என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.
    அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

    சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். சருமம் சிவத்தல், சொறி, அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், திட்டுகள், வீக்கம், கொப்பளங்கள், வியர்வை, சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது.

    லெதர் ஆபரணங்கள்: நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

    சருமத்தில் ஈரப்பதம்: ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். லோஷன் தடவுவதன் மூலம் சருமத்தின் உள் அடுக்குகள் பாதுகாப்பாக இருந்தால் வெளிப்புற அடுக்குகளில் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

    கற்றாழை: சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. ஒவ்வாமை பிரச்சினையில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும்.

    நிக்கலை தவிர்த்தல்: சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வாமை தலைதூக்கும்.

    நகைகளை தவிர்த்தல்: மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரை வாக குணப்படுத்திவிடமுடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும். இதற்கு தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
    நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
    நாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    செம்பு பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அணுக்கள் சீராக இயங்கத் தொடங்கி, ரத்த சோகை பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். செம்பில் உள்ள ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டு வலியை குணப்படுத்தும். எனவே, மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து 4 மணி நேரம் கழித்து பருகலாம்.

    செம்பு பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் செல் உருவாக்கம் அதிகரிக்கும். மேலும், தைராய்டு சுரப்பைச் சீராக்கும். உடலின் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு டாட்டா சொல்லலாம். செம்பு பாத்திரத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் தன்மை கொண்டது என்பதால் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் வைக்கும்.

    உடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். செம்பு எளிதில் பாசி பிடிக்கும் தன்மை உடையது. சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாத்திரத்தின் நிறம் மாறுவதோடு அதன் தன்மையும் மாறிவிடும். அதனால் செம்பு பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் அதை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும்.

    தண்ணீர் வைக்க பயன்படுத்தினால் 2 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துவதைவிட எலுமிச்சை பழத் தோல் அல்லது புளி பயன்படுத்துவது நல்லது.

    மண் பாத்திரங்கள் உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றில் சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது. மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும்போது அதன் துகள்களில் நீர் தேங்கி, சமைக்கும்போது அது ஆவியாகி வெளியேறுமே தவிர, உணவில் உள்ள சத்துகள் ஆவியாவது தடுக்கப்படும்.

    மேலும் மண்சட்டியில் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்பதால், உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவுக்கு ஈடானது என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண் சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சினை ஏற்படாது; உணவுக்குழாய்க்கும் உகந்ததாக அமையும்.

    உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மண் சட்டியிலிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப்பொருளில் ஆரோக்கியத்தை சேர்க்கும். மண் சட்டியில் சமைக்கும்போது உணவுப்பொருள் சட்டியில் ஒட்டாது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருக்காது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும்.

    புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்களை 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். மண் சட்டியில் உள்ள துகள்களில் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் நார் பயன்படுத்தி, சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெப்பமான மண் பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளை சமைக்கப் பயன்படுத்தலாம். சமையல் கியாஸ் மிச்சமாகும்.
    அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையின்மை… அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இந்தக் குறைபாடு இன்றைக்கு பெருகிவருகிறது. நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளே அதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

    கம்ப்யூட்டர்:

    இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமானமாவதில்லை.

    கம்ப்யூட்டர் பணியாளர்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. சாதாரணமாக நடக்கக்கூட நேரமில்லாமல் வாகனங்களில் போய் வருகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக உடலியக்கம் குறைந்துவிடுவதால் பலருக்கு கெட்ட கொழுப்பு அதிகரிப்பது, ரத்த அழுத்தக் கோளாறுகள், தொப்பை, உடல்பருமன் என பிரச்சினைகள் அணிவகுக்கின்றன.

    லேப்டாப்:

    சிந்தனை முழுவதும் வேலையிலேயே இருப்பதால் புத்துணர்ச்சியூட்டும் ஹார்மோன்கள் உறங்கிவிடுகின்றன. உடல்சூடு, சோம்பல், தூக்கமின்மை என வேறு சில கோளாறுகள் அவர்களை சராசரி மனிதனைப்போல இயங்க விடுவதில்லை. லேப்டாப்புகளை மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அவர்களது உள்ளுறுப்புகளையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

    லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைவதாகவும், பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்து நீண்டநேரம் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    விந்தணு வீரியம்:

    அப்பார்ட்மென்ட்டுகளில் வசிக்கும் பெண்களது உடலில் சூரியஒளி படாததால் அவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. இல்லத்தரசிகளில் பலர் வீடுகளைவிட்டு வெளியே வராமல் டி.வியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் வரலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆண்கள் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே அடைந்துகிடக்கிறார்கள். அவர்களது உடலில் வெயில்படாததால் விந்தணுக்களின் வீரியம் குறைந்து குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது. கூடவே, நீண்டநேர செல்போன்களின் பயன்பாடும் இந்தப் பிரச்சினைகளுக்கு வலு சேர்க்கிறது.

    சிகிச்சை:

    பொதுவாகவே, இன்றைக்கு திருமணமான எல்லோருமே உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. சிலமாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகே தகுதியாகிறார்கள். அதிலும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    அறிவியலின் வளர்ச்சியில் கிடைத்த கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை நம் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின்மை பிரச்சினை மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.
    மேட்ரிமோனியில் வரன் தேடுவது என்பது தவறல்ல. நேரில் ஒருவரிடம் சொல்லி வரன் தேடும்போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருப்பீர்களோ… அதை விட இன்னும் சில விஷயங்களில் கவனம் தேவை. அவ்வளவுதான்.
    மேட்ரிமோனியில் வரன் தேடுவது என்பது தவறல்ல. நேரில் ஒருவரிடம் சொல்லி வரன் தேடும்போது எந்தந்த விஷயங்களில் கவனமாக இருப்பீர்களோ… அதை விட இன்னும் சில விஷயங்களில் கவனம் தேவை. அவ்வளவுதான்.

    பொதுவாக மேட்ரிமோனியில் வரன் தேடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முதன்மையான 5 விஷயங்களைப் பார்ப்போம்.

    * தரமான தளம்: நிறைய மேட்ரிமோனி இணையதளங்கள் வந்துவிட்டன. அவற்றில் சரியான தகவல்களை அளிக்கும் தளத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு உங்கள் உறவுகளில் யாரேனும் மேட்ரிமோனியலில் வரன் பார்த்து திருமணம் செய்திருந்தால் அவர்களின் உதவியை நாடலாம்.

    * சில மேட்ரிமோனி தளங்களில் பல தகவல்களைக் கேட்கவே மாட்டார்கள். ஓரிரு தகவல்களுக்குப் பிறகு பணம் கட்ட வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அம்மாதிரியான தளங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

    * தகவல் செக்: உங்களிடம் நிறைய தகவல்களை ஒரு தளம் கேட்டால், அதேபோல பெண் / பையன் வீட்டிலேயும் கேட்டிருப்பார்கள். அதனால் கூடுதல் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதனால், அந்தத் தளங்களில் நீங்கள் தேடும் வரன் குறித்த முழு தகவல்களையும் செக் பண்ணுங்கள்.

    * போன் நம்பர்: வரன் பதிவு செய்யும்போது போன் அல்லது மொபைல் நம்பர் கேட்பார்கள். அதில் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருங்கள். ஒன்று, நீங்கள் தரும் எண்ணை வைத்திருப்பவர், எப்போது யார் அழைத்தாலும் உடனே எடுத்து பேசுபவராக இருக்க வேண்டும். ரொம்ப பிஸியாக இருப்பவர் எண்ணைக் கொடுக்க வேண்டாம். இரண்டாவது, மணமகன் தேடுகிறீர்கள் எனில், உங்கள் பெண்ணின் எண்ணைக் கொடுப்பது குறித்து அப்பெண்ணுடன் ஆலோசித்துக் கொடுங்கள்.

    * நிராகரியுங்கள்: சிலர் எதிர்பார்ப்பு என மறைமுகமாக வரதட்சணையைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதுபோன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். சிலர் சாதியின் உட்பிரிவிலும் நுட்பமாக வேண்டும் எனக் கேட்பார்கள். அதுதேவைதானா என்பதை ஆலோசித்து முடிவெடுங்கள். ஏனெனில், இவை உங்களின் விருப்பம்தான் என்றாலும் சில நெகிழ்வுகள் இருப்பதுதானே உறவுகள். ரொம்பவும் கெடுபிடியான நபர்களின் உறவுகள் சீக்கிரம் உடைந்துவிடும்.

    * டபுள் செக்: என்னதான் ஆன்லைனின் விவரங்களைச் செக் பண்ணினாலும் நேரில் பார்ப்பது, பேசுவது போல ஆகாது. அதனால், நீங்கள் தேர்தெடுத்த பையன் அல்லது பெண் தொடர்பான நபர்களை நேரில் சென்று விசாரிக்க தயக்கம் காட்டாதீர்கள். குறிப்பாக, வேலை செய்யும் இடம், தற்போது வேலையில் இருக்கிறாரா… போன்ற தகவல்கள்.

    அதை பெண் பார்ப்பது என்பதாக முடிவெடுத்து செல்லாதீர்கள். பொதுவாக விசாரிப்பது என்பதாகவே இருக்கட்டும். ஏனெனில் மேட்ரிமோனி மூலம் பல வரன்கள் வரும். ஒவ்வொருன்றுக்கும் பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை சரிவராது.

    பெண் / பையன் பார்ப்பது என்பது திருமணம் என்ற ஒன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. அதன்பிறகும் தொடர்ந்து வரும் பந்தம். அதனால், நிதானமாக, பொறுமையாக, அவசரம் காட்டாமல் வரன்களைத் தேர்தெடுங்கள்.
    நீங்கள் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற வேண்டும் என்று விரும்பினால், ஒரு சக்திவாய்ந்த எடை குறைப்பு பானத்தை இதோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதுதான் சூடான, சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர்.
    தேவையான பொருட்கள்:

    பூண்டு - 3-4 பல்
    தண்ணீர் -  ஒரு தம்ளர்
    இஞ்சி - ஒரு துண்டு
    தேன் - சுவைக்கு ஏற்ப
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)

    செய்முறை

    ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்க்கவும்.

    அடுத்து அதில் பூண்டை நசுக்கி சேர்க்கவும்.

    உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

    இதோ…சூடான சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர் தயார்…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம்.
    ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ‘கே-சேது’ என்ற பெயரில், முழுக்க முழுக்க தமிழக பள்ளி-கல்லூரி மாணவர்களை மையப்படுத்தியே இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம். பகிரப்படும் விஷயங்களை மற்ற மாணவர்கள் பார்த்து பயிலலாம். இதை ‘வீ எக்ஸ்போ இந்தியா’ என்ற கல்வி அமைப்பு உருவாக்கி உள்ளது.

    “இது கொரோனா லாக்-டவுனில் உரு வான யோசனை. ‘வீ எக்ஸ்போ இந்தியா’ சார்பில் கல்வி சம்பந்தமான பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். 2020-ம் ஆண்டில், பள்ளி-கல்வி மாணவர்களையும், கல்வியாளர்களையும் ஒரு நிகழ்வின் மூலம் ஒன்றிணைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கினால் அது நிகழாமல் போனது. அதற்கு மாற்றாகவே, இந்த ‘கே-சேது’ அப்ளிகேஷனை உருவாக்கினோம். இதில் மாணவர்களும், அனுபவமிக்க கல்வியாளர்களும் சந்திக்கமுடியும். பயில்பவர்களும், பயிற்சியாளர்களும் கருத்துகளை பரிமாறவே, இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுக்க 500-கும் மேற்பட்ட பள்ளிகளுடனும், பிரபல யூ-டியூப் கல்வியாளர்களுடனும் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்கள், பிரபல யூ-டியூப் கல்வியாளர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால் கடினமான கணக்கு சூத்திரங்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்களை எல்லாம் இனி அனுபவமிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின்மூலம் விளக்க உள்ளனர். இதுமட்டுமின்றி சுலபமான விஷயங்களும் இதில் பகிரப்படும்” என்கிறார், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார். மேலும் தொடர்ந்தவர்....

    “கல்வி அறிவை வளர்ப்பதோடு, எல்லா மாணவர்களுக்கும் தேவையான கல்வி நிதி உதவிகளையும், இந்த ஆப்பில் பெற முடியும். ‘பிக் பேங்க் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் கல்வி உதவி வசதி, இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்களோடு கைகோர்த்திருக்கும் கல்லூரி நிறுவனங்கள், இந்த ஆப்பில் இணைந்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளனர்.

    மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரி கட்டணத்தில் சலுகைகளை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே வழங்க உள்ளனர். அதற்கு அதீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கேற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். குடும்ப பின்னணி, மாணவர்களின் கல்வி ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான ஆன்லைன் நிகழ்வுகள் டிசம்பர் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அதனால் கே-சேது ஆப், தமிழக மாணவர்களுக்கு பலவழிகளில் உதவ இருக்கிறது. கூடவே உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது.” என்றார்.
    ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி. இது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது.
    ஆடை… நாகரிக காலத்தில் வாழும் எல்லோருக்கும் இது அவசியம். ஆனால், ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி. இது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது. சிலருக்கு என்ன டிரஸ் போட்டாலும் உடல் சற்று பருமனாகவே தெரியும். காரணம் அவர்களாகவே மனதுக்குப் பிடித்த ஆடையை உடுத்துவதால் இப்படித் தெரியும்.

    சிக்கென…

    பிளஸ் சைஸ் ஆட்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணிய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்காகவே சில பேஷன் டிஷைனர்கள் இருக்கிறார்கள். அதன்படி செய்தால், மனதுக்குப் பிடித்தமான உடையை உடுத்தலாம், உடலும் சிக்கென்று இருக்கும். இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கும் பொருந்தும்.

    ஆடை விஷயத்தில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கலர் தான். நம்முடைய நிறம் மற்றும் உடல்வாகுக்கு ஏற்ப ஆடைகளின் நிறத்தை தேர்ந்தெடுத்தாலே போதும். நம்முடைய முழு அழகும் அதற்குள் அடங்கிவிடும். அழகுக்கு அழகு சேர்க்கும். பார்ப்பவர் வாயடைத்துப்போகுமளவுக்கு அவர்களது தோற்றத்தில் அத்தனை மாற்றங்கள் தெரியும். அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகள் எப்போதும் உடலை சற்று மெல்லியதாகவே காட்டும். அதனால் எப்போதும் டார்க் கலர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    எடுப்பான தோற்றம்:

    அதேபோல் பெண்களுக்கு மார்பகம் முதல் இடுப்பு வரை கச்சிதமான உடலோடு சேர்ந்திருக்குமாறு ஆடையின் ஃபேப்ரிக் இருப்பது அவசியம். டார்க் கலர் ஆடைகள் பெரும்பாலும் இடுப்பு மற்றும் மார்புப் பகுதியை சிக்கெனக் காட்டும். அடர்ந்த பெரிய பெரிய டிசைன்கள் கொண்ட அவுட்லுக் டிரஸ்களை அணியலாம். பெல்ட்டுடன் கூடிய கோட் மற்றும் ஆடைகளை அணியலாம்.

    மார்பகங்களை எடுப்பாகக் காட்டும்படியான வீ- நெக் டாப்ஸ்களை அணிந்தால் உடல் சிக்கெனக் காட்டும். வயதானபிறகும்கூட சில பெண்கள் எடுப்பான தோற்றத்தில் இருப்பதற்கு இந்த ஆடை தேர்வுதான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டிஷைனர்:

    ஷர்ட் டாப் அணிந்து ஷர்க் அல்லது ஓப்பன் ஜாக்கெட் அணிந்தால் பார்ப்பதற்கு லுக்காகவும் மார்டனாகவும் இருக்கும். உடல்பருமனாக இருந்தாலும் வெளியே தெரியாது. இப்படி பெண்கள் சிக்கென இருக்கவேண்டும் என்பதற்காக ஃபேஷன் டிசைன் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப நிபுணர்களையோ அல்லது அதுதொடர்பாக அனுபவம் உள்ளவர்களையோ அணுகி உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கலாம்.
    இந்த கருஞ்சீரகம் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. அதனாலே இந்தக் கருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேதத்தில் (இயற்கை மருத்துவம்) மகத்துவமான இடம் உள்ளது.
    கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்து அதன் மூலம் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்க முடியும்.

    தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட , தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.

    குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம். மேலும் மீண்டும் கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படாது. கருஞ்சீரகம் பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துவதில் கை கொடுக்கின்றது.

    கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

    கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும். இந்த எளிய வீட்டுக் குறிப்பைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

    நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் இந்த விசயத்தை எதிர்கொள்ள கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

    அதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை அளவான அளவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை இவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் இவர்களுக்குக் கருஞ்சீரகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

    வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். மருந்து ,மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. அதுபோக தொடர்ச்சியாகக் கருஞ்சீரகத்தை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு அல்சர் வியாதி வர வாய்ப்பு இல்லை.

    நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையான ஒன்றுதான். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை செய்யும் ,கெட்ட கொலஸ்ட்ரால் தீங்கு செய்யும். கருஞ்சீரகம் இந்த வகையில் ஒரு அற்புதமான மருந்து பொருளாக உள்ளது. ஏனென்றால் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. கொழுப்பு சம்பந்தப்பட்ட வியாதி ஏற்படாமல் இருக்கக் கருஞ்சீரகம் (Karunjeeragam) வியக்க வைக்கும் வகையில் உதவுகின்றது.
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது தெரியுமா உங்களுக்கு? இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாம் சாப்பிடும் வேகவைத்த காய்கறிகள், 40 நிமிடங்களில் ஜீரணமாகும். இதனோடு சேர்த்துச் சாப்பிடும் அரிசி சாதம், கோதுமை வகைகள் காய்கறிகள் ஜீரணமடைந்த பின்னர் 3 மணி நேரம் கழித்து ஜீரணமாகும்.

    அசைவ உணவுகளில் மிக எளிதாக ஜீரணமடைவது மீன்தான். சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஜீரணமடையும். மட்டன், மாட்டிறைச்சி போன்ற இறைச்சி வகைகள் ஜீரணிக்க கிட்டதட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. முட்டை ஜீரணமடைய 2 மணி நேரம் ஆகும். சிக்கன் இரவு நேரங்களில் ஜீரணமடைவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரைஆகும்.

    ஒரு கிளாஸ் பால் ஜீரணமாவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும். நாம் குடிக்கும் பழச்சாறுகள் 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாக ஜீரணமாகிவிடும். சிறு தானியங்கள் ஜீரணமாவதற்குக் ஒன்றரை மணி நேரம் ஆகும். பீட்ரூட் ஜீரணமடைவதற்கு 50 நிமிடங்களும், காலிபிளவர் ஜீரணமடைவதற்கு 45 நிமிடங்களும் அகும்.

    வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாக ஜீரணமாகிவிடும். உருளைக்கிழங்கு ஜீரணமடைய 1 மணி நேரமும் பச்சையாகச் சாப்பிடும் கேரட் ஜீரணிக்க கிட்டதட்ட 50 நிமிடங்களும் ஆகும். கொண்டைக்கடலையும் கிட்டதட்ட சிக்கனை போன்றுதான் 90 முதல் 120 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது.

    அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் ஜீரணமடைந்துவிடும். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய மிக அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆகும்.

    இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிகிட்டா,எப்பொ எதை சாப்பிடலாம் என நீங்களே முடிவு செஞ்சிடலம்!
    குழந்தைகள் மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது.
    ’முன்பெல்லாம் எப்போ பார்த்தாலும் டிவி பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் புக்ஸ் படியேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்வார்கள். இப்போதெல்லாம்  ’எப்போ பார்த்தாலும் மொபைல் பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் டிவி பாரேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்கிறார்கள்.

    பெரியவர்களே ஏதேனும் வேலையின் நடுவே குழந்தைகள் குறுக்கிட்டால் மொபைலைக் கொடுத்து படம் பார்க்கச் சொல்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து மொபைலை ரொம்ப நேரம் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் உடனே போனைப் பிடிங்கி டிவியை ஆன் செய்துகொடுக்கிறார்கள்

    ஆக, மொபைலை விட டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். இது சரிதானா…கருப்பா… வெள்ளையா? என்று சொல்வதுபோல இந்த விஷயத்தில் சரி அல்லது தவறு என்று சொல்லிவிட முடியாது.

    மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் கண்கள் மிக விரைவில் சோர்ந்துவிடுகின்றன. மேலும், அக்கம் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் இமைக்காது மொபைலைப் பார்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் சார்ந்த சிக்கல்களோடு மனரீதியான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மொபைலில் இண்டர்நெட் கனெக்‌ஷன் இருப்பதால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய காட்சிகளைக் காணும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மற்றவர்களோடு சாட் பண்ணும் வசதியும் இருக்கிறது. ஆக, மொபைலைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் அடிப்படையாக இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்குப் பதிலாக, டிவி எனும்போது எதெல்லாம் இவற்றில் குறைகிறது

    டிவிக்கும் குழந்தைக்குமான இடைவெளியை நாம் தீர்மானிக முடியும். ஆயினும் டிவி திரையின் அளவும் மொபைல் திரையின் அளவையும் ஒப்பிட்டுக்கொள்வது நல்லது. அதனால், மருத்துவர்கள் வலியுறுத்தும் விதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைத்து விடலாம். அடுத்து, இண்டர்நெட். டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பதால் வயதுக்கு மீறிய காட்சிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஒன்று, இப்போது பல வீடுகளில் டிவியிலும் இணைய வசதி இருக்கிறது. அது துண்டிக்கப்பட்டிருக்கிறதா என செக் பண்ண வேண்டும். அடுத்து, டிவியில் போன் பண்ணச் சொல்லி, மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் விளம்பரங்களைப் பார்த்து அவ்வாறு உங்கள் குழந்தை செய்கிறாரா என்பதைப் பார்ப்பது.

    என்னதான் செய்வது?

    சரி… அப்படியெனில் மொபைலை விட டிவி பார்ப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திவிடலாமா… அப்படி முழு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் முதல் தீமையின் அளவை விட சற்று இது குறைவு என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம்.

    டிவியில் கார்ட்டூன் சேனலில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, உங்கள் குழந்தையின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்காது. இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கற்பனை திறனை வற்றச் செய்யும். ஏனெனில், அங்கு உங்கள் குழந்தைக்கு காண்பதற்கு மட்டுமே அனுமதி. சிந்திப்பதற்கு வேலையே இல்லை.

    மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது. மேலும், நொறுக்குத் தீனி சாப்பிட்டிக்கொண்டே டிவி பார்க்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது குறைந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    சரி… என்னதான் செய்வது? முடிந்தளவு டிவி, மொபைல் நினைப்பு வராமல் விளையாடுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். மேலும் கதை புத்தகங்கள், நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். கொரோனா கால பிரச்னைகள் முடிந்ததும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் பழக்கலாம்.

    குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
    குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? அப்படிக் கொடுப்பதனால் குழந்தையின் மூலம் தாய்க்குக் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

    இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறார் டாக்டர் அரசர் சீராளர்  ”எய்ட்ஸ், கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி தாய்ப்பால் புகட்டலாம். அதன் மூலம் நோய் பரவாது.

    கொரோனா பாதித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதே போன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டும் தொற்று இருந்தாலும்,  தாய்ப்பால் கொடுக்கலாம்.

    ஆனால் இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  புற்றுநோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பொதுவாக தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மிக அவசியமான ஒன்று. அதனால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை குடும்பத்தாரும், சுற்றத்தாரும், இந்த சமூகமும் உறுதி செய்யவேண்டும். அதோடு அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும்.

    குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை உணவாக மட்டுமல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகத் தாய்ப்பால் திகழ்கிறது. மனிதன் மனிதனாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் உதவி புரிகிறது.

    பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பதற்கான உகந்த சூழல் இல்லாதது மற்றும் மன அழுத்தம் காரணமாகவே பல்வேறு தாய்மார்கள் தங்களுக்கு தாய்ப்பால் போதிய அளவில் சரியாக சுரப்பதில்லை என மருத்துவரை அணுகி, மாற்றுப்பால் கொடுக்க பரிந்துரைக்க வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.

    இதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அனைவரும் தாய்மார்களின் மனநிலை மற்றும் அவர்கள் வசிக்கும் சூழல் ஆகியவற்றைக் கண்டறிந்து தாய்மார்களுக்கு போதிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்” என்கிறார்.

    கொரோனா காலம் மட்டுமல்ல எப்போதுமே எந்தவித சந்தேகங்கள் தோன்றக்கூடும். அப்படித் தோன்றும்பட்சத்தில் அவற்றிற்கு உரிய நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். அதைத் தவிர்த்து சந்தேகத்தை பயமாக மாற்றிக்கொண்டால் மனநோயாக மாறிவிடக்கூடும்.
    குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காய்கறி பருப்பு கிச்சடி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருள்கள்

    அரிசி - 1 கப்
    சிறு பயறு - அரை கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1 நீளவாக்கில் அறிந்தது
    தக்காளி - 1 சிறிய அளவு
    பட்டாணி - 1 தேக்கரண்டி
    அறிந்த குடை மிளகாய், கேரட் - 2 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 2 தேக்கரண்டி
    பட்டை - 1
    கிராம்பு - 1
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை

    செய்முறை

    அரிசி, பருப்பு நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நெய் ஊற்றி  சூடானதும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு பொரித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும்.

    அடுத்து அதில் அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காய, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி-பூண்டு சேர்த்து வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

    இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பட்டாணி, குடமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    காய்கறிகள் சற்று வதங்கிதும் இதனுடன் சிறுபயறு, அரிசி சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வந்ததும் நிறுத்தி விடலாம்.

    இறக்கியதும் கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×