என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து சான தான தர்ம திட்டத்தின் கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குந்த சதுர்த்தி பூஜை நடந்தது.

    தெலுங்கு மாக மாதத்தில் மல்லிகைப் பூக்கள் மலர தொடங்குகின்றன. மல்லிகைகள் மலர கதிர்வீச்சுகளை உமிழ்ந்து சூரியன் உதவிபுரிகிறார். மல்லிகைப் பூக்கள் மலர்ந்ததும், அதனால் பக்தர்கள் சிவனை ஆராதிக்கிறார்கள். சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

    பக்தர்களும், பொதுமக்களும் சுபிட்சமாக வாழ வேண்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. அதில் பங்ேகற்று வழிபட்டால் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும், கடும் மனோபாவங்கள் தீரும், மோதல்கள் நீங்கி அமைதி நிலவும், தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 300 வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நடத்திய குந்த சதுர்த்தி பூைஜயில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிவன் கோவிலில் வைத்து செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், காப்புகட்டிய பட்டர் சந்தோஷ்குமாரிடம் தாம்பூலம் கொடுத்து நிர்வாக அனுமதி வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.
    பிப்ரவரி 16-ம் நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமி என்பதும் மாதந்தோறும், வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும்.

    பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.

    பூஜை அறையில் விளக்கு ஏற்றி அமமன் பாடல்களை பாராணம் செய்து சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைத்து வணங்குதல் வேண்டும். நமது வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று செம்மை நிற மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடுதல் நல்லது. நெய் விளக்கு ஏற்றுதல், அன்னதானம் செய்தல் போன்ற செயல்பாடுகள் கூடுதல் பலன் தரும்..

    மேலும் வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராசி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

    பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான் . வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம்.

    ஞானம் கிடைக்கும் வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கிறார்கள்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    மாசித்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான 22-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். அன்று இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    9-ம் திருநாளான 23-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    மாசி தெப்ப திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள 5½ ஏக்கர் பரப்பளவு கொண்ட தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தெப்ப குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேவார பதிகங்களை பாடி திருக்கதவு திறக்கும் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்ததாக புராணம் கூறுகிறது. வேதங்கள் பூஜைசெய்து மூடிக்கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக தலவரலாறு கூறுகிறது. பழமை வாய்ந்த சிவன் ேகாவிலான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவின்போது தேவார பதிகங்களை பாடி கோவில் கதவை திறக்கும் உற்சவம் நடைபெறுவது வழககம்.

    இந்த ஆண்டு மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று கோவில் திருக்கதவை தேவார பதிகங்கள் பாடி திறக்கும் உற்சவம் நடந்தது.

    இதை முன்னிட்டு அப்பரும், சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தேவார பதிகங்கள் பாடப்பட்டன.

    வெளிப்பிரகார உலா சாமி சன்னதியில் உள்ள கொடி மரம் முன்பு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து கோவில் திருக்கதவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேவார பதிகங்களை பாடியபடி கதவு திறக்கப்பட்டது.

    அப்பராக ராஜேந்திர ஓதுவாரும், சம்பந்தராக கோவில் ஓதுவார் பரஞ்சோதி ஓதுவாரும் உருவகப்படுத்தப்பட்டு தேவார பதிகங்களை பாடினர். ஓதுவார் முத்துக்குமாரசுவாமி தேசிகர் இந்த நிகழ்வு குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். இதில் யாழ்ப்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, குருகுலம் அறங்காவலர் குழு தலைவர் வேதரத்தினம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.
    பைரவர் வழிபாடு என்பது கால பைரவர் தொடங்கி அஷ்ட பைரவர், அஷ்டாஷ்ட பைரவர் என தொடர்ந்து சொர்ணாகர்ஷன பைரவரில் முடிவது.

    பைரவ உபாசகர் வேம்பு சித்தரின் தியானத்தில் திருக்காட்சி தந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிசநல்லூர், சொர்ணபுரியில் வினை நீக்கும் வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.

    இங்குள்ள சொர்ணாகர்ஷன பைரவர், நினைத்ததை நினைத்தபடி, கேட்டதை கேட்டபடி தரும் கற்பக மரத்தின் அடியில் கங்கா ஜடா முடியில் சந்திர பிறை சூடி நான்கு திருக்கரங்களுடன், அஜாமிளா தேவி எனும் சொர்ண பைரவியை தமதுமேல் திருக்கரத்தால் சற்று அணைத்தவாறு அமர்ந்துள்ளார். இருவரும் புன்னகை தவழும் திருமுகங்களுடன் பத்ர பீடத்தின் மீது உடன் அமர்ந்து அருள் பொழியும் சர்வானந்த கோலாகலராக திகழ்கிறார்கள்.

    சர்வாபரணங்கள் பூண்டு சர்வ அலங்காரங்களோடு குபேர சம்பத்தையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சொர்ணத்தையும், தன, தானியங்களையும் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவர். மிகவும் வரப்பிரசாதி. ஆகவே இவரை வணங்குபவர்கள் தாமும் செல்வந்தராக இருப்பதுடன் மற்றவர்களையும் செல்வந்தராக மாற்றும் இயல்பு கொண்டவராக திகழ்வர்.

    கோவில் அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்). நினைத்ததை நினைத்தபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் பத்ர பீடத்தின் மீது அம்மையும், அப்பனும் சர்வானந்த கோலாகலத்தில் அமர்ந்தபடி சொர்ணகால பைரவர் வலது திருப்பாதத்தை மடித்து இடது திருப்பாதத்தை தாமரை மலரில் பதித்தவாறும், சொர்ண பைரவி அம்மை தம்மிரு திருப்பாதங்களையும் தொங்கவிட்டபடி தாமரை மலரில் பாதத்தை பதித்தவாறு அமர்ந்திருப்பதும் விஷேசமாகும்.

    சொர்ணகால பைரவர் தம் மடியில் பூரண அம்ருத கும்பத்தை வைத்திருப்பது வேண்டுபவர் வேண்டியபடி அனைத்து கோரிக்கையையும் நினைத்தது நினைத்தபடி, கேட்டது கேட்டபடி தந்து அருளுவதோடு நோய் நொடி இல்லாத நிலையையும், சர்வ சித்தியையும் தருவேன் என்பதாகும்.

    சொர்ண கும்பம்

    சொர்ண பைரவி தம் மடியில் ஒரு திருக்கரத்தால் சொர்ண கும்பத்தை பிடித்தபடி மறு திருக்கரத்தால் தன்னை தேடி வரும் அன்பர்களின் தரித்ரிய நிலையை நீக்கி சொர்ணத்தை அள்ளி, அள்ளி வழங்கி சொர்ண சித்தியை தருவேன், குடும்ப ஒற்றுமையை வழங்குவேன், அனைத்து செல்வங்களையும் வாரி, வாரி வழங்குவேன் என்பதாகும்.

    தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் டமருகத்தால் பெரும் ஒலியை எழுப்பி அந்த சப்தத்தில் லயித்து தம்மை திரும்பி பார்க்கும் தன்னடியவர்களை நாக பாசத்தால் பிடித்து இழுத்து அவர்களின் சாப, பாப, தோஷங்களை திரிசூலத்தால் நீக்கி அனைத்து நலன்களையும் நிறைவாய் வழங்கி தகுதி இருந்தால் மோட்சமும் தருவேன் என்பதாகும்.

    குருவின், குபேரனின் திசையான வடக்கே அமர்ந்து இறை சக்தி நிறைந்த ஈசானியத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பது குருவின், குபேரனின் அருளை பரிபூரணமாக வழங்குவதோடு ஈசானியத்தில் நிறைந்த இறை சக்தியை வருபவர் எளிதாக பெறும்படி அமைக்கப் பட்டுள்ளது மிகவும் சிறப்பானது.

    சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.

    இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.

    வழிபட வேண்டிய நாட்கள்

    திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.

    அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

    இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

    சிறப்பு மூலிகைகளை கொண்டு ஹோமம்

    இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் காலை வேளையில் கால பைரவர், அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி தரும் சிறப்பான மூலிகைகளை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் கலந்து கலந்து கொண்டு குருவருளையும், இறைப்பேரருளையும் பெற்றுச்செல்லலாம்.
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

    விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
    “சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
    சைவத்தின் மாமந்திரம் “நமசிவாய” எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த “மா மந்திரம்” திருவைந்தெழுத்து, மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

    சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
     
    இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில்

    ‘ந’ என்பது திரோதாண சக்தியையும்,
    ‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
    ‘சி’ என்பது சிவத்தையும்,
    ‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
    ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

    இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

    மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

    “சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
     
    சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள்.

    ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும்,
    ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும்.
    ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும்,
    ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும்,
    ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

    சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம்.

    ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே.

    முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

    எப்போது ஓதலாம்?

    எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதர்மம் நடைபெற்று வருகிறது.

    அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமான நாள் ஆகும். அந்த வகையில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    முன்னதாக காலை 6 மணி அளவில் உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
    அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    நேற்று முன்தினம் நடந்த முதல் திருவிருந்து திருப்பலிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் 18 சிறுவர்களுக்கு முதல் திருவிருந்து கொடுக்கப்பட்டது.

    நேற்று தேர்பவனி நடந்தது. இதையொட்டி காலை திருவிழா சிறப்பு திருப்பலிக்கு அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கொடி இறக்கம் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தைகள் ராபர்ட் ஜான் கென்னடி, அருள் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ராபர்ட் ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை அருள் ஜெகதீஷ், துணைத்தலைவர் கிரகோரி, செயலாளர் சுபா பொருளாளர் ராஜேஷ் மோன், துணைச் செயலாளர் ஸ்டாலின் சேகர் மற்றும் பங்குப்பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து இருந்தனர்.
    ×