என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.
    • குழந்தைகளின் உடல் சார்ந்த விளையாட்டுகளில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்.

    இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.

    குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்துவிடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும்.

    குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு. குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும்.

    பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.

    எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர்களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும்.'ஓடி விளையாடு பாப்பா' என்று பாரதியார் சொன்னதைப் போல, குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும்.

    • ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது.
    • குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது.

    கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்பு ஏற்படுத்திய தாக்கம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து மாணவர்களை மீள முடியாமல் வைத்துவிட்டது. தொடக்க கல்வி பயிலும் குழந்தைகளின் கைகளில் கூட சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்த பெற்றோரே கையில் ஸ்மார்ட்போனை கொடுக்கும் நிலைமை உண்டாகிவிட்டது

    அதனால் ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது. அப்படி குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்த்தலோ அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் ஏற்பட தொடங்கிவிடும். அது நாளடைவில் வலியை அதிகப்படுத்திவிடும்.

    குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது. அது சட்டென்று கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி உண்டாகுவதற்கும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. செல்போன் பார்க்கும்போது நேராக அமர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இப்போது கல்வி சம்பந்தமான அப்ளிகேஷன்கள் ஏராளமான அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுவது கழுத்து வலிக்கு வழிவகுப்பதோடு மட்டுமில்லாமல் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். அதன் தாக்கமாக தேவையற்ற வலி, வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும்.

    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

    அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.

    இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    • இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன.
    • தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின்பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும்.

    * ஒருநாள்விட்டு ஒருநாளாவது குழந்தையைத் தலைக்குக் குளிக்கவைக்க வேண்டும்.

    * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது.

    * இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன. தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    * குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தும் சோப்பைத் தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம் அளவு மற்றும் பி.ஹெச் அளவைக் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சோப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.

    * குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிரத்யேகமான ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைக்கும்போது, ஷாம்பூ தலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்படி நன்கு கழுவ வேண்டும்.

    * குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஷாம்பூவை, பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது.

    * குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், க்ராடில் கேப்( Cradle cap) என்கிற பிரச்னை ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படும்.

    * குழந்தைகளுக்கு முடி எந்தப் பக்கம் போகிறதோ, அதன் போக்கில்தான் குழந்தைகளுக்கான சீப்பில் தலை சீவ வேண்டும். அதற்கு எதிர்த்திசை நோக்கி சீவக் கூடாது. இதனால், முடி உதிர்வு ஏற்படும்.

    • கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன

    வெயிலோடு உறவாடி....

    வெயிலோடு மல்லுக்கட்டி

    ஆட்டம்போட்டோமே....

    இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.

    கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.

    பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.

    இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.

    இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

    இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.

    அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.

    இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.

    அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.

    இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.

    அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?

    பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.

    இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.

    திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.

    நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?

    இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

    • ஒவ்வொரு குழந்தையும், தனக்குக் கிடைக்கப்போகும் பிறந்த நாள் பரிசை ஆவலோடு எதிர்பார்க்கும்.
    • நீங்கள் பரிசு கொடுக்கப்போகும் குழந்தையின் தேவை என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.

    பரிசுப் பொருட்களை விரும்பாத குழந்தைகள் கிடையாது. சிறுவயதில், நமக்கு மிகவும் பிடித்த பொருள் பரிசாகக் கிடைத்தால், அதை அத்தனை பாதுகாப்பாய் வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து மகிழ்ந்திருப்போம். இந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இன்றைய குழந்தைகளிடமும் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும், தனக்குக் கிடைக்கப்போகும் பிறந்த நாள் பரிசை ஆவலோடு எதிர்பார்க்கும்.

    அவ்வாறு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளின் குழந்தைகளுடைய பிறந்த நாளுக்கு, ஒரு நல்ல பரிசை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதோ சில ஆலோசனைகள். நீங்கள் பரிசு கொடுக்கப்போகும் குழந்தையின் தேவை என்ன என்பதை கண்டுபிடியுங்கள். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு பேனா தேவைப்படலாம்.

    ஒரு குழந்தைக்கு அழகான புத்தகப்பை, இன்னொரு குழந்தைக்கு பரீட்சைக்கான எழுத்து அட்டை. இவ்வாறு தேவை அறிந்து பரிசு கொடுத்தால் பயனுள்ளதாகவும், மனதில் நிற்பதாகவும் இருக்கும். அடுத்தபடியாக நீங்கள் கொடுக்கும் பரிசு, வயதுக்கு மீறியதாக இருக்கக்கூடாது. உதாரணத்துக்கு டீனேஜ் பருவ பிள்ளைகளுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே வயதுக்கு மீறிய விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் எது வயதுக்கு மீறியது என்பது மாறுபடும். அதை உணர்ந்து கொடுங்கள்.

    நீங்கள் கொடுக்கப்போகும் பரிசு, குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் இணைந்து உபயோகிக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. உதாரணமாக, வரைவதற்கு தேவையான வண்ணங்கள் - பிரஷ், அதற்கான நோட்டு புத்தகங்கள், கைகளால் தொட்டு விளையாடும் 'க்ளே' போன்றவற்றை கொடுக்கலாம். இல்லையென்றால், செடிகள் கொடுக்கலாம். இது குழந்தைகளை இயந்திரமாக்காமல் காக்கும்.

    அவர்கள் தங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடவும் உதவும். ஒரு குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்து செயல்பட உதவும் பரிசைக் கொடுங்கள். உதாரணமாக, இசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இசைக்கருவிகள்; விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள்; கம்ப்யூட்டரில் கோடிங் மாதிரி நவீன விஷயங்களில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அதுதொடர்பான புத்தகங்களைக் கொடுக்கலாம்.

    புகைப்பட ஆல்பங்கள் எப்போதுமே குழந்தைகளுக்கு ஒரு இனிய அனுபவம்தான். ஒரு புகைப்படத்தை தொட்டுப்பார்த்து அந்த நொடியை உணர்வதை, எந்த டிஜிட்டல் சாதனமும் கொடுத்திடாது. இந்த தலைமுறை குழந்தைகள், அந்த உணர்வை பெறுவது சொற்ப நேரங்களில்தான். ஆகவே, குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படங்களை இணைத்து ஆல்பமாக போட்டுக் கொடுப்பது சிறந்த பரிசாக அமையும்!

    பரிசு பொருட்கள் பேக் செய்வதில் புதுமை

    குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்களை பேக் செய்யும் விதத்திலும், அவர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்த முடியும். வெள்ளைத் தாளில் பரிசுப் பொருளை பேக் செய்து, வண்ணம் தீட்டும் பென்சில்களை அதில் இணைத்து, அவர்களே வண்ணம் தீட்டும் விதத்தில் கொடுக்கலாம். கேக் துண்டு வடிவத்தில் பரிசுப் பொருளை பேக் செய்து, அதில் சிறு மெழுகுவர்த்தியும் இணைக்கலாம். பரிசுப்பொருள் பேக் செய்த பார்சலையே, உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதத்தில் ஏதாவது ஒரு விலங்கு, காய்கறி மற்றும் பழங்கள் உருவத்தில் மாற்றி அமைக்கலாம். குழந்தைகள் இதை மிகவும் விரும்புவார்கள்.

    • இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது
    • தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிா்பார்ப்பதில்லை.

    உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றுக்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    கல்வி அறிவு

    நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல் நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறாா்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக்கற்றுக் கொடுக்கின்றனா்.

    அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஒய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.

    எதையும் எதிா்பாா்ப்பதில்லை

    இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிா்பார்ப்பதில்லை. இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

    தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறாா்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறாா்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமைணை செய்ய வேண்டாமா?

    அளவு கடந்த பாசம்

    ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவாா்.

    பெற்றோர்கள் நமது வாழ்க்னையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறாா்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...

    • குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
    • குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.

    நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.

    • குழந்தைகளிடத்தில் படிப்பை மட்டுமே திணிக்கக்கூடாது.
    • தோல்வி பயத்தில் போட்டியில் பங்கேற்பதற்கு தயங்குவார்கள்.

    குழந்தை பருவத்திலேயே ஒருசில விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடமாக போதித்துவிட வேண்டும். அவை அவர்களை நல்வழிப்படுத்தும். சமூக பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு வழிகாட்டும். எதிர்காலத்தில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பான நபர்களாகவும் மாற்றும். பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்கள் குறித்து பார்ப்போம்.

    குழந்தைகளிடத்தில் படிப்பை மட்டுமே திணிக்கக்கூடாது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பல குழந்தைகள் தோல்வி பயத்தில் போட்டியில் பங்கேற்பதற்கு தயங்குவார்கள். வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி கவலைப்படாமல் போட்டியில் ஆர்வமாக பங்கேற்பதற்கு பிள்ளைகளை தயார் படுத்த வேண்டும். அது போட்டி மனப்பான்மையை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கும்.

    ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை கட்டாயம் கற்றுக்கொடுக்க வெண்டும். பெற்றோரை பார்த்தே பெரும்பாலான விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் தந்தை முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

    பிறரை மதிக்கும் செயலை குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். வயதுக்கு மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

    பணத்தின் மதிப்பையும் குழந்தை பருவத்திலேயே உணர்த்திவிட வேண்டும். கடின உழைப்பு மூலமே பணத்தை திரட்ட முடியும் என்பதையும், அதை சிக்கனமாக செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தந்தை போதிக்க வேண்டும்.

    நெருக்கடியான வேலைகளை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்கலாம் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில் குழந்தைகளிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அது தயக்கமில்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு அவர்களை தயார்படுத்தும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    கவலைகள் மகிழ்ச்சியை சிதைப்பதோடு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலை, கோபம் கொள்வதற்கு இடமளிக்காமல் குழந்தைகளிடம் அன்பாக பேசி அதில் இருந்து விரைவாக மீள்வதற்கு வழிகாட்ட வேண்டும். கவலை நிம்மதியை குலைத்துவிடும் என்பதை சிறுவயதிலேயே போதித்து, மகிழ்ச்சியான மன நிலையை தக்க வைக்க பழக்கிவிட வேண்டும்.

    • குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
    • குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள்.

    சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

    குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

    தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

    இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

    இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

    ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

    எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

    எனவே எதை செய்தாலும் தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்.

    • டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
    • கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

    போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.

    இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

    இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.

    விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.

    மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

    • முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
    • இண்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை தனித்துவமிக்கவர்களாக வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை பக்குவமாக கையாளும் மன தைரியம் கொண்டவர்களாகவும் அவர்களை தயார்படுத்துவது அவசியமானது. 10 வயதிற்குள் குழந்தைகளுக்கு ஒருசில வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமானது.

    சுதந்திரம்: தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கிறது. அதேவேளையில் தங்கள் கருத்துகளை குழந்தைகள் மீது திணிக்கவும் செய்கிறார்கள். அது சுதந்திரமான சூழலுக்கு வழிவகுக்காது. குழந்தைகளை சுதந்திரமாக எதையும் கற்றுக்கொள்ள விடாமல் தாங்களே முடிவெடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த பயனும் ஏற்படாது. தங்கள் ஆசைகள், கனவுகளை குழந்தைகள் மீது ஒருபோதும் திணிக்கக்கூடாது. அவர்களை அவர்களாக வளர விடுவதுதான் நல்லது. அதற்காக அதிக சுதந்திரம் கொடுத்துவிடவும் கூடாது.

    உணவு தயாரித்தல்: இருவருமே வேலைக்கு செல்லும் பெற்றோர்களாக இருந்தால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை தயார் செய்து கொடுப்பதற்கு நேரம் இல்லாமல் போகக்கூடும். பெற்றோர் வீடு திரும்பும் வரை பசியுடன் குழந்தைகள் காத்திருக்கும் சூழ்நிலையும் உண்டாகும். அதனை தவிர்ப்பதற்கு எளிய உணவுகளை தயார் செய்து கொள்ள குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

    அடுப்பில் வைத்து சமைக்காமல் தயார் செய்யப்படும் ரெசிபிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். வழக்கமாக காய்கறிகள், பழங்கள் நறுக்க பயன்படுத்தும் கத்திக்கு பதிலாக பிளாஸ்டிக் கத்தியை கொண்டு பழங்களை வெட்டுவதற்கு பழக்கலாம். ஆரம்பத்தில் குழந்தைகள் உணவு தயாரிக்க பழகும்போது வீணாக்கக்கூடும். அப்போது கோபப் படாமல் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும். பின்பு அவர்களாகவே தங்களுக்கு பிடித்தமான உணவு ரெசிபிகளை தயார் செய்து கொள்வதற்கு பழகிவிடுவார்கள்.

    இண்டர்நெட்: கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பு வழியே பாடங்களை பயில்வதால் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் சார்ந்த ஏராளமான விஷயங்கள் டிஜிட்டல் யுகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்காமல் பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்க வேண்டும். இண்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    துணி துவைத்தல்: பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் தங்கி படிக்கும் டீன் ஏஜ் பருவத்தினர் பலர் துணி துவைப்பதற்கு சிரமப்படும் நிலை இருக்கிறது. அதனை அசவுகரியமாகவும் கருதுகிறார்கள். அதனை தவிர்க்க சிறு வயதிலேயே தங்கள் துணிகளை தாங்களே துவைப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 6 வயதுக்கு பிறகு இந்த பழக்கத்தை பின்தொடர ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரத்தை பேணுவற்கு பழகிவிடுவார்கள்.

    செடி வளர்ப்பு: குழந்தை பருவத்திலேயே செடி வளர்க்கும் ஆர்வத்தை அவர்களிடத்தில் தூண்டிவிட வேண்டும். செடிகளை பராமரிப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். செடிகள் வளர்ப்பின் நன்மைகள் குறித்தும் போதிக்க வேண்டும். வளரும்போது மரம் வளர்க்கும் ஆர்வம் இயல்பாகவே எழுந்துவிடும்.

    கடிதம் எழுதுதல்: மொபைல்போன் ஆதிக்கம் தலைதூக்கிய பிறகு கடிதம் எழுதும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விட்டது. இந்த பழக்கத்தை குழந்தைகளை பின்பற்ற செய்வதன் மூலம் அவர்களின் கற்பனை திறன் மேம்படும். அவர்களின் கையெழுத்தும் அழகாக மாறும். சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தலாம். டைரி எழுதவும் பழக்கப்படுத்த லாம்.

    முதலுதவி: எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டால் முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். இளைஞர்கள் கூட ரத்தத்தை பார்த்தால் பயந்து மயங்கி விழும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தை பருவத்திலேயே காயங்களுக்கு முதலுதவி செய்வதற்கு பழக்கப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்த்துவிடலாம்.

    ×