என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பிரா எப்போது இருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போது இருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும்.
    அந்த கால கட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமி தான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்பட வேண்டும். சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத் தொடங்கும். அந்த வயதில் தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். அப்போதே ‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்து விட வேண்டும். பிரா எப்போதிருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போதிருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக்குள் மார்பு வளர்ச்சி தொடங்கும்.

    12-13 வயதில் பிரா அணியும் வளர்ச்சியை சிறுமிகள் எட்டி விடுவார்கள். எல்லா சிறுமிகளுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மனநிலையை அடையத் தான் செய்கிறார்கள். வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும். அவர்களிடம் தாய்மார்கள் பிரா அணிய வேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக எடுத்துரைக்க வேண்டும்.

    அதோடு மொத்தமாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தியாக்க வேண்டும். பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச்செய்யவேண்டும். அவ்வாறு உடை அணியச் செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்திருப்பது தெரியவில்லை.

    அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது அவசியம் என்பதை ஆதாரபூர்வமாக உணர்த்த வேண்டும். சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரா அணிய வேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா அணிய வேண்டும் என்று அடம்பிடிக்கலாம். அவர்களுக்குரிய பிராக்களும் இருக்கின்றன. அதை வாங்கிக் கொடுத்து அணியச் செய்ய வேண்டும்.

    மாறாக, ‘உனக்கு மார்பக வளர்ச்சியில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவையில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்து போகும். இதை எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச் சொல்லி மனப் பூர்வமாக, மகிழ்ச்சியோடு உடலுக்கு பொருத்தமான பிராவை அணிய ஊக்குவிக்க வேண்டும்.



    ‘மார்பக வளர்ச்சி ஒவ்வொருவரது உடல் வாகுக்கு ஏற்ற படியும், பாரம்பரியத்திற்கு ஏற்ற படியும் இருக்கும். நாளடைவில் வளர்ச்சி சரியாகி விடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த பிராவை வாங்கிக் கொடுத்து அணிய செய்ய வேண்டும். அதன் மூலம் மனக்குறையை போக்கி விடலாம். இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்வார்கள்.

    மார்பகங்கள் இரண்டும் ஒன்று போல் இருப்பதில்லை. லேசான மாற்றங்கள் இயற்கையானது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்தமான பிராவை வாங்கிக் கொடுங்கள். வாங்கிய பின்பு அது சரியாக அமையாவிட்டால், தயங்காமல் அதை தூக்கி வீசி விட்டு, பொருத்தமானதை வாங்கி அணியச் செய்யுங்கள்.

    வளரும் பெண் தானே பெரிதாக வாங்கிக் கொடுப்போம் என்று அளவில் பெரிதாக இருப்பதை வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். பெரும்பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவைகளிலும் பயிற்சி பெறுகிறார்கள். சாதாரணமாக அணிவதற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவதற்கும் வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    விளையாட்டிற்கு தகுந்த படியும், நடனத்திற்கு தகுந்த படியும் பிரா வாங்கிக் கொடுங்கள். வாங்கிக் கொடுக்கும் போதே கடைகளில் உள்ளவர்களிடம், ‘பிராக்களை எப்படி பராமரிக்க வேண்டும்?’ என்பதையும், மகளிடம் கூறச் செய்யுங்கள். அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

    தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.
    தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

    கண்கள்:


    முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும்.

    சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

    உதடுகள்:

    தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

    பாதம் :

    ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

    முகம்:

    இரவு உறங்கச் செல்லும் முன் நாள் முழுவதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம்.

    அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

    தலைமுடி:

    இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.
    முடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முடக்கத்தான் கீரை - 1 கட்டு
    நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கப்
    தயிர் - ½ கப்
    சின்னவெங்காயம் - 8
    நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
    கடுகு - ½ ஸ்பூன்
    உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்
    கடலைபருப்பு - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    புளி கரைசல் - 1 ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை:

    முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.

    பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் வல்லாரை கீரையையும், கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும்.

    இஞ்சி, தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கிய பலன்:

    இதில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோல்வி அடையாத மனிதனே கிடையாது. தோல்வியில் அடிபட்டு எழாதவன் மனிதனே கிடையாது. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
    ‘வெற்றி‘ என்னும் மூன்றெழுத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ‘தோல்வி‘ என்னும் மூற்றெழுத்தை கடந்தாக வேண்டும். ஆனால், தோல்வியை மட்டும் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அனுபவம், ஒரு சிறந்த ஆசிரியர் என்பது நாம் அறிந்ததே.

    ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கை புத்தகத்தை புரட்டி பாருங்கள். அவர்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு தோல்வி, அவமானங்கள் கொண்டது என்பது புரியும். தோல்வியில் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையேல் இவ்வுலகம் உன்னை புதைத்து விடும் என்பது விவேகானந்தரின் வாக்கு.

    தோல்வி அடையாத மனிதனே கிடையாது. தோல்வியில் அடிபட்டு எழாதவன் மனிதனே கிடையாது. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் தொடங்கும்போது தடைகள், தோல்விகள் வரக்கூடும். ஆனால், எதையும் எதிர்கொண்டு செய்யும் செயலில் நாம் ஈடுபட வேண்டும்.

    எதற்கும் கவலைப்படாமல் நம் வாழ்க்கையில் வெற்றி பெற போராட வேண்டும். அன்று தாமஸ் ஆல்வா எடிசன் பல முறை தோல்வி அடைந்து விட்டதே என்று நினைத்திருந்தால் இன்று நமக்கு மின்சாரம் கிடைத்திருக்காது. எனவே, தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்று நினைத்து வாழ்வோம், வாழ முயற்சிப்போம். 
    பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும்.
    குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரியை தேர்வு செய்து குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரை உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து உள்ளது. இதையொட்டி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களும் அதிகரித்து வருகிறது.

    ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது. ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு ஏதோ ஒரு வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை உள்ளது.

    எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.

    வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்தும் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண் டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரே அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

    மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய் யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபடக்கூடிய நிலை வரும். இல்லை என்றால் வேலைக்கு செல்வதற்கான கருவியாகத் தான் படிப்புசான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தொழிலாளர்களை உற்பத்தி செய்வதாகத் தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு என்பது இல்லாமல் போய் விடும்.

    மேலும் அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகள் உள்ளது மான விவசாய தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதையும் தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டிய காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார் கள். இதன்மூலம் வேலைஇல்லாத திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.

    உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்து கொள்ளவும். பின்னர் கும்பகாசன நிலையில் இருந்து உங்களை சதுரங்கள் தண்டாசனத்திற்கு கீழே இறக்கவும்.

    இதை செய்வதற்கு உங்கள் பாதங்களை நகர்த்தி முன்னால் வரவும் மற்றும் உங்கள் மேல் கைகளால் கீழே வரவும். உங்கள் மேல் கைகளால் 90 டிகிரி (படத்தில் உள்ளபடி) கோணத்தை செய்யவும்,

    நீங்கள் பிளாங்க் போஸில் செய்வது போல் உங்கள் விலா மற்றும் தசைகளையும் இழுத்து வைத்துக் கொள்ளவும். உங்கள் முதுகுதண்டை நேராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் தோள்களை கீழே இறக்காமல் நேராக முன்னோக்கி இருப்பதை உறுதி செய்யவும்.

    நீங்கள் நிலையற்றதாக நினைத்தால், உங்கள் முழங்கால்களை இறக்கிக் கொள்ளலாம். இங்கிருந்து திரும்பவும் பிளங்க போஸ் அல்லது மேல்நோக்கி எதிர்கொள்ளும் நிலைக்கு வரவும். இதை 10 முறைகள் திரும்பச் செய்யுங்கள்.

    பயன்கள்

    கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம். 
    தோசை, நாண், சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் குருமா. நாளை ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    இஞ்சி - 2 துண்டு
    பூண்டு - 15 பல்
    பெ.வெங்காயம் - 5  
    பச்சை மிளகாய் - 6
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    சீரகம் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - 1 கட்டு



    செய்முறை :

    கொத்தமல்லி, சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த இஞ்சியையும், பூண்டு விழுதுடன் தயிர் கலந்து இறைச்சி துண்டுகள் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லிதழை, மிளகாய், சீரகம், வெங்காயம் போன்றவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, மஞ்சள் தூள், அரைத்த பொருட்களை கொட்டி வதக்கவும்.

    அனைத்த பச்சை வாசனை போனவுடன் இறைச்சி துண்டுகளை போட்டு கிளறி விடவும்.

    நன்றாக வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    இறைச்சி துண்டுகள் நன்றாக வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான சிக்கன் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் இருந்து யாராவது அமுக்கிப் பிடித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களை தைரியத்தோடு எதிர்கொள்ளலாம். எப்படி, என்று தெரிந்துகொள்ளலாம்.
    இனியும் பெண்கள் பயந்துகொண்டிருப்பதில் பலனில்லை. தவறான நோக்கத்தில் அமுக்கிப்பிடிக்க முயற்சிப்பவரை அதிரடியாகத் தாக்கி வீழ்த்தித்தான் ஆகவேண்டும். பெண்கள் எப்போதுமே தங்களை தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதற்கு அடிப்படையான தற்காப்பு பயிற்சிகளை அவர்கள் பெற்றுக்கொள்வது அவசியம்.

    பெண்களிடம் இருக்கவேண்டிய மிகப்பெரிய ஆயுதம், தைரியம் நிறைந்த மனது. மனதில் தைரியம் இல்லாவிட்டால் சிறந்த போர் வீரன்கூட வீழ்ந்துவிடுவான். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டிருக்க மிக முக்கியமான காரணம், அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று ஆண்கள் நினைப்பதுதான். ஒருவர் தன்னிடம் தவறான நோக்கத்தில் தொட்டுவிட்டாலோ, தவறாக நடக்க முயற்சித்தாலோ பெண்கள் தடுமாறிப்போகிறார்கள். அந்த தடுமாற்றம்தான் அவர்களது முதல் பலவீனம். மனதில் தைரியம் இருந்தால் அந்த தடுமாற்றம் தோன்றாது.

    பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் இருந்து யாராவது அமுக்கிப் பிடித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களை தைரியத்தோடு எதிர்கொள்ளலாம். எப்படி, என்று தெரிந்துகொள்ள படத்தை பாருங்கள்.



    1. பின்னால் நின்று உங்களை ஒருவர் அமுக்கிப்பிடிக்க முயற்சிசெய்தால், இப்படித்தான் அவர் நடந்துகொள்வார்.

    2. நீங்கள் தப்பிக்க முயற்சிக்கும்போது அவரது பிடி இறுகும். அப்போது நீங்கள் படத்தில் காண்பதுபோல் லேசாக முன்னோக்கி வளைந்துகொண்டு அவரது முகத்தை நோக்கி ஒருபுறம் திரும்பி பாருங்கள். அப்போது அவரது பிடி, லேசாக நழுவும்.

    3. அப்போது படத்தில் காண்பதுபோல் அவரது முன்பகுதியை பலமாக பிடியுங்கள்.

    4. எதிரி நிலைகுலைந்து பிடியை விடுவார். அப்போது அவர் தன்னிலையை இழக்கும் அளவுக்கு, உங்கள் கைமூட்டால் அவரது தாடையை பலமாக பதம்பாருங்கள்.

    5. பின்நோக்கி விழத்தயாராகும் எதிரிக்கு கைகளால் பலமாக குத்துவிடவேண்டும்.

    6. நிலைதடுமாறும் அவரது நெஞ்சில் கால் மூட்டால் பலமாக தாக்கவேண்டும். 
    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி யில்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது.

    கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கர்ப்பக் காலத்தின் போதே ஆரோக்கிய மான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர். முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின் போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பது தான்.

    அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர். எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும் போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்று தான் கூறுவார்கள் .

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.
    கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்து விடும். மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.

    கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்… தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

    கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப் பட்டுள்ளன.

    கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மணிக்கூட்டின் திசையிலும் மற்றும் மணிக்கூட்டிற்கு எதிர்த் திசையிலும் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

    கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாக வும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கணனி போன்ற வற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

    குழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். இன்று மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15,
    அத்திப்பழம் - 6
    பால் - 2 கப்,
    பாதாம் - 10,
    முந்திரி - 10,
    அக்ரூட் - 3 டேபிள் ஸ்பூன்,
    தேன் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள்.

    பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், அத்திப்பழம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள்.

    அவை நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    சத்தான டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெடி.

    இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், நினைவு திறனையும் இது அதிகப்படுத்துகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.
    கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமென்ற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அந்தவகையில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தேசிய கல்வி கொள்கையை வகுக்க பா.ஜ.க. தேசிய கல்வி ஆணையத்தை அமைக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சொன்னதுபோல, 2 ஆண்டுகளில் இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

    ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அரசு மீண்டும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை 2017-ல் அமைத்தது. இந்த குழு தேசிய கல்வி கொள்கைக்காக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து, புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் முழு விவரம் மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mhrd.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

    484 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் பல வரவேற்கத்தக்க சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தாலும், மொழிகளை பொறுத்தமட்டில், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித்திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தி தவிர, ஆங்கிலமும், மேலும் ஒரு இந்திய மொழியும் கற்றுக்கொடுக்கவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியை கட்டாயம் பயிலவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்காளம் போன்ற பல மாநிலங்களில் இது இந்தி திணிப்பு என்று அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பின. தமிழக அரசின் சார்பில் இருமொழி கொள்கைதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு என்று கூறப்பட்டது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், ‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்’ என்று தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகள் குறையவில்லை.

    இந்தநிலையில், வரைவு திட்டத்தில் நேற்று இணையதளத்தில் மாற்றம் வெளியிடப்பட்டன. இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. ஆக, இப்போது இந்தி திணிப்பு இல்லை, ஆனால் மும்மொழி கல்வித்திட்டம் வேண்டுமா?, வேண்டாமா? என்பதுதான் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும்.

    இதில், அரசோ, அரசியல் கட்சிகளோ என்ன நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டாலும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என்ன கருதுகிறார்கள்? என்று அறிந்து முடிவெடுப்பது சாலச்சிறந்ததாகும். தான் என்ன படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களுமே முடிவு செய்யட்டும். மொழிகளை கற்கும் விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் nep.edu@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இருமொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா,? மும்மொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா? என்பதையெல்லாம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் கருத்துகள் பதிவிடப்படவேண்டும் என்பதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
    ×