என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
    • உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது.

    வாழ்வில் கடைசி வரை உங்களுடன் கூட வரும் உண்மையான துணை யார் என்று நினைக்கிறீர்கள்?

    அம்மா?

    அப்பா?

    மனைவி?

    கணவன்?

    மகன்?

    மகள்?

    நண்பர்கள்?

    இவர்கள் யாரும் இல்லை. உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான். உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப் போவதில்லை.

    பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பே. உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக்கொள்ளும்.

    நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்.

    உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

    உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த உடம்பில், மூச்சுப் பயிற்சி-நுரையீரல்களுக்கு தியானப் பயிற்சி-மனதுக்கு யோகாசனப் பயிற்சி- முழு உடம்புக்கு நடைபயிற்சி-இதயத்துக்கு சிறந்த உணவு- செரிமான உறுப்புகளுக்கு நல்ல எண்ணங்கள்- ஆன்மாவுக்கு நற்செயல்கள்- உலகுக்கு இதை உணர்ந்து வாழும்போது வாழ்க்கை வளமாகும், இனிமையாகும்.

    • சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள்.
    • மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும்.

    மன நல பிரச்சனை எந்த நேரத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அது எப்படி உண்டாகும்? என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்? அதனை எப்படி கையாள வேண்டும்? என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து செயல்பட்டால் மன நலனை பேணி பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் மன நோயாக மாறி மன நலனில் மட்டுமல்ல உடல் நலனிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன நோய்க்கு வித்திடும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

    கவனம் செலுத்துவதில் சிரமம்

    எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். மோசமான செயல்திறன் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து கவனச்சிதறலுடன் செயல்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.

    உடல் ரீதியான மாற்றம்

    மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது பலருக்கும் பசியின்மை உண்டாகும். சாப்பாடு மீது விரக்தி ஏற்படும். சிலரோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மன நலன் பாதிப்புக்குள்ளாகி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.

    மனநிலை மாற்றம்

    சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள். இயல்பாக பேசினால் கூட கோபத்தை கொப்பளித்துவிடுவார்கள். கோபம் அவர்களிடத்தில் தொடர்ந்து குடிகொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். தனிமையை நாடுவார்கள். எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்பு விரும்பி செய்த விஷயங்களை கூட தவிர்ப்பார்கள்.

    மதுப்பழக்கம்

    எந்தவொரு பிரச்சனையையும் மன ரீதியாக எதிர்கொள்ள தைரியமில்லாமலோ, மனதுக்குள்ளேயோ விவாதித்து அதுபற்றி பிறரிடம் பேசத் தயங்குவதோ மன நல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். அதில் இருந்து மீள மது, போதை பழக்கத்தை நாடுவது நாளடைவில் அதற்கு அடிமைப்படுத்திவிடும்.

    அதிக உணர்ச்சி நிலை

    மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். அதிகப்படியான பயம் எட்டிப் பார்க்கும். கவலைகள் ஆக்கிரமித்து பயத்தை அதிகப்படுத்தும். மனத்தெளிவு இல்லாமல் குழப்பம் குடிகொள்ளும். பதற்றமும் பற்றிக்கொள்ளும்.

    உடல் வலி

    மன நோயின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள்பட்ட தலைவலி, வயிற்றுப்போக்கு, தசை வலி, கை, கால் வலி என உடல் ரீதியான வலிகளை எதிர் கொள்வார்கள்.

     

    நடத்தை

    பிளேடு கொண்டு கைகளை கீறுதல், கத்தியைக்கொண்டு வெட்டுதல் போன்ற காயத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நடத்தை, தற்கொலை பற்றிய சிந்தனை தலைதூக்குதல் போன்ற செயல்பாடுகள் மன நோயின் அறிகுறியாக கருதப்படும்.

    மாற்றங்கள்

    அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுதல், காரணமே இல்லாமல் சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல், அச்சுறுத்துதல், மற்றவர்களுக்கோ அல்லது தனக்கோ தீங்கு விளைவித்தல் போன்ற செயல்பாடுகளையும் கொண்டிருப்பார்கள்.

    நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?

    உங்கள் அன்புக்குரியவர்கள் மன நல பிரச்சனைக்கு ஆளாகி இருந்து, இது போன்ற அறிகுறிகளுடன் செயல்பட்டால் அவர்களை நிதானத்துடன் கையாள வேண்டும். அன்பாக, பாசமாக வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

    இணைந்து பணியாற்றுங்கள்

    குடும்பத்தினர், நண்பர்கள், உடன் வேலை செய்யும் சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பை எளிதாக்குங்கள்.

    நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் கருத்துகளில் நிறை, குறை இருந்தால் அவர்கள் மனம் நோகாதபடி சுட்டிக்காட்டுங்கள்.

    உங்கள் நலம் விரும்பிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். இலக்குகளை நிர்ணயித்து திட்டமிடுங்கள். மனதுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் செயல்படுங்கள்.

    தவிர்க்கும் வழிமுறைகள்

    எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தொடர்ந்து மன அழுத்தம் இருந்தாலோ, மன நலன் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியை இழந்தாலோ மன நல நிபுணரிடம் கவுன்சலிங் பெற வேண்டும்.

    உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அவர்களிடம் பேசவோ, உங்களின் நிலை பற்றி அறிய கேள்வி கேட்கவோ தயங்காதீர்கள்.

    • எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா?
    • அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

    ஒருவர் தனக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது? அதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பற்றி...

    திடீர் அழுகை

    சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    கை நடுக்கம்

    எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மனஅழுத்தத்தின் அறிகுறி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒருவருக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    கண் இமை துடித்தல்

    கண் இமை திடீரென்று துடிக்கிறதா? அப்படி அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கண் இமைகள் வழக்கத்துக்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பார்க்க வேண்டும்.

    • புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
    • உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது.

    மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு வித்திடும் தினசரி பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளது.

    1939-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவர்களின் 80 ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் முறையை ஆய்வு செய்து இந்த பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பார்ப்போம்.

    1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை பின்தொடர்வது புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு உள்பட உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.

    2. மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்தல்

    மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துதல் அல்லது அறவே தவிர்த்தல் உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கத்திற்கு வித்திடும். உடலுக்கு அதிக ஆற்றலையும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

    3. உடல் எடையை பராமரித்தல்

    சத்தான உணவுகளை உண்பது, முறையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிப்பது நோய்களை தடுக்க உதவிடும். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.

    4. தினசரி உடற்பயிற்சி செய்தல்

    தினமும் குறைந்தது 30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் `என்டார்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.

    5. சிக்கல்களை சமாளித்தல்

    உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிக்கும் திறனை கொண்டிருப்பது உறவுகளை வலுப்படுத்தும். மன அமைதியையும் உண்டாக்கும்.

    6. கற்றுக்கொள்ளுதல்

    தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் பழக்கமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    7. அன்பை வெளிக்காட்டுதல்

    நீண்டகால நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை துணை வெளிக்காட்டும் அன்பு உள்ளிட்டவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானவை என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

    • கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும்.
    • கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது,​ கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலுக்கு கொழுப்பு அவசியம். ஆனால் அதன் அளவு அதிகரிப்பது ஆபத்தானது. குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    இந்த கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது சில உடல் உறுப்புகளே அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும். அதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை பெற்றாலே கொழுப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்திவிடலாம். கொழுப்பு அதிகரிப்பதை எந்தெந்த உறுப்புகள் எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்போமா?

    கால் வலி அல்லது தசை பிடிப்பு

    உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். அதன் தாக்கமாக நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ மெற்கொள்வது அவசியமானது.

    மார்பு வலி அல்லது அழுத்தம்

    மார்பு வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்வதும் கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். மார்பில் இறுக்கமோ, எரிச்சலோ உண்டாகக்கூடும். அத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    கழுத்து, தாடை அல்லது தோள்பட்டையில் வலி

    கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். ஏனெனில் கொழுப்பு அதிகரிக்கும் போது, முழு உடலின் ரத்த ஓட்டமும் தடைபட தொடங்கும். இதன் காரணமாக கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம்.

    வேறு சில அறிகுறிகள்

    கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக, கால்களின் நிறம் மாறக்கூடும். சில சமயங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்.

    தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

    படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல் அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    கண்களைச் சுற்றி மஞ்சள் அல்லது மஞ்சள் வளையம் தோன்றக்கூடும்.

    உடலில் இதுபோன்ற மாற்றங்களை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் நிலைமை மோசமாகாமல் தடுக்க முடியும்.

    • வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும்.
    • ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    செரிமானத்தை மேம்படுத்துவது முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு அளிக்கக்கூடியது வெந்தயம். இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை பருகுவது நல்லதா? வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது சரியானதா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எது சிறந்தது என்று பார்ப்போம்.

    ஊறவைத்த நீர்:

    வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைக்கும்போது அவை நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை வெளியிடும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தும். அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும்.

    வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும்.

    ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும். (எனினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே நீரிழிவு நோயாளிகள் இதனை பருக வேண்டும்)

    வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தயாரிப்பது எளிதானது, தினசரி பருகுவதற்கு ஏற்றது.

    கொதிக்க வைத்த நீர்:

    வெந்தயத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது அதிலிருக்கும் சேர்மங்களை பிரித்தெடுத்து சக்தி வாய்ந்த பானமாக மாற்றும்.

    உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் நச்சு நீக்கும் பானமாக செயல்படும்.

    சளி, இருமல், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

    கொழுப்பை சீராக நிர்வகிக்கும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    (இருப்பினும் வேகவைத்த வெந்தய நீர் கசாயம் போல் சற்று கடினமான சுவையை கொண்டிருக்கும். தினசரி பருகுவது அனைவருக்கும் பொருந்தாது).

    வேறுபாடுகள்:

    ஊறவைத்த நீர் இயற்கையான நொதிகளை தக்கவைத்து வயிற்றுக்கு இதமானதாக இருக்கும்.

    வேகவைத்த நீர் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் சேர்மங்களை வெளியிடும். ஆனால் வெப்பத்தன்மை காரணமாக சில ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும்.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஊற வைத்த நீர் தினசரி பருகுவதற்கு ஏற்றது. வேக வைத்த நீர் குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளின்போது மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவானது.

    எதை தேர்வு செய்வது?

    தினசரி உடல் ஆரோக்கியம், உடல் எடையை சீராக பேண ஊறவைத்த நீர் சிறந்தது.

    பருவ காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும் சளி, இருமல், நச்சுக்களை போக்க வெந்தயம் கொதிக்க வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும்.

    வெந்தய நீரை தினமும் ஒரு டம்ளருக்கு மேல் குடிக்கக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பருக வேண்டும். தினசரி பருகுவதற்கு வெந்தயத்தை ஊறவைத்த நீர்தான் சிறந்தது.

    • பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
    • உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது.

    உடலில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அவற்றில் சில வலிகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் குறித்தும், அவை அடிக்கடி வருவது எத்தகைய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்ப்போம்.

    மார்பு வலி

    மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது நல்லதல்ல. குறிப்பாக இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக்கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உடனடி மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

    வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்பு

    திடீரென வயிற்று வலியோ, வயிற்று பிடிப்போ ஏற்பட்டால் குடல் புண், பித்தப்பை கோளாறு போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவதை உணர்த்தலாம். அல்சர், வயிற்று கோளாறு பிரச்சனையாகவும் இருக்கலாம்.

    கால் வலி

    காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதே நிலை நீடித்தால் உயிருக்கு ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது.

    பல் வலி

    பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து பற்களுக்கும் பரவுவது மட்டுமின்றி, உடலின் பிற பகுதிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

    கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல்

    கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுவதும் நல்லதல்ல. நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    திடீர் தோள்பட்டை வலி

    தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, சில நேரங்களில் நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வலியாக இருக்கலாம்.

    திடீர் தலைவலி

    இதுவரை அனுபவிக்காத அளவிற்கு திடீரெனவோ, கடுமையாகவோ தலைவலி ஏற்பட்டால், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற ஆபத்தான அறிகுறிகளை சுட்டிக் காட்டலாம்.

    கழுத்து வலி, காய்ச்சல்

    கழுத்தை நகர்த்த முடியாத அளவுக்கு வலியோ, அதனுடன் காய்ச்சலோ இருந்தால், அது மெனின்ஜைட்டிஸ் என்ற உயிர்க் கொல்லி நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

    முதுகு வலி (கீழ் பகுதி அல்லது நடுப்பகுதி)

    முதுகின் அடிப்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ வலியை உணர்ந்தால், முதுகின் உட்புறத்தில் நோய்த்தொற்று அல்லது முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

    பாத வலி அல்லது உணர்விழப்பு

    பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அல்லது பாதங்கள் உணர்விழந்து போவது அல்லது கடுமையாக வலிப்பது போன்றவை நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதன் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

    கண் வலி

    கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குளோக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம்.

    காது வலி சீழ் வடிதல்

    காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறுதல் ஏற்பட்டால், அது கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாகும். தாடை, தொண்டை அல்லது மூக்கு துளைகளுக்கு அந்த தொற்று பரவக்கூடும். அதனால் காதுவலி அதிகரிக்கும்.

    உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது. ஏதேனும் ஒரு வலி தொடர்ச்சியாக நீடித்தால் தாமதமின்றி மருத்துவரை அணுகுவது முக்கியமானது.

    • குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது.
    • குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

    குடிநீர் பருகுவது உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, அது எந்த அளவுக்கு சுத்தமான நீராக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. காய்ச்சிய குடிநீர், வடிகட்டிய குடிநீர், பாட்டில் நீர் உள்ளிட்டவை பரவலாக பயன்பாட்டில் இருக்கும் நிலையில் எந்த தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. எது சிறந்தது என்று பார்ப்போம்.

    காய்ச்சிய நீர்:

    குடிநீர் நன்கு தெளிந்த நிலையில், அசுத்தமின்றி சுத்தமாக இருப்பது போல் தோற்றம் கொண்டிருந்தாலும் வைரஸ், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் பற்றிய கவலை எழுந்தால் கொதிக்க வைத்து பருகுவதே சரியானது. சுமார் ஒரு நிமிடமாவது நன்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதனை வடிகட்டி பருகலாம். அப்படி காய்ச்சிய நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகிவிடும்.

    கவனிக்க வேண்டியவை:

    குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது. நீரின் சுவையும் மாறக்கூடும். பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு இது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

    பாட்டில் நீர்:

    பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், யூ.வி., ஆர்.ஓ. போன்ற பல்வேறு சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்பட்டிருக்கும். குறிப்பாக கிருமிகள் நீக்கப்பட்டிருக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.

    குறைபாடுகள்:

    எல்லா பாட்டில் நீரும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தரம் மாறுபடலாம். அத்துடன் பாட்டில் நீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது.

    எதை தேர்வு செய்ய வேண்டும்?

    குடிப்பதற்கு மட்டுமின்றி சமைப்பது உள்ளிட்ட அன்றாட உபயோகத்துக்கு வடிகட்டிய நீரை பயன்படுத்துவது நல்லது. அதற்கு தரமான சுத்திகரிப்பு சாதனத்தை வீட்டில் நிறுவலாம். ஆர்.ஓ. பயன்படுத்துவதாக இருந்தால் நீரில் இருக்கும் தாதுக்களை அறவே நீக்காமல் பாதுகாக்கும்படியான வடிகட்டிகளை இடம் பெறச் செய்ய வேண்டும்.

    வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது நம்பகமான தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கலாம்.

    அல்லது வீட்டில் இருந்தே பாட்டில்களில் வடிகட்டிய, காய்ச்சிய நீரை கொண்டு செல்லலாம். எந்த வகை குடிநீராக இருந்தாலும் அதன் பருகும் முன்பு தூய்மையை உறுதி செய்து செய்து கொள்ள வேண்டும். பாட்டில்களில் உபயோகிப்பதாக இருந்தால் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

    வடிகட்டிய நீர்:

    குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. குறிப்பாக கார்பன் வடிகட்டிகள் நீரில் கலந்திருக்கும் குளோரினின் வீரியத்தை குறைத்து நீரின் சுவையை மேம்படுத்தும். மேலும் நீரில் படிந்திருக்கும் தேவையற்ற மாசுக்கள், அசுத்தங்களை போக்கும். தினசரி பருகுவதற்கு ஏற்றதாகவும் அமையும்.

    கவனிக்க வேண்டியவை:

    எல்லா வடிகட்டிகளும் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை அல்ல. சில வடிகட்டிகள் அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டுவதில்லை. அவை திறம்பட செயல்பட, தவறாமல் சுத்தம் செய்வதும், சரியான நேரத்தில் மாற்றுவதும் முக்கியமானது. தரமான வடிகட்டிகளை வாங்கி உபயோகிப்பது அதை விட முக்கியமானது.

    • நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது.
    • நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். நீரிழிவு மேலாண்மையில் உதவக்கூடிய பருவகால பழமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் 10 நாவல் பழங்கள் வரை சாப்பிடலாம்

    மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது. நாவல் பழம் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலைத் தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் அதற்கு காரணம். அதனால் பழங்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் ஏன் நாவல் பழம் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

    1. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சேர்மங்கள், ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்க உதவுகின்றன. இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    2. கல்லீரலை பாதுகாக்கும்

    நாவல் பழம் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்களை குறைத்து, அழற்சியை தணிக்க உதவும். கல்லீரல் செல்களை பாதுகாக்கவும் செய்யும்.

    3. குறைந்த கிளைசெமிக் குறியீடு

    நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. ஒரு நாவல் பழத்தில் சுமார் 25 வரையே இருக்கும். இதனால், ரத்தத்தில் திடீரென சர்க்கரை உயர்வதை தடுத்துவிடும்.

    4. இதய ஆரோக்கியம் காக்கும்

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பக்கவாத அபாயத்தை குறைக்கவும் துணை புரியும்.

    5. இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

    நாவல் பழத்தை டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உட்கொள்வது, உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். இதனால் உடலில் சரியாக சர்க்கரை பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

    • நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
    • இதய ஆரோக்கியம் காக்கப்படும்.

    உடல் நலனை பேண பின்பற்றக்கூடிய நன்மை பயக்கும் பழக்கங்களில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.

    அதன் சில நன்மைகள்:

    * சிறந்த தூக்கத்திற்கு வித்திடும்.

    * உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்.

    * உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

    * மன அழுத்தத்தை குறைக்கும்.

    * இதய ஆரோக்கியம் காக்கப்படும்.

    * மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    • கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
    • உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.

    உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

    வால்நட்

    வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.

    தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.

    2 அல்லது 4 வால்நட்டுகளை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஊற வைத்து உட்கொள்வது, எந்த உணவுப்பொருளுடனும் சேர்க்காமல் தனியாக உட்கொள்வது அதிகபட்ச நன்மையை அளிக்கும்.

    முந்திரி

    கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும்.

    ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும். 4-5 முந்திரிகளை 2 அல்லது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவற்றை ஸ்மூத்தி அல்லது சிற்றுண்டிகளில் பயன்படுத்தலாம்.

    ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

    பெரும்பாலான உலர் பழங்கள், நட்ஸ் வகைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் வினைபுரிந்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

    ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைக்க முடியும். அதன் காரணமாக செரிமானம் எளிதாகும். வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவிடலாம்.

    உலர் அத்திப்பழம்

    உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.

    மேலும் கால்சியம், இரும்பை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் அனுமதிக்கும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.

    • புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
    • இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.

    நெற்றியில் சுருக்கங்கள் தோன்றுவது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அடிக்கடி கோபமாகவோ, ஆக்ரோஷமாகவோ, ஆச்சரியமாகவோ முக பாவனைகளை வெளிப்படுத்துதல், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைதல், சூரிய ஒளி சருமத்தில் படர்தல், முதுமையை நெருங்குதல் உள்ளிட்ட காரணங்களால் சருமத்தில், நெற்றியில் கோடுகளும், மடிப்புகளும் உருவாகின்றன. அந்த சமயத்தில் சரும தசைகள் சுருங்கவும் செய்கின்றன. இதே நிலை நீடிக்கும்போது காலப்போக்கில் நிரந்தர கோடுகள் ஏற்பட்டு நெற்றி சுருக்கங்கள் தோன்ற வழிவகுக்கின்றன.

    பொதுவாகவே வயதாகும்போது கொலாஜன், எலாஸ்டின் ஆகிய இரண்டு முக்கிய புரதங்களை சருமம் இழக்கிறது. இவைதான் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இவை பலவீனமடைவதுடன், நீர்ச்சத்து குறைபாடு, மன அழுத்தம், புற ஊதா கதிர் வீச்சு உள்ளிட்ட காரணிகளும் சருமத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.

    நெற்றி சுருக்கம் முதுமையின் ஒரு அங்கம் என்றாலும் கூட அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் வேகமாகவே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்த்துவிடும். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியவை...

    விளக்கெண்ணெய்

    விளக்கெண்ணெய்யில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சுருக்கங்களை மென்மையாக்கும். தூங்குவதற்கு முன்பு நெற்றியில் சிறிதளவு விளக்கெண்ணெய்யை தடவவும். மேல்நோக்கிய நிலையில் மசாஜ் செய்துவிட்டு, காலையில் முகத்தை கழுவி விடலாம்.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்கக்கூடியது. முன்கூட்டியே சுருக்கங்களை ஏற்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கக்கூடியது. செக்கில் தயாரான தேங்காய் எண்ணெய்யை சில துளிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதை லேசாக சூடாக்கி, தூங்க செல்வதற்கு முன்பு நெற்றியில் வட்ட வடிவில் தேய்த்து, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.

    முட்டை வெள்ளைக்கரு

    முட்டை வெள்ளைக்கரு சருமத்தை தற்காலிகமாக இறுக வைக்கும். மெல்லிய கோடுகளைச் சரிசெய்ய உதவும் புரதங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். அதை நெற்றியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை மேற்கொள்ளலாம்.

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கி, அதன் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும். இதனால் சருமத்தில், நெற்றியில் கோடுகள் தோன்றுவது குறையும். ஒரு வெள்ளரிக்காயை துருவி, சாறு பிழிந்து கொள்ளவும். பஞ்சு உருண்டையை வெள்ளரி சாற்றில் முக்கி நெற்றியில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விட்டு, பின்பு கழுவி விடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இவ்வாறு செய்வது நல்ல பலனை தரும்.

    கற்றாழை ஜெல்

    கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு இருபது நிமிடங்கள் உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் பயன்படுத்துவது நெற்றி சுருக்கங்கள் விரைவாக எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.

    தேன் மற்றும் எலுமிச்சை

    தேன், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரித்து, நெற்றியில் தோன்றும் மெல்லிய கோடுகளை மங்கச் செய்யக்கூடியது. ஒரு டீஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து நெற்றியில் தேய்த்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த செய்முறையை பின்பற்றிய பிறகு உடனே சூரிய ஒளி சருமத்தில் படுவதை தவிர்க்கவும்.

    ×