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இத்தகைய நகைகள் இன்றைய இளசுகளின் ரசனைக்கு ஏற்றவாறு டிரெண்டியாகவும், பேன்சியாகவும் வடிவமைக்கப்படுகின்றன.

    • வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே ஸ்மார்ட் பர்ஸ்.
    • மக்கள் தங்கள் படைப்பாற்றல் திறமையை பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்கலாம்.

    மக்கள் தங்கள் படைப்பாற்றல் திறமையை பயன்படுத்தி வீட்டை அழகாக மாற்ற அலங்கார பொருட்களை வாங்கி அலங்கரிக்கின்றனர். ஆனால் உங்கள் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே பல பொருட்களை தயாரிக்கலாம். நாம் இன்று ஸ்மார்ட் பர்ஸ் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    பிளாஸ்டிக் ஜார் மூடி

    காலியான கிரீம் டியூப்

    கிளிட்டர் தாள்

    சார்ட் தாள்

    கத்தரிக்கோல் மற்றும் கட்டர்

    பசை

    வெல்குரோ

    அலங்கார லேஸ்

    அலங்கார கற்கள்

    செய்முறை:

    முதலில் படத்தில் காட்டி உள்ளவாறு பிளாஸ்டிக் ஜார் மூடியை வெட்டிக்கொள்ளவும். பின்னர் காலியான கிரீம் டியூப்பை படத்தில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல வெட்டிக் கொள்ளவும். இப்போது கிரிம் டியூப்பை பிளாஸ்டிக் ஜார் முடியின் அகலமான பகுதியை முழுவதும் முடும்படி வைத்து பசை கொண்டு ஒட்ட வேண்டும். பின்னர் அதில் தேவையற்ற பகுதிகளை தனியாக வெட்டி எடுக்க வேண்டும்.

    சார்ட் தாளின் அளவுக்கு ஏற்றவாறு கிளிட்டர் தாளை வெட்டி, அதன் மீது முழுவதும் மூடியவாறு ஒட்ட வேண்டும். அதன் பின்பு பர்சை திறந்து முடுவதற்கு வசதியாக வெல்குரோவை ஒட்ட வேண்டும். இப்போது சார்ட் தாளை படத்தில் காட்டி இருப்பதுபோல வெட்டி, பிளாஸ்டிக் ஜார் முடியின் மீது ஒட்ட வேண்டும்.

    இப்போது பர்ஸ் தயாராகி விட்டது. அதனை அலங்கார லேஸ் மற்றும் கற்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் பர்சை பணம் வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம்.

    • வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது பலருக்கும் பிடிக்கும்.
    • வெள்ளை நிற உடைகள் ஒருவரின் தோற்றத்தை கம்பீரமாகக் காட்டும்.

    `பளிச்' என்று வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது பலருக்கும் பிடிக்கும். வெள்ளை நிற உடைகள் ஒருவரின் தோற்றத்தை கம்பீரமாகக் காட்டும். ஆனால் இவற்றை பராமரிப்பதும். இவற்றில் ஏற்படும் கறைகளை நீக்குவதும், சற்றே கடினமான விஷயமாகும். வெள்ளை நிற ஆடைகளைத் துவைக்கும்போது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ் இங்கே...

    * வெள்ளை நிற ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்க சிறிது நேரம் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகளும், அழுக்குகளும், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆளவை சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை எளிதாக நீக்கும்.

    * ஒரு பக்கெட் தண்ணில் 2 மூடி வினிகரை ஊற்றி கலக்கவும். இதில் வெள்ளை நிற ஆடைகளை போட்டு மூழ்கச்செய்து, 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் அவற்றை துவைக்கவும். இதன் மூலம் ஆடைகளில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கி வெண்மை பளிச்சிடும்.

    * வெள்ளை நிற ஆடைகளில் காபி, டீ. ஊறுகாய் கறைகள் ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதை கறைகள் இருக்கும் இடத்தின் மீது அழுத்தி தேய்க்கவும், பின்னர் சோப்பு போட்டு துவைத்தால் எளிதில் கறைகள் நீங்கும்.

    * வெள்ளை நிற ஆடைகள் புதிதாக தெரிய வேண்டும் என்பதற்காக, பலரும் துவைக்கும்போது அதிக அளவு சோப்பை பயன்படுத்துவார்கள். இதனால் துணியின் இழைகள் விரைவாக சேதம் அடையும். எனவே எப்போதும் துணிகளுக்கு குறைந்த அளவு சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * வெள்ளை நிற ஆடைகளுக்கு குளோரின் பிளீச் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும், பருத்தியினால் ஆன துணிகளுக்கு மட்டுமே 'பிளீச்' உபயோகிக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் துணிகளின் இழைகள் சேதம் அடையும். எனவே, மாதம் ஒருமுறை மட்டுமே பிளீச் பயன்படுத்த வேண்டும்.

    * பேக்கிங் பவுடர் துணிகள் மீது படியும் விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்கும். 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும், அதை கறைகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை உடைகள் பளிச்சிடும்.

    * வெள்ளை நிற துணிகளை எப்போதும் வெயிலில் உலர்ந்த வேண்டும். இது துணியை பளிச்சிட வைக்கும் யுக்தியாகும்.

    • வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
    • தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

    ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மினரல் வாட்டர்- 4 லிட்டர்

    பேக்கிங் சோடா - 100 கிராம்

    சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

    வினிகர் - 250 மி.லி.

    சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,

    சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.

    லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி

    செய்முறை

    பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.

    நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.

    தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தரும்.
    • உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

    நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.

    இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    • பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்திருக்கிறார்.
    • ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்களை கற்று கொள்ளலாம்

    தமிழக அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் அர்ச்சகர் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சமீபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களில் மூன்று பேர் பெண்கள். ஆண்கள் மட்டுமே கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்து வந்த நிலையில் தற்போது இந்த பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று இறைவனுக்கு பூஜை செய்ய இருக்கிறார்கள்.

    இவர்களில் இருவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலாதனூரை சேர்ந்த ரம்யா-கிருஷ்ணவேணி.மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெள்ளமதகு கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா. இவரது பெற்றோர் நடராஜன் - உமா. இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். 25 வயதாகும் ரஞ்சிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்திருக்கிறார்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் பணி பொறுப்பை ஏற்க இருக்கும் ரஞ்சிதாவை சந்தித்து சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அர்ச்சகர் பணி ஆசை பற்றியும், அர்ச்சகர் பயிற்சி அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

    உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

    அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தங்கை, ஒரு தம்பி ஆகியோருடன் தாத்தா, பாட்டியும் உள்ளனர். அர்ச்சகர் பயிற்சியில் சேர்ந்தபோது தொடக்கத்தில் சிலர் கேலி, கிண்டல் செய்யத்தான் செய்தார்கள். ஆனால் இப்போது நிறையபேர் பாராட்டுகின்றனர்.

    அர்ச்சகராக வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?

    திருவாரூரை அடுத்த கொரடாச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தேன். பின்பு திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.

    அப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் பற்றி நண்பர் மூலம் அறிந்தேன். குறிப்பாக பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என கேள்விப்பட்டேன். `நாமும் அர்ச்சகர் ஆகலாம். ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணம் மேலிட்டது.

    பொதுவாக கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிடுவோம். மற்ற பூஜைமுறைகள் குறித்து நமக்கு தெரியாது. அர்ச்சகரானால் பூஜை முறைகளை அறிந்து கொள்ள முடியும். கோவில் விழாக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆர்வத்துடன் பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மன திருப்தி அளிக்கிறது.

    கடவுளை வழிபடுவதுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அர்ச்சகர் பயிற்சியின்போது கற்றுக்கொண்டது என்ன?

    விஸ்வரூபம், திருவாராதனம், புண்ணிய வாகனம், சூக்தம், திவ்ய பிரபந்தத்தில் 110 பாசுரங்களை பயிற்சி எடுத்துக்கொண்டேன். சாமிக்கு எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். வைணவ ஆகமவிதிப்படி எப்படி பூஜைகளை செய்ய வேண்டும். அர்ச்சனைகள் எப்படி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் அர்ச்சனை செய்வது குறித்து கற்றுத்தரப்பட்டது. அனைத்தையும் நன்றாக கற்று தேர்ந்துள்ளேன். மேலும் மந்த்ர ப்ரயோகம் பாகம்-1, மந்த்ர ப்ரயோகம் பாகம்-2 ஆகிய புத்தகங்களும் கொடுத்துள்ளனர். அதில் எல்லாவிதமான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சகராக பயிற்சி பெற்ற பிறகு உங்களது மனநிலை எப்படி இருக்கிறது?

    எங்கள் குடும்பத்தில் முதன் முதலாக அரசு சார்பான வேலைக்கு செல்லும் நபர் என்ற பெருமையை நான் பெற்று இருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியத்துடன் வழங்கப்படவுள்ள இந்த அர்ச்சகர் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    என்னுடன் கடலூரை சேர்ந்த 2 பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு நாங்கள் தொடக்கமாக இருக்கிறோம். இது தொடர வேண்டும். இந்த ஆண்டு 10 பெண்கள் பயிற்சியில் சேர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு முறையாக பணி வழங்கப்பட்டால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதிகம் பெண்கள் அர்ச்சகர் பயிற்சியில் விரும்பி சேருவார்கள்.

    ஆண் அர்ச்சகரைப்போல் பெண் அர்ச்சகர்களும் எல்லா பூஜைகளும் செய்யலாமா? பெண் அர்ச்சகர்களுக்கென கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா?

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பயிற்சி ஏதும் அளிக்கப்படவில்லை. ஆண்கள், பெண்கள் என அனைவரையும் ஒன்றாக வைத்துத்தான் பூஜை முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கென எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. நாங்கள் எந்த கோவிலில் பணி அமர்த்தப்படுகிறோமோ அந்த கோவிலில் உள்ள தலைமை அர்ச்சகரின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.

    அர்ச்சகர் பணியில் சவால் இருக்கும் என கருதுகிறீர்களா?

    கண்டிப்பாக சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். தலைமை அர்ச்சகர்கள் எந்த முறைப்படி எங்களை ஏற்றுக்கொண்டு சொல்லிக் கொடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் நாங்கள் கற்ற விஷயங்களை செயல்படுத்த முடியும். அதனால் எல்லாமே தலைமை அர்ச்சகர் முடிவில் தான் இருக்கிறது.

    அவர்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் நாங்கள் படித்ததை வைத்து முழுமையாக பூஜைகள் செய்ய முடியும். இல்லையென்றால் சவால்கள் ஏற்படும். சவால்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலை தேர்வு செய்தது ஏன்?

    நான் வைணவ ஆகமவிதிப்படி பயிற்சி பெற்று இருக்கிறேன். அதனால் வைணவ கோவிலான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பணி புரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். எங்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். பணி விரைவில் வழங்கப்பட்டவுடன் பாடசாலைகளில் கற்றதை கோவில்களில் நேரடியாக செயல்படுத்துவோம். நாங்கள் நல்லபடியாகவே பூஜை செய்வோம், என்கிறார்.

    • சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு.
    • `பயோ கெமிஸ்ட்ரி’ துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன்.

    வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி. சென்னை பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி துறையின் உதவி பேராசிரியராகவும், கல்விப் பணியோடு சேர்த்து புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் யாமினி, தன்னுடைய ஆராய்ச்சி தகவல்களை பிரான்ஸ், இலங்கை... உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறார்.

    மஞ்சள் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலேயே புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், இவரது ஆராய்ச்சியை மருத்துவ உலகமும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளில் தீவிரமாக இருக்கும் யாமினியை, சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் சந்தித்தோம். அவர் பகிர்ந்து கொண்டவை....

    ''சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு. மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பைகூட, ஆராய்ச்சி பணிகளுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். அதேசமயம், ஆராய்ச்சி பணிகளுக்கு உகந்ததாக இருக்கும், `பயோ கெமிஸ்ட்ரி' துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன். 1986-ம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டமும் (1988), எம்.பில். பட்டமும் (1992) பெற்றேன்.

    இதைத்தொடர்ந்து, சில மத்திய-மாநில அரசுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்கு பிறகே 2002-ம் ஆண்டு, பி.எச்.டி. பட்டம் பெற முடிந்தது. தூதுவளையின் மூலமாக பாதிப்பிற்குள்ளான கல்லீரலை குணப்படுத்தமுடியும் என்பதை, எலி சோதனைகள் மூலமாக நிரூபித்ததன் பயனாக, எனக்கு பி.எச்.டி பட்டம் கிடைத்தது. அதுதான், என்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்'' என்று தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையை விளக்கியவர், பி.எச்.டி.பட்டம் பெற்ற பிறகும், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் கிளினிக்கல் சயின்ஸ் ஆகியவற்றைக் கற்றறிந்து, தன்னை அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு தயார்படுத்தினார்.

    ''என்னுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சிகளும், கல்விப் பணிகளும் பின்னிப்பிணைந்தவை. கிட்டத்தட்ட 35 வருடங்களாக, கல்விப்பணியில் இருந்துகொண்டே, பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளுக்காக, கல்விப் பணியைக் கைவிடும் சூழல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், இன்று வரை ஆராய்ச்சியுடன் கூடிய கல்விப் பணியில் நீடித்துக்கொண்டிருக்கிறேன்.

    நிறைய கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி துறையின் தலைவராக பணியாற்றி இருக்கிறேன். பயோ இன்பர்மேட்டிக் என்ற துறை, தமிழகத்திற்குள் அறிமுகமானபோது, அதை பல கல்லூரிகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக உருவாக்கி, அதன்மீது மாணவர்களுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறேன். அந்தவகையில் இப்போது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறேன்'' என்றவர், உயிரி வேதியியல் துறையில், நிறையப் புதுமைகளை செய்திருக்கிறார்.

    ''தூதுவளை சளி பிரச்சினைக்கு சிறந்த மருந்து என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் அந்த தூதுவளையில், நம் கல்லீரலை பாதுகாக்கும் சக்தியும், பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்கும் சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய பி.எச்.டி ஆராய்ச்சி என்றாலும், இதன்மூலமாக கிடைத்த ஊக்கம், என்னை மூலிகைகள், வீட்டில் பயன்படும் இயல்பான பொருட்களை ஆராய வழிவகுத்தது. அதன் காரணமாக, கிருமிநாசினி என அறியப்படும் மஞ்சளை, புற்று நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

    எதிர்பார்த்தபடியே, மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.

    ஆராய்ச்சி பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், இனி சோதனை மருந்து உருவாக்கம், சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது, முழுமையாக வெற்றிபெற்றால், இப்போது சந்தையில் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகளை விட மிக மிகக்குறைந்த விலையில் விற்கமுடியும். புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, 5 பங்கில் ஒரு பங்காக சுருங்கிவிடும்' என்று புது நம்பிக்கை கொடுக்கும் யாமினியின் ஆராய்ச்சியை, சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்து, முழுமைபெற பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்கள்.

    `தூதுவளை, மஞ்சள்... தொடர்ந்து இயல்பாக வீட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், ஓமம், பட்டை போன்ற மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்... ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக உருமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆராய்ச்சிகளை வெறும் காகித அளவில் மட்டுமின்றி, அதை முழுமைப்படுத்தி, அதற்கான பேட்டன்ட் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.

    ஜெர்மனி, பிரான்ஸ், துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை, பாங்காக்... ஆகிய இடங்களில் அரங்கேறிய பல்வேறு அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். இதில் பிரான்ஸ் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற 400 தலைப்புகளில், என்னுடைய ஆய்வு முதலிடம் பெற்றது சிறப்புக்குரியது. இதன்மூலம் கிடைத்த அங்கீகாரத்தினால் பல நாடுகளுக்கு, சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

    வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளையும், என்னுடைய ஆராய்ச்சிகளால் கடந்திருக்கிறேன்'' என்றவர், அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், குழுக்கள் மற்றும் வாரியங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதுடன், மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் ஏற்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.

    `உயிரி வேதியியல் என்ற துறை, மிகவும் வித்தியாசமானது. சுவாரசியமான பல ஆராய்ச்சிகளைக் கொண்டது. எல்லா துறைகளுக்கும் மூலகாரணமாக திகழ்கிறது. முன்பைவிட, இப்போது உலகளவில் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. உலகளவிலும், மத்திய-மாநில அளவிலும் நிதி உதவியுடன் கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த துறையின் மகத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, எல்லா மாணவர்களையும் ஆராய்ச்சியாளராக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும், சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. இவ்விரண்டையும் சிறப்பாக மேற்கொள்வேன்' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

    மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை வெகு விரைவாக குறைக்கிறது. இந்த குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாக கட்டுப்படுத்துகிறது.

    ×