என் மலர்

  ஆன்மிகம்

  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.
  X
  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

  பிரம்மோற்சவ விழா: ஹம்ச, ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வீதிஉலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடந்துவரும் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச, ராவணாசூர வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. பறவைகளில் மென்மையானது அன்னப்பறவை என்னும் ஹம்சம். தெய்வங்கள் நமக்கு அறிவையும், மன தூய்மையையும், பகுத்தறிந்து தெளியும் திறத்தையும் அருள்வதை குறிக்கும் வகையில் நாம் வணங்கும் தெய்வங்களை அன்ன வாகனத்தில் அமர்த்தி பவனி வரச் செய்கின்றனர். அன்னப்பறவை வெண்மை நிறம் கொண்டது. அன்ன வாகனத்தில் பவனி வரும் தெய்வங்களை வழிபடுவதால் அறிவில் தெளிவும், புத்தியில் கூர்மையும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது. பக்தர்களாகிய நம்மிடம் உள்ள தேவையற்ற தீமைகள், வீண் எண்ணங்கள், தீய செயல்களை ஒழித்து நல்வழிபடுத்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். யாளி கொடிய விலங்கு. அதன் உடல் சிங்கத்தைப் போன்றது. மிரட்டும் பார்வை கொண்ட கண்களை உடையது. யாளிகள் யானைகளை கொன்று தின்பவை. அடர்ந்த காட்டில் வாழ்பவை. யாளிகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டாலும், கலை உலகில் நீங்கா இடம் பிடித்த விட்ட விலங்கு ஆகும். கோவில், மண்டபம் ஆகியவற்றில் சிற்பங்களாக யாளிகளை காண்கிறோம். யாளிகள் முன்காலை தூக்கி தாவி பாயும் நிலையிலேயே காணப்படும். கால்களில் கூரிய நகங்கள் உண்டு. சிங்கத்தின் முகமும், யானை முகமும் சேர்ந்த ஒரு கலவையாக உள்ளது. துதிக்கை நீண்டு காணப்படுகிறது. தமிழில் ஆளி என்பது வடமொழியில் திரிந்து யாளி என அழைக்கப்படுகிறது. ஆளி என்ற சொல் விலங்கையும், நாட்டை ஆளும் அரசனையும் குறிக்கிறது. சிவன், அம்பாள் யாளி மீது அமர்த்தி பவனி வரும் விழாவை காண்பவர் அரசனைபோல் நாடாளுவார்கள். அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமை பெறுவர் என்பதை உணர்த்தவே உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார். ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். நான்கு வேதங்களை கற்றவன். இலங்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன். மூவுலகத்தையும் வென்று தனியாட்சி செய்தவன். எல்லையில்லா வரங்களை பெற்றவன். தன் பெருமைக்கேற்ப 10 தலைகளையும், 20 கைகளையும் பெற்று வாழ்ந்தவன். அரிய தவத்தைப் பெற்றவன். ராவணன் கேவலம் மிருக பலம் மட்டும் பொருந்தியவன் அல்ல, ஆன்ம வலிமையும் நிரம்பி பெற்றவன். மிகச் சிறந்த சிவ பக்தனாக திகழ்ந்த அவனை பக்தர்களாகிய நாமும் போற்ற வேண்டும் என்பவதற்காக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ராவணாசூர வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். அம்பிகை மயில் வடிவம் கொண்டு சிவனை வழிபட்டவர். சப்த மாதர்களில் கவுமாரியின் திருக்கோலத்தில் அம்பிகை அருள்கிறாள். மயில் உள்ள இடத்தில் பாம்பு, பல்லி, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் வராது. எனவே நமது மனதில் உள்ள காமம், கோபம், மோகம், பொறாமை, சந்தேகம் என்னும் விஷம், மயில் வாகனத்தில் உலாவரும் அம்பாளை வழிபட்டால் பறந்து ஓடிவிடும் என்பதை உணர்த்தவே ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
  Next Story
  ×