என் மலர்
பொது மருத்துவம்

விஷ காளான்களை அறிவது எப்படி?
- விஷ காளான்களை கண்டறியும் வகையில் சில அடிப்படையான அடையாளங்கள் உள்ளன.
- தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் விஷ காளான்கள் பரவலாக காணப்படுகின்றன.
மழை பெய்யும்போது ஆங்காங்கே காளான்கள் முளைப்பதை காணலாம். குடை போன்ற அழகிய தோற்றம், மென்மையான வடிவம் என்று பார்க்க அழகாக தோன்றும். ஆனால், பெரும்பாலும் இவற்றை விஷ காளான்களாகவே இயற்கை படைத்து உள்ளது.
இந்த காளான்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம், ஏனெனில் அவை பெரும்பாலும் உண்ணத்தகுந்த காளான்களை போன்றே தோற்றமளிக்கும்.
சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.
காளான்களை பொறுத்தவரை காட்டுப்பகுதியில் முளைத்து வளரும் எந்த காளானையும் உண்பது மிக மோசமான ஆபத்தை விளைவிக்கும்.
விஷ காளான்களை கண்டறியும் வகையில் சில அடிப்படையான அடையாளங்கள் உள்ளன. இந்த காளான்கள் தொப்பி போன்ற மேல் பகுதியில் செதில்களுடன் காணப்படும். தண்டின் அடிப்பகுதியில் குமிழ் அல்லது வளையம் போன்ற தோற்றம் இருக்கும். மேலும், இந்த விஷக்காளான்கள் மிகவும் கவர்ச்சிகரமான வண்ணங்கள், அடர்த்தியான நிறங்களுடன், ஒரு வித துர்நாற்றம் வீசும்.
இந்த வகை காளான்களை அவற்றின் நச்சு அடிப்படையில் தரம் பிரிக்கிறார்கள். அமானிடா பாலோய்ட்ஸ், கோனோசைப் பிலாரிஸ், அமானிட ஜெம்மாட்டா, அமானிட பேன்தரீனா சைலோசைப் சைனாசீன்ஸ், ஜிரோமிட்ரா எஸ்குலண்டா என்ற தாவரவியல் பெயரில் உள்ள காளான்கள் நச்சுத்தன்மை கொண்டவை.
இந்தியாவில், குறிப்பாக தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் விஷ காளான்கள் பரவலாக காணப்படுகின்றன.
உண்ண தகுந்ததில் பட்டன் காளான் முதல் இடத்தில் உள்ளது. இது வெள்ளை அல்லது கிரீம் நிறம் கொண்ட மென்மையான காளான் ஆகும். இதே போல் சாம்பல், வெள்ளை, பழுப்பு நிறங்களை கொண்ட சிப்பி காளான் சுவையானதாகும். இதை உண்ணும்போது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தவிர, ஷிடேக் காளான், எனோகி காளான், மோரல் காளான்களும் உள்பட மேலும் சில ரகங்களும் உண்பதற்கு ஏற்ற பட்டியலில் உள்ளன.






