search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seervarisai"

    • 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.

    சேலம் :

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.

    லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.

    தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது.
    சக்தி தலங்களில் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களுக்கும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.

    பச்சை பட்டினி விரதத்தின்போது கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால், அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்படும். இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் நேற்று காலை கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பூத்தட்டுகளை கையில் சுமந்து தெற்குவாசல் வழியாக ராஜகோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்். பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோவிலுக்கு எடுத்து சென்றனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்மன் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.

    அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

    இதையடுத்து அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் இன்று நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில் ரெங்கநாதர் சீர் வழங்குவதாக ஐதீகமாகும். சீர் வரிசை பெறுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வருவதும் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருவானைக்காவல் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இந்த சம்பிரதாய நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு பட்டாடைகள் உள்ளிட்ட வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் பச்சரிசி, பாசிப்பயறு உள்ளிட்ட நைவேத்திய பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட இருப்பதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    ×