என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.
    கல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.

    உணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.

    சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

    உண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.

    இன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.

    இதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள்? பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.

    மிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.

    குறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி நில் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே!!

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். குழந்தை நடக்க தொடங்கும் போது இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும்.

    1. முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

    2. உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக் கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

    3. உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப்பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

    4. உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது, அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும். கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.



    5. முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

    6. உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது. கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம். பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

    7. பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான். குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள். நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி, பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

    8. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான். ஒரு சில குழந்தைகள் நடைபழக தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
    முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும்… அந்த குழந்தையை பராமரிக்கும் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி?

    காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.

    ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும். பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும். அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும். இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும்.

    நம் கவனத்தை ஈர்க்கும். தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.

    பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும். மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

    தொப்புள் கொடியை அறுத்த பின்பு, குழந்தையின் தொப்புள் அருகே கிளிப் மாட்டுவது உண்டு. 2-3 வாரங்களிலே தொப்புள் பகுதி உலர்ந்து, கிளிப் தானாகவே உலர்ந்து விடும். மிகவும் முக்கியமாக, தொப்புள் பகுதியை கிருமித் தொற்று தாக்காதபடி சுத்தமாக பராமரிக்க வேண்டும். உப்புத்தண்ணீர், சோப், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் மருத்துவர் சொன்னதையே பின்பற்றுங்கள். குழந்தையின் தொப்புளில் ஈரகசிவு தென்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம்.

    குழந்தையின் தலைப் பகுதி சீராக இல்லாமல், பிடறி, நெற்றி, உச்சி போன்ற பகுதிகளில் லேசாக புடைப்பு காணப்படுவதால், கபால ஓட்டு எலும்புகளின் இணைப்பு பலப்பட்டு, தானாகவே சரியாகிவிடும். குழந்தை பால் குடித்த ஒரு மணி நேரம் கழித்து, சமதளம் உள்ள தரையில். கனமான விரிப்பின் மேல், தலையணை இல்லாமல் குழந்தையை படுக்க வைப்பதால் கபால எலும்புகள் இயல்பான நிலைக்கு விரைவில் வர உதவும்.

    பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும். கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும். குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.

    கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும். கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.

    குழந்தையின் மார்பகம், பிறப்புறுப்பு பகுதிகளில் லேசான மாற்றம் தெரியும் சில வாரங்களில் இவை சரியாகிவிடும். ஆண் குழந்தைக்கு இரண்டு விதைகள் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இரண்டு விதை இல்லையென்றாலோ ஒரு விதை இல்லையென்றாலோ ‘விதை இறங்கவில்லை’ என மருத்துவரிடம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும். பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும். இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.

    குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். 
    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.

    சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் கை சூப்ப சில காரணங்கள்

    குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு. இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.

    சோர்வாக இருக்கும்போது
    பசி உணர்வு வந்தவுடன்
    போர் அடிக்கும் சூழலில் இருந்தால்
    யாரும் கவனிக்காத சூழலில் இருந்தால்
    உடல்நலம் சரியில்லை என்றாலோ
    மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்றாலோ
    சில குழந்தைகளுக்கு விரல் சூப்புவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல உணரலாம்.

    இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.

    விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழிகள்

    * எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

    * பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.



    * போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

    * கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

    * கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

    * தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.

    * கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

    * விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.

    * விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

    * குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

    * எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

    * குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    * எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

    தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை.

    6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.

    உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்சனைகளும் வரலாம்.

    குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம்.

    வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.

    ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

    6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது.6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம்.

    ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப்படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

    முதல் ஆறு மாதம் வரை குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.

    கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

    ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

    1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.

    தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

    முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.
    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
    குழந்தை தத்தெடுப்புக்காக தமிழகத்தில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்கு குழந்தைகள் இல்லாததே. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக ‘குழந்தைப் பேறின்மை’ உருவெடுத்து நிற்கிறது.

    நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என சொல்லிக்கொண்டே செல்லலாம். அவற்றில், நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத்தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது. பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மத்திய தத்துவள ஆதார மையம்’ செயல்படுகிறது.

    சுருக்கமாக இதை ‘கர’ என்று அழைக்கிறார்கள். இதுபோக அனைத்து மாநிலங்களிலும் ‘மாநில தத்துவள ஆதார மையம்’ இருக்கின்றன. தமிழகத்தில், சமூக நலத்துறை ஆணையர் தலைமையில் ‘தத்துவள மையம்’ செயல்படுகின்றது.

    தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயதுடைய குழந்தையை தத்தெடுக்க, அந்த தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4 முதல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தம்பதியின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுப்பதே சிறந்த வழி. இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கும் போது, பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். பாசமாக வளர்த்த குழந்தைகளும் கைவிட்டு போகக்கூடிய சூழலும் வரலாம் என்பதால் இதில் மிகவும் கவனம் தேவை.
    தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும். தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

    சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும். பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

    * இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    * வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    * குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    * லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

    * சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    * மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

    * குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

    * ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.
    குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.

    புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.

    குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.

    குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.

    குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.

    பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.

    1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.



    குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.

    சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.

    குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.

    தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.

    மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.

    முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.

    குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
    குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகளை பார்க்கலாம்.
    குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். வளரப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் இதில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாதவர்கள் நாமக்கல் சம்பவம் போன்று குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சில அரசு ஊழியர்களும் துணை போகிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.

    குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-

    * குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.

    * தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.

    * தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.

    * தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.

    * இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.

    * வருமான சான்றிதழ் தேவை.

    * சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    * 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.

    * தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.

    * இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
    உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!
    பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.

    மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

    மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

    இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

    அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.

    இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.



    எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

    மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

    நீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.

    இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.

    குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.
    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.
    கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.

    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
    ×