என் மலர்
பொது மருத்துவம்

குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய 3 வகை உணவுப்பழக்கங்கள்
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
குளிர் காலம் தொடங்கியதும் பலரும் வழக்கத்தை விட விதவிதமாக ருசிப்பதற்கு விரும்புவார்கள். வெப்பநிலை குறைவதால் தாகம் தணிவதும், குளிர்ச்சியான வானிலைக்கு சூடான, பொரித்த உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு இதமாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதேவேளையில் சில உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது குளிர் காலத்தில் உடல் நலனை சீராக பேணுவதற்கு வழிவகை செய்யும்.
குளிர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் குளிர்ந்த பால், குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த சாதம், அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், குளிர்ந்த உணவை சாப்பிட்டால் ஜீரண சக்தி பலவீனமடையும். அதனை தவிர்க்க எப்போதும் சூடான, புதிதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள். சூடான சூப் பருகலாம். அவை உடலுக்கு கதகதப்புத்தன்மையை கொடுத்து குளிர்ச்சியில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவிடும்.
ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்த்தல்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
அதிகப்படியான உலர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பரோட்டா, சப்பாத்தி, பச்சை காய்கறி சாலட்டுகள் போன்ற உலர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் வாதம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அவை உடலை மேலும் உலரச் செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உண்ணும் உணவுகளுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அத்துடன் ஈரப்பதமான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.






