என் மலர்
பெண்கள் உலகம்
- சீரகமானது செரிமானத்தை தூண்டுகிறது.
- அஜ்வைன் மற்றும் பெருஞ்சீரகம் வாயுத்தொல்லையை நீக்க உதவுகிறது.
காலையில் எழுந்திருக்கும் போதே வயிறு உப்புசமாக இருப்பதாக உணர்கிறீர்களா? இனி கவலையே வேண்டாம். உங்கள் வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தாலே போதும் வயிறு உப்புசம், வயிறு வீக்கம் குணமாகும். உடல் எடை இழப்பிற்கு கூட பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 கப்
பெருஞ்சீரகம் - 1 கப்
வெந்தயம் - 1 கப்
கேரம் விதைகள் ( அஜ்வைன்) - 1 கப்
கடுகு - 1 கப்
செய்முறை:
கனமான பாத்திரத்தில் சீரகம், பெருஞ்சீரகம்,வெந்தயம், கேரம் விதைகள் மற்றும் கடுகு முதலானவற்றை சேர்த்து, நறுமனம் வரும்வரை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை நன்கு ஆற வைத்து, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்துவைத்த பொடியை ஒரு கண்ணாடி ஜாடியில் காற்று புகா வண்ணம் மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்து வைத்த இந்த பொடியை தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்துவர வயிறு உப்புசம், வயிறு வீக்கம் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடை இழப்பிற்கும் வழிவகுக்கும்.
சீரகமானது செரிமானத்தை தூண்டுகிறது. அஜ்வைன் மற்றும் பெருஞ்சீரகம் வாயுத்தொல்லையை நீக்க உதவுகிறது. வெந்தயம் பசியை கட்டுப்படுத்துவதாகவும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு விதைகள் கலோரிகளை எரிக்கவும் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கவும் வளர்சிதை மாற்றத்திற்கான செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் இந்த 5 பொருட்களும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் டையூரிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் தாராளமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மேக்ரோபயாடிக் சுகாதார பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷில்பா அரோரா கூறுகிறார்.
- ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.
பலருக்கும் சிரமம் தரும் நோயாக இருப்பது சுவாச அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய். உலக அளவில் சுமார் 18 முதல் 20 விழுக்காடு மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு செல்லும் பாதையானது வீக்கமடைந்து, அப்பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் நுரையீரலுக்கு பிராணவாயு செல்வது குறைகிறது. சுவாச அலர்ஜி (ஒவ்வாமை) இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
அலர்ஜி தடுப்பு முறைகள்
நுரையீரலில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று இருந்தால், முதலில் தொற்றிற்கான மருந்தைக் கொடுத்து குணப்படுத்த வேண்டும். ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
வீடு, வேலை பார்க்கும் இடங்களைத் தூய்மையாய் வைத்திருப்பதோடு தூசி, புகை உள்ள இடங்களில் நடக்கும் போது மாஸ்க் (முகமூடி) அணிவது நல்லது.
சித்த மருத்துவத் தீர்வுகள்
* 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் அடிப்படையில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் கிராம்புக் குடிநீரை காலை, மாலை இருவேளை குடித்துவர ரத்தச் சுற்றோட்டம் நன்கு நடைபெற்று ஆக்சிஜன் அளவு அதிகரித்து புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். (கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், சுக்கு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி ஓரளவு சூடு ஆறியதும் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் கிராம்பு குடிநீர்)
* துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலைச் சாற்றைத் தேனில் காய்ச்சி 5 முதல் 10 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம்.
* நெல்லிக்காய் லேகியம் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருமல், சளிப் பிரச்சனையும் நீங்கும்.
* நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.
* தூதுவளை இலைகளை வைத்து ரசம் செய்து உணவுடன் உண்ண வேண்டும்.
* சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.
* தாளிபத்திரி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி.,பலகரை பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
* சுவாச குடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
* ஆடாதோடை நெய் ஐந்து மி.லி. வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.
- தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
- பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.
வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாக கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டால் இரு வாரம் ஆனாலும் பழுக்காது.
கடையில் விற்கும் தையல் இலை எனும் மந்தாரை இலையைப் பானையில் போட்டு அதன் மேல் புளியை வைத்தால் நீண்ட நாட்கள் புளி கெடாமல் இருக்கும்.
கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க கூடவே ஆப்பிள் பழத்தை போட்டு வைக்க வேண்டும்.
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைத்து விட்டால் ஒரு ஸ்பூனை நன்கு சூடாக்கி அப்பாட்டிலினுள் நுழைத்து விட்டால் எண்ணெய் உருகி வழக்கமான நிலைக்கு மாறிவிடும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால் தோல் எளிதாக உரிந்து வரும். கண்ணில் இருந்து நீரும் வராது.
பிஸ்கெட் இருக்கும் டப்பாவின் அடியில் சிறிது சர்க்கரையைத் தூவி காற்று புகாமல் இறுக மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் மொரமொரப்பாக இருக்கும்.
மாதத்திற்கு ஒரு முறை உப்பை போட்டு மிக்ஸியை சுழலச் செய்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இருக்கும்.
பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்தால் பிரியாணியின் அரிசிகள் தனித்தனியே பிரிந்து பிரியாணி பார்க்க அழகாக இருக்கும்.
சர்க்கரைப் பாகில் கொஞ்சம் பாலை விட்டு விட்டால் எந்த இனிப்பு பண்டமும், கடினமாகாமல் மிருதுவாக, சாப்பிட நன்றாக இருக்கும்.
மேஜை விரிப்பில் தேநீர் கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சர்க்கரை சிறிது தூவினால் கறை படியாது.
பழைய சாதம் மீந்து விட்டால் பெரிய கிண்ணத்தில் சாதத்தை நன்கு பிழிந்து வைத்து ஒரு கப் துருவிய தேங்காய் ஒரு டீ ஸ்பூன் சீரகம், சிறிது உப்பு கலந்து கூழாக பிசைந்து பிஸ்கெட் சைஸில் தட்டிப்போட்டு வெயிலில் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.
புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தாப்பம் செய்தால் எளிதில் ஜீரணமாகும்.
- சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும்.
- இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இரவு தூக்கத்திற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பவர்கள் இரவு 7 மணிக்கு சாப்பிடுவது நல்லதா? இரவு 9 மணிக்கு சாப்பிடுவது ஏற்புடையதா? இந்த இரண்டு மணி நேர வித்தியாசம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்ப்போம்.
இரவு உணவு ஏன் முக்கியமானது?
நமது உடல் சர்க்காடியன் ரிதம் எனப்படும் உள் அட்டவணையை கொண்டு செயல்படுகிறது. அதுதான் தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம், செரிமானம் என ஒட்டுமொத்த உடலமைப்பையும் நிர்வகிக்கிறது.
இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது அதனை ஜீரணமாக்குவதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். குறிப்பாக இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
அதேவேளையில் மற்ற நேரங்களை விட இரவு நேரத்தில் உடல் கொழுப்பை வேகமாக எரிக்காது. வளர்சிதை மாற்றத்தையும் குழப்பி இறுதியில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.
எப்போதாவது தாமதமாக உண்ணலாமா?
சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும். போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரியான சூழலில் இரவு உணவை தாமதமாகத்தான் சாப்பிட நேரிடும். அப்போது வழக்கமாக சாப்பிடும் உணவுப்பழக்கத்திற்கு மாறாக சாப்பிடுவது சிறந்தது.
அதாவது வறுத்த புரதம் (கிரில் சிக்கன், பொரித்த மீன்), காய்கறி சாலட், காய்கறி சூப், பருப்பு கலந்த சாலட் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது சிறந்தது. கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவிடும். இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இரவு 7 மணிக்கு சாப்பிட்டால்....
தூங்குவதற்கு முன்பு சீக்கிரமாக அதாவது 7 மணி அளவில் சாப்பிடும்போது அந்த உணவு செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கொழுப்பையும் சரி செய்து அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
தூங்க ஆரம்பிக்கும்போது செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனால் இடையூறு இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
தூங்குவதற்குள் செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் வயிறும் வீக்கமின்றி இயல்பாக இருக்கும். நள்ளிரவில் பசி எடுப்பதும் குறையும். இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை நீண்ட இடைவெளி கிடைப்பதால் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
இரவு தாமதமாக சாப்பிடும்போது என்ன நடக்கும்?
இரவு 9 மணிக்கோ அதற்கு பிறகோ சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுப்பதோடு கூடுதல் பசி உணர்வையும் உருவாக்கி விடும். அதனால் அதிகம் சாப்பிட நேரிடும். சோர்வையும் உணரக்கூடும்.
அதிலும் இரவில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், கிரீம் வகை உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டுவிட்டு உடனே தூங்க சென்றால் உடலுக்கு அந்த உணவை ஜீரணிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. செரிமான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி தூக்கத்தையும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும்.
- தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
- கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.
மாதுளையில் பலவித நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளையின் தோலில் கூட பல நன்மைகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மாதுளையின் தோலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதாம். இந்த பதிவில் நாம் மாதுளை தோலில் உள்ள நன்மைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
மாதுளையின் தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து முதலானவை நிறைந்துள்ளது. நீங்கள் மாதுளை தோலை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு உணவில் சேர்க்கக்கூடிய பதத்திற்கு மாதுளை தோலை வெயிலில் உலர்த்தி, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய முடியவில்லை என்றால், கடைகளிலேயே மாதுளை தோல் பொடி விற்கப்படுகிறது. அதைக்கூட வாங்கிக்கொள்ளலாம்.
மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி, இருமல் தொண்டை வலி முதலானவற்றைப் போக்க உதவுகிறது. தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரிலும் கலந்து பருகுகிறார்கள்.
எந்த உணவு சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது என்று கவலைப்படுபவர்களுக்கு மாதுளைத் தோல் மாமருந்து என்றே சொல்லலாம். ஏனெனில் இதிலுள்ள நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று வீக்கம், தொற்று முதலானவற்றை குறைத்து ஒட்டுமொத்த செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.

உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை, நச்சுகளை வெளியேற்றக் கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் மாதுளை தோலில் அதிகமாக உள்ளது. அதனால் தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.
மாதுளை தோல் பொடியை தேன் மற்றும் தயிருடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மாறும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் வயதான தோற்றத்தை தடுத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முக சுருக்கங்கள் முதலானவற்றை தடுப்பதில் பங்கு வகிக்கிறது.
மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக மாதுளை தோலானது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பின் அளைவைக் குறைக்கிறது. மேலும் சிறந்த ரத்த ஓட்டத்திற்கும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
அடுத்த முறை மாதுளையை உரிக்கும் போது அதன் தோலை வீணாக தூக்கியெறியாமல், மேற்சொன்ன எல்லா நன்மைகளையும் நினைவில் வைத்து, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
- மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- எல்லாவற்றிற்கும் மேலாக வெல்லம் மிகச்சிறந்த நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.
சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். ஒரு நாளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு அவ்வளவு நன்மை கிடைக்கபெறும்.
வெல்லத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் முதலான சத்துகள் அதிகமாக உள்ளது. அதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட வெல்லம் சேர்க்கப்படுகிறது.
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால், இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதன்மூலம் சருமத்தை மேம்படுத்தி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்ம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு உகந்ததாகவும், தொண்டை புண் மற்றும் இருமலை போக்கவும் சளிக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது.
வெல்லத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளதால் இதய செயல்பாட்டை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
வயிறு, உணவுக்குழாய், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை உறுதியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக வெல்லத்தில் உள்ள நீர் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

நீங்கள் உணவு அருந்தியபிறகு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், வெல்லம் செரிமான நொதிகளை சீராக செயல்படுத்துகிறது. இதனால் உணவானது எளிதில் உடைந்து ஜீரணமாக உதவி புரிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக வெல்லம் மிகச்சிறந்த நச்சு நீக்கி என்றே சொல்லலாம். இயற்கையாகவே வெல்லத்தில் நச்சுகளை நீக்கும் தன்மை உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.
இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும் சர்க்கரையோ வெல்லமோ எதுவாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
- செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பெரும்பாலும் இரவில் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள். அப்படி குறைவாக சாப்பிடுவதால் இரவு 2 மணியளவில் கண்டிப்பாக பசி எடுத்துவிடும். ஆனால் பசியில் அதிகமாக சாப்பிட்டு விட்டாலும் சரி, தவறான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சரி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உண்மையைச் சொன்னால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடாது ஆனால் அதே சமயம் பசியும் அடங்க வேண்டும், அதற்கான உணவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சாதனையாகத்தான் கருதப்படுகிறது.
இரவு நேரத்தில் ஏற்படும் பசியைப் போக்க வேண்டும். ஆனால், ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக் கூடாது. இந்தவகை உணவுகளைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்...
முதலில் பிளைன் க்ரீக் யோகர்ட் அதாவது கிரேக்க தயிர். இதில் புரதமும் மிகக்குறைந்த அளவிலான இயற்கை சர்க்கரையும் உள்ளது. இதில் உள்ள புரதம் உங்கள் பசியை போக்குவதோடு இல்லாமல் செரிமானத்தையும் சீராக்கும். அத்துடன் ரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவி செய்யும். 2019 -யில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிரேக்க தயிர் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இரவு நேர பசியின் போது பயப்படாமல் கிரேக்க தயிரை சாப்பிடலாம்.
அடுத்ததாக பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதாக 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். வயிறு முழுமையாக உள்ளது போன்ற உணர்வையும் தரும். அதேசமயம் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ளும்.

தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். 2023-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து தூங்குவதற்கும் உதவி செய்கிறது.
கடைசியாக பாசிப்பருப்பு சூப் மற்றும் பனீர் முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பருப்பு சூப் செய்யும் போது அதில் செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். பாசிப்பருப்பு சூப்பும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பனீர் எடுத்துக்கொள்ளும் போது அதனுடன் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்ளலாம். 2019 ஆய்வு முடிவின் படி பனீரில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், கேசீன் புரதம் அதிகமாகவும் உள்ளதாகவும் இதனால் பசியைக் கட்டுப்படுத்தி முழுமையாக சாப்பிட்ட உணர்வையும் வழங்குவதாக கூறுகிறது.
உங்கள் நள்ளிரவு நேர பசியை போக்கிக்கொள்ளவும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மேற்கண்ட உணவுகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
- ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
- தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள் எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலன்களைத் தரும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் தேய்ப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.
தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது. தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்க எண்ணெய் உதவுகிறது. தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.
- மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும்.
- எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
இளைஞர்களில் பலர் எல்லாவற்றிலிருந்தும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி, வேலை, நிதி சிக்கல்கள், அதிகரித்த செல்போன் பயன்பாடு, போட்டித்தன்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களிடையே பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரித்துள்ளது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அதிகரித்து வரும் மன அழுத்தம் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.
இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் துண்டிக்கப்படுகிறது. அவர்கள் சோம்பேறியாக மாறுகிறார்கள், பேச முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பார்வையை இழக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படுகிறது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. மன அழுத்தத்தில் இருக்கும்போது. கார்டிசோல் அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.
சிறிது மன அழுத்தத்துடன் இந்த ஹார்மோன்கள் உடலுக்கு அவசியமானவை. ஆனால் அவை அதிகமாக வெளியிடப்பட்டால் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இது உறுப்புகளை சேதப்படுத்தும் மன அழுத்தம் மூளை மற்றும் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ச்சியான மன அழுத்தம் நினைவாற்றலைக் குறைக்கிறது. படிக்கும் திறன் குறைகிறது. முடிவுகளை சரியாக எடுக்க முடியாது. கவனம் குறைகிறது. உணர்ச்சிகளில் அதன் தாக்கத்தால் பயம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. சிலர் எடை கூடுகிறார்கள். சிலர் எடை குறைகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பாலியல் திறன் குறைகிறது. மனச்சோர்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும். எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையில் நடப்பது. தியானம் செய்வது, இசை கேட்பது. புத்தகங்கள் படிப்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியவை உதவும்.
நீண்ட நேர செல்போன் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறை சிந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பது நம் கையில்தான் உள்ளது. நமது வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். தேவைப்பட்டால் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சீரான உணவை உண்ணுங்கள். தினமும் அரை மணி நேரம் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
எல்லாவற்றிலும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
தயிர் கெட்டியாக இருக்க, நன்கு காய்ச்சி ஆறிய பாலுடன் சிறிது காய்ச்சாத பாலையும், சிறிது தயிரையும் சேர்த்து வைக்கலாம்.
நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பின்பு காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாது.
முட்டைக்கோஸை நறுக்கும் போது அதன் தண்டுகளை சாம்பாரில் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.
வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுற்றி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.
பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
முட்டைக்கோஸை துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.
வழக்கமான அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து அதனை பாத்திரத்திற்கு மாற்றும் முன்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை கரைத்து அடை வார்க்க ருசி அமோகமாக இருக்கும்.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது உறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
- நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
- சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
கோழி இறைச்சியைவிட மிகவும் சுவையும், சத்தும் கொண்டது காடை இறைச்சி. `கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும் காடை' என்கிறது, சித்த மருத்துவ பாடல் ஒன்று. நோய்களால் உடல் இளைத்த ஒருவன் காடை இறைச்சியுடன் சோறு சாப்பிட்டால், கட்டழகன் ஆவான் என்கிறது தமிழ் நூல் ஒன்று.
கோழி இறைச்சியை ஒப்பிடும்போது மிகக் குறைவான கொழுப்பு, ஏராளமான உயிர்ச்சத்துகள் காடை இறைச்சியில் உள்ளன. மூளைக்கு முக்கியமான கோலின் சத்து, வைட்டமின்கள் ஏ, பி-1, பி, டி, கே மற்றும் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் உள்பட பல சத்துக்கள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன. காடை இறைச்சியில் அதிக ஒலிக் அமிலம் இருப்பதால், இதய நோய் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் கண்பார்வை பாதிப்புகளை தடுத்து விழித்திரைகளை மேம்படுத்துகிறது. காடை இறைச்சியில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் மூட்டு தேய்மானத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதே போல், காடை முட்டைகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகின்றன. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் ரத்த சோகையை தடுக்கிறது. காசநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் காடை முட்டையை சிறந்த மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தாலி, மெக்சிகோ, ஜப்பான், போலந்து, பிரெஞ்சு போன்ற நாடுகளில் காடை, மிகவும் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாக உள்ளது.
- உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம்.
- பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும்.
பழங்கள், காய்கறிகளை கொண்டு பானங்கள் தயாரித்து பருகாமல் அதன் தன்மையிலேயே ருசிப்பதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து கலந்திருக்கும். ஊட்டச்சத்துக்களும் மிகுந்திருக்கும். பானங்களாக மாற்றும்போது அவை குறையக்கூடும். இருப்பினும் பழங்கள், காய்கறிகளை ஜூஸாகவும், ஸ்மூத்தியாகவும் தயாரித்து ருசிக்கவே நிறைய பேர் விரும்புகிறார்கள். இதில் எதனை பருகுவது ஆரோக்கியமானது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதில் ஊட்டச்சத்து அதிகம்? எதனை பருகுவது சிறந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
ஊட்டச்சத்து அடர்த்தி
பழ ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின் போன்ற சில சேர்மங்கள் சாறு வடிவத்தில் மிகவும் திறமையாக உறிஞ்சப்படலாம். ஸ்மூத்திகளை பொறுத்தவரை ஆன்டி ஆக்சிடென்டுகள் நார்ச்சத்துடன் பிணைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் பரவலாக உடலுக்கு கிடைக்க வழிவகை செய்கின்றன. ஸ்மூத்திகள் அப்படியே தயாரிக்கப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுவது மிகக் குறைவு. அதனால் ஊட்டச்சத்து தேவைப்படுபவர்கள் ஸ்மூத்தி பருகுவது சிறப்பானது.
ஆற்றல் இழப்பு
ஜூஸ் பருகுவது இன்சுலின் மற்றும் குளுக்கோஸை விரைவாக ரத்தத்தில் அதிகரிக்கக்கூடும். அதிலும் சர்க்கரை அதிகம் கலந்த ஜூஸ் வகைகளை பருகுவது பசி, நீரிழிவு, உடல் ஆற்றல் செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களுடன் தொடர்புடையது. நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு உள்ளிட்டவை சம நிலையில் கலந்த ஸ்மூத்திகளை பருகுவது உடல் ஆற்றலையும், அறிவாற்றலையும், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தக்கூடும்.
சர்க்கரை வெளிப்பாடு
ஜூஸ்களில் நார்ச்சத்து இல்லாத சூழலில் பழங்களில் இருக்கும் சர்க்கரை ரத்த ஓட்டத்தில் விரைவாக கலந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். பழ ஜூஸ்கள் பொதுவாக 65 முதல் 85-க்கு இடைப்பட்ட அளவில் கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருக்கும். சர்க்கரையை விரைவாக கலக்கச் செய்வதுதான் அதற்கு காரணம். ஆனால் ஸ்மூத்திகளில் இயற்கையான சர்க்கரையே அதிகம் கலந்திருக்கும். நார்ச்சத்தும் குறைவில்லாமல் இருப்பதால் சர்க்கரையை மெதுவாகவே வெளியிடும். மேலும் புரதம், ஆரோக்கியமான கொழுப்பும் கொண்டிருக்கும். ஐரோப்பிய மருத்துவ ஊட்டச்சத்து இதழில் நடத்தப்பட்ட ஆய்வில் பழங்களை விட ஸ்மூத்திகள் 57 சதவீதம் வரை ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகவும், செரிமானத்தை பொறுத்தவரை ஜூஸை விட பயனுள்ளதாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எது சிறந்தது?
காலை உணவு, சிற்றுண்டி அல்லது உணவுக்கு மாற்றாக நார்ச்சத்து நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்துகள் மிகுந்த பானத்தை பருக நினைத்தால் ஸ்மூத்தி சிறந்த தேர்வாக அமையும்.
உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம். எனினும் அன்றாட ஆரோக்கியத்திற்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை ஸ்மூத்திகளே வழங்குகின்றன.
திருப்தி
நீண்ட நேரம் சாப்பிட்ட திருப்தி நிலைத்திருக்கவும், விரைவாக பசி எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் விரும்புபவர்கள் ஸ்மூத்தி பருகுவதே நல்லது. ஏனெனில் ஸ்மூத்தி, ஜூஸை விட அடர்த்தியாக இருக்கும். அதில் சத்துக்களும் நிறைவாக இருக்கும். ஜூஸ்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து திருப்தியாக இருப்பதில்லை. ஸ்மூத்தியுடன் ஒப்பிடும்போது விரைவாகவே பசி உணர்வை தூண்டிவிடும்.
பல் ஆரோக்கியம்
ஸ்மூத்திகள் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். பற்களை சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவும். பழ ஜூஸ்கள் அமிலத்தன்மை கொண்டவை, சர்க்கரை நிறைந்தவை. அவை பற்களில் அரிப்பு, பல்சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.
நார்ச்சத்து
பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும். ஆனால் பழங்கள், காய்கறிகளை அப்படியே போட்டு ஸ்மூத்தி தயாரிக்கப்படும். அதனுடன் கெட்டியான பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் சேர்க்கப்படும். முக்கியமாக கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தக்கவைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவிடும். ஜூஸை பொறுத்தவரை பழங்கள், காய்கறிகளில் இருக்கும் திரவம் மட்டுமே பிரித்தெடுக்கப்படும். அவற்றின் தசைப்பகுதிகள் வடிகட்டப்பட்டு அப்புறப்படுத்தப்படும். அதனால் நார்ச்சத்துக்கள் காணாமல் போய்விடக்கூடும்.
நார்ச்சத்து ஏன் முக்கியமானது:
நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவும். ஆரோக்கியமான நுண்ணுயிர்களை வளர்க்கும். உமிழ்நீர் உற்பத்தியை தூண்டி பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.






