search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஆசிரியர் பணியே அறப்பணி: மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி
    X

    ஆசிரியர் பணியே அறப்பணி: மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    Next Story
    ×