என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.
    புனித ரமலானுக்கு ‘ரபீஉல் முஃமினீன்’- ‘இறைவிசுவாசிகளின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.

    ஏனெனில், புனித ரமலான் வந்துவிட்டால், முஸ்லிம்களின் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறந்து விடுகின்றது. நோன்பு வைப்பது, இறைவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படுகிறது.

    இதற்கு காரணம், புனித ரமலான் வந்துவிட்டால், சுவனம் அலங்காரம் செய்யப்படுகிறது; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; மேலும் வானத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. சுவனத்தின் வசந்தம் வானத்தின் வழியாக இவ்வையகத்திற்கு வந்து சேரும் மாதம் புனித ரமலான் மாதம் என்கிறது இந்த நபி மொழிகள்:

    ‘ரமலான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. 1) நோன்பு திறக்கும் நேரம்; 2) தமது இறைவனை காணும் நேரம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    உண்மையான வசந்தகாலம் பரிசாகத் தரக்கூடிய எல்லாவிதமான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், இதமான சந்தோஷங்களையும் புனித ரமலான் இறைவிசுவாசிகளுக்கு கொடையாக அளிக்கிறது. உண்மையான விசுவாசிகளுக்கு ரமலான் மாதமும் ஒரு வசந்தகாலம் தான்.

    ‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி)

    ‘சொர்க்கத்தில் எட்டுவாசல் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசலும் உண்டு. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி)

    ‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் ஒவ்வொன்றில் இருந்தும் ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்தது; இதன் வழியாகப் பிரவேசியுங்கள்’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளி ‘தொழுகை வாசலிலிருந்தும், அறப்போர் புரிபவர் ‘ஜிஹாத்’ வாசலிலிருந்தும், தர்மம் செய்பவர் ‘ஸதகா’ வாசலிலிருந்தும், நோன்பாளி ‘ரய்யான்’ வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துன்பம் ஏதும் இருக்காது; அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    நாமும் ரமலான் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி சொர்க்கத்தை பரிசாகப் பெறுவோம், ஆமின்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    நேற்று முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோவில் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
    பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக தினமும் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    நேற்று முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோவில் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடக்கும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டு, தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத வழிபாட்டு தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முழு ஊரடங்கு நாளில் இருந்து அமல்படுத்திட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள கோவில்கள் நேற்று முதல் மூடப்பட்டன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நேற்று அதிகாலை முதல் நடை சாத்தப்பட்டு, தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதேபோல் சீர்காழி சட்டைநாதர் கோவில், நாங்கூர் பகுதியில் அமைந்துள்ள வைணவ திவ்யதேச கோவில்கள், திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில், மங்கைமடம் யோகநாதர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில், திருப்புங்கூர் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று முதல் மூடப்பட்டன.
    தற்போதுள்ள கேதார்நாத் கோவில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    மூலவர்:கேதாரீஸ்வரர்
    அம்மன்/தாயார்:கேதார கவுரி
    தீர்த்தம்:உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
    ஊர்:கேதார்நாத்

    பொது தகவல்:

    பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். யாத்திரைக்கு ஏற்ற காலம்: இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

    கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக்காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம்.

    இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம். முன்பு கேதாரநாதம் நமது நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வடகோடி இமயமலையில் இருந்த நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம். தற்போது புதிய உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.

    தலபெருமை:

    சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.

    அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.

    இமயமலை – கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்கின்றனர்.

    இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும்போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.

    ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.

    இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

    பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    தல வரலாறு:

    மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர்.

    பின்னர் இளைப்பாறும்போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார்.

    ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார். பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார்.

    பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சுவர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.

    திறக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

    முகவரி:

    கேதாரீஸ்வரர் திருக்கோயில் நந்ததேவி மலை,
    கேதார்நாத்,
    கவுரி குண்ட் – 246476.
    ருத்ரப்ரயாக் மாவட்டம்,
    உத்ரகாண்ட் மாநிலம்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சட்ட தேரோட்டம் நடந்தது. சட்டத்தேரை இழுக்க பக்தர்கள் யாரும் இல்லாததால் கோவில் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆடி வீதிகளில் தேர்களை இழுத்து வந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக உள்திருவிழாவாக பக்தர்கள் யாருமின்றி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நடந்தது.

    விழாவில் 11-ம் நாள் தேர் திருவிழா நடைபெறும். அதனை காண மாசி வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த நிலையில் தான் மீண்டும் கொரோனா காரணமாக திருவிழாக்கள் கோவிலுக்குள்ளே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய தேர் திருவிழா நடைபெறாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதே போன்று பெரிய அளவில் தேர் திருவிழாவை ஆடி வீதியில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி புதிய சட்டத்தேர் செய்வதற்கான பணிகள் கடந்த 10 நாட்களாக புதுமண்டபத்தில் நடந்து வந்தன. அந்த பணிகள் முடிந்து தேர் திருவிழாவிற்கு தயாரானது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் புதிய தேரில் எழுந்தருளினார்கள். பின்னர் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சட்டத்தேரை இழுக்க பக்தர்கள் யாரும் இல்லாததால் கோவில் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆடி வீதிகளில் தேர்களை இழுத்து வந்தனர்.

    அவர்கள் பக்தர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பி உற்சாக தேர்களை இழுத்து நிலையை வந்து சேர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேற்று கொரோனா முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால் பக்தர்கள் யாரையும் சித்திரை வீதிகளில் போலீசார் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அதை மீறி வந்த பக்தர்களையும் போலீசார் அங்கிருந்த விரட்டினர்.

    விழாவில் இரவு தேர் தடம் பார்க்கும் நிகழ்வில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சப்தவர்ண சப்பரத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    அதை தொடர்ந்து சித்திரை திருவிழாவில் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கோவில் பொற்றாமரைக்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    22 ஆண்டுகளுக்குப் பிறகு 29-ந்தேதி நடக்கும் வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டது. அந்த யாகசாலை பூஜைகளை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ந்தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. முன்னதாக காலை ஆதிவாரம், யாகசாலை தான்யம் வைத்தல், பரிவார கலா கர்‌ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து ருத்ராபிஷேகம், கடஸ்தாபனம், ருத்ரஹோமம் நடந்தது.

    பின்னர் மாலை ஆச்சாரியார்கள் ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்‌ஷனம் கடங்கள் யாகசாலை பிரவேசம் நடந்து முதல்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடந்தது.

    147 யாககுண்டங்களிலும் 108 வகையான வேதிகை, மூலிகை, நறுமன திரவிய பொருட்களை இட்டு சிவாச் சாரியர்கள் மந்திரங்கள் முழங்கி பூர்ணாஹூதி செய்விக்கப்பட்டு அனைத்து யாக சாலைகளிலும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.

    அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ் வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகளும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.
     26-4-2021 சித்ரா பவுர்ணமி

    சூரியன் உச்சம் பெறும் மாதமாக, சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமதியாக பலம்பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சந்திரனும், சூரியனும் பலம் பெரும் மாதம் என்பதால், சித்திரை மாத பவுர்ணமி வழிபாட்டுக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நாளில் மலை வலம் வருவதும், முருகப்பெருமானை வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.

    எமதர்மனின் கணக்காளராக இருந்து, உலக உயிர்கள் அனைத்தின் பாவ - புண்ணிய கணக்குகளை பாரபட்சமின்றி எழுதும் பணியைச் செய்பவர், சித்ரகுப்தன். இவர் அவதரித்த நாளாகவும், சித்ரா பவுர்ணமியை புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயர் வந்தது.

    ‘சித்’ என்பது ‘மனம்’ என்பதையும், ‘குப்த’ என்பது ‘மறைவு’ என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களையும் கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.

    சித்ரா பவுர்ணமி அன்று இல்லத்தில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சித்ரகுப்தன் உருவ படத்தை, தெற்கு திசையில் வைத்து, அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்திற்கு சந்தன- குங்குமம் வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசியுடன் வெல்லம் கலந்த இனிப்பு, கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்துமுக குத்துவிளக்கு ஏற்றி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலக வேண்டும் என்று, சித்ர குப்தனுக்கு தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். அதோடு அன்றைய தினம் அம்பாளுக்கு, தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும்.

    சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வசந்தோற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால் தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால் தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம் நடந்தது. இரவு 7 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வசந்தோற்சவத்தில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். வசந்தோற்சவத்தின் 2-வது நாளையொட்டி நடக்கயிருந்த தங்கத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. வசந்தோற்சவம் கொரோனா வழிகாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.
    பொள்ளாச்சி அருகே கோபால்சாமி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை அடுத்த கோபால்சாமி மலை உச்சியில் நந்தகோபாலசாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதற்கிடையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் உள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் தடையை மீறி செல்வதை தடுக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். கோவில் பூசாரியுடன் சிலர் மட்டும் பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அங்கு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் அரசின் உத்தரவின்படியும், வனத்துறை அறிவுறுத்தலின்படி மலைக் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. சாமிக்கு நித்தியபடி பூஜைகள் மட்டும் நடைபெறும்.

    பக்தர்கள் அரசின் மறு உத்தரவு வரும் வரை கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் இருப்பதால் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோவில் நடைபெறும் பூஜைகளுக்கும், கோவிலை சுத்தம் செய்தவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
    நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.
    பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும்தான். அவற்றுள் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.

    நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ர குப்தனை வழிபட்டு கொண்டாடும் விழாவாக இந்தப் பவுர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் மாற்ற சித்ர குப்தன் வழிபாட்டை, சித்ரா பவுர்ணமியில் செய்ய வேண்டும்.

    மாதங்களில் முதல் மாதமாக வருவது, சித்திரை. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகின்றார். நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள்தான், சித்ரா பவுர்ணமி. அப்படிப்பட்ட தித்திக்கும் திருநாள் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2021) திங்கட்கிழமை அன்று வருகின்றது. இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

    சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையிலும் தனிச் சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள், இல்லத்திலேயே விரதமிருந்து சித்ர குப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்தச் சித்ரா பவுர்ணமி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

    பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதான்யம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று எழுதி வைப்பர். சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு, தட்டைப்பயிறு-மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும் வைக்க வேண்டும்.

    விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும். எந்தக் கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும். இந்த வருட சித்ரா பவுர்ணமி திங்கட்கிழமை வருகின்றது. மனதுகாரகன் சந்திரனுக்குரிய நாளில், சந்திரன் முழுமையடைந்து பிரகாசிக்கும் இந்த தினத்தில் சந்திரனை வழிபாடு செய்வதன் மூலம் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். சித்ரா பவுர்ணமி விரதத்தின் மூலம் திருமண யோகமும் கிட்டும். தித்திப்பான வாழ்க்கையும் அமையும். அன்று மலைவலம் வருவதன் மூலம் மகத்தான பலன் பெறலாம்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக அம்பாள் சன்னதியில் 1,008 சங்காபிஷேகம், சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்து வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் வருசாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக அம்பாள் சன்னதியில் 1,008 சங்காபிஷேகம், சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்து வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள், நெல்லை கோவிந்தா், ஆறுமுக நயினார், குபேரலிங்கம் உள்பட பல்வேறு சன்னதி கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், ஆறுமுக நயினார், மூல மகாலிங்கம் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விமானங்களுக்கு வருசாபிஷேகமும் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி- அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
    குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2-வது முறையாக தேராட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் மூலமாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதையொட்டி 10-ம் திருநாளான நேற்று நடைபெற இருந்த ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2-வது முறையாக தேராட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×