என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வயர் அசவுகரியமாக தெரிந்ததால் ‘புளூ டூத்’ வசதியை அறிமுகம் செய்தார்கள்.
    • பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    யாராவது தெருவில் தனியாக நடந்து செல்லும்போது சிரித்துக் கொண்டே நடந்தாலோ அல்லது பேசிக்கொண்டே நடந்தாலோ அய்யோ பாவம்.... ஏதோ ஆகி விட்டது என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது அந்தக் காலம்.

    ஆனால் இன்று யாரை பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நல்லாத்தான் இருக்கிறார்கள். என்ன சொல்வது...? காலம் மாறி போச்சு.

    செல்போன் வந்ததும் காதில் நீண்ட நேரம் வைத்து பேசும்போது சூடாகிறது. இது காதுக்கு நல்லதல்ல என்றார்கள்.

    அதை தவிர்ப்பதற்காக வயருடன் கூடிய இயர்போன் வந்தது. செலபோனில் ஒரு முனையை சொருகி விட்டு மறுமுனையில் இருக்கும் இரண்டு இயர்போன்களையும் இரண்டு காதுகளிலும் மாட்டி கொண்டார்கள்.

    பின்னர் வயர் அசவுகரியமாக தெரிந்ததால் 'புளூ டூத்' வசதியை அறிமுகம் செய்தார்கள். இப்போது செல்போனில் புளூ டூத்தை ஆன் செய்து வைத்து விடுகிறார்கள். காது கேட்கும் கருவி போல் இருக்கும் சிறிய அளவிலான இயர்போனை காதுக்குள் சொருகி கொள்கிறார்கள்.

    காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அதை மாட்டுகிறார்கள். இரவு வீடு திரும்பும் வரை அது காதுகளில் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை மட்டுமல்ல வேலை பார்ப்பவர்கள் கூட காதுக்குள் வைத்திருக்கிறார்கள்.

    கையில் போனை எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் எந்த நேரமும் நினைத்த மாதிரி இனிமையான பாடல்களையோ, நகைச்சுவைகளையோ போட்டு கேட்டு ரசித்தபடியே இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது வேலையில் எந்த அளவு கவனம் இருக்கும்? நடந்து செல்லும்போது சுற்றிலும் நடப்பது அல்லது நெருங்கி வரும் ஆபத்துகளை எப்படி உணர முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால் இதுபற்றி இயர்போனை பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் ஒரு காதில்தான் மாட்டியிருக்கிறோம். மற்றொரு காதில் வெளி உலகில் நடப்பதை கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். இந்த மாதிரி ஒற்றை இயர்பட் என்பது இப்போதெல்லாம் புதிய சமூக அடையாளமாக மாறி விட்டது.

    சிலர் பேசுவது எரிச்சலூட்டும்போது இயர்போன் வழியாக காதில் விழும் மெல்லிய பின்னணி இசை அதில் இருந்து மீட்பதாக கூறுகிறார்கள். நாங்கள் இங்குதான் இருக்கிறோம். ஆனால் இல்லை என்ற ரீதியில்தான் ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள்.

    பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    வெளியில் இருந்து ஒலி பெருக்கி சத்தமோ அல்லது அதிகமான ஏதாவது ஓசையோ கேட்டால் செவிப்பறை கிழிந்து விடும் போல் இருக்கிறது என்று சலித்து கொண்டவர்கள்தான் இப்போது ஒலியை சிந்தாமல், சிதறாமல் அப்படியே காதுக்குள் பாய்த்து கொள்கிறார்கள். இது காதை பாதிக்காதா? என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. பல நேரங்களில் இயர்போன் வழியாக வெளியேறும் ஒலியின் அளவை பொறுத்து போனில் எச்சரிக்கை வருகிறது. "அதாவது அளவுக்கு அதிகமான சத்தம் வருகிறது. ஒலியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கும்.

    ஆனால் அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாத கணக்கில், ஆண்டு கணக்கில் இப்படியே பழக்கப்பட்டால் காது என்னவாகும்? செவி மடல் பாதிக்காதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருக்கிறது.

    இவ்வாறு பயன்படுத்துவது நல்லதல்ல. வாகனங்களில் செல்லும்போதும் பேசிக்கொண்டோ, பாடல்கள் கேட்டுக்கொண்டோ செல்வதால் கவன சிதறல் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம்.

    காது பகுதி மிகவும் சென்சிட்டிவான பகுதி இந்த பகுதிக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் ஒலி மாசு நிச்சயம் செவித்திறனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
    • இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.

    கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.  

    மனத்திறன்களை மேம்படுத்தும்

    இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். 


    மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்

    மனஆரோக்கியம் மேம்படும்

    அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    என்ன செய்யவேண்டும்? 

    ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.

    • நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது.
    • அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனக் கூறுவார்கள். காரணம் உப்பு இல்லையேல் எந்தப் பொருளையும் சாப்பிட முடியாது. அறுசுவை உணவாக இருந்தாலும் அந்த சுவையை உணர வைப்பதே உப்புதான். ஆனால் அதுவே அதிகமானால்...? நாம் சந்திக்கக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

    உயர் ரத்த அழுத்தம்

    அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    திசுக்களில் நீர் தேக்கம்

    உப்பு அதிகமாக சாப்பிடுவதால் திசுக்களில் நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதிக சோடியம் உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கச் செய்கிறது. இதனால் கணுக்கால், பாதங்கள் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படலாம். இது நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். 

    சிறுநீரக பிரச்சனைகள்

    அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது. உடலில் உப்பு அதிகமாகும்போது சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, சிறுநீர் கருமையாகி, அடர்த்தியாக வெளியேறி, கடுமையான துர்நாற்றம் வீசும்.


    ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானது

    தாகம்

    உப்பு உணவை எடுத்துக்கொண்ட பிறகு வாய் வறண்டுப்போனது போல தோன்றும். ஏனெனில், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்க உடனே தாகம் எடுக்கிறது. 

    தூக்கக் கலக்கம்

    அதிக உப்பு பயன்பாடு தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் விழித்தெழுதல், சோர்வாக உணர்தல், எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். 

    செரிமான கோளாறுகள்

    அதிக உப்பு உட்கொள்ளல் காரணமாக வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வுகள் கூட அதிகரிக்கக்கூடும். 

    அடிக்கடி தலைவலி

    அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.

    இதயநோய்

    நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 மில்லிகிராம் உப்பு எடுத்துக்கொண்டாலே போதும். அதிகப்படியான உப்பு பக்கவாதம் , இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

    • புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
    • வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

    தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம். 

    தாய்ப்பால் அதிகரிப்பு

    குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

    டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்

    ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    குறையும் ரத்த சர்க்கரை அளவு

    நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும். 

    குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!

    குறையும் கொழுப்பு

    வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.

    மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு

    வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. 

    எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?

    வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம். 

    வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது. 

    • மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
    • நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    பகலில் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய `மெண்டலியன் ரேண்டமைசேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பகல் நேர குட்டி தூக்கம், வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.

    இதே போல வேறொரு ஆய்வில், `டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் நடைபெற்றது. ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில் ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

    இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி, ஒரு இரவு வழக்கமான சாதாரண தூக்கம் மட்டுமின்றி பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்
    • சாறு, பொடி, சட்னி என எந்த வடிவத்தில் எடுத்துக்கொண்டாலும் நெல்லிக்காய் நன்மை பயக்கும்.

    'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். ஔவை நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி அவருக்கு நெல்லிக்கனியை கொடுத்தார். அவ்வளவு மருத்துவக்குணமிக்கதா நெல்லிக்காய் என நாம் வியப்போம். ஆம், நெல்லிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து காண்போம். 

    நோய் எதிர்ப்பு சக்தி

    கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களைவிட நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

     இயற்கை நச்சு நீக்கி

    நெல்லிக்காய் உடலில் நச்சு நீக்க செயல்முறையை ஆதரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. உயிர்சக்தியை மேம்படுத்துகிறது. 

    முதிர்வை தடுக்கிறது

    நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தோல் மற்றும் உறுப்புகளின் வயதாகும் தன்மையை தடுக்க முக்கிய பங்காற்றுகிறது.

    இதய ஆரோக்கியம்

    கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.   

    இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது

    நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.


    ஜூஸ், பொடி, சட்னி என அனைத்து வடிவத்திலும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்

    பசியை கட்டுப்படுத்தும்

    கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நெல்லிக்காய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் எடை குறைக்க விரும்புவர்கள் பலரும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வார்கள். 

    நினைவாற்றலை அதிகரிக்கிறது

    நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. கூர்மையான நினைவாற்றலை வளர்க்க உதவுகின்றன.  

    எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும். 

    சரும ஆரோக்கியம்

    நெல்லிக்காயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, பிக்மெண்டேஷனை குறைக்கின்றன, மேலும் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன.

    முடி பராமரிப்பு

    பல தலைமுறைகளாக, இந்திய முடி பராமரிப்பில் நெல்லிக்காய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வேர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நரைப்பதைத் தடுத்தல், முடிக்கு பளபளப்பைச் சேர்த்தல் என முடி பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது நெல்லிக்காய். இதுபோல இன்னும் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சாறு, பொடி, நெல்லிக்காய் சட்னி, இல்லை ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுகிறேன் என்றாலும், எந்த வடிவத்தில் எடுத்துகொண்டாலும் பலனளிக்கும். 

    • இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
    • மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது.

    காய்ச்சலுக்கு...

    பருவ நிலை மாறும்போது சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புகளுக்கு பலரும் ஆளாவதுண்டு. அப்போது நோயை எதிர்த்து போராடவும், தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடலில் இருந்து அகற்றவும் உடல் உறுப்புகள் முயற்சிக்கும். உதாரணமாக ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, நோய் பாதிப்பை கட்டுப்படுத்த போராடும். அப்போது நாம் செய்ய வேண்டிய இயற்கை மருத்துவம் குறித்து காண்போம்...

    காய்ச்சல் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் ஓரளவு சூடான நீரில் கால்களை மூழ்க வைக்கலாம். கால்கள் தாங்கிக்கொள்வதற்கு ஏதுவான சுடுநீரில் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வரை கால்களை மூழ்க வைக்கலாம். சுடு நீரில் பருத்தி துணியை நனைத்து வெதுவெதுப்பான பதத்தில் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தும் உடலின் வெப்பநிலையை குறைக்கலாம். இந்த சிகிச்சை முறைகளை மருத்துவ ஆலோசனை பெற்றுமுறையாக மேற்கொள்ள வேண்டியது முக்கியமானது.

    இருமலுக்கு....

    தேனில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை இருமலை கட்டுப்படுத்த உதவும். தொண்டைக்கு இதமளிக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீரில் தேன் சேர்த்து பருகலாம். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு குடிப்பது பலனளிக்கும்.

    சளிக்கு...

    இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூக்கடைப்பு ஏற்படுவதை தடுக்கும். தொண்டை வலியை குணப்படுத்த உதவும். சளி, இருமலை கட்டுப்படுத்தவும், உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும் உதவும்.

    இஞ்சி துண்டை பொடித்து நீரில் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து பருகலாம். தினமும் 2-3 முறை குடிப்பது பலன் தரும்.

    மூக்கடைப்புக்கு...

    தண்ணீரை கொதிக்க வைத்து, அகன்ற கிண்ணத்தில் ஊற்றி, சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்க்கவும். துண்டு கொண்டு தலையை மூடி ஆவி பிடிக்கவும். இந்த நீராவியை 5-10 நிமிடங்கள் உள்ளிழுக்கவும். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சளி சேருவது கட்டுப்படும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

    மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்.

    இரண்டு, மூன்று நாட்கள் கடந்தும் சளி, இருமல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

    சளி, இருமலின்போது அன்னாசி பழம் சாப்பிடலாமா?

    அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இந்த நொதி சளி, இருமலுடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்க உதவும். குறிப்பாக சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை அப்புறப்படுத்திவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் அன்னாசி பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். எனினும் அன்னாசி பழம் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் சிலருக்கு தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். தொண்டையில் எரிச்சலை உணர்ந்தால் அன்னாசி பழத்தை குறைவாக சாப்பிடலாம் அல்லது தவிர்த்து விடலாம்.

    • பழங்களின் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
    • வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள் சாப்பிடுவார்கள். சிலர் பசிக்காக சாப்பிடுவார்கள். சிலர் பழத்தின் ருசி பிடிக்கும் என்பதற்காக விரும்பிய பழத்தை சாப்பிடுவார்கள். சிலர் சருமம் மிளிர வேண்டும் என்பதற்காக சாப்பிடுவார்கள். ஆனால் பழத்தை எப்போது சாப்பிடவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. பழத்தை எப்போது எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது? அதுகுறித்த பதிவுதான் இது. 

    காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?

    பலரும் காலைநேரத்தில் உணவுக்கு பதிலாக பழங்கள் எடுத்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். காலை உணவுக்குப் பதிலாக பழங்களை சாப்பிட முடிவு செய்தால் வெவ்வேறு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • தர்பூசணி
    • பப்பாளி
    • அன்னாசிப்பழம்
    • ஆப்பிள்
    • கிவி
    • வாழைப்பழம்
    • பேரிக்காய்

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும். பப்பாளி எடைகுறைவிற்கு உதவுவதோடு, செரிமானத்திற்கு உதவும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும். பசிக்கும் போது சாப்பிட அன்னாசிப்பழம் ஒரு சிறந்த பழம். நோயெதிர்ப்பு மண்டலத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்த அன்னாசி உதவும். ஆப்பிள் செரிமானத்திற்கு ஒரு சிறந்த உணவாகும். கிவி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு நல்லது. பேரிக்காய் பழம் நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

    தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும்

    எப்போது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்?

    வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் நம்மில் பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். ஏனெனில் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது. உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும், பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்போ, அல்லது உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ பழத்தை எடுத்துக்கொள்ளலாம். 

    பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். சருமத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள். 

    • இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.
    • பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

    நாள் முழுவதும் அலுவலக வேலைகள் மற்றும் வீட்டு வேலைகள் நம்மை சோர்வடையச் செய்கின்றன. இது நமது அன்றாட வேலைகளில் தடைகளை உருவாக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவைத் தவிர, நல்ல இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

    ஒரு சிலருக்கு பல மணி நேரம் நடக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும், காலணிகளை பயன்படுத்தினாலும் சிலர் அதனை பயன்படுத்துவதில்லை. இதனால், பாதத்தில் தரையில் உள்ள அழுக்குகள் சேர்கிறது. எனவே, எவ்வளவு வேலைகளாக இருந்தாலும் கை, கால், முகத்தை கழுவுவதை வழக்கமாக வைத்திருப்பவது அவசியமாகிறது. ஏனெனில் சுகாதாரம் மிகவும் அவசியமான ஒன்று.

    ஆனால் இது மட்டுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானதல்ல. இதற்கு பிறகும் நீங்கள் ஒரு விஷயத்தை தவறவிடுவதன் மூலம் உங்கள் படுக்கையை கிருமிகள் நிறைந்ததாக மாற்றலாம்.

    பொதுவாக நாம் கை மற்றும் முகத்தில் கவனம் செலுத்துகிறோம், ஆனால் பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். நமது பாதங்கள் முழு உடலின் எடையையும் சுமக்கின்றன.

    உடல் வெப்பநிலையை பராமரிக்க கால்களைக் கழுவுவதில் ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பாதங்கள் நெருப்பின் அம்சத்துடன் தொடர்புடையவை. காலணிகளை அணிவது, நாள் முழுவதும் அந்த மூடப்பட்ட பகுதியில் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். காலணிகளைக் கழற்றியவுடன் உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா? இதற்குக் காரணம், உடனடியாக வெப்பம் வெளியேறுவதே ஆகும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாதங்களைக் கழுவுவது குளிர்ச்சியாக இருக்கவும், நன்றாக தூங்கவும் உதவும்.

    • உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
    • சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.

    இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.

    காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.

    உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 


    தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்

    தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

    • வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.

    வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.

    மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
    • தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு. ஆனால் உடல் சூட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம். 

    * மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டை சரியான உணவுமுறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

    * பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.

    * இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.



    * இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.

    * தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    * விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.

    * விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படக்கூடியது.

    * உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

    * எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.

    * இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.

    உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

    ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இதை தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும்.

    ஆனால் குளிச்சியான உடல் வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இவற்றை தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டை தவிர்க்க துணைபுரியும்.

    ×