என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடந்துவரும் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச, ராவணாசூர வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. பறவைகளில் மென்மையானது அன்னப்பறவை என்னும் ஹம்சம். தெய்வங்கள் நமக்கு அறிவையும், மன தூய்மையையும், பகுத்தறிந்து தெளியும் திறத்தையும் அருள்வதை குறிக்கும் வகையில் நாம் வணங்கும் தெய்வங்களை அன்ன வாகனத்தில் அமர்த்தி பவனி வரச் செய்கின்றனர். அன்னப்பறவை வெண்மை நிறம் கொண்டது. அன்ன வாகனத்தில் பவனி வரும் தெய்வங்களை வழிபடுவதால் அறிவில் தெளிவும், புத்தியில் கூர்மையும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது. பக்தர்களாகிய நம்மிடம் உள்ள தேவையற்ற தீமைகள், வீண் எண்ணங்கள், தீய செயல்களை ஒழித்து நல்வழிபடுத்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். யாளி கொடிய விலங்கு. அதன் உடல் சிங்கத்தைப் போன்றது. மிரட்டும் பார்வை கொண்ட கண்களை உடையது. யாளிகள் யானைகளை கொன்று தின்பவை. அடர்ந்த காட்டில் வாழ்பவை. யாளிகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டாலும், கலை உலகில் நீங்கா இடம் பிடித்த விட்ட விலங்கு ஆகும். கோவில், மண்டபம் ஆகியவற்றில் சிற்பங்களாக யாளிகளை காண்கிறோம். யாளிகள் முன்காலை தூக்கி தாவி பாயும் நிலையிலேயே காணப்படும். கால்களில் கூரிய நகங்கள் உண்டு. சிங்கத்தின் முகமும், யானை முகமும் சேர்ந்த ஒரு கலவையாக உள்ளது. துதிக்கை நீண்டு காணப்படுகிறது. தமிழில் ஆளி என்பது வடமொழியில் திரிந்து யாளி என அழைக்கப்படுகிறது. ஆளி என்ற சொல் விலங்கையும், நாட்டை ஆளும் அரசனையும் குறிக்கிறது. சிவன், அம்பாள் யாளி மீது அமர்த்தி பவனி வரும் விழாவை காண்பவர் அரசனைபோல் நாடாளுவார்கள். அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமை பெறுவர் என்பதை உணர்த்தவே உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார். ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். நான்கு வேதங்களை கற்றவன். இலங்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன். மூவுலகத்தையும் வென்று தனியாட்சி செய்தவன். எல்லையில்லா வரங்களை பெற்றவன். தன் பெருமைக்கேற்ப 10 தலைகளையும், 20 கைகளையும் பெற்று வாழ்ந்தவன். அரிய தவத்தைப் பெற்றவன். ராவணன் கேவலம் மிருக பலம் மட்டும் பொருந்தியவன் அல்ல, ஆன்ம வலிமையும் நிரம்பி பெற்றவன். மிகச் சிறந்த சிவ பக்தனாக திகழ்ந்த அவனை பக்தர்களாகிய நாமும் போற்ற வேண்டும் என்பவதற்காக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ராவணாசூர வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். அம்பிகை மயில் வடிவம் கொண்டு சிவனை வழிபட்டவர். சப்த மாதர்களில் கவுமாரியின் திருக்கோலத்தில் அம்பிகை அருள்கிறாள். மயில் உள்ள இடத்தில் பாம்பு, பல்லி, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் வராது. எனவே நமது மனதில் உள்ள காமம், கோபம், மோகம், பொறாமை, சந்தேகம் என்னும் விஷம், மயில் வாகனத்தில் உலாவரும் அம்பாளை வழிபட்டால் பறந்து ஓடிவிடும் என்பதை உணர்த்தவே ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    மகா சிவராத்திரி விழா நாளை( 11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. நாளை இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.
    இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந்தேதி இரவு கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 11-ந்தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் மீனாட்சி அம்மனுக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10 மணி தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால அபிஷேகம் 11 மணி முதல் 11.45 வரையிலும், 3-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 4-வது காலம் 1 மணி முதல் 1.45 மணி வரையிலும் நடைபெறுகிறது.

    மேலும் சுந்தரேசுவரர் சாமிக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10.45 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-வது காலம் 11.45 மணி முதல் 12.45 வரையிலும், 3-வது காலம் 1 மணியில் இருந்து 1.45 மணி வரையிலும், 4-வது காலம் 2 மணி முதல் 2.45 மணி வரையிலும் நடைபெறுகிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நாளை காலை 9.30 மணிக்கு மேல் சிறப்பு யாக சாலை பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு சாமிக்கு முதல் கால பூஜையில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களுடன் இரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 2 மணிக்கு 3 கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.

    கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் சாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் அபிஷேக நேரத்தில் அமர்ந்து தரிசனம் செய்யும் முறை (அமர்வு தரிசனம்) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசிவீதி தென்திருவாலவாய கோவில் ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரி விழா விடிய, விடிய நடைபெறுகிறது.

    உத்தங்குடி நாகர் கோவில், ஆத்திக்குளம் கணபதி கோவில், ஆவின் பால விநாயகர் கோவில், பீ.பி.குளம் முத்துமாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவில் ஆகிய கோவில்களில் உள்ள சிவ சன்னதியிலும் 4 கால பூஜைகள் நடைபெறும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கருவறையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சன்னதியில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது. இதேபோல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில்களிலும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. திருநகர் அண்ணா பூங்கா வளாகம் சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், திருப்பரங்குன்றம் பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கும் பூஜைகள் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் இரவு 10 மணிக்கு மேல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 4 கட்டமாக சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடக்கிறது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

    மேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் மற்றும் திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலூர் சிவன்கோவிலில் நாளை இரவு 9.30 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் தட்சிணாமூர்த்தி பட்டர் தலைமையில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்து திருவாசகம் மற்றும் சிவபுராணம் படித்து வழிபடுவார்கள். திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் ஆகும். இங்குள்ள மிக பழமையான திருமறைநாதர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் இரவு 9 மணி, இரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாதசுவாமி கோவிலில் 4 கால அபிஷேகம், பூஜைகள் விடிய விடிய நடைபெறுகிறது. திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாத சாமி கோவிலிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடைபெறுகிறது.

    திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நாளை 6 மணிக்கு யாக சாலை பூஜையுடன் மகா சிவராத்திரி திருவிழா துவங்கும். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணி முதல் கால பூஜை நடைபெறும். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து மீனாட்சி சொக்கநாதர்-அம்மனை தரிசிக்க கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    திருமங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தில் உள்ள பாலாறு அய்யன் கோவிலில் இரவு 11 மணி அளவில் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பயறு வகைகள் கொண்டுவந்து அவித்து அதனை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவர். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவு இடித்தும் பிரசாதம் வழங்கப்பட்டு, விடிய, விடிய விழித்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    உசிலம்பட்டியில் உள்ள திடியன் கைலாசநாதர் கோவில், ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நாளை மாலை 6 மணி, 9 மணி, 12 மணி, 3 மணி என 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சிவராத்திரி விழா விடிய, விடிய நடைபெறுகிறது.
    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 16-ந் தேதி அம்மை அழைப்பு, மாலையில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    17-ந் தேதி காலை 9 மணிக்கு குறிச்சி பஸ்நிறுத்தம் கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வ லமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்த டைகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறு கிறது. 18-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 19-ந் தேதி மறுபூஜையுடன் மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது.
    ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அநத வகையில் திங்கள் கிழமை வரும் பிரதோஷம் அன்று விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் ஆகும். இத்தகைய செல்வம் அனைத்தும், ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள் , மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு, துன்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன. இதை பிரதோஷ வழிபாட்டால் சரி செய்ய முடியும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.

    சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள், திங்கட்கிழமை. இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சந்திர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன் - கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண், மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மன சஞ்சலம், மன அழுத்தம், மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் பலன்பெற பச்சரிசி உணவை தானம் செய்ய வேண்டும்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ர காளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் தூக்க திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு தூக்கத்திருவிழா தொடக்க‌ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் சதாசிவன் நாயர் தலைமை தாங்குகிறார். கோவில் செயலாளர் மோகன்குமார் வரவேற்று பேசுகிறார். திருவனந்தபுரம் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஸ்வப்பிரபானந்தா குத்துவிளக்கு ஏற்றி தொடக்க உரையாற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் தலைமை செயலாளர் ராமச்சந்திரன் நாயர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, சென்சார் போர்டு உறுப்பினர் தர்மராஜ், கேரள சட்டமன்ற செயலாளர் உண்ணி கிருஷ்ணன் நாயர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், சோபன சங்கீத பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

    விழாவில் 3-ம் நாளில் காலை 8 மணி முதல் தூக்கக்காரர்களின் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது. தொடர்ந்து தூக்க காரர்களுக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்கள் குளித்துவிட்டு ஊர்வலமாக பிரதான கோவிலுக்கு சென்று விநாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு திருவிழா கோவிலுக்கு வந்து நமஸ்காரம் செய்கின்றனர்.

    8-ம் நாள் திருவிழாவில் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. திருவிழாவின் 9-ம் நாளன்று மாலை 6 மணிக்கு தூக்கத்தேர் வெள்ளோட்டம் (வண்டியோட்டம்) நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளில் அதிகாலை 4 மணிக்கு தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்கின்றனர்.

    இதனைதொடர்ந்து அம்மன் கோவிலினுள் இருந்து எழுந்தருளி பச்சை பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பக்தி பரவசமூட்டும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை தொடங்கி நடக்கிறது. தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்பணம் நடத்தி விழா முடிவடைகிறது.

    கொரோனா காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதாவது, கோவில் வளாகத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கோவில் வளாகத்திற்குள் கூட்டமாக நிற்க கூடாது, கோவிலில் தரிசனம் முடித்த உடன் கோவிலை விட்டு வெளியேற வேண்டும், கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை கட்டாயம், குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தும் தூக்கக்காரர்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றும் தூக்கக்காரர்கள் யாரும் வெளி நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும், தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தூக்கக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தூக்க நேர்ச்சை நடத்த முடியாமல் பதிவு செய்திருந்தவர்களுக்கு தூக்க நாளில் நடையில் நிறுத்தி நேர்ச்சை நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம் குமார், துணை செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ண குமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி,, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு சந்திர பிரபை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
    காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விழா தடைபட்டது.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    முன்னதாக பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து கோவில் வாசலில் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19-ந் தேதி கொடியேற்றமும், 27-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி அம்மையார் ஐக்கிய விழாவும் 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    அவளிவநல்லூர் சாட்சிநாதரை வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர்.
    அவளிவநல்லூர் கும்பகோணத்திலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.

    இத்தல இறைவன் சாட்சிநாதர் என்றும் அம்மை சௌந்தர்யவல்லி என்று அழைப்படுகின்றனர். இத்தலம் காலை (காலை 8.30 முதல் 9.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் பாதிரி வனம் ஆகும். இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகளான சுசீலை அம்மைநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்திருந்தாள். தலயாத்திரிரை சென்று திரும்பிய சுசீலையின் கணவன் அர்ச்சகரின் இளைய மகளை தன் மனைவி என்றான்.

    அர்ச்சகரின் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன் அம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி சுசீலையை அவள்தான் இவள் என்று சுசீலையை அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுசீலையும் இறைவனின் ஆணைப்படி திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகும் திரும்பப் பெற்றாள்.

    இத்தல இறைவனை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும்.
    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.

    வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ‘‘இரசை’’ என்று பெயரிட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ‘‘இரசை’’ நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.

    பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.

    அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.

    சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    கலைநயம் மிகுந்த சிலைகள்

    நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

    கோவில் நடை திறப்பு

    நத்தம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் அதிகார நந்தி வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை திருச்சி உற்சவம் நடந் தது. அதில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு அதிகார நந்தி வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் தீ மிதிக்கும் ஆண் பக்தர்களும், பூவாரி போட்டுக்கொள்ளும் பெண் பக்தர்களும் காப்புக்கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். வருகிற 14-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், 21-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா 22-ந் தேதி நடக்கிறது. 23-ந் தேதி கிடா வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும், 24-ந் தேதி காலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் குண்டம் 62 அடி நீளமுள்ளது என்பதும், தமிழகத்திலேயே இந்த குண்டம் தான் அதிக நீளம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.
    இயேசு தனது ஆன்மிக வாழ்வைத் தொடங்கும்முன் அவரது 30-வது வயதில் யோர்தான் நதியில் யோவானிடம் ஞானஸ்தானம் பெறுகிறார். அதன் பின்னர் கடவுளுடைய சக்தி அவரை யூதேயா பாலைவனத்துக்கு வழிநடத்திச் செல்கிறது. பாலைநிலத்தில் இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிகிறார். அந்த 40 நாட்களும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. 40-ம் நாள் முடிவில் பசி அவரை வாட்டியெடுத்தது. 40 நாட்கள் தவத்தின் இறுதிக் கட்டத்திலாவது அவரைத் தோல்வி அடையச் செய்வதற்காக சோதனைக்காரனாகிய சாத்தான் அங்கே வருகிறான். அப்போது இயேசுவிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். அதற்கு இயேசு, உணவால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனிதன் உயிர் வாழ்வான் என எழுதப்பட்டிருக்கிறதே என்று பதில் கூறினார்.

    சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.

    இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.

    சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர் களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங் களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

    ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.

    அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.

    இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளில்இருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.

    சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.
    ×