என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் 4 நாட்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதித்து சாம்ராஜ்நகர் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
    சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மாதேஸ்வரன் மலையில் உள்ளது மலை மாதேஸ்வரா கோவில். பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானாவில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி 4 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மலை மாதேஸ்வரா கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கோவில் நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிவராத்திரியையொட்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் கார்த்திகாயினி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

    மலை மாதேஸ்வரா கோவிலில் நாளை(அதாவது இன்று) முதல் 4 நாட்களுக்கு சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் அண்டை மாநில பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து இங்கு பக்தர்கள் வரும் போது, சாம்ராஜ்நகரில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை(இன்று) முதல் 4 நாட்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க சோதனை சாவடிகளும் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகா சிவராத்திரியையொட்டி நாளை (வியாழக்கிழமை) திருச்சி கோவில்களில் 4 கால சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளது.
    அபிஷேக பிரியரான சிவனுக்கு உகந்தது மகா சிவராத்திரி. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து சிவனை வழிபட்டால் இப்பிறவியில் நோய் நொடியற்ற வாழ்வதுடன் இறுதியில் முக்தியை அடையலாம் என்பது ஐதீகமாகும்.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியாகும். மகாசிவராத்திரியையொட்டி திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நாளை இரவு 9 மணிக்கு சிவனுக்கு திரவிய சுத்தி பூஜையும், அபிஷேகமும் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முதல் காலம், 12 மணிக்கு இரண்டாம் காலம், 2½ மணிக்கு மூன்றாம் காலம், 4 மணிக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் மட்டுமே சுவாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது‌.

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், 12 மணிக்கு இரண்டாம் காலம், 2 மணிக்கு மூன்றாம் காலம், 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் சிவராத்திரியையொட்டி வேடன் ஐதீகம் நிகழ்ச்சி முடிவுற்ற உடன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

    திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் நாளை இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் பழச்சாறு என 16 வகையான அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.
    மனத்தாழ்யை அணிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5) பெருமையுடைய வன் எனக்கு எல்லாம் தெரியும். ஒருவரும் என்க்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம்,எரிச்சல், பேராசை, பொறமை என்ற துர்குணங்கள் தோன்றும். நா செய்வது எரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைபோல் காணப்படும். ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்தி பெருமை கொண்ட போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்து போனான். பெருமைஹயுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தாழ்மை என்பது ஓ இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும், நிந்திக்கப்படும்போதும், துண்பறுத்தப்படும் போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும்கிருபையும் அளிக்கிறார்.

    தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை, தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்க செய்கிறார்.

    இதே போல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாகிக்கிறோம்.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த கவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களைய் காணப்படதேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென்.

    சகோ.அல்போன்ஸ், பல்லடம்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவிலில் லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் மூலவராக அருள்பாலிக்கிறார்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

    அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.

    அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

    காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

    அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

    பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
    மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில், மாசி களரி திருவிழாவையொட்டி அலங்காநல்லூரை அடுத்த வலசை கம்மாளபட்டியை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடினர்.
    மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில், மாசி களரி திருவிழாவையொட்டி அலங்காநல்லூரை அடுத்த வலசை கம்மாளபட்டியை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடினர்.

    தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் பொருசுப்பட்டி வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அழகு நாச்சியம்மன், பாரி கருப்பசாமி உள்பட 21 தெய்வங்களுக்கு திருவிழாவில் பூஜைகள் நடந்தன. இதில் கடந்த 5 நாட்களாக கோவில் முன்பாக பூசாரிகள் சலங்கை கட்டி சாமி ஆடினர்.

    நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், சாமி ஆட்டம் நடைபெறும்.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முன்னதாக நான்கு கால பூஜை நடக்கிறது.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் எண்ணற்ற  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.

    இந்த கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முன்னதாக நான்கு கால பூஜை நடக்கிறது.
    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    தென் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பரணி தூக்க திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் திருவிழா கோவிலுக்கு கொடிமரம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மூலக்கோவிலிருந்து அம்மன் எழுந்தருளி புறக்கால் கிணறு வலம் வந்து பூஜைகளுக்கு பிறகு திரும்ப கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் மாலை 5 மணியளவில் மேளதாளம் முழங்க அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக கோவிலை வந்தடைந்தது. இரவில் வாணவேடிக்கை முழங்க பெண்கள் குலவையிட கோவில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணைத் தலைவர் பிரேம்குமார், துணைச் செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ணகுமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது.

    அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு தங்க அங்கி சாத்தி முதல் கால பூஜை நடக்கிறது. இதுபோன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4 கால பூஜையும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது.

    சிவராத்திரியையொட்டி அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்படும். 12 சிவாலயங்களில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாசித்திருவிழாவையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வெள்ளம் அலை மோதியது.

    விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.

    மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டு வரப்பட்டது. இரண்டு குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

    அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிவப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளைத் துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நடந்து கொண்டிருக்கும்போது கொடி மரத்தில் உள்ள கொடி இறக்கப்பட்டது.

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
    ஓம் வெங்கட நாதாய வித்மஹே
    ஸச் சித்தானந்தாய தீமஹி
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பக்தர்கள் 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.

    இன்று மதியம் முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு, பள்ளியாடி ஆகிய 12 சிவாலயங்களில் வழிபட்டு இரவு தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட்டு சிவராத்திரி புனித பயணம் நிறைவு செய்கிறார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கோபாலா.. கோவிந்தா.. என்ற சரண கோஷம் எழுப்பி கையில் பனை ஓலை விசிறியுடன் 110 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்குவார்கள். மேலும், பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் நிர்வாக தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில், தர்காவில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவா ஓதுகிறார்கள். பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து அதன் முன்பக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மக்களும் கலந்து கொள்வார்கள். இதற்கு கலீல்ரகுமான், முகமது முஸ்தபா, முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களால் நேர்ச்சை வழங்கப்படுகிறது.

    இரவு 8.30 மணிக்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில் மார்க்க பேருரை நடக்கிறது. முகமது ஹனிபா அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குளச்சல், செய்யது மிர்காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறுகிறார்.

    விழாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றுக் என்ற நேர்ச்சை வழங்குதல், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகமது ரபீக் ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    ×