என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நள்ளிரவில் அதிக பசியா?- நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்
    X

    நள்ளிரவில் அதிக பசியா?- நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்

    • செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பெரும்பாலும் இரவில் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள். அப்படி குறைவாக சாப்பிடுவதால் இரவு 2 மணியளவில் கண்டிப்பாக பசி எடுத்துவிடும். ஆனால் பசியில் அதிகமாக சாப்பிட்டு விட்டாலும் சரி, தவறான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சரி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    உண்மையைச் சொன்னால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடாது ஆனால் அதே சமயம் பசியும் அடங்க வேண்டும், அதற்கான உணவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சாதனையாகத்தான் கருதப்படுகிறது.

    இரவு நேரத்தில் ஏற்படும் பசியைப் போக்க வேண்டும். ஆனால், ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக் கூடாது. இந்தவகை உணவுகளைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்...

    முதலில் பிளைன் க்ரீக் யோகர்ட் அதாவது கிரேக்க தயிர். இதில் புரதமும் மிகக்குறைந்த அளவிலான இயற்கை சர்க்கரையும் உள்ளது. இதில் உள்ள புரதம் உங்கள் பசியை போக்குவதோடு இல்லாமல் செரிமானத்தையும் சீராக்கும். அத்துடன் ரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவி செய்யும். 2019 -யில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிரேக்க தயிர் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இரவு நேர பசியின் போது பயப்படாமல் கிரேக்க தயிரை சாப்பிடலாம்.

    அடுத்ததாக பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதாக 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். வயிறு முழுமையாக உள்ளது போன்ற உணர்வையும் தரும். அதேசமயம் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ளும்.



    தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். 2023-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து தூங்குவதற்கும் உதவி செய்கிறது.

    கடைசியாக பாசிப்பருப்பு சூப் மற்றும் பனீர் முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பருப்பு சூப் செய்யும் போது அதில் செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். பாசிப்பருப்பு சூப்பும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பனீர் எடுத்துக்கொள்ளும் போது அதனுடன் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்ளலாம். 2019 ஆய்வு முடிவின் படி பனீரில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், கேசீன் புரதம் அதிகமாகவும் உள்ளதாகவும் இதனால் பசியைக் கட்டுப்படுத்தி முழுமையாக சாப்பிட்ட உணர்வையும் வழங்குவதாக கூறுகிறது.

    உங்கள் நள்ளிரவு நேர பசியை போக்கிக்கொள்ளவும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மேற்கண்ட உணவுகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

    Next Story
    ×