என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வந்து காட்சி அளித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். இதேபோல் நேற்று இரவிலும் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
    கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மறையுரை சிந்தனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு ஆலய நூற்றாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து புனித அந்தோணியாரின் இரவில் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலையில் ஆலயத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மதுரை நொபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் பகல் நேர சப்பர பவனி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, உதவி பங்குதந்தையர்கள் பென்னி லாரன்ஸ் ஜஸ்டின், அருள் ஜஸ்டின், புனித அந்தோணியார் சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    நாளை சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.
    வளமான எதிர்காலம் வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையும் பிரார்த்தனையும். அதற்கு நிகழ்காலத்தில் உழைப்பும் சேமிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுதலும்! சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.

    சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம் உண்டு. அம்பாள் என்கிற மகாசக்தியை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள் தேவி!

    ‘பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் தை மாதத்தின் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்! என்றார்.

    நாளை செவ்வாக்கிழமை வசந்த பஞ்சமி. அம்பிகையைக் கொண்டாடுவதற்கு உரிய அற்புதமான நாள்.

    இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.

    அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.

    முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!
    மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 62-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    காரமடை அருகே மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு 36 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
    காரமடை அருகே மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்களின் வாழ்வு ஏற்றம் பெற வேண்டி ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு 36 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    மூலவர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
    சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானை வழிபடலாம்.
    சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.

    சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.

    நவக்கிரகங்களில் முக்கியமான தெய்வம் செவ்வாய் பகவான். வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவசியம் தேவை. சிறு வயதில், கல்வி இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்கு வளரமுடியும். அதனால்தான் புத்தியில் பலத்தைத் தருகிறார் செவ்வாய் பகவான். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது, உடலில் பலம் வேண்டும். அந்த பலத்தையும் வழங்குகிறார் செவ்வாய் பகவான்.

    அதுமட்டுமா? படிப்பு, வேலைக்குப் பின்னர் திருமணம் எனும் சந்ததி வளர்க்கும் விஷயம். சந்ததியை வளர்க்க, திருமணம் அவசியம். வாழ்க்கைத் துணை அவசியம். செவ்வாய் தோஷம் முதலான கிரக பலவீனம் இருந்தால், திருமணம் நடப்பது தடைப்படும். அதனால்தான் செவ்வாய் தோஷம் குறித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம்.
    படிப்பு, உத்தியோகம், திருமணம் என நல்லவிதமாக கைகூடி வரவேண்டும். அதன் பிறகு சொந்தவீடு என்பது எல்லோருக்குமான பெருங்கனவு. வாழ்வின் ஆகப்பெரிய பெரிய ஆசை. சொந்தவீடு என்பதன் மீது ஆசைப்படாதவர்களே இல்லை எனலாம்.

    செவ்வாய் பகவான், பூமித்தாயின் மகன். பூமாதேவியின் மைந்தன். அதனால்தான் செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்கிறார்கள். செவ்வாய் பகவானையும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும் வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது.

    மார்ச் 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள், திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடப்ப நாயுடு, கோவில் அதிகாரிகள் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டம் முடிந்ததும் கலெக்டர் ஹரிநாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். காலை, இரவு நடக்கும் வாகன சேவையில் கலந்து கொள்வதுடன் கிரிவலம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்திலும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    எனவே கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் தரிசன வரிசைகள் உருவாக்கப்பட்டு அங்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். பிரம்மோற்சவ நாள்களின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து ராகு-கேது பரிகார பூஜைகள் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காளஹஸ்தி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் என்றார்.
    நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 3-ந்தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது நத்தம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதைத்தொடர்ந்து 16-ந்தேதி உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலை வந்து சேருவர். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மஞ்சள் காப்பு கட்டி, பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். அன்றையதினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து, நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.

    19-ந்தேதி மயில் வாகனத்திலும், 23-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 26-ந்தேதி அன்ன வாகனத்திலும் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 28-ந்தேதி பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி தெப்பத்துக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் உமா, உள்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், மோகன், அறங்காலர்கள் கவிதா, ரெங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நாளை மறுநாள் ஹம்ச வாகனத்திலும், 16-ந்தேதி ஹனுமந்தவாகனத்திலும், 17-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும்,18-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 19-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 20-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 21-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 23-ந்தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்ப திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாட்களில் எந்த இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் நாம் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அத்துடன் ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமானையும் விடாது வழிபட்டு வருவோம்.

    எல்லா மாதங்களையும் விட, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அன்றைய தினங்களில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத் தமன்’ என்றழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது.

    அந்த ராமாயணத்தை வீடுகளிலும், ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். இங்ஙனம், ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட் டவர்கள் ஆகியோருக்கு ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.

    பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த விழாக்களில் பிரமோற்சவ திருவிழாவாக சித்திரை திருவிழாவை குறிப்பிடுவார்கள். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா உலகப்புகழ் பெற்றது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    ஆனால் பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மட்டும் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் இல்லாமல் நடத்தப்பட்டது. அதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 23-ந் தேதி திக்விஜயம், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24-ந் தேதியும், 25-ந் தேதி பெரிய தேர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    அதேபோன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை 26-ந் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 27-ந் தேதியும் நடைபெறும். எனவே சித்திரை வருடப்பிறப்பு தொடங்கியதில் இருந்து மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

    திருவிழாவில் முக்கிய நிகழ்வான சாமி வீதி உலா நான்கு மாசி வீதிகளில் காலை, இரவு என இருவேளை நடைபெறும். தற்போது நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு காங்கீரிட் சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவிழாவிற்கு முன்னர் இந்த சாலை பணிகள் நிறைவடையுமா என்பது தற்போது கேள்விகுறியாக உள்ளது. தெற்கு மற்றும் மேலமாசி வீதிகளில் மட்டுமே 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்குமாசி வீதி, கீழமாசி வீதிகளில் 50 சதவீத பணிகள் கூட நிறைவேறாத நிலை இருக்கிறது. எனவே நான்கு மாசி வீதிகளில் 100 சதவீத பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை.

    அவ்வாறு நிறைவடையவிட்டால் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாமி வீதி உலா நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பெரிய தேர் பவனி போன்றவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே திருவிழா நடைபெறுவதற்கு முன்பு சாலை பணிகளை சீரமைத்து இந்தாண்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு விரைந்து செய்ய வேண்டும். இதன் மூலம் சித்திரை திருவிழா இந்தாண்டு முழுமையாக நடைபெறுவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    நாகர்கோவில், நாகராஜா வழிபாட்டு பக்தர்கள் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா காவடி பாதயாத்திரை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    நாகர்கோவில், நாகராஜா வழிபாட்டு பக்தர்கள் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா காவடி பாதயாத்திரை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் அன்று காலை 6 மணிக்கு காவடிக்கு வேல் அபிஷேகம், 7.30 மணிக்கு பஜனை, காவடி கலசத்தில் பன்னீர் நிரப்புதல், 9 மணிக்கு காவடி பாதயாத்திரை புறப்படுதல் போன்றவை நடக்கிறது.

    பாதயாத்திரை அன்று இரவு வேப்பிலாங்குளம் அம்மன் கோவிலில் தங்குகிறது. மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு இட்டமொழி வடபத்திரகாளி அம்மன் கோவிலிலும், 18-ந் தேதி இரவு பரமக்குறிச்சி கருப்பசாமி கோவில் வளாகத்திலும் தங்குகிறது. 19-ந் தேதி திருச்செந்தூர் சென்றடைந்து காலை 8.30 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் காவடி செலுத்துதல், காவடிக்கு அன்னபடைப்பு, மதியம் 2 மணிக்கு இடும்பன் பூஜை, தீபாராதனை போன்றவை நடைபெறும்.
    ×