என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா இன்று நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த 9-6-2020 அன்று தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தினார். இதற்கான அறிவிப்பு விழா கடந்த 20-4-2021 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்பொழுது பசிலிக்கா அறிவிப்பு விழா அரசின் வழிகாட்டுதல்படி மிக எளிமையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்குகிறார்.

    குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலய பங்குதந்தை செல்வன் மற்றும் பங்குமக்கள் சார்பில் பசிலிக்கா கொடி சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். கொடியை குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் ஏற்றி வைக்கிறார்.

    தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பை வெளியிடுகிறார். அந்த அறிவிப்பை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தமிழில் அறிவிக்கிறார்.

    பசிலிக்கா லோகோவை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் மற்றும் முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். லோகோவை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சிக்கிறார்.

    முளகுமூடு முதல் பங்குத்தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் வெளியிடுகிறார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் மாதா பாடல் சி.டி.யை வெளியிடுகிறார். பசிலிக்கா சிறப்பிதழை அருட்பணியாளர் ரசல்ராஜ் வெளியிடுகிறார்.

    தொடர்ந்து 9-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் யூ-டியூப் சேனலில் பார்த்து கொள்ளலாம்.

    விழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் கடாட்சதாஸ், இணை பங்குதந்தை தாமஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன்மணி, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜி கலா மற்றும் அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் சிறிய ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 2-ம் ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்றது.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு பதிலாக சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் சிறிய ரதத்தில் உலா வந்தார். இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    காலை 6.15 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள ஐராவத மண்டபத்தில் ரத பவனி நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய சிறிய ரதம் உள்பிரகாரத்தில் உலா வந்து மீண்டும் ஐராவத மண்டபத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் அதே சிறிய ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து வள்ளி அம்பாளும் அதே ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

    விழா நிகழ்ச்சிகள் யூ-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 10 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    கோவில்களில் வழக்கம்போல பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். அத்துடன் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றப்பட வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும்.
    அமாவாசையையொட்டி கோவையில் உள்ள மருதமலை, பேரூர் உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் சமீரன் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கூடுதல் கட்டுப்பாடுகள்

    கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் நடை சாத்தப்படும் என்ற கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அமாவாசை நாள் என்பதால் கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், மேட்டுப்பாளையம் வனப்பத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

    ஆனால் மேற்கண்ட கோவில்களில் வழக்கம்போல பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். அத்துடன் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றப்பட வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும்.

    எனவே கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    இந்த ஆண்டு அதிபத்தநாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த காட்சியை கடற்கரையில் நின்று திரளான பக்தர்கள் பார்த்தனர்.
    நாகையில் நீலாயதாட்சியம்மன் காயாரோகண சாமி கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிபத்த நாயனார் நுழைபாடி எனும் நம்பியார் நகரில் மீனவ சமுதாயத்தில் பிறந்த சிவ பக்தரான அவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    அப்போது தான் பிடிக்கும் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். சில நேரங்களில் கடலில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு வீட்டிற்கு வெறுங்கையுடன் செல்வார். இவர் பக்தியை சோதிக்க வேண்டி சிவபெருமான், அதிபத்தருக்கு கடலில் தங்க மீன் ஒன்றை கிடைக்குமாறு செய்தார்.

    அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு சென்றார். அவரின் பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தருக்கு காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கடலில் தங்க மீன் விடும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் எளிமையாக விழா நடந்தது.

    இந்த ஆண்டு அதிபத்தநாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை நம்பியார் நகருக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நம்பியார் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் வெள்ளி மற்றும் தங்க மீன்னை நம்பியார் நகர் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அதிபத்த நாயனாரின் உற்சவர் சிலையை மீனவர்கள் பைபர் படகில் ஏற்றி கடலுக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து வெள்ளி மற்றும் தங்க மீனை பிடிக்கும் காட்சியும், அதை அதிபத்த நாயனார் சிவபெருமானை வேண்டி கடலில் விடும் காட்சியும் நடைபெற்றன. அப்போது சிவபெருமான் பார்வதியுடன் அதிபத்த நாயனாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த காட்சியை கடற்கரையில் நின்று திரளான பக்தர்கள் பார்த்தனர்.
    லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் உடல் நலத்தில் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷாராக இருத்தல் நல்லது.
    1. லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் வரலாம்.

    2. லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. சிலருக்கு கண்ணில் பிரச்சினை உண்டாக்குகிறது.

    3. லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதரபாவத்தை பாதகம் செய்கிறது. இதனால் சகோதரர்களிடையே ஒற்றுமையை குறைக்கிறது. உடல்நலனில்தொண்டை பகுதியை பாதிக்கிறது.

    4. லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை.

    5. லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம் மற்றும் படிப்பை பாதிக்கச் செய்கிறது. சிலருக்கு பூர்வீக சொத்து விஷயத்தில் சிக்கல் ஏற்படலாம். அது கோர்ட்டு வரை இழுத்துசெல்லக் கூடும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    6. லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருகும். விரோதங்கள் தொடரும் சிலர் அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.

    7. லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படிதிருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம்வளரும். குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் குறைய வாய்ப்புண்டு.

    8. லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் வாழ்க்கையில்தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். முன்கோபம் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் துன்பமே உண்டாகும்.

    9. லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில்கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்குஅவஸ்தை படவைக்கும். தந்தை மகன் உறவில் விரிசல் உண்டாக்கும்.

    10. லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில் வேகம் குறையும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது.

    11. லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் உடல் நலத்தில் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷாராக இருத்தல் நல்லது.

    12. லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம்இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது.

    கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக இன்று (6-ந்தேதி) தேவிபட்டினம், நவபா‌ஷண கோவில், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சர்வ அமாவாசையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்ய கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு பக்தர்கள் செல்லும் சன்னதி தெரு, மண்டிதெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் இரும்பு தகரத்தால் நேற்று நகராட்சி மூலம் அடைக்கப்பட்டன. அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பாதை நேற்று மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதி செல்லும் சாலை தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டது.

    அதேபோல் இன்று (6-ந்தேதி) அமாவாசை தினத்தன்று தேவிபட்டினம், நவபா‌ஷண கோவில், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடலில் குளிக்கவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாளில் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்று விழா நெல்லையப்பர் கோவில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டது.

    இதை தொடர்ந்து சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.

    அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    ஆவணி மாத அமாவாசை தினமான இன்று குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். ஆவணி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.

    இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சதுரகிரி வந்து தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது ஆலய தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்து வருகிறது.

    அதன்படி சனிக்கிழமை முதல் 6-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி வந்து தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.

    இந்த காலங்களில் வழக்கமான பூஜை பூசாரிகள் மூலம் நடைபெறும். பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரை பகுதிகளிலும் அமாவாசை நாளில் (6-ந்தேதி) பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மகாலட்சுமிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி வடிவம் மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். இந்த வடிவங்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி வடிவம் மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.

    அசையாத சொத்துக்கள் எல்லாமே ‘‘பூமாதேவியின்’’ வடிவம் ஆகும்.

    அசையும் சொத்துக்கள் எல்லாமே ‘‘ஸ்ரீதேவியின்’’ அம்சமாகும்.

    அதனால்தான் ‘‘பூதேவியை’’ அசலா என்றழைக்கிறார்கள். இதற்கு அசையாதவள் என்று பொருள்.

    அசைபவள் என்பதால் தான் ‘‘ஸ்ரீதேவியை’’ சஞ்சலா என்றழைக்கிறார்கள். இதற்கு ஓரிடத்தில் நில்லாமல் மாறிக் கொண்டேயிருப்பவள் என்று பொருள்.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் விழாவான நேற்று இரவு கற்பக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.

    அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி 1-ம்தேதி தொடங்கியது. கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி 2-ம் தேதி உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் விழாவான நேற்று இரவு கற்பக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    10-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி அன்று காலை பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.
    விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவேங்கடவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்குட்பட்ட பழமையான கோவில் ஆகும். திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு அபிமான தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.
    மூலவரின் மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால் இந்த கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது.

    பெரியபெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கை கடி ஹஸ்தமாகவும் இருப்பதால் இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபலம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு லட்சுமியை மடியில் தாங்கி கிழக்கு நோக்கி லட்சுமி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் மிகுந்த சிறப்பை அடையலாம். அவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபாடு செய்வது உகந்தது.

    இந்த கோவிலில் கல்யாண ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. அவர் மேற்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்.
    ×