என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம்.

    கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    உண்மையில், கொழுப்பு உடலுக்கு முக்கியமான ஒன்று. கொழுப்பு என்பது ஒவ்வொரு உயிர் அணுவிலும் இருக்கின்ற இயற்கையான பொருள் ஆகும். மனித உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் 'டி'-யை உற்பத்தி செய்வதில் கொழுப்பு பெரும் பங்கு வகிக்கிறது. நரம்பு, தசைநார்களை காக்கும் பணியையும் செய்கிறது.

    உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சதவீத கொழுப்பு மட்டுமே உணவு மூலம் உற்பத்தியாகிறது. மனித உடல் தனக்கு தேவையான கொழுப்பை தானே உற்பத்தி செய்து கொண்டு, உடலுக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது.

    அதிக கொழுப்பு நிரம்பிய உணவுகளால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேரும்போது, உடல் தனது கொழுப்பு உற்பத்தியை குறைத்துக்கொண்டு உடலின் கொழுப்பு அளவை சமநிலை செய்கிறது.

    கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு அதிகமாகும்போது மட்டுமே அது இதய நோய்க்கு காரணமாக அமைகிறது.

    இதய நோய்க்கு உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், உடற்பயிற்சி இல்லாதது, நீரிழிவு நோய் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. உடலில் உருவாகும் நிறைவுற்ற கொழுப்பு ஏற்படுத்தும் விளைவை விடக் குறைந்த அளவு பாதிப்பே உணவில் உள்ள கொழுப்பு மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே கொழுப்பை பொறுத்தவரை, ரத்த கொழுப்பின் அளவு சீராக இருக்கும் வண்ணம் கவனித்துக் கொள்வதுதான் இதய பாதிப்புகளை தடுக்கும் வழி என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    • புகைப்பிடிப்பது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிக்கும்.
    • கருப்பு உளுந்து, பேரீச்சை, அத்திப்பழம் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ரத்தத்தில் சீரான வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டும்.

    முதுகு வலி என்பது இன்றைக்கு ஏறக்குறைய அனைவரையும் பாதிப்படையச் செய்கிறது. முதுகு வலிக்கான காரணங்கள் வருமாறு:

    முதுகுத்தசை அல்லது தசைநார்களில் ஏற்படும் பிடிப்புகள், அதிக எடை தூக்குதல் அல்லது மேடு பள்ளமான படுக்கைகளில் படுப்பது, முதுகுத் தண்டுவட வட்டுகளில் ஏற்படும் வீக்கம், அல்லது வட்டுகள் விலகுதல் காரணமாக வட்டுக்குள் இருக்கும் மென்மையான பொருள் வீங்கி அல்லது உடைந்து தண்டுவட நரம்பில் அழுத்தும்போது முதுகு வலி ஏற்படும்.

    கீல்வாத நோய்களிலும் முதுகு வலி ஏற்படும். முதுகுத்தண்டுவட வட்டுகள், எலும்புகள் சுருங்குவது (முதுகெலும்பு ஸ்டெனோசிஸ்), எலும்புகளின் வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), முதுகெலும்பில் ஏற்படும் அழற்சி நோய் (அன்கிலோசிங் ஸ்பான்டைலைடிஸ்)

    முதுகு வலியின் அறிகுறிகள்

    முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல், காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி அதிகமாக ஏற்படுதல், அதிக நேரம் உட்கார்ந்திருந்தால், நின்று கொண்டிருந்தால் வலி அதிகமாகுதல், எரிச்சல், சூடு அல்லது குத்துதல் போன்ற உணர்வு ஏற்படுதல். மேலும் வலி முதுகிலிருந்து கால் வரை பரவக்கூடும். குனிதல், தூக்குதல், நடத்தல் இவை வலியை மோசமாக்கும்.

    முதுகு வலி குறைவதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள்:

    குறைந்த அளவிலான ஏரோபிக் செயல்பாடுகள் முதுகில் வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும். மேலும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் பலன்தரும். வயிறு மற்றும் முதுகு தசை பயிற்சிகள், ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு அவசியம்.

    புகைப்பிடிப்பது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிப்பதால் அதை நிறுத்தவும். முதுகை அழுத்தும் அசைவுகளைத் தவிர்க்கவும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவது கூடாது. கனமான பொருட்கள் தூக்குதலைத் தவிர்க்கவும்.

    எலும்புகள் வலுப்பெற பால், தயிர், பாலாடை கட்டி, முருங்கைக்கீரை, எள், முட்டைக்கோஸ், புரக்கோலி, முட்டை, கடல் உணவுகள், இறைச்சி வகைகள், வெந்தயக்கீரை, பாலக்கீரை, முட வாட்டுக்கால் கிழங்கு, பிரண்டைத் தண்டு, சோயா பீன், பாதாம், பிஸ்தா, கருப்பு உளுந்து, பேரீச்சை, அத்திப்பழம் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ரத்தத்தில் சீரான வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளை இரண்டு வேளை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும். 2) சேராங்கொட்டை நெய்- ஐந்து முதல் 10 மி.லி. இரண்டு வேளை சாப்பிட வேண்டும். 3) முதுகில் வலி உள்ள இடத்தில் வாதகேசரி தைலம், கற்பூராதி தைலம், இவைகளை தேய்த்து நொச்சி, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளம் சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.

    • தைராய்டு சுரப்பி குறைபாடு ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக்கூடும்.

    மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. உடல் தனக்கு கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் இது உதவுகிறது. தைராய்டு சுரப்பி குறைபாடு (ஹைப்போ தைராய்டிசம்) இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

    தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்

    முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி மற்றும் முள்ளங்கி. இதில் உள்ள காயிட்ரோஜன் தைராய்டு சுரப்பி உற்பத்தியை குறைக்கிறது. சோயாபீன்ஸ், சோயா பால், டோபு. இவற்றில் உள்ள காயிட்ரோஜன் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் தைராய்டு செயல்பாட்டை தடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள், காபி (இது தைராய்டு மாத்திரைகள் உட்கொண்ட பின்னர், அவை வயிற்றில் இருந்து ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கிறது), மது பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள்.

    தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

    உணவில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும். மீன், இறால், பால் பொருட்கள், முட்டை, செலீனியம் நிறைந்த உணவுகள் (கடல் உணவுகள், கோழி, காளான், பூண்டு), ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆளி விதைகள், அக்ரூட்), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை), மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் பெக்டின்கள் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி (HbA1c) ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக் கூடும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பியல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    • யோகா பயிற்சியில் உடல் தசை நெகிழும் தன்மை பெறுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், நரம்புகள் வலுப்பெறும்.
    • எளிய யோகா ஆசனங்கள் சளி, இருமல், மலச்சிக்கல், வாயு தொல்லை ஆகிய பாதிப்புகளை நீக்குகின்றன.

    உடலின் அனைத்து பாகங்களும் சீராக இயங்க தேவையான ஆற்றலை யோகா பயிற்சி தருகிறது. யோகிகளின் கூற்றுப்படி, இதயம், நுரையீரல் ஆகியவை மூளையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மூளையின் சீரான செயல்பாடு அதன் நரம்புகளையும், முதுகு தண்டுவட செயல்பாட்டையும் பொறுத்து அமைகிறது. யோகா பயிற்சிகளின் மூலம் உடலை பல்வேறு கோணங்களில் வளைத்து பயிற்சி செய்வதன் மூலம் இதயம், நுரையீரல்கள், மூளை, நரம்புகள் ஆகிய அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பொதுவாக உடலின் மிகப்பெரிய உறுப்பாக இருக்கும் தசைகளுக்கு சரியான பயிற்சி தராவிட்டால், அவை சுருங்கி, இறுக்கமான நிலையை அடைந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். நரம்புகளின் உணர்வு கடத்து திறன் குறைந்து போகும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிப்பு அடையும்.

    யோகா பயிற்சியில் உடல் தசை நெகிழும் தன்மை பெறுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், நரம்புகள் வலுப்பெறும். பொதுவாக யோகா பயிற்சி நோய்களை தடுக்கும் திறன் கொண்டவையாகவும், நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டும் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எளிய யோகா ஆசனங்கள் சளி, இருமல், மலச்சிக்கல், வாயு தொல்லை ஆகிய பாதிப்புகளை நீக்குகின்றன.

    யோகா பயிற்சிகள், உடலில் வளையும் தன்மையை தொடர்ந்து ஏற்படுத்துவதால் ரத்தம் தங்கி விடாமல், ஓட்டத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக பரவ செய்கிறது. குறிப்பாக இந்த பயிற்சிகள் உடலின் இயக்கங்களின் ஆதாரமாக இருக்கும் நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கும்படி செய்வதால் தைராய்டு சுரப்பி முதல் பல்வேறு சுரப்பிகளையும் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகின்றன. இதன் காரணமாக உடலில் உயிராற்றல் எப்போதும் செழுமையான அளவில் தக்க வைக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமும், உடல் ஆற்றலும், சுறுசுறுப்பும் எப்போதும் கிடைக்கிறது என்கிறார்கள் யோகா பயிற்சியாளர்கள்.

    • குடும்பத்தில் யாருக்காவது தோல் அலர்ஜி நோய் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.
    • கரப்பான் நோய் நிறைய பேருக்கு நீண்ட காலத்துக்கு இருக்கும்.

    கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. பொதுவாக, கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம். ஆனால் 2 கால் பாதத்தின் மேல் பகுதிகளிலும், தொடை இடுக்குகளிலும் தான் அதிகமாக வருவதுண்டு.

    இந்தத் தோல் நோய் வந்த இடத்தில், முதலில் தோல் காய்ந்து போகும். பின் அரிப்பு எடுக்கும். நாம் நன்றாக சொரிந்து வைப்போம். பின் அந்த இடம் சிவந்து போகும். சில நேரங்களில் அந்த இடத்தில் கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு நீர் கூட வடிவதுண்டு. இந்த அரிப்பு எடுத்த இடங்களெல்லாம் திட்டு திட்டாக வீங்கிவிடும். நமது உடலுக்கு எரிச்சலூட்டும் அல்லது ஒத்துக்கொள்ளாமையை ஏற்படுத்தும் பொருட்களை நாம் தொடும்போது அல்லது தோலில் படும்போது, இந்த தோல் அலர்ஜி நோய் (எக்சிமாவின்) அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

    இந்த எக்சிமா வரும், போகும். நன்கு குணமடைந்து விட்டது என்று நினைப்போம். ஆனால் அந்த இடத்தில் ஏதாவதொரு எரிச்சலூட்டும் பொருள் பட்டாலோ, அல்லது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள் பட்டாலோ, மறுபடியும் அது கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி, பின் தடிப்பாகி, வெடிப்பாகி, புண் ஆகிவிடும். இந்த கரப்பான் நோய் நிறைய பேருக்கு நீண்ட காலத்துக்கு இருக்கும். இதை 'கிரானிக் எக்சிமா' (நாள்பட்ட தோல் அரிப்பு நோய்) என்பார்கள்.

    மிக அரிதாக, குடும்பத்தில் யாருக்காவது தோல் அலர்ஜி நோய் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புண்டு. இதுபோக, செல்லப்பிராணிகளின் முடி, ஆஸ்துமா, சில உணவுப் பொருட்கள் முதலியன இந்த நோயை உண்டு பண்ணலாம்.

    சிகரெட் புகை, காற்றிலுள்ள மாசுப்பொருட்கள், கம்பளித் துணிகள், சில சரும நிவாரணிகள், கிரீம்கள், சில துணி வகைகள் இவைகள் சூழ்நிலையோடு சேர்ந்து நோயை உண்டாக்கும். மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, மனத் தளர்ச்சி போன்றவை அதிகமாக இருந்தால் கூட இந்தத் தோல் அலர்ஜி நோய் வர அதிக வாய்ப்புண்டு.

    இந்த நோய் வந்தவர்கள், தோலை உலர்ந்து போகவிடக்கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது சோற்றுக்கற்றாழை கிரீம்கள் இப்படி ஏதாவதொன்றை அந்த இடத்தில் தடவி, வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தோல் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நிரந்தர தீர்வுக்கு சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.

    • லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.

    * கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்களுக்கு உருளைக்கிழங்கு கெடாமல் பிரெஷாக இருக்கும்.

    * குடிக்கும் நீர் மணமாகஇருக்க வேண்டும் என்றால் வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.

    * ஆப்பிள் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.

    * காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.

    * லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.

    * அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.

    * நெய் காய்ச்சும் போதே வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ளவும். நன்கு ஆறிய பிறகு இந்த வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். சப்பாத்தி ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் கால் மணி நேரம் உலர வைக்கவும். பிறகு பொரியல் செய்தால் வழுவழுப்பு நீங்கி விடும்

    • நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.
    • வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.

    கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சில தாவர எண்ணெய்கள், சிவப்பு இறைச்சி, வறுத்த வேர்க்கடலை, சாக்லெட், எண்ணெய்யில் முக்கி தயாரிக்கப்பட்ட அனைத்து வறுத்த உணவுகள், இன்னும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் நல்ல கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    வால்நட் அதாவது அக்ரூட் பருப்பு, கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழம், பாதாம் பருப்பு, பூசணி விதை, எள், முட்டை, சால்மன் மீன், டூனா மீன், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், இன்னும் பல உணவுகளில் நிறைவுறா கொழுப்பு அதாவது நல்ல கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் கெட்ட கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரம், கொலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் மற்றும் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன.

    நாம் அன்றாடம் சாப்பிடும் வழக்கமான உணவுகளில் என்ன கொழுப்புச் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் இருக்கின்றது. ஆனால் உங்களுக்கு இதயப் பிரச்சனை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லையென்றால், அதிக புரதச்சத்து உங்கள் உடலுக்கு வேண்டுமென்றால் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    இதயப் பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம். ஏனென்றால் மஞ்சள் கருவில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது ரத்தக் கெட்ட கொழுப்பு அளவைக் கூட்டும். வயது அதிகம், நடமாட்டம் குறைவு என்றால் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

    • வெளிவெப்பம் அதிகமாக இருக்கும்போது யோகா பயிற்சியை செய்யக்கூடாது.
    • ஆசனங்கள் செய்யும்போது கண்டிப்பாக வாயை மூடி வைத்து இருக்கவேண்டும்.

    யோகா பயிற்சி செய்யும்போது உடலில் வெப்பம் ஏற்படுவது உண்டு. எனவே வெளிவெப்பம் அதிகமாக இருக்கும்போது இந்த பயிற்சியை செய்யக்கூடாது.

    அதிகாலை, காலை, மாலை நேரங்களில் செய்யலாம். அதாவது காலை 8.30 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு பிறகும் யோகா செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பொழுது விடியும் நேரத்திலும், பொழுது சாயும் நேரத்திலும் யோகா பயிற்சி செய்தால் அதிக பலனை அறுவடை செய்யலாம். காற்றோட்டமான இடத்தில் யோகா செய்யவேண்டும்.

    ஆசனங்கள் செய்யும்போது கண்டிப்பாக வாயை மூடி வைத்து இருக்கவேண்டும். காற்றை மூக்கு வழியாகவே உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் வேண்டும்.

    • உடலுடன், மனதும் வலிமை பெறும் பயிற்சியாக யோகா திகழ்வதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது.
    • முறையான பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில் யோகாவை செய்ய வேண்டியது அவசியம்.

    யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குகிறது. நரம்புகளை பலப்படுத்தி ரத்த ஓட்டத்தை செழுமையாக்குகிறது. எலும்புகள் வலுப்பெறுகிறது. கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. மூச்சை உள்வாங்கி, வெளிவிட்டு பயிற்சி செய்வதால், நுரையீரல் நன்றாக சுருங்கி விரிந்து சுவாசத்தை சீராக்குகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. தூக்க மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கியவர்கள், அதனை தூக்கி எறிந்துவிட்டு ஆழ்ந்து தூங்கலாம். மது, புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    உடலுடன், மனதும் வலிமை பெறும் பயிற்சியாக யோகா திகழ்வதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. மனசோர்வு, கவனசிதறல், பதற்றம் போன்றவை குறைகிறது. புத்துணர்ச்சி மலர்கிறது. மனது ஒருநிலைப்படுவதால் மாணவர்கள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்த முடிகிறது. அலுவலக வேலை செய்பவர்களின் பணித்திறன், நிர்வாகிகளின் ஆளுமை திறன் அதிகரிக்கிறது. நன்மைகள் ஆயிரம், ஆயிரமாக கொட்டி கிடப்பதால் யோகாவின் மகத்துவத்தை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன.

    உடற்பயிற்சிகள், விளையாட்டுகளில் ஏற்படுவது போல யோகா பயிற்சியிலும் காயங்கள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற உடற்பயிற்சிகளை விட இதில் ஏற்படும் காயத்தின் சதவீதம் மிகக்குறைவு தான். முறையற்ற பயிற்சிகள் மூலம் தசைப்பிடிப்பு, முழங்கால், மணிக்கட்டு, தோள்பட்டை, இடுப்பு காயங்கள் ஏற்படுகிறது. எனவே முறையான பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில் யோகாவை செய்ய வேண்டியது அவசியம்.

    அதிக சிரமம் எடுத்து ஆசனங்களை செய்யக்கூடாது. சிறுவயது முதல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவர்களின் உடல் முதுமையிலும் வில்லாக வளையும். சிறுவயதை தாண்டி யோகாவை தொடங்குபவர்கள், முடிந்த அளவுக்குத்தான் உடலை வளைக்க வேண்டும். எந்த ஆசனங்களையும் முடிந்த அளவுக்குத்தான் செய்யவேண்டும். பொறுமையாக செய்வது மிக முக்கியம். இதன் மூலம் காயங்களை முற்றிலும் தவிர்க்கலாம்.

    • அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.
    • தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    காபி நுகர்வுக்கும் இறப்பு ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு, பானத்தில் சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து இது மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.



    எனினும், அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பதால் இறப்புக்கான ஆபத்து 14 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வு, 1999-ம் ஆண்டு முதல் முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    இருப்பினும், 3 கப்களுக்கு மேல் குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காபி குடிப்பதற்கும் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு.
    • சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமல் காக்கும்.

    இயற்கையான முறையிலேயே சருமத்திற்கு பளபளப்பை கூட்டுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அத்தகைய பழங்கள் பற்றி பார்ப்போம்.

    தர்பூசணி

    சருமத்திற்கு ஈரப்பதத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. குறிப்பாக எண்ணெய் பசையுள்ள சருமம், முகப்பரு சருமம் கொண்டவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சருமம் பளபளப்புடன் மின்னத் தொடங்கிவிடும்.

    ஆரஞ்சு

    சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு. அதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சூரிய கதிர்களிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமலும் காக்கும்.

    அவகேடோ

    இந்த பழத்தில் வைட்டமின்கள் இ, ஏ, சி, கே, பி6, நியாசின், பாந்தோதெனிக் அமிலம், போலட், நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் உள்புற வளர்ச்சிக்கு வித்திட்டு சரும அழகை மெருகேற்ற வழிவகை செய்யக்கூடியவை.

    எலுமிச்சை

    எலுமிச்சை சருமத்திற்கு பளபளப்பு சேர்க்குமா? என்ற எண்ணம் எழலாம். ஆனால் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ள அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவிடும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படக்கூடியது.

    • குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு.
    • சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும்.

    காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தண்ணீரை வழங்குகின்றன. அவை குழந்தைகளை பிற்காலத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி? இப்படித்தான்...

    உணவு விஷயத்தில் உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்கிறது, எனவே குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.

    குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.

    குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு. காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை விரும்பவில்லை என்று ஒருபோதும் முடிவெடுத்துவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் அதை சமைக்கும்போது, அவர்கள் அதை தின்று பார்க்க முயற்சி செய்யலாம். குழந்தைகளின் ரசனைகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன.

    சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    உங்கள் குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.

    காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.

    காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றை பரிமாறும் போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டுவிட்டு, காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒருபோதும் தண்டிக்காதீர்கள். எதையாவது சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கிவிடும். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.

    ×