என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது.
    கருவுற்றிருக்கும் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை குமட்டல் மற்றும் வாந்தி. எதை சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் குமட்டி கொண்டே இருக்கும். இதற்காக சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது. இதை தவிர்க்க மூன்று வேளை உணவு உண்பதற்கு பதிலாக அதே உணவை ஆறுவேளையாக பிரித்து சாப்பிடலாம்.

    இதனால் வயிறு காலியாக இருப்பதை தவிர்க்கலாம். கர்ப்ப காலங்களில் சில பெண்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஏற்றதாக இருக்கும். எனவே நமக்கு ஏற்ற உணவு எது என்பதை கண்டறிந்து சாப்பிடுவது சிறந்தது. நாம் எதை சாப்பிட்டாலும், அது நமக்கும். நமது குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.

    வாந்தி மற்றும் குமட்டல் காலை நேரங்களில் தீவிரமாக இருக்கும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும் இவ்வாறு ஏற்படலாம். எனவே படுக்கைக்கு அருகிலேயே சில உணவுகளை வைத்திருப்பது நல்லது. எழுந்த உடனேயே கொஞ்சமாக சாப்பிட்டு 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்தால் குமட்டல் வருவதை தடுக்கலாம்.

    கர்ப்பகாலத்தில் ஆறிய உணவுகளை சாப்பிடாமல் புதிதாத தயாரித்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகளை சாப்பிட்டாமல் அறை வெப்பநிலையில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படும். ஆகையால் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு சில பெண்களுக்கு சில வாசனை திரவியங்கள், அறைகளில் ஒளிரும் விளக்குகள் போன்ற காரணிகளாலும், குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகள் தூண்டப்படலாம். அவ்வாறு இருந்தால் அத்தகைய காரணிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. காலை வேளையில் இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது, இஞ்சி மிட்டாய்கள் சாப்பிடுவது போன்றவை குமட்டலை கட்டுப்படுத்தும்.

    வீட்டில் செய்யப்படும் வைத்தியங்கள் மூலம், நிவாரணம் பெற முடியாத பெண்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது சிறந்தது.
    முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
    குழந்தை வளர்ப்பு என்பது ரசனையானது மட்டுமல்ல, கடினமானதும் பொறுப்புமிக்கதும் கூட. அதுவும் முதல் குழந்தை பெற்றவர்களுக்கு  இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    குழந்தைகள் பெரும்பாலும் தாயின் அணைப்பிலும், பாதுகாப்பிலும் இருப்பதையே விரும்புவார்கள். அந்த நிம்மதியே அவர்களின் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது.

    குழந்தைகளுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பது ஆரோக்கிமானது. தடுப்பூசிகளை தவறாமல் போட்டுவிட வேண்டும்.

    பிறந்த குழந்தையை எந்த காரணத்திற்காகவும் குலுக்குவது கூடாது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.

    குழந்தைகளுக்கு பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருநாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கும்.

    குழந்தைகளின் நகங்கள் வேகமாக வளரக்கூடியவை. இதனால் குழந்தை கை, கால்களை அசைக்கும் போது கீறல்களை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அடிக்கடி குழந்தையின் நகங்களை வெட்டி விட வேண்டியது அவசியம்.

    பிறந்த மூன்று வாரங்கள் வரை மிருதுவான துணியால் குழந்தையின் உடம்பை துடைத்தால் போதும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று செய்தால் போதுமானது. மிகவும் சூடான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது.

    பிறந்தது முதல் 6 மாதம் அவர்களுக்கு தாய்ப்பால் மிக அவசியமானது. தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்க கூடியது தாய்ப்பாலே. அதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.

    பிறந்த குழந்தையை தூக்கும் போது தலைக்கு கைகளை கொடுத்து தூக்க வேண்டியது மிக அவசியம்.

    பிறந்து 2 வாரம் முடிந்த உடன், குழந்தையை கொஞ்சுவது ஒலி எழுப்பி கூப்பிடுவது குழந்தையிடம் பேசுவது போன்ற செயல்களை செய்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    6 மாதங்களுக்கு பின் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கத்தொடங்கலாம். 2 வயதில் பெரியவர்கள் உண்ணும் உணவுகளை குழந்தையும் உண்ணும் வகையில் பழக்க வேண்டும்.

    7-8 மாதத்தில் பேச ஆரம்பிக்கையில் அவர்களுடன்  வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். அதே சமயம்  இயற்கை உபாதைகள் வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில் அவர்களை பழக்கிவிட வேண்டும்.

    கவனமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.
    தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட தனியா விதைகளை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.
    தேவையான பொருட்கள்

    தனியா (மல்லி) - 4 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
    புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    தக்காளி - 2 (பெரியது)
    வெங்காயம் - 2
    மிளகாய் வற்றல் - 7
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

    பருப்புகள் நிறம் மாறியதும் தனியா, மிளகாய் வற்றல், புளி சேர்த்து தனியா வாசம் வரும் வரை வறுக்கவும். வாசம் வந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி விடவும்.

    அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

    வதக்கியவற்றை ஆற வைத்து தனியாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சுவையான தனியா சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சரியான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.
    கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.

    ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?

    கோடை காலத்தில் அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண் கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.

    வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.

    கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேண்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேண்ட்டை அணியலாம்.

    பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

    அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

    இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்

    வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

    சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

    கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.

    கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
    நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம்.
    முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லைக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப்பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் சற்று கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது.

    ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருட்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், இன்னும் சிலரோ செலவுகளை குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டு கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

    தவிர்க்க முடியாத அத்தியாவாசிய செலவுகளை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல், ஓட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான்.

    முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து கொண்டிருப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும். எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கு உதவும்.

    நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள். தனிநபர் செலவில் கணிசமான தொகையை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக்கூடாது. மொத்தத்தில் திட்டமிட்டு செலவு செய்வதும் ஒரு கலைதான். அதையும் கற்றுக்கொள்வது அவசியம்.
    இல்லற வாழ்க்கை இனிக்க மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும்.
    இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்சனைகளின் மூலகாரணம். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. ‘என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்’ என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.
     
    ஆனால், ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்சனையே, ‘என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை’ என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள். சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்றவர்கள் – முடிந்தவரை என்று சொல்வதைவிட – கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலாதில் பாதுகாப்பு.
     
    மனைவி என்பவள் வெறும் ஜடப்பொருள் அல்ல. அவளுக்கும் ஆசாபாசங்கள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும். இல்லற வாழ்க்கை இனிக்க மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!
     
    நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர்பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்சனைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது… கணவர் கண்ணியம் மீறுகிறார். கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சனைகள் பூதாகாரமாக எழுகின்றன.
     
    விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி. நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்கலாம்.
    இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பார்க்கலாம்!
    பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

    பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

    ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
    இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும்.
    மூங்கில் அரிசி என்பது காடுகளில் வளர்கின்ற மூங்கிலின் பூ பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் அரிசியாகும். மூங்கில் அரிசி ஆனது அதிகமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்டது. மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி மிக குறைந்த அளவிலேயே கிடைக்கும். மூங்கில் மரம் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்த மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த பூ பூத்த பின்னர் அந்த மூங்கில் மரம் பட்டுவிடும்.

    மூங்கில் அரிசி பச்சை நிறம் கொண்டது. இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நமது உடலில் தோன்றும் வாத, பித்த, கப தோஷங்களை சரி செய்வதுடன் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

    உடலுக்கு வலிமை தருகின்ற அரிசி வகைகளில் இதுவும் ஒன்றாகும். நாம் வழக்கமான அரிசியில் செய்யும் அத்தனை உணவுகளையும் இந்த மூங்கில் அரிசியிலும் செய்ய முடியும்.

    மூங்கில் அரிசியில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.

    மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.

    மூங்கில்  அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.

    குழந்தைபேறு உருவாக்குவதில் மூங்கில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் குழந்தை இல்லாதவர்கள் மிகவும் குறைவு. இதற்கு அவர்கள் உண்ட மூங்கில் அரிசியும் ஒரு மிக முக்கிய காரணம்.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. அதிக பசி ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும். நார்ச்சத்து மிக்கது, உடல் வலிமை பெரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. கொள்ளுவை நம் அன்றாட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    கொள்ளுப்பயிறு - ஒரு கப்,
    முட்டைக்கோஸ் - சிறிய துண்டு
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடைமிளகாய் - பாதி
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்புப்பொடி - ஒருடீஸ்பூன்.
    பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

    செய்முறை


    முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளுப்பயிறை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.

    பின்பு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

    அந்தக் கலவையுடன் முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து  கொள்ளவும்.

    பிசைந்த மாவை விருப்பமாக வடிவில் தட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான கட்லெட் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது.
    இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. கொரோனா காலம் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.

    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.

    உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.

    தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான்.

    பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும்.

    குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

    கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
    புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
    காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.

    புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.

    ‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான்.
    பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.

    கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-

    கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை. ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன் வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும். மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.

    பார்வைத்திறன் இழப்பு

    எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

    இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×