search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திட்டமிட்டு செலவு செய்வோம்
    X
    திட்டமிட்டு செலவு செய்வோம்

    திட்டமிட்டு செலவு செய்வோம்

    நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம்.
    முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லைக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப்பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் சற்று கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது.

    ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருட்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், இன்னும் சிலரோ செலவுகளை குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டு கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

    தவிர்க்க முடியாத அத்தியாவாசிய செலவுகளை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல், ஓட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான்.

    முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து கொண்டிருப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும். எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கு உதவும்.

    நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள். தனிநபர் செலவில் கணிசமான தொகையை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக்கூடாது. மொத்தத்தில் திட்டமிட்டு செலவு செய்வதும் ஒரு கலைதான். அதையும் கற்றுக்கொள்வது அவசியம்.
    Next Story
    ×