என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அரை மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
    எல்லோராவில் உள்ள குகைச் சிற்பங்கள் சிறப்பு பெற்றவை. அதிலும் மலையின் மேல் பகுதியில் இருந்து கீழாக குடைந்து உருவாக்கப்பட்ட கயிலாசநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆலயம் சுமார் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரங்கள் சொல்கின்றன. இதே காலட்டத்தில், அதாவது 8-ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு குகைக் கோவில் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் எல்லோரா கயிலாசநாதர் கோவில் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை ‘தென்னகத்தின் எல்லோரோ’ என்று அழைக்கிறார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க திருத்தலமாக இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அரை மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சடைய வரகுண பாண்டியன் என்பவனின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயமானது திராவிடக் கட்டுமான கலையமைப்பில் இருக்கிறது.

    மலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் நோக்கி பாறையை செதுக்கி இந்தக் கோவிலை உருவாக்கி உள்ளனர். மலையில் கிடைமட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி இருக்கிறார்கள். சிவபெருமானுக்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், இங்கு தற்போது விநாயகருக்குதான் வழிபாடு நடைபெறுகின்றன. இந்தக் கோவில் பணியானது, முழுமையாக நடைபெறவில்லை. இந்தக் கோவிலின் அடிப்பகுதி முற்றுபெறாமல் இருப்பதே இதற்குச் சான்றாக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்தக் கோவிலில் சிவபெருமான் தவிர்த்து, பிரம்மா, திருமால், தேவ கன்னியர்கள், பூத கணங்களின் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில் முகப்பில் சிவபெருமானும், பார்வதியும் அரு கருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற அரிய காட்சி காண்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

    மேலும் மத்தளம் கொட்டும் தட்சிணாமூர்த்தி, விமானத்தை தாங்கும் பூத கணங்கள், விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மர், வடக்கில் பிரம்மன் இருக்கின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கீழ் யாழி வரிசை உள்ளது. இந்தக் கோவிலுக்கு கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன.

    அரைமலையின் கிழக்கு பகுதியில்தான் இந்த வெட்டுவான் கோவில் இருக்கிறது. அதன் அருகில் தென் பகுதியில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நின்றசீர் நெடுமாறன் காலத்தில், இங்கு சமணர்கள் கழுவேற்றப்பட்ட காரணத்தால், இது ‘கழுமலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கழுகுமலை’ என்று ஆகியிருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில், சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற பல தீர்த்தங்கரர்களின் சிற்பங்களால் இந்த மலை நிறைந்திருக்கிறது.

    இது தவிர மலையின் அடிவாரப் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலும் அமைந்திருக்கிறது. இதுவும் குடவரைக் கோவில்தான்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகுமலை. இங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் ‘அரைமலை’யில் உள்ள வெட்டுவான் கோவிலை அடையலாம்.
    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி  சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசைபவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் அமாவாசை 9-ம்தேதி வருகிறது. இதையடுத்து இன்று முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    மலையடிவாரத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    அமாவாசை சிறப்பு பூஜை ஏற்பாடுகளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் திருமலைநம்பி கோவிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
    நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இப்பகுதி பக்தர்களால் ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைநம்பி கோவில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோவிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கி.மீ. தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டது. அதுபோல திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலும் மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

    தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் இன்னும் திறக்கப்பட்ட வில்லை.

    இக்கோவில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோவிலை திறக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணை யம் அனுமதி வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தேசிய புலிகள் ஆணையம் கோவிலை திறக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கோவிலை திறப்பதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் நம்பி சுவாமிக்கு நேர்ச்சை கடன்களை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    எனவே திருமலைநம்பி கோவிலை திறக்க தேசிய புலிகள் ஆணையத்தின் அனுமதியை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத் திற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    பிரதோஷ காலத்தில் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை எனும் பண்டைய நூல் கூறுகிறது.
    சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆனி மாதம் இருக்கிறது. சூரியன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் இருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் ஆகும். சூரியன், புதன் இரண்டும் நட்பு கிரகங்கள் என்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் நன்மையான பலன்களை தரவல்ல மாதமாக இருக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறப்பான நன்மைகளை அளிக்க வல்லதாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினமாக ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த தினத்தில் நாம் சிவபெருமானை எப்படி வழிபட்டால் பல அற்புதமான பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஆனி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். நாளைய ஆனி தேய்பிறை பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருவதால் மிகவும் விசேஷமானதாகும். ஆனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.'

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.'''

    ஆனி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. ஆனி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சூரிய கிரக தோஷங்கள் நீங்குகிறது. கண்பார்வை குறைபாடுகளையும் தீர்க்கிறது. மேலும் பிரதோஷ காலத்தில் காராம் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை எனும் பண்டைய நூல் கூறுகிறது. வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பிரகார உலா நடைபெற்றது.
    கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    5-ம் தேதி முதல் ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சாமி சன்னதியில் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று அங்கிருந்து கோவில் பின்புற வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (புதன்கிழமை) ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவிலில் உள்ள சம்மந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதனர்.

    “பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், அஸர்) தொழுகிறவர் சொர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)
    ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், அனைத்து உயிரினங்களும் புதிய விடியலைத் தேடி தான் உற்சாகமாய் எழுகிறது. எழுச்சியை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலும் உன்னதமானது என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது:

    “விடியற்காலையின் மீது சத்தியமாக!” (திருக்குர்ஆன் 89:1)

    ஒவ்வொரு விடியலும் உற்சாகமாக விடிவதும், சோம்பலாக மாறிவிடுவதும் அவரவர் நடத்தையில் தான் உண்டாகிறது. இதை பின்வரும் நபிமொழி எடுத்துக் கூறுகிறது:

    “நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்று போதித்து (அவனை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து, இறைவனை நினைவு கூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (உளூ) அங்கத்தூய்மை செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலைத் தொழுகையை தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும், உற்சாகமான மனநிலையுடனும் காலைப்பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும், சோம்பலுடனும் தான் காலைப்பொழுதை அடைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ஒவ்வொரு நாளும் புதிய விடியலை உற்சாகமாகவும், மனநிறைவாகவும் அடைந்து கொள்ள மூன்று விஷயங்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    1) இரவில் தூங்கி எழுந்தவுடன் முதலில் இறைவனை நினைக்க வேண்டும். பின்வரும் பிரார்த்தனையை ஓதவேண்டும்.

    “நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் எழுந்தால், பின்வரும் பிரார்த்தனையை புரிவார்கள். ‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வஇலைஹின் நுஷூர்’. இதன் பொருள்: எங்களை (சிறியதாக) மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த இறைவனுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே நமது திரும்பிச் செல்லுதல் உள்ளது”. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: அஹ்மது)

    2) இறைவனை நினைவு கூர்ந்தவுடன் உளூச் செய்ய வேண்டும்.

    “நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது தங்களின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவார்கள்” (நூல்: புகாரி )

    3) உளூச் செய்தவுடன் உபரியான தொழுகை தஹஜ்ஜத் அல்லது கடமையான அதிகாலத் தொழுகை (பஜ்ர்) தொழவேண்டும்.

    “சூரியன் உதயமாவதற்கு முன்னர் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையை தொழுதவர், சூரியன் மறைவதற்கு முன்னர் ’அஸர்’ எனும் மாலை நேரத் தொழுகையை தொழுதவர் எவரும் ஒரு போதும் நரக நெருப்பில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமாரா பின் ருஐபா (ரலி), நூல்: புகாரி)

    “பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், அஸர்) தொழுகிறவர் சொர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)

    “ஒருவர் விடியும் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் தொழுகைக்கு எழுவதில்லை”, என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்”. (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி), புகாரி)

    அதிகாலை வேளையில் இம்மூன்று செயல்களை கடைப்பிடிப்பவருக்கு அன்றைய தினம் புதியதோர் விடியலாக பிறக்கிறது. அது அவருக்கு உற்சாகத்தையும், மனநிறைவையும் கொடுக்கிறது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
    நீண்ட நாட்களுக்குப் பின் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது.

    இதேபோல் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
    ராமேசுவரம் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள். கடற்கரையில் தர்ப்பண பூஜையும் நேற்று முதல் தொடங்கியது.
    கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் 2 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் எதிரொலியாக கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

    அதுபோல் 2 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் மீண்டும் அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் பூஜையும் தொடங்கியது. இதை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் மற்றும் சங்கல்ப பூஜைகளையும் செய்தனர்.

    பூஜை செய்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம் பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.
    தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டை பாத்திமா நகரில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கொரோனா 3-வது அலை வராமல் இருக்க சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிப்பட்ட பல்லக்கில் புனித அந்தோணியாரை வைத்து கிறிஸ்தவர்கள் வீதி, வீதியாக எடுத்து சென்றனர்.

    அப்போது அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு பவனி வந்து ஒவ்வொரு வீட்டின் முன்பும் கொரோனா 3-வது அலை வர கூடாது என பிரார்த்தனை செய்தனர். இதில் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கோபுரத்தில் யாழி உடைந்தது. இந்த யாழியை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் செந்தலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் குடமுழுக்கு விழாவுக்கான முன் ஏற்பாடு பணிகள்  நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முன்புற கோபுரத்தின் உச்சியில் தெற்கு பகுதியில் இருந்த யாழி சிலை உடைந்து அருகிலுள்ள கலசத்தின் மேல் சாய்ந்து உள்ளது. மேலும் கோவில் கோபுரத்தில் செடிகள் அதிக அளவு முளைத்து உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் கோபுரத்தின் கீழ் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக வருவதற்காக கம்பி கட்டி தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். எனவே உடைந்த யாழியை சீரமைத்து பொருத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    ஆனி மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் மோகனூர் சாலை காந்திநகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணிசாமி காலை 6.30 மணிக்கு முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெண்பட்டுடன் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தரிசனம் செய்தனர்.

    மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து சாமியை தரிசனம் செய்தனர்.

    மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆனி கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரம் நடந்தது. வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகத்தை கூறலாம். இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது.
    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா -
    மௌலீஸ்வராய யோகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    நடேஸ்வராய நாகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    போலோ ஹரஹர
    சிவசிவ மஹாதேவா …..
    ×