என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மங்கல சீர் வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர் வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியும், அவரின் மனைவியும் சமர்ப்பித்தனர்.

    முன்னதாக காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வந்த அவர்களை, ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி, பூதலப்பட்டு தொகுதி எம்.எஸ். பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர்கள், செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு பாரம்பரிய சம்பிரதாயத்தின் படி பரிவட்டம் கட்டி, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை தலையில் வைத்தனர். அவரும், மனைவியும் மற்ற அதிகாரிகளும் ஊர்வலமாக வந்து விநாயகரிடம் சமர்ப்பணம் செய்தனர்.
    இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து மாநில பக்தர்களும் தங்களின் ஆதார் அட்டையை உடன் கொண்டு வந்து காண்பித்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.
    திருமலை :

    கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரணப் பக்தர்கள் வழிபட இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் வழிபட தினமும் 2 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் மொத்தம் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கவும், இலவச தரிசனத்தில் அனைத்து மாநில பக்தர்கள், வெளிநாட்டுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும் முடிவு செய்தது. அதன்படி இலவச தரிசன டோக்கன்கள் 2 ஆயிரம் வழங்கியதை 6 ஆயிரமாக உயர்த்தி மொத்தம் தினமும் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து மாநில பக்தர்களும் தங்களின் ஆதார் அட்டையை உடன் கொண்டு வந்து காண்பித்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம். அன்றைய நாளுக்கான இலவச சாமி தரிசன டோக்கன்கள் அன்றைய தினமும் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்கள் தினமும் அதிகாலையில் இருந்து திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதியில் வழங்கப்படுகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புரட்டாசி மாதம் 31 நாட்களும் வழிபாடுக்கு உகந்த நாட்களாகும். இன்றே அந்த வழிபாட்டை தொடங்குங்கள். அபரிமிதமான பலன்களை பெறலாம்.

    புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று இல்லை.

    புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள் தான். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் சித்தி விநாயகர் விரதம் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி வளர்பிறை சஷ்டியில் சஷ்டி-லலிதா விரதம் இருக்கலாம்.

    புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் அனந்த விரதம் இருக்கலாம். புரட்டாசி வளர்பிறை சப்தமியில் அமுக்த பரண விரதம் இருக்கலாம். அதுபோல வளர்பிறை அஷ்டமியில் ஜேஷ்டா விரதமும், மகாலட்சுமி விரதமும் இருக்கலாம். புரட்டாசி தேய்பிறை சஷ்டியில் கபிலா சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    இவை அனைத்துக்கும் மேலாக மகாளயபட்ச பித்ரு வழிபாடு நாட்களும் புரட்டாசியில்தான் வருகிறது. பித்ருக்களின் ஆசியை அன்றைய தினங்களில் பெறலாம்.

    எனவே புரட்டாசி மாதம் 31 நாட்களும் வழிபாடுக்கு உகந்த நாட்களாகும். இன்றே அந்த வழிபாட்டை தொடங்குங்கள். அபரிமிதமான பலன்களை பெறலாம்.
    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

    இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயார் கோவில் உள்ளேயே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒரு ஆண்டில் பல்வேறு உற்சவங்கள் நடக்கின்றன. அந்த உற்சவங்களில் பங்கேற்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி நேற்று மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம் நடந்தது. முன்னதாக காலை விஸ்வசேனர் ஆராதனை, புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், மிருதசங்கிரஹம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் பவித்ராதிவாசம் ஆகியவை நடந்தன.

    உற்சவர் பத்மாவதி தாயார் கோவில் உள்ளேயே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், ஆகம ஆலோசகர் சீனிவாசா ஆச்சாரிலு, உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கோவில் கண்காணிப்பாளர் சேஷகிரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    வருடாந்திர பவித்ரோற்சவத்தையொட்டி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் உள்ளேயே உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு தேர்த்திருவிழா நடந்தது. கோவில் உள்ளேயே தேரில் உற்சவர் விநாயகர் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினியை பயன்படுத்தியும், சமூக விலகலை கடைப்பிடித்தும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 9-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பிச்சாடனார் அலங்காரத்தில் வாகன உலா, மதியம் அபிஷேகம், இரவு திருக்கல்யாண உற்சவம், குதிரை (அஸ்வ) வாகன உலா நடக்கிறது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சாஸ்திர சம்பிரதாயப்படி பவித்ர சமர்ப்பணம் நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாத சேவை, தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை மற்றும் பல்வேறு காரியகர்மங்கள் நடந்தன. காலை 8.30 மணியில் இருந்து 10.30 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி பூஜை பொருட்களை கோவில் உள்ளேயே ஊர்வலமாக கொண்டு வந்து யாக சாலை அருகில் வைத்தனர்.

    காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாலாலயத்தில் மூலவர்களுக்கும், கோவிலில் உள்ள துணைச் சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும், கொடிமரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    விழாவில் பெரியஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கோவில் பிரதான அர்ச்சகர் பி.சீனிவாசதீட்சிதலு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வேதங்கள் முழங்க இரட்டை புறப்பாடு உற்சவம் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    விஷ்ணுவுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசே‌ஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் புகழ் பெற்ற அத்திவரதர் கோவிலுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பு, ஏகாதசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பெருமாள், தாயார் இரட்டை புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

    வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை, செண்பகப்பூ, பஞ்சவர்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி, மற்றும் பெருந்தேவி தாயார் உடன் காட்சியளித்தார்.

    வேதங்கள் முழங்க இரட்டை புறப்பாடு உற்சவம் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவில்கதவு மூடிய நிலையில் இருந்தது. கோவிலுக்குள் சென்று பெருமாளை வணங்க முடியாததால் பக்தர்கள் கோபுர வாசலில் நின்று சுவாமியை வணங்கி சென்றனர்.

    சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.
    சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்த போது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இதற்கு பதிலாக கடந்த 12-ந்தேதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் வீதிஉலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலையில் சாமிக்கு மோகன அவதார அலங்காரம் செய்யப்பட்டு, தங்கப்பல்லக்கில் கோவில் பின்புறத்தில் உள்ள வாகன மண்டபத்தில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் நேற்று காலை முக்கிய விழாவான உதய கருடசேவை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேவநாதசாமி கருடன் மீது அமர்ந்து அருள் பாலித்தார். அரசின் உத்தரவு காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வெளியில் நின்று சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்றும், நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் வராக அவதாரம். கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மூர்த்தி மந்திரத்தை படிக்கலாம்.

    ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
    கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
    தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
    தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

    பொருள்: சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம்.

    கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மந்திரத்தை படிக்கலாம்.

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் அம்பாளை வைத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜகோபுரம் மற்றும் இதர விமானங்களின் திருப்பணி செய்ய ஏதுவாக நேற்று முன்தினம் பாலாலயம் நடைபெற்றது.

    அர்த்தமண்டபத்தில் கருங்கல் திருப்பணிகள் நடைபெறுவதால் வருகிற 20-ந்தேதி முதல் மூலவர் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே கோவிலின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் அம்பாளை வைத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×