என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சித்ரா பவுர்ணமியையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்பவுர்ணமி அன்று சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ராபவுர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதன் பிறகு அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது.

    காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வருதல், 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    கொரானா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்து வருகிறார்.
    ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி திண்டுக்கல்லில் கோவில் வாசலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
    தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதில் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    எனினும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. ஆனால், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் வந்து விடாமல் தடுக்க நுழைவுவாயில் பூட்டப்பட்டது.

    இதற்கிடையே நேற்று சித்திரை மாத பவுர்ணமி தினம் ஆகும். இந்த பவுர்ணமி நாளில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இதில் திண்டுக்கல் நகரை பொறுத்தவரை அபிராமி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், வெள்ளைவிநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள்.

    அதிலும் பவுர்ணமி நாளில் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நேற்று கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்படாத நிலையிலும் பக்தர்கள் வழிபாட்டை நிறுத்தவில்லை. மேலும் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டி கிடந்த கோவில் வாசலில் கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

    இதேபோல் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன.

    இந்்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் வழக்கமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

    தீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பு தேங்காய் உடைத்து, வாழைப்பழம், பொரி, கடலை உள்ளிட்டவற்றை படைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    பழனி ரணகாளியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
    மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் யாருமின்றி மிக எளிமையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜபெருமாள், மனோரஞ்சித மாலை அலங்காரத்தில் காட்சி தந்தார்.
    மதுரை அழகர்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கொரோனா காரணமாக கோவிலின் உள்வளாகத்திலே அரசு வழிகாட்டுதல்படி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று காலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எதிர்சேவை நடைபெற்றது.

    வழக்கமாக மதுரை சித்திரை திருவிழா என்றால், கள்ளழகர் மதுரை புறப்பாடு, வழிநெடுகிலும் மண்டபகப்படிகளில் எழுந்தருளல், மூன்று மாவடியில் மதுரை பக்தர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை, அதற்கு அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் இறங்குதல் என பக்தர்கள் புடை சூழ அழகர் திருவிழா நடந்தேறும்.

    ஆனால், நேற்று எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் யாருமின்றி மிக எளிமையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜபெருமாள், மனோரஞ்சித மாலை அலங்காரத்தில் காட்சி தந்தார்.

    இன்று 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோவில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கிய வைகை ஆற்றில் இறங்குகிறார்.
    ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.
    மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தவ்பா’ - ‘மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.

    1) தனது தவறை உணர்ந்து, அதிலிருந்து விடுபடுவது, 2) தான் செய்த தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு கேட்பது, 3) இனி ஒருபோதும் தவறு செய்யமாட்டேன் என சபதம் எடுப்பது. இம்மூன்று வழிகளை ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் அவனை இறைவன் மன்னித்து விடுகின்றான்.

    ஒரு முஸ்லிம் சகமனிதருக்கு துரோகம் செய்தாலோ, தவறிழைத்தாலோ அதுவும் பாவம். இந்த பாவத்திலிருந்து விடுபட நினைப்பவர் மேற்கூறப்பட்ட மூன்று வழிகளையும் கடைப்பிடிப்பதுடன் நான்காவது காரியமாக தவறிழைக்கப்பட்ட மனிதரிடம் சென்று தவறுக்கு தக்கவாறு பரிகாரம் தேடவேண்டும்.

    பொருள் ரீதியாக துரோகம் செய்தால், அந்தப் பொருளை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்; உடல்ரீதியாக தவறிழைத்தாலோ, உளரீதியாக காயம் ஏற்படுத்தினாலோ, அதற்குரிய பரிகாரம் என்னவோ அதை நிறைவேற்றி நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும். மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் பக்குவத்தை புனித ரமலான் கற்றுத் தருகிறது.

    மனந்திருந்தி மனிதப்புனிதனாக வாழ, ரமலானில் அதிகமாக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்துகிறது:

    ‘இறைநம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதுடன் இறைவனிடம் மனந்திருந்தி பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்களின் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்’ (திருக்குர்ஆன் 66:8)

    “நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபதுக்கும் அதிகமான தடவை ‘இறைவா! நான் உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டி, மனந்திருந்தி வருகிறேன்’ என்பதை ஓதி வருவார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ, தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து இருந்தது. அவனது உணவும், பானமும் வைக்கப்பட்டிருந்த அவனது வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழே வைத்து ஒரு குட்டித் தூக்கம் தூங்கி எழுந்தான். அந்தநேரத்தில் அவனது வாகனப் பிராணி தப்பி ஓடிப் போயிருந்தது. எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான். அப்போது அவனுக்குக் கடுமையான வெப்பமும், தாகமும், அல்லது அல்லாஹ் நாடிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றான். பிறகு ஒரு குட்டித் தூக்கம் தூங்கி, பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தனது பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டு அவன் எந்தளவு மகிழ்வானோ, அதைவிடத் தன் அடியான் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டும்போது அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

    புனித ரமலானில் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்போம். இறையருள் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் 1,800 சிறிய, பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இது தவிர புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இந்த புதிய கட்டுப்பாடுகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விழாக்கள் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

    இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கடலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில கோவில்களில் வெளிப்புற கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும் கோவில் பூசாரிகள், குருக்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். இது பற்றி இந்து சமய அறிநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 1800 சிறிய மற்றும் பெரிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப் பட்டது. இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலுக்குள் செல்லும் பணியாளர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவிலுக்குள் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கோவில்களில் திருமணம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சித்திரை பெருவிழா போன்ற விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    மேலும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு சன்னதி கோபுர வாசலில், தெற்கு, மேற்கு, வடக்கு கோபுர வாயில்கள் மூடப்பட்டது. கிழக்குவீதி கோபுர வாசல் மட்டும் திறந்துள்ளது. அதன் வழியாக குறைந்த அளவிலான தீட்சிதர்கள் மட்டும் சென்று 6 கால பூஜையை செய்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், நடராஜருக்கு தினசரி 6 கால பூஜை நடைபெறும், பொதுமக்கள், பக்தர்களுக்கு நடராஜரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில், நேற்று 2-வது நாளாக 20-க்கும் மேற்பட்ட மணமக்கள் கோவில் முன்பு வந்து நடுரோட்டில் நின்றபடி திருமணம் செய்துக்கொண்டு, கோபுர தரிசனம் செய்து சென்றனர்.

    கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற போதிலும், ஏராளமான பக்தர்கள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என அரசு அறிவித்ததையடுத்து அருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் வெளியிலேயே நின்று தரிசித்து சென்றனர்.
    கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை அதிகரித்து வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

    அரசின் உத்தரவின் பேரில் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முகூர்த்த நாளாகும். இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் அம்மணி அம்மன் கோபுர வாசல், ராஜகோபுர வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் ஆகியவை அடைக்கப்பட்டு காணப்பட்டது.

    தினமும் உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின் தங்கள் பணியை தொடங்குவார்கள். கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் கோவிலின் ராஜகோபுர வாசல் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு நின்று சாமியை மனதில் நினைத்த படி கை கூப்பி வணங்கிவிட்டு செல்கின்றனர்.

    கோவில் கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் கோவிலுக்குள் சாமிக்கு வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவிலின் சார்பு கோவில்களான கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள், சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், சோமாசிபாடியில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் பக்தர்கள் வாசலிலேயே நின்று வணங்கி விட்டு சென்றனர்.
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பவுர்ணமி தினத்தில் அதிகப்படியான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் வந்த சித்ரா பவுர்ணமியின் போதும் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் பெரும் எதிப்பார்ப்பில் இருந்தனர்.

    போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பிய காட்சி.

    ஆனால் தற்போது கொரோனா தொற்றின் 2-ம் அலை மிகவும் தீவிரமாக உள்ளதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளித்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருவார்கள். லட்சகணக்கானோர் திருவண்ணாமலையில் கூடினால் மேலும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி நேற்று மதியம் 12.18 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) காைல 9.58 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி கிரிவலப்பாதையில் செங்கம் சாலை, அபய மண்டபம் எதிரில் என முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் யாரையும் கிரிவலம் செல்ல விடமால் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. சிலர் குறுக்கு வழியாக கிரிவலப்பாதைக்கு வந்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
    ஏப்ரல் மாதம் 27-ம் தேதியில் இருந்து மே மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    27-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் ( கோவில் வளாகத்தில்)
    * சந்திராஷ்டமம் - ரேவதி, உத்திரட்டாதி

    28-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
     
    29-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்தம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- அசுபதி, பரணி

    30-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சங்கடஹர சதுர்த்தி
    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    1-ம் தேதி சனிக்கிழமை :


    * தேய்பிறை பஞ்சமி
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

    2-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * இன்று சூரிய வழிபாடு நன்று
    * சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    3-ம் தேதி திங்கள் கிழமை  :

    * திருவோண விரதம்
    * சந்திராஷ்டமம் - திருவாதிரை, மிருகசீருஷம்
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக கோவில் நந்தவன பகுதியில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது.
    உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா, இந்த வருடம் கொரோனா வைரஸ் 2-வது பரவல் காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு வழிகாட்டுதல்படி கோவில் வளாகத்திலேயே நடத்த அரசு முடிவுப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் கடந்த 23-ந் தேதி மாலையில் கோவில் வளாகத்தில் திருவிழா தொடங்கியது. அன்று கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடாகி அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதைதொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிப்படி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் எதிர் சேவை, கள்ளர் திருக்கோல நிகழ்ச்சியும் நடைபெறும்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் ஆடி வீதி நந்தவனத்தில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் நாளை காலை 8 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றுதல், பின்னர் 8.30 மணிக்கு ஆடி வீதியில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும், 29-ந் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, மண்டூக மகரிஷிசிக்கு மோட்சம் அளித்தல், 30-ந் தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு விழாவும், மே 1-ந் தேதி காலை 10 மணிக்கு அர்த்தமண்டப சேவையும், 2-ந் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்கிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    கொரோனா பரவல் காரணமாக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்தும்பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் முதல் கட்டமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு சார்பில் மேலும் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் நேற்று இரவு முதல் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.

    பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டுள்ள நிலையில் தீட்சிதர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று வழக்கமான பூஜைகளை செய்ய அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.
    லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
    லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ... அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.

    ‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’

    இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

    சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை.
    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கடந்த 2 தினங்களாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
    புதுச்சேரியில் உலகப் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதன்படி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கடந்த 2 தினங்களாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதே நடைமுறை புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் பின்பற்றப்பட்டது.
    ×