என் மலர்tooltip icon

    சமையல்

    அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 1 கட்டு
    தேங்காய் துருவல் - விருப்பத்திற்கேற்ப
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    வரமிளகாய் - 3
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    கடுகு - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்துபொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    அடுத்து அதில் உப்பு சேர்க்கவும்.

    கீரை முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்க்கவும்

    நன்றாக கிளறி வெந்ததும் அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.

    சத்தான அகத்திக்கீரை பொரியல் ரெடி.

    இந்த பொரியல் செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிக்கன், மட்டன், இறால், மீன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான இளநீர் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொங்கு இளநீர் - 5,
    சீரக சம்பா - 1/2 கிலோ
    சிக்கன் - அரை கிலோ
    வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
    வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 2
    பச்சைமிளகாய் - 10,
    இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
    தேங்காய்ப்பால் - 100 கிராம்,
    உப்பு - சிறிது,
    கொத்தமல்லி - சிறிது,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி,
    பட்டை - சிறிது,
    ஏலக்காய், கிராம்பு - தலா 4,
    பிரியாணி இலை - சிறிதளவு.

    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.

    அடுத்து தக்காளி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து சிக்கன் வேகும் வரை சமைக்கவும்.

    இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் மூடி தணலில் தம் போடணும். (முன்பே  அடுப்பு கரியில் தணல் போட்டு வைக்கவும்.

    இருபது நிமிடங்கள் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான இளநீர் தம் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப்பயிறு - 2 கப்
    இட்லி அரிசி - 2 கப்
    உளுந்து - 1 கப்
    வெந்தயம் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேறப

    செய்முறை

    பச்சைப்பயிறு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

    நன்றாக ஊறிய பின்பு உளுந்தை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

    இட்லி அரிசி மற்றும் பச்சைப்பயிறு, வெந்தயத்தை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் உளுந்து மற்றும் இட்லி அரிசி வெந்தயம் பச்சை பயறுடன் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து 8 மணிநேரம் நன்றாக புளிக்க விடவும்.

    மாவு நன்றாக பொங்கி வந்த பின்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

    சத்தான சுவையான பச்சைப்பயிறு இட்லி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு பான் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து பான் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - ஒரு கப்,
    பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட்,
    கேரட் - ஒன்று 
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    வெங்காயம் - ஒன்று 
    இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நூடுல்ஸை வேகவிட்டு, வடிகட்டி, ஆறியபின் தோசைமாவில் சேர்க்கவும்.

    துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    சூடான தவாவில் ஒன்றரை கரண்டி மாவை கனமான ‘பேன் கேக்’ ஆக ஊற்றவும்.

    எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு மேலே சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடி தூவவும்.

    தேங்காய் சட்னி, புதினா/கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பச்சைப்பயறு உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. இரும்புச்சத்து நிறைந்தது.
    தேவையான பொருட்கள்:

    முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
    வெல்லம் - ¾ கப் (பொடி செய்தது)
    தண்ணீர் - சிறிதளவு
    துருவிய தேங்காய் - ½ கப்
    ஏலக்காய் பொடி - சிறிதளவு
    நெய் - சிறிதளவு

    செய்முறை:

    முளைகட்டிய பச்சைப்பயறை வாணலியில் போட்டு அத்துடன் வெல்லப்பொடியும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

    பயறு நன்கு வெந்தவுடன் அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து சிறிதளவு நெய் விட்டு நன்கு வதக்கவும்.

    காரம் விரும்பாத குழந்தைகள் இதுபோல இனிப்புச் சுவையில் சுண்டலைச் செய்து கொடுக்கும்போது கேள்வியே கேட்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

    முளைக்கட்டிய பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது. இந்த பயறு குறைந்த நேரத்திலேயே வெந்துவிடும். எனவே, பயறு சுண்டல் செய்துபோது அதை குக்கரில் வேக வைக்க கூடாது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
    மனிதன் என்றைக்கு சமையல் செய்து சாப்பிட தொடங்கினானோ, அன்றே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். உணவு தயாரிப்பதை ஆறு வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும்.

    பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ‘சாலட்’ முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்க முடியும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.

    உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்கள் இந்த உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் நிஜம். இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

    பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பின்னர் அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் காட்டில் வாழும் ஆதிவாசிகள் இப்படிப்பட்ட உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள்.

    செரிமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால் அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே.

    பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் உருளைக்கிழங்கு அவித்து கொடுப்பதும், நோயாளிகளுக்கு கஞ்சி, இட்லி போன்றவை கொடுப்பதும் ஓரளவு நாக்குக்கும் சுவையாக இருக்கும், செரிமானத்திற்கும் எளிதாக இருக்கும் என்பதால் தான். இதுவரை நாம் பார்த்து வந்த உணவு வகைகளில் எல்லாம் சுவைக்காக செயற்கை பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுவதில்லை. ஆனால் வேக வைக்கும் பொழுது மசாலா பொருட்கள் இடம் பெற தொடங்குகிறது. உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
    அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து பார்ப்போம்...
    பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை சத்துள்ள உணவாக உண்ணப்பட்டு வருவது அவல் என்றால் அது மிகையாகாது.

    நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அவலானது இந்தியாவின் வட மாநிலங்களில் போஹா என்றும், ஒரிசாவில் சிவ்டா என்றும், ஆந்திராவில் அத்குலு என்றும், கர்நாடகாவில் அவலக்கி என்றும் அழைக்கப்படுகின்றது.

    அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைகின்ற அரிசியைக் கொண்டு பலவகையான அவல்கள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மற்றும் கேரளாவில் சிவப்பு அவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.

    அரிசியில் மட்டுமல்லாது சிறு தானியங்களிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றது. தினை அவல், கம்பு அவல், சோள அவல், ராகி அவல் போன்றவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய உணவாக மாறி வருகின்றது.

    பல வருடங்களுக்கு முன்பு வரை நெல்லை சுத்தப்படுத்தி, ஊறவைத்து வெயிலில் உலர்த்தி கைகளால் இடித்து கைக்குத்தல் முறையில் அவலானது தயாரிக்கப்பட்டு வந்தது.

    இப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் எளிதாகவும், விரைவாகவும் அதிக அளவிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கல் மற்றும் மண்ணானது பிரிக்கப்படும் இயந்திரத்தில் நெல்லிலிருக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் உள்ள தொட்டியில் நெல்லானது கொட்டப்பட்டு மேலே மிதக்கும் தேவையற்ற கருக்கா நெல்லானது அகற்றப்பட்டு குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கப்படுகின்றது.

    பின்பு மற்றொரு இயந்திரத்தில் ஊறவைத்து உலர்த்தப்பட்ட நெல்லானது கொட்டி வறுக்கப்படுகின்றது.

    வறுக்கப்பட்ட நெல்லானது நெல்லை அழுத்தி அவலாக மாற்றும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அவலாக வெளியே எடுக்கப்படுகின்றது.

    அந்த அவலானது பெரிய சல்லடைகளில் சலிக்கப்பட்டு தவிடு, உமி நீக்கப்பட்டு சுத்தமான அவலாகக் கிடைக்கின்றது.

    அவல் அளவானது இயந்திரத்தில் தரப்படும் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகின்றது.

    அவல் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

    மாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும்.

    அவலை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். எந்தவித பண்டிகைகளிலும் அவல் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருளாக உள்ளது.

    அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவல் பெரிதும் உதவுகின்றது.

    உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய சிவப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிவப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம் மற்றும் புட்டு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

    கம்பு அவல் கிச்சடி, உப்புமா மட்டுமல்லாது இனிப்பு வகைகள் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.

    சுவைமிக்க தினை அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவற்றையும் மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.

    அவலை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

    அவலை தண்ணீர், பால் அல்லது மோரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் மற்றும் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.

    எப்போதாவது பண்டிகைக்கு வாங்கிப் பயன்படுத்தும் ஒன்றாக இல்லாமல் அன்றாட உணவில் அவலைச் சேர்த்துக் கொண்டோமானால் அதை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் முழுமையாகப் பெறலாம்.
    நவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    முந்திரி - தேவையான அளவு
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

    செய்முறை

    ஒரு கப் பச்சரிசியை  30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

    30 நிமிடம் கழித்து ஒரு துணியில் தண்ணீரை வடித்து உலர விடவும்.

    ஈரம் போனவுடன் மிக்சி ஜாரில் போட்டு மாவாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்த மாவை போட்டு மணல் பதத்திற்கு வறுத்து கொள்ளவும்.

    துவரம் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்காடாக குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கப் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தூவி அதை கலந்து கொள்ளவும்.

    அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு அதில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

    மாவு பிடித்தால் உருவம் வரும் கொஞ்சம் அழுத்தினால் உடைந்து விடும் அது தான் மாவின் பதம்.

    ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    மாவு வேக்காட்டில் இருக்கும் பொழுதே மற்றொரு அடுப்பில் கனமான ஒரு பாத்திரத்தை  போட்டு அதில் வெல்லத்தை போட்டு அது முழ்கும் அளவிற்கு சிறிது நீரை ஊற்றவும்.

    வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கெட்டி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.

    சாதாரண தண்ணீரில் காய்ச்சி பாகினை ஊற்றினால் உருண்டு வரவேண்டும்.

    ஏலப்பொடி நெய்யில் வறுத்தெடுத்த தேங்காய் துருவல், முந்திரியை சேர்த்து கிளறி கொள்ளவும்.

    வெல்லப்பாகில் ஆவியில் வைத்த புட்டு மாவினை போட்டு கிளறி கொண்டு  அரை வேக்காடு துவரம் பருப்பையும் சேர்க்கவும். இறுதியில் மிஞ்சிய நெய்யை ஊற்றி கலந்தால் புட்டு ரெடி.

    புட்டு மாவு கட்டியாக  இருந்தால் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும். நேரம் ஆக ஆக புட்டு உதிரியாகி விடும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வேர்கடலை சேர்த்து நவராத்திரி நைவேத்தியம் சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சமைக்க தேவையானவை

    வேர்க்கடலை - 1 கப்,
    பச்சை மிளகாய் - 2
     கொத்தமல்லி - சிறிதளவு,
    இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,
    சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்கடலையை  ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

    முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.

    எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

    இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த வேர்க்கடலை சேர்க்கவும்.

    நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    வேர்க்கடலை சுண்டல் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி ஒவ்வொரு நாளும் வீட்டில் வைத்திருக்கும் கொலுவை பார்க்க வரும் உங்கள் சுற்றத்தாருக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இன்று இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்,
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
     உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி- தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.
    நவராத்திரி பலகாரமாக இன்று வெள்ளை பட்டாணியில் மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று சுண்டலை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை பட்டாணி - ஒரு கப்
    உப்பு - தேவைகேற்ப
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    தனியா - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கறிவேபில்லை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - ஒன்று

    செய்முறை

    வெள்ளை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்

    பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

    பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

    சுவையான வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச்சு அதிகமுள்ளது. செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான உண வாக ஜவ்வரிசி உள்ளது.
    தேவையான பொருட்கள்:

    நெய் - 100 கிராம்
    ஜவ்வரிசி - ½ கப்
    பால் - ஒரு கப்
    தண்ணீர் - ஒரு கப்
    சர்க்கரை - ½ கப்
    குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
    முந்திரி, திராட்சை சிறிதளவு(வறுத்தது)
    ஏலக்காய் பொடி - ¼ ஸ்பூன்

    செய்முறை:

    குக்கரில் சிறிதளவு நெய்விட்டு அரை கப் ஜவ்வரிசியை போட்டு மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    ஒரளவு வதங்கிய பின் அத்துடன் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விடவும்.

    ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து ஜவ்வரிசி நன்கு வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். வேகவில்லை என்றால் இன்னும் ஒன்றிரண்டு விசில்கள் விடலாம்.

    பின்பு ஒரு நான்ஸ்டிக் கடாயில் இந்தக்கலவையை ஊற்றி அத்துடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு நெய்யும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    நெய் கடாயின் ஓரத்தில் பிரிந்து வரும்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வேரொரு பாத்திரத்திற்கு அல்வாவை மாற்றி வைக்கும் பொழுது அல்வா அதிகம் கெட்டியாவது தவிர்க்கப்படும்.

    சூப்பரான ஜவ்வரிசி அல்வா.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×