என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி கோவிலில் கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவது நிறுத்தப்பட்டிருந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்காக தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ந்தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால் மின்னணு குலுக்கல் முறையில் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.

    இதேபோல் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அங்கபிரதட்சணம் செய்து வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிஏசி 1-ல் பக்தர்களுக்கு அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2020 மார்ச் 20-ந் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

    தற்போது 2 ஆண்டுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முந்தைய நாள் அங்கபிரதட்சணம் டிக்கெட் பெறும் பக்தர்கள் மறுநாள் அதிகாலை கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதையும் படிக்ககலாம்...நாராயணா என்று உச்சரித்தால் என்ன பலன்?
    சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.

    அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

    மேலும் மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது. பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்க தொடங்கினர். முதலில் கோவில் பூசாரிகள் இறங்க அதனை தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர். இதில் சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.

    நேற்று இரவு கோயிலிலிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இதில் சுமார் ஏராளமான பக்தர்கள் சுற்று வட்டாரங் களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டது. இதில் நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று இருப்பிடம் போய் சேர்ந்தது.
    முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
    தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !
    ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…!

    உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம். இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

    திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

    மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.

    தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.

    காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது.

    திருப்புகழ் தலம்:

    இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

    தல வரலாறு:

    ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

    ஆலய முகவரி

    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
    திருநல்லூர் கிராமம்
    திருநல்லூர் அஞ்சல்
    (வழி) சுந்தரப்பெருமாள் கோயில்
    வலங்கைமான் வட்டம்
    திருவாரூர் மாவட்டம்
    PIN – 614208.
    கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிபடனும். அப்பதான் முக்தி கிடைக்கும்.
    கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவபெருமான் குளிர்ச்சி பிரியர். அதனாலதான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிஷேகம் செய்விப்பர். அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

    சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108. இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48. ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம். இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தால் முக்தின்னு சொல்றாங்க. அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிபடனும். அப்பதான் முக்தி கிடைக்கும்.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும். இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும். சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது.

    சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம். இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம்.
    சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாக சுவாமிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்புடையதும், சிவபெருமானுக்கு முருகப்பெருமான் ஓம் என்ற பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரரால் திருமுருகாற்றுப் படையிலும் அருணகிரிநாதரால் திருப்புகழில் வியந்து பாடிய தலமாக சுவாமிமலை முருகன் கோவில் உள்ளது.

    சுவாமிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று தொடங்கியது. 21- ந்் தேதி சண்முகசுவாமி, வேடமூர்த்தி, வள்ளி நாயகியர் மற்றும் பரிவாரங்களுடன் திருவலஞ்சுழி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை அரசலாற்றில் யானை விரட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.

    இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை கோவிலுக்கு முருகன், வள்ளி ஆகியோர் திரும்பினர். இரவு அலவந்திபுரத்திலிருந்து சீர்கொண்டு வந்து சுவாமிமலை கோவிலில் கல்யாணம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.
    புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்-. அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள். பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர்.

    அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள். நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
    நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

    நாராயணன் என்பதை நாரம்+அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.

    இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர். நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும். அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
    வயலூர் முருகன் கோவிலில் ரிஷப லக்கனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
    திருச்சி அருகே வயலூரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வள்ளி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் 11.30மணிக்குள் ரிஷப லக்கனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து வயலுருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 20-ந் தேதி நடந்தது. தொடர்ந்து நடந்த புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கருட சேவையும் கோபுர வாசல் தரிசனம் நடந்தது. இதில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன், முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல், காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.
    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.
    நோய்களை தீர்க்கும் தீர்த்தம்

    நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

    கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்

    நத்தம் மாரியம்மன் நித்தம் அருள்பாலிக்கும் முத்திரை பதிக்கும் தெய்வமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதன்படி இந்த மாசி பெருந்திருவிழாவில் தம்பதிகள் பலர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    வேப்பமர கட்டைகள் காணிக்கை

    நத்தம் மாரியம்மனின் அருள் ஆற்றல் எண்ணிலடங்காதவை. பக்தர்களுக்கு தாயாக இருந்து அரவணைக்கும் அவள் கருணைக்கு எல்லையே இல்லை. மாரியம்மா என்று மனம் உருகி வேண்டுவோருக்கு அவள் அருள் கரத்தை நீட்ட தவறுவதில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், நோய் நொடிகள் நீங்க பெற்றவர்கள் தங்களது நேர்த்திக்கடனை பல்வேறு வகைகளில் நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறி யதற்காக பூக்குழி அமையும் தளத்தில் வேப்பமர கட்டைகளை காணிக்கையாக செலுத்தினர். இதுபோல பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கோவிலுக்கு வரலாம், ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
    கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

    அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் விலக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது அங்கு முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இனி கோவிலுக்கு முன்பதிவு செய்யாத பக்தர்களும் செல்லலாம் என கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கோவிலுக்கு வரலாம், ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    இதனை தேவஸ்தான தலைவர் விஜயன் தெரிவித்துள்ளார்.
    பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோலத்தில் வேல் இருக்கும். இங்கு உள்ள கோவிலின் பெரிய தேரில் ஆறுமுகப் பெருமானான முருகப்பெருமானின் திருக்கரத்தில் தராசு இருக்கிறது.
    முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் மட்டுமே தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக்கோலத்தில் அருள்புரிகிறார். ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றாலும் இந்த கோவிலுக்கு உகந்த திருவிழா பங்குனி பெருவிழா 15 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணத்தன்று மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருள்கிறார். மேலும் பழ முதிர்ச்சோலையில் இருந்து சீர்வரிசை கொண்டுவரப்படுகிறது. ஆகவே திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவை திருப்பரங்குன்றத்தில் சங்கமம் ஆகிறது. பங்குனி பெருவிழாவின் 14-வது நாள் மகா தேரோட்டம் நடக்கிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவில் மகா தேரானது தென்றலாய் ஆடி, அசைந்து மெல்ல மெல்ல வலம் வரும்.

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். அரிச்சந்திர மகாராஜா தேரினை வழங்கியதாக செவிவழிச்செய்தி கூறுகிறது. பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோலத்தில் வேல் இருக்கும். இங்கு உள்ள கோவிலின் பெரிய தேரில் ஆறுமுகப் பெருமானான முருகப்பெருமானின் திருக்கரத்தில் தராசு இருக்கிறது. இது நீதியை நேர்மையை நிலை நாட்டும் விதமாக உள்ளது என்று கூறுகிறார்கள். மேலும் திருப்பரங்குன்றமானது ‘தராசுகார பூமி’. அதை வெளிப்படுத்தும் முகமாக தேரில் உள்ள சிற்பம் உணர்த்துகிறது.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானிடம் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது. முருகப்பெருமானின் நட்சத்திரத்தை குறிக்கும் விதமாகவும் தராசு உள்ளது என்று கூறுகிறார்கள். தேர்வலம் வரக்கூடிய மலைக்கு பின்புறம் திருப்பரங்குன்றத்தில் தான் (கல்வெட்டு குகை கோவிலில்) முன்னோர்கள் காலத்தில் முருகன் கோவிலில் இருந்து வந்துள்ளது.

    காலப்போக்கில் தற்போதுள்ள இடம் கோவிலாக மாறி உள்ளது. தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து திரும்பியதால் பரங்குன்றம் கோவில் என்ற பெயர் திருப்பரங்குன்றமாக ஊர் பெயர் போற்றப்படுகிறது. தெய்வீக புலவர் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுபடை மூலம் திருப்பரங்குன்றம் முதற்படையாக போற்றப்படுகிறது.

    இங்கு வாருங்கள். முருகப் பெருமானை வேண்டுங்கள். நினைத்த காரியம் கைகூடும்.
    ×