என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை பஞ்சமூர்த்திகள் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி சிறப்பு பூஜை செய்து மண்டலாபிஷேகத்தை நிறைவு செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜையுடன் தொடங்கியது, தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், அதன்பின்னர் 9.30 மணிக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது.

    இதையடுத்து கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை பஞ்சமூர்த்திகள் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி சிறப்பு பூஜை செய்து மண்டலாபிஷேகத்தை நிறைவு செய்தனர். இதில் கும்பாபிஷேக கமிட்டி குழு தலைலர் அகர்சந்த், செயல்அலுவலர் மாலா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க கோவிலில் இருந்து தாமரை குளம் வரை ஊர்வலமாக வந்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது.

    பின்னர் மண்டகபடி, நலங்கு உற்சவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை கோவிலில் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவ நிறைவு நாளான நேற்று திருவண்ணாமலை தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க கோவிலில் இருந்து தாமரை குளம் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் தாமரை குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.
    ‘நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரு உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளை தம்முடையதாக கருதவில்லை. எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது’ (தி.ப.4:32)

    எத்தகைய எதிர்பார்ப்பும், கைமாறும் இல்லாமல் சக மனிதர்களை அன்பு செய்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் உதவி செய்வது விருந்தோம்பல் என்ற பண்பே ஆகும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பாராது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பாராது அனைவரையும் வரவேற்கிற ஒரு பண்பே விருந்தோம்பல் ஆகும். இது வழிப்போக்கருக்கு உதவி செய்ய நம்மைத் தூண்டி எழுப்பும். இது வாழ்க்கையில் கடந்து செல்கின்ற மனிதர்களுக்கு தன்னம்பிக்கை கொண்டு உதவி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கும்.

    கனிவு, தியாகம் ஆகிய நல்ல பண்புகளில் உயர்ந்ததாக விருந்தோம்பல் அடையாளப்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல் இதமானது. ஆனால் இது பல மனிதர்களை நமக்குரியவர்களாக உருமாற்றுகின்ற பண்புடையது. ஏனென்றால் விருந்தோம்பலில் எப்போதும் அதிகாரம் இருக்காது. எல்லோருடைய மனதையும் ஏற்று அதற்கேற்ப வாழ்வதற்கு உதவி செய்யும். நாம் வாழ்கின்ற இந்த உலக சூழலில் இன்றைய கால சூழலில் அருகில் இருக்கின்ற மனிதனையே அன்பு செய்வதற்கு வாய்ப்பில்லாது கடந்து சென்று கொண்டிருக்கிறோம். எனவே, முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில் திருவிழாவில் பெரிய தேர், சின்னத்தேர் என இரண்டு தேர்களை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக செல்வர்.

    இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி வருகிற 29-ந் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழாவில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    நவதிருப்பதிகளில் 7-வது தலமான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் தோளுக்கினியான், சிம்மம், அனுமார், சேஷ வாகனங்களில் திருவீதி உலா வருதல் நடந்தது.

    தொடர்ந்து 5-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு கருடசேவை நடந்தது. காலையில் பல்லக்கில் வீதி உலாவும், மாலையில் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. இரவு 10 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து சாமிதரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தக்கார் அஜீத், செயல் அலுவலர் இசக்கியப்பன், ஸ்தலத்தார்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
    மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில் சர்ப்ப தோ‌ஷமும் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோ‌ஷமாகும்.
    மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான சங்கடங்களுக்கு ஜாதகரீதியான தோ‌ஷம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில் சர்ப்ப தோ‌ஷமும் ஒன்றாகும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோ‌ஷமாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு, கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு, கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு,கேது இருந்தாலும் சர்ப்ப தோ‌ஷம் என்று சொல்வார்கள்.

    லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள். காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதும், கேது இருக்கும் இடத்திற்கு 7ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.

    இவ்வகை அமைப்பைப் பெற்றவர்கள் எந்த ஒரு வி‌ஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு வி‌ஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது வேறுமாதிரியாகச் செய்ய வேண்டுமா என்று சதா குழம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுத்துவிட மாட்டார்கள். தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்களால் எந்த ஒரு வி‌ஷயத்திலும் தனித்துச் செயல்பட இயலாது. கொடிபோல படர்ந்து செயல்படக்கூடியவர்கள். சரியான ஊன்றுகோல் போன்று துணை கிடைத்து விட்டால் அவர்களைக் கொண்டு வாழ்க்கையில் சிறப்பான ஏற்றத்தினைக் காண்பார்கள்.

    லக்னம் எனும் ஒன்றாம் இடத்தின் மூலம் ஜாதகனின் உயிர், தேகம், குணம் உருவம், நிறம், விதி ஆகியவற்றை அறிய முடியும். லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் முகம், தலை பெரியதாக இருக்கும். இந்த நபர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெற கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    லவுகீகத்தில் உள்ள அனைத்து இன்பங்களையும் முழுமையாக ரசித்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள்.சுயநலம், சுதந்திர சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த வி‌ஷயத்திலும் முன்னிலையில் இருக்க விரும்புவார்கள். சிற்றின்ப வேட்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறரின் கஷ்டம், வேதனையை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார். தனது காரியம் நிறைவேறுவதிலேயே குறியாக இருப்பர். பிரமாண்ட எண்ணங்கள் மிகுதியாக இருக்கும். குறுக்கு வழியை கையாண்டு எதையும் அடைய வேண்டும் என்ற வெறி இருக்கும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர்.

    இவர்களிடம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. சற்று சோம்பேறித்தனமும் அதிகம் இருக்கும். லக்னத்தில் ராகு இருந்தால் உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப்போகச் செய்வார்.

    இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசியாராலும் ஜெயிக்க முடியாது. காரமான, சூடான சுவையான, அசைவ உணவுகளை ருசித்து உண்பார்கள். திரித்து பேசும் குணம் உண்டு. பொய் சத்தியம் செய்பவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றத் தெரியாதவர்கள்.

    பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு மிகுதியாக இருக்கும். தன வரவு மிகுதியாக இருந்தாலும் தங்காத நிலை உண்டு. குடும்ப உறுப்பினர்களை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் தனித்து வாழ விரும்புவார்கள். யார் என்ன சொன்னாலும் உள் வாங்க மாட்டார்கள். தான் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப வி‌ஷயத்தை பிறரிடம் கூறி பிரச்சினையை வளர்ப்பவர்கள்.

    தன் பேச்சினால் பிறரை வதைப்பார்கள். நியாயத்திற்கு புறம்பாக பொருள் ஈட்டுவார்கள்.

    பொருளாதார வசதியை அதிகரிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    அடுத்தவர் மீது குற்றம் காணும் மனப்பான்மை மிகுதியாக இருக்கும்.

    குள்ளமான தோற்றம் உண்டு. லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது இருந்தால் ஜாதகர் அனுபவ அறிவு மிகுந்தவர்கள். பொருளாதாரத்தில் மந்த நிலை மிகுதியானதாக இருக்கும். பிறர் பிரச்சினையை தன் தோளில் சுமப்பவர்கள். மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள். கவுரவம், கவுரவம் என அலைந்து தனக்கு வேண்டியது என்னவென்றே தெரியாமல் போராடிக் கொண்டு இருப்பார்கள். இவர்களை மதிக்க வேண்டியவர்கள் உதாசீனப்படுத்துவார்கள். அந்தஸ்தான பெயரெடுக்க கடுமையாக உழைக்க வைக்கும்.

    அனைத்து திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை இருக்கும் அல்லது திறமையை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.

    இரண்டில் ராகு உள்ளவர்கள் பேசியே பிரச்சினையை அதிகரிப்பார்கள். ஆனால் இரண்டில் கேது இருப்பவர்கள் பேசாமலே மவுனமாக சாதிப்பார்கள். உறவிற்காக சுதந்திரத்தை பறி கொடுப்பார்கள். சிறந்த நேர்மைவாதியாக சூழ்நிலை கைதியாக இருப்பார்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும். வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்வார்கள். குடும்ப பிரச்சினைக்கு பஞ்சாயத்து வைப்பவர்கள் அல்லது நீதிமன்றம் செல்பவர்களாக இருப்பர்.

    ஏழாமிடம் என்பது களத்திரம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப் படுத்தும் குணம் கொண்டவர் என்பதால் அதீத இல்லற இன்பத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நாடலாம். அல்லது இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கும். வேற்று மத நண்பர்கள் அதிகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் வஞ்சிப்பார்கள். பணிபுரியும் இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களால் மன உளைச்சல் உண்டு. சம்பந்திகளால் அவமானம் உண்டு.

    ஏழாமிடத்தில் கேது இருந்தால் வெகு சிலருக்கு கால தாமத திருமணம் நடக்கும். வெகு சிலருக்கு இல்லற இன்ப நாட்டம் குறைவுபடும். வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள மாட்டார்கள். பாலின வியாதி ஏற் படலாம். வாழ்க்கைத் துணைக்கு கடன் உருவாகலாம். குறைவான நண்பர்கள் உண்டு.

    முறையாக எது செய்ய நினைத்தாலும் தாமத மாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளி கள், வாடிக்கையாளர்களால் வம்பு வழக்கு உண்டு. பணிபுரியும் இடத்தில் வம்பு, வழக்கு வரும். சில தம்பதிகள் சட்ட உதவியுடன் பிரி கிறார்கள்.

    எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் . திடீர் அதிர்ஷ்டம் வரும். உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.

    அந்த அதிர்ஷ்டம் இவர்களை விட இவர்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். சிலருக்கு விபத்து ஏற்படலாம் அல்லது பொருள் திருடு போகலாம். நன்மையும், தீமையையும் எப்படி வரும், யார் மூலம் வரும் என்று நிதானிக்க முடியாது. சிலருக்கு தேவையில்லாத வதந்திகளால் அவமானம் ஏற்படும். இவ்விடத்தில் உள்ள ராகு, கேதுவினால் ஜாதகருக்கு அசுபங்கள் அதிகரிக்கும். சுபங்கள் குறைவுபடும்.

    மேலே கூறிய அனைத்தும் ராகு, கேதுக்கள் நின்றபாவக ரீதியான பொதுவான பலன்கள். ராகு,கேதுக்கள் இருட்டான நிழல் கிரகங்கள் என்பதால் எந்த இடத்தில் அமர்வதும் நல்ல நிலை அல்ல. தான் நின்ற வீட்டு ஆதிபத்திய ரீதியாக ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார்கள். இருட்டு படர்ந்த பாவக காரக ரீதியான பலன்கள் என்பதால் போதிய திறமை இருந்தும் வெளியே தெரியாது அல்லது உங்களுடைய திறமைகள் வெளிபடுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். உதாரணமாக ஜனன ஜாதகத்தில் ஏழில் ராகு நின்றால் திருமணத்தை தடை செய்யமாட்டார்.

    திருமண வாழ்வில் பிரச்சினையை தருவார் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தருவார் என்று பொருள். ஒரு செயலை நடத்தித் தராமல் தடை பிரச்சினையை தருபவர் கேது அந்த வகையில் தான் நின்ற பாவக பலனை அனுபவிக்க தடையை தருபவர் கேது. அதனால் ராகு,கேது இரண்டுமே பிரச்சினை தான். மேலும் தான் நின்ற பாவக ஆதிபத்திய ரீதியாக உயிர் அல்லது பொருள் காரகத்துவம் என ஏதாவது ஒன்றை மட்டுமே பாதிக்கும். எந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பாவகம் காரகம் தொடர்பான ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும். தனித்த ராகு,கேது ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

    ஆனால் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தால் ஏற்படும் பாதிப்பு மிகைப்படுத்தலாக ஜாதகரின் வாழ்க்கையை அசைக்கும்.

    திருமணம் தொடர்பான 1,2,7,8 பாவகங்களில் நிற்கும் ராகு,கேதுக்கள் சர்ப்ப தோ‌ஷத்தால் திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சி னைகளை உருவாக்கும்.

    இதனால் சர்ப்ப தோ‌ஷத்திற்கு சர்ப தோ‌ஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோ‌ஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால் தான், தோ‌ஷத்திற்கு தோ‌ஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். சுருக்கமாக,

    1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான செவ்வாய்க்கும் ஆணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான சுக்ரனுக்கும் சர்ப்ப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் மட்டுமே திருமணத்தடை இருக்கும்.

    திருமணத்திற்கு பின்பும் மண வாழ்வில் சங்கடங்கள் இருக்கும்.

    2. சுய சாரம் அல்லது சாரப் பரிவர்த்தனை பெற்ற ராகு,கேதுக்களுக்கு திருமணத் தடையை ஏற்படுத்தும் வலிமை உண்டு.

    3. 8-ம் இடத்தில் ராகு,கேதுக்கள் நின்று தசை நடத்தினால் உரிய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் நடத்தலாம். கோடான கோடி தம்பதிகள் 7, 8-ல் சர்ப்ப கிரகங்கள் நின்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    4. ஜனன கால ஜாதக ரீதியாக தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களில் பிரச்சினை இருந்தாலும், அசுப கிரகங்கள் நின்றாலும் திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கை பாதிக்காது.

    சுய ஜாதகத்தில் பெண்ணிற்கு செவ்வாயும், ஆணிற்கு சுக்ரனும் நல்ல நிலையில் இருந்தால் தசா புக்தி சாதகமாக இல்லாத நிலையிலும் ஜாதகத்தில் கடுமையான தோ‌ஷம் இருந்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்காது. உரிய வயதில் திருமணம் நடக்கும்.

    அதனால் எந்த தோ‌ஷமாக இருந்தாலும் சீர் தூக்கி பார்க்காமல் ராகு,கேது திருமணத் தடை என்று பொதுவான காரணத்தைக் கூறி திருமணத் தடையை ஏற்படுத்தக் கூடாது. வெகு சிலருக்கு ஏற்படும் பிரச்சினையை பிரமாண்டப்படுத்திமனிதர்கள் தங்களுக்கு தாங்களே திருமணத் தடையை ஏற்படுத்திக் கொண்டு ராகு,கேதுக்கள் மீது பழி சுமத்த லாமா? எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அனுசரித்து வாழப்பழகும் போது பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

    மேலே கூறிய விதிகளின் படி உண்மையில் பாதிப்பு இருந்தால் தொடர்ந்து 108 நாள் நாகாபரணம் தரித்த ஈஸ்வரனை வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் ராகு,கேதுவினால் ஏற்படும் தடைகள் அகலும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
    திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூரில் உள்ள பக்த வத்சல பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருடசேவை நேற்று நடைபெற்றது. அதி காலை 3.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்ட பக்தவத்சல பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி னார். தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெற்றது.

    பின்னர் 4 மாட வீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில், அனுமந்த வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதிஉலா சென்றார். விழாவில் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருவள்ளுர், தாமரைப் பாக்கம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) காலை பக்த வத்சல பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
    ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அரைக்காசு அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் இழந்த செல்வத்தை அடையலாம்.
    ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அருள்தரும் நாயகியே போற்றி

    ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
    ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
    ஓம் அன்பிற்கினியவளே போற்றி
    ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
    ஓம் அலங்கார நாயகியே போற்ற
    ஓம் அற்புத தாயே போற்றி
    ஓம் அற்பு அழகே போற்றி

    ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
    ஓம் அறிவுடை தேவியே போற்றி
    ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
    ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
    ஓம் வெல்லப்பிரியையே போற்றி
    ஓம் சக்தி சொரூபமே போற்றி
    ஓம் சாந்த சொரூபமே போற்றி
    ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
    ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
    ஓம் சத்திய சொரூபமே போற்றி

    ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
    ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
    ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
    ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
    ஓம் சர்வ஧ஸ்வரியே போற்றி
    ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
    ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
    ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
    ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
    ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி

    ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
    ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
    ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
    ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
    ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
    ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
    ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
    ஓம் ஓம்கார சக்தியே போற்றி
    ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி

    ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
    ஓம் தேவி பிரியையே போற்றி
    ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
    ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
    ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
    ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
    ஓம் நவமணி அரசியே போற்றி
    ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
    ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
    ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி

    ஓம் உயர்வை தருவாய் போற்றி
    ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
    ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
    ஓம் உயர்மணியே போற்றி
    ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
    ஓம் உடன் அருள்வாய் போற்றி
    ஓம் சுகம் தருவாய் போற்றி
    ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
    ஓம் வரம்பல தருபவளே போற்றி
    ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி

    ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
    ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
    ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
    ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் யெளவன நாயகியே போற்றி
    ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
    ஓம் ஞான விளக்கே போற்றி
    ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பாய் போற்றி
    ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

    ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
    ஓம் இன்பத்தின் இடமே போற்றி
    ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
    ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
    ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
    ஓம் கிருபை தருவாய் போற்றி
    ஓம் யோக நாயகியே போற்றி
    ஓம் மோகன நாயகியே போற்றி
    ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி

    ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
    ஓம் மாணிக்க நாயகியே போற்றி
    ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
    ஓம் மந்திர பொருளே போற்றி
    ஓம் மரகத வடிவே போற்றி
    ஓம் மாட்சி பொருளே போற்றி
    ஓம் பொற்புடை நாயகியே போற்றி
    ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
    ஓம் புவன நாயகியே போற்றி
    ஓம் நலந்தரும் நாயகியே போற்றி

    ஓம் சித்திரக் கொடியே போற்றி
    ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
    ஓம் வியப்புடை நாயகியே போற்றி
    ஓம் பக்குவம் தருவாய் போற்றி
    ஓம் பண்பு தருவாய் போற்றி
    ஓம் காக்கும் பொருளே போற்றி
    ஓம் கருணை நிலவே போற்றி
    ஓம் பொற்புடை சரணம் போற்றி
    ஓம் பிறை வடிவே போற்றி
    ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
    ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
    ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
    ஓம் தீபச் சுடரே போற்றி
    ஓம் தீப நாயகியே போற்றி
    ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!

    இந்த வழிபாடு ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் பலனை அடையலாம்.
    ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)
    ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)

    இயற்கை உணவு உடலுக்கும், மனதுக்கும் மிக ஏற்ற உணவுகளாகும். இதமான மென்மையான உணவுகள் பெரும்பாலும் இயற்கை உணவுகளாக அமைகிறது. முரண்பாடான உணவுகளை சாப்பிடுதல், சீரணத்திற்கு எதிரான உணவுகளை சாப்பிடுதல், பொரித்த உணவை சாப்பிடுதல் இவையெல்லம் ஆரோக்கியத்துககு எதிரானதாகும். ஆரோக்கிமாக இருக்க விரும்புகிறவர்கள் தினமும் தங்கள் வாழ்வை தண்ணீரில் தான் தொடங்குகிறார்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். இது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றதாகும். சமையலில் கடுகு தாளிப்பது வழக்கமான ஒன்று. கூட்டு குழம்பு இவைகளில் சுவைக்காக கடுகு தாளிக்கப்படுகிறது.. கடுகு தாளிக்கப்படுவது நிறுத்திவிட்டால் எண்ணெய் தேவைப்படாது.

    ஒரு தடவை உணவு உண்டு சீரணமாவதற்கு முன் அடுத்த உணவு உண்ணக்கூடாது. இந்த உணவுகளுக்கு இடையே இடைவெளி குறையும் போது அது உடலுக்கு தேவையற்ற கேடுகளை உண்டாக்கும். மதிய உணவுக்கு பிறகும் இடைவேளையில் இனிப்புகள், மிக்சர் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாரத்துக்கு ஒருமுறை வெளியே சென்று ஓட்டல்களில் சாப்பிடும் காலசாரம் இன்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதனை தவிர்ப்பது நல்லது. இதனால் தான் அல்சர்போன்ற நோய்கள் உருவாகிறது.

    இயற்கை உணவை விரும்புகிறவர்கள் காலை உணவாக பழங்கள் சாப்பிடலாம். வீட்டில் இருந்து கிடைக்கும் எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே. அந்த பொருட்களை உண்பது நல்லது. மதிய உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. மாலையில் தேனீருக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு உணவு சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகளை இரவில் உணவாக உண்பது நல்லது. இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொள்கின்ற பொழுது நமது உடல் நலம் வளர்ச்சி அடைவதோடு நாமும் ஆரோக்கியமான நிலையில் வாழ்வோம். எனவே இந்த பண்பை இன்றைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், ஆயுள் விருத்திக்காக பல்வேறு யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.

    இந்த கோவிலில் மூன்று ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    குடமுழுக்கையொட்டி அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அபிராமி அம்மன் சன்னதியில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 108 பெண்களுக்கு ஸ்வர்ண புஷ்பம் மற்றும் மங்கலப் பொருட்கள் அடங்கிய பிரசாதங்களை வழங்கினார்.

    முன்னதாக தருமபுரம் ஆதீனம் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். இதில் கோவில் குருக்கள், கோவில் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர். பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடமுழுக்கு விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து கோவிலுக்கு வந்து பணிகளை பார்வையிட்டார். பின்னர் கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் ஆய்வாளர்கள், கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
    63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியமாக உள்ள காரைக்கால் பாரதியார் சாலையில், நித்தியக்கல்யாணப்பெருமாள் கோவில் அருகே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிறப்புமிக்க மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடந்தது. அது சமயம் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு மின் அலங்கார ரதத்தில், காரைக்கால் அம்மையார் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வீதியுலா நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வீதிதோறும் அம்மையாருக்கு பூரண கும்பம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கைலாசநாதர் கோவிலுக்கு சென்று இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பு தீபாராதனையுடன் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
    இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.
    ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு அடிப்படையான தேவை பொருளாதாரம் ஆகும். குடும்ப நிர்வாகம் என்று வரும்போது அவர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படையானவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதும், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற செலவினங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதும் குடும்பத்தலைவரின் தலையாயக் கடமையாக உள்ளது.

    அவர் ஒழுங்காக உழைக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றினால், அல்லது உழைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்தால், அல்லது உழைத்து, குடும்பத்திற்காக செலவு செய்வதில் கருமித்தனம் செய்தால் அந்த குடும்பத்தை வழி நடத்துவது சிரமமாகி விடும். இவ்வாறான குடும்பத்தலைவரின் அணுகுமுறையால்தான் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது.

    ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

    ‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

    ‘உன் வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ஒரு நாளைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்து, குடும்பத்தாருக்கு செலவளிப்பது மட்டும் போதாது. ஓராண்டுக்குத் தேவையான உணவு பண்டங்களை சேமித்து வைப்பதும் கூடும். பஞ்ச காலங்களில் பதுக்கிவைப்பதும், விலையேற்றம் பெற பதுக்கிவைப்பது மட்டுமே இஸ்லாத்தின் பார்வையில் கூடாது.

    ‘நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்று, தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்’. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: புகாரி)

    ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

    ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    “வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும்”. (திருக்குர்ஆன் 65:7)

    ‘உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

    இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ×