என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தங்களுடைய சந்ததியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்பதற்காக, நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்கும் காலத்தையே ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள்.
    அமாவாசை தினத்தன்று, நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தருவார்கள். அப்போது தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, மன திருப்தியுடன் அவர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘மகாளய’ என்பதற்கு ‘கூட்டாக வருதல்’ என்று பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே ‘மகாளய பட்சம்’ என்று சொல்லப்படுகிறது. ‘பட்சம்’ என்பது 15 நாட்களை குறிப்பதாகும். அதாவது தங்களுடைய சந்ததியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்பதற்காக, நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்கும் காலத்தையே ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள்.

    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசை வரையான 15 நாட்களே ‘மகாளய பட்சம்’ ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய அமாவாசையே, ‘மகாளய அமாவாசை’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளய பட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனிச்சிறப்பாகும்.

    மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களுமே, நம்முடைய முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி செய்ய முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்திலாவது, பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

    மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

    1-ம் நாள் - பிரதமை திதி - செல்வம் சேரும்.

    2-ம் நாள் - துதியை திதி - பெயர் சொல்லும் குழந்தைகள் பிறப்பர்.

    3-ம் நாள் - திருதியை திதி - நினைத்த காரியங்கள் நிறைவேறும்

    4-ம் நாள் - சதுர்த்தி திதி - பகை விலகும்.

    5-ம் நாள் - பஞ்சமி திதி - அசையா சொத்து சேரும்.

    6-ம் நாள் - சஷ்டி திதி - பேரும், புகழும் தேடி வரும்.

    7-ம் நாள் - சப்தமி திதி- தகுதியான பதவிகள் கிடைக்கும்.

    8-ம் நாள் - அஷ்டமி திதி -அறிவு கூர்மை பெறும்.

    9-ம் நாள் - நவமி திதி - நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

    10-ம் நாள் - தசமி திதி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

    11-ம் நாள் - ஏகாதசி திதி - கல்வி, கலைகளில் வெல்வீர்கள்.

    12-ம் நாள் - துவாதசி திதி - ஆபரணங்கள் சேரும்.

    13-ம் நாள் - திரயோதசி திதி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும்.

    14-ம் நாள் - சதுர்த்தசி திதி - பாவம் கழியும். வாரிசுகளுக்கு நன்மை உண்டாகும்.

    15-ம் நாள் - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

    பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை நீங்கும் சக்தி பெற்றதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    சூரியன் எப்போதும், இத்தல சிவபெருமானை வழிபட்டபடியே இருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீரும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு திபம் ஏற்றி வழிபட்டால் , பிரிந்த தம்பதிகள்  சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவார்கள் என்றும், பல் சம்பத்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.

    சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்திற்கு செல்ல திருவள்ளுர், சென்னையில் இருந்து பஸ் வசதியுள்ளது.
    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் பங்கேற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தாசினம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 12-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ராவண பிரம்மா வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், தான தர்மங்கள் செய்வதிலும், இறைவணக்கத்திலும் போட்டி போடுவதைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.
    சிலர், ‘தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எப்படிப்போனாலும் கவலையில்லை’ என்ற கருத்தைக்கொண்டிருப்பார்கள். சிலர் இதையும் தாண்டி, ‘தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், அடுத்தவர்கள் நன்றாக இருக்கக்கூடாது’ என்று பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இந்த நினைப்பை, இது மாதிரியான எதிர்மறையான எண்ணத்தை இஸ்லாம் தடை செய்கிறது.

    “நீங்கள் வாழ்வதற்குப் பிறர் வீழ வேண்டுமெனப் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    தமக்கு எதுவெல்லாம் நடக்கக்கூடாது என நாம் நினைப்போமோ, அது மற்றவருக்கும் நடக்கக்கூடாது என்ற அறமே, ‘இன்னா செய்யாமை’ ஆகும். எதிரிக்கு பதிலுக்குப் பதிலடி கொடுப்பதினால் அவனை வென்று விட முடியாது. அவனுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவனை வென்று காட்ட வேண்டும்.

    “நன்மையும் தீமையும் சமமாக ஆகாது. நீர் தீமையை மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அப்பொழுது, எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்”. (திருக்குர்ஆன் 41:34)

    போட்டி, பொறாமை என்பதெல்லாம் பணத்திலோ, பதவி சுகத்திலோ, பழிவாங்கும் தன்மையிலோ, தீயசெயல்களிலோ இருக்கக்கூடாது. மாறாக போட்டி என்பது நன்மையான காரியங்களில் அமைய வேண்டும். இத்தகைய போட்டியைத்தான் இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது.

    இதுகுறித்து நபி (ஸல்) கூறுவதாவது:- இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதற்காகவும் போட்டி, பொறாமைப்படக்கூடாது. அவை: 1) ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். இதைக்கண்ட மற்றொருவர் “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே” என்று ஆதங்கத்துடன் கூறினார். 2) மற்றொருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபித்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) இடையே நன்மை செய்வதில் போட்டி இருந்தது. இதுபற்றி உமர் (ரலி) கூறுவதாவது:- “ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தர்மம் செய்வது குறித்து ஏவினார்கள். செல்வம் என்னிடம் நிறைவாக இருந்ததால் இது எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதுவரைக்கும் நான் அபூபக்கர் (ரலி) அவர்களை எந்த நன்மையிலும் முந்த முடியவில்லை.

    இன்றைய தினம் நான் போட்டி போட்டு, கூடுதலாக தர்மம் செய்து முந்திவிட வேண்டி, நபியவர்களிடம் எனது சொத்தில் சரி பாதியை கொண்டு வந்து கொட்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்?” என கேட்க... “நான் பாதி சொத்தை விட்டு வந்துள்ளேன்” என்று கூறினேன். பிறகு, அபூபக்கர் (ரலி) தம்மிடமுள்ள அனைத்தையும் நபியிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, “நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்” என நபி (ஸல்) கேட்டதும் “நான் இறைவனையும், இறைத்தூதரையும் மட்டுமே மிச்சம் வைத்து வந்துள்ளேன்” என்றார். இதைப் பார்த்த உமர் (ரலி), அபூபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்து “நான் எதிலும் எப்போதும் உம்மை முந்திவிட முடியாது” என்றார். (நூல்: திர்மிதி)

    போட்டி என்றால் இதுதான் போட்டி, சரியான போட்டி. இவ்வாறு பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், தான தர்மங்கள் செய்வதிலும், இறைவணக்கத்திலும் போட்டி போடுவதைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் செல்வார்கள்.

    தற்போது கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

    மேலும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணி வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் பின்னர் போலீசார் பக்தர்கள் கிரிவலம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சாலை ஓரங்களில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என 4 நாட்களாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று காலை பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    ஆனால், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலமும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவர்களும் வழக்கம் போல் தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

    இதனால் இலவசமாக ஏழுமலையானை சாமானிய பக்தர்கள் தரிசிக்க இயலாமல் போனது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த நிலையில் சுமார் 4 மாதங்கள் கழித்து சோதனை அடிப்படையில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று முதல் வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்தது.

    இதனை அறிந்த பக்தர்கள் தற்போது திருப்பதியில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். தினமும் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    புரட்டாசி மாதம் என்பதால் ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். டிக்கெட் பெறுவதற்காக கவுண்டர்களில் வரிசையில் காத்து நிற்கின்றனர். காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடர்கிறது.

    டோக்கன் பெற்ற பக்தர்கள் ஆர்வமுடன் சென்று ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.
    செப்டம்பர் மாதம் 21-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    21-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * மகாளயபட்சம் தொடக்கம்
    * அமிர்த யோகம்
    * திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளல்
    * சென்னை பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம்
    * சந்திராஷ்டமம் - மகம்

    22-ம் தேதி புதன் கிழமை :
     
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - பூசம்
     
    23-ம் தேதி வியாழக்கிழமை :


    * திருப்பதி ஏழுமலையான் மலரங்கி
    * சுவாமிமலை முருகன் தங்கக் கவசம்- வைரவேல் தரிசனம்
    * சந்திராஷ்டமம்- உத்திரம்

    24-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சங்கடஹர சதுர்த்தி
    * பிதுர்கடன் செலுத்துதல் நன்று
    * சந்திராஷ்டமம் - அஸ்தம்

    25-ம் தேதி சனிக்கிழமை :

    * கார்த்திகை விரதம்
    * காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருமஞ்சனம்
    * பஞ்சமி திதி
    * சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை

    26-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * பழனி முருகப்பெருமான் புறப்பாடு
    * கீழ் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி எதிரில் கருடாழ்வார் திருமஞ்சனம்
    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    27-ம் தேதி திங்கள் கிழமை  :

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு
    * சங்கரன்கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
    * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
    திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் என்றென்றும் வற்றாத காசிக்கு நிகரான கங்கை தீர்த்தம் கொண்ட சுனையும், மலைமேல் குமரருக்கு என்ற தனி சன்னதியும் அமைந்துள்ளது. தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள "வேல்"கொண்டு மலைசார்ந்த பாறையை பிளந்து சுனையை உருவாக்கினார் என்று புராண வரலாறு கூறுகிறது. இதை நினைவூட்டும் வகையிலும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    இந்த திருவிழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 7 கண்மாய்க்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கொண்டாடக்கூடிய திருவிழாவாக போற்றப்படுகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள மகிமை கொண்ட "தங்கவேல்" பல்லக்கு வைத்து மலைமேல் குமரனுக்கு எடுத்துச்செல்லப்படும்.

    அதன்பின் மலை உச்சியில் உள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்தத்தில் வேலுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெறும். மேலும் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்கள் கொண்டு வேலுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்படும்.

    இதனைதொடர்ந்து மலையில் இருந்து வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். பிறகு பழனியாண்டவரின் திருக்கரத்தில்வேல் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து பூப்பல்லக்கில் வேல் புறப்பட்டு கோவிலுக்கு சென்றடையும்.கோவிலின் கருவறையில் இருந்து மலைமேல் குமரருக்கு வேல் எடுத்து செல்லப்படுவதால் அன்று ஒருநாள் கோவிலுக்குள் அபிஷேகம் நடைபெறாது.

    இத்தகைய திருவிழாவானது முதல்முறையாக கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி நடைபெறக் கூடிய மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா 2-வது முறையாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாள் கைப்பாரம் மற்றும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ஆகியவை கிராம திருவிழாவாக நடைபெறும். இந்த தருணத்தில் மலைமேல் குமரருக்கு திருவிழா 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மற்றும் கிராம மக்களிடைய பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. தேர்பவனி வரும் இடத்தில் மீன்களை உலர வைத்து இருந்ததால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 2-ம் நாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் தேவநாத சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று காலை மற்றும் மாலையில் சூரிய பிரபை, யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவில் உட்புறத்தில் சாமி உலா வந்தார்.

    இந்த நிலையில் தற்போது தொற்று நோய் பரவல் காரணமாக சாமி ஊர்வலம் வெளிப்புறத்தில் நடைபெறவில்லை. மேலும் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற வில்லை. மாறாக நேற்று 9-ம் நாள் விழாவான பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேவநாத சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தேவநாதசுவாமி கோவிலுக்குள் அமைக்கப்பட்ட சிறிய தேரில் எழுந்தருளினர். அப்போது சிறிய தேரை கோவில் ஊழியர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தேர் கோவில் உட்புறத்தை உலா வந்து நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.

    இதை அறியாத வெளி மாநில பக்தர்கள் புரட்டாசி பவுர்ணமியன்று சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் இரவே வருகை புரிந்தனர். இதில் சிலர் நேற்று முன்தினம் இரவு முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று அதிகாலையில் பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். மேலும் நேற்று அதிகாலை முதல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.

    நேற்று பகலிலும், இரவிலும் தனித்தனியாக சிலர் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
    500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அரபிக்கடலின் ஓரத்தில் அழகுற அமைந்துள்ளது.

    சிவபெருமானே நம்மை வியக்க வைக்கும் சக்தி படைத்தவர்தான். அதோடு அவரது ஆலயமும் வியக்க வைக்கும் வகையில் அமைந்தால், அது பார்ப்பதற்கு எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு ஆலயம்தான், ‘முருடேஸ்வரர் திருக்கோவில்.’திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு ஏற்படவும், கல்வியில் மேம்படவும் இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதற்காக 108 கலச அபிஷேகமும் செய்யப்படுகிறது.

    சிவபெருமானிடம் இருந்து பிராண லிங்கத்தைப் பெற்ற ராவணன், அதை இலங்கையில் நிறுவ எடுத்துச் சென்றான். அப்போது விநாயகர், சிறுவன் வேடத்தில் வந்து, ராவணன் சந்தியா கால பூஜை செய்யும் நேரத்தில் சிவலிங்கத்தை இங்கே நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.

    இங்குள்ள இறைவனின் பெயர் ‘முருடேஸ்வரர்.’ இங்கு 123 அடி உயரத்தில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் இவர் காட்சி தருகிறார்.

    பெரிய சிவன் சிலைக்கு கீழே திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிவ-பார்வதி சன்னிதிகள், கணபதி, ஆஞ்சநேயர், முருகன், நவக்கிரக சன்னிதி, தத்தாத்ரேயர், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. சிவ-பார்வதியை, ராமர், சீதா, லட்சுமணர் பூஜிப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

    முருடேஸ்வரர் சன்னிதியில் அணையா விளக்கு ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, காணிக்கை செலுத்தி, தீபத்தில் தங்கள் முகத்தைப் பார்க்கிறார்கள். இதனால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

    இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 237.5 அடி உயரம் கொண்டது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

    எம பயம் மற்றும் நோய் தீர்க்கும் வல்லமை படைத்தவராக இத்தல ஈசன் விளங்குகிறார். இங்கு சிவனுக்கும், பார்வதிக்கும் ‘ருத்ர அபிஷேகம்’ செய்யப்படுகிறது.

    இங்கு குடும்பமாக வருபவர்களுக்கு ‘சர்வதேவ பூஜை’ செய்யப்படுகிறது. இது ஒரு தோஷ நிவர்த்தி பூஜையாகும். இந்த பூஜையின் போது, எள், நெய், வெல்லம், பச்சைப் பயறு, ஏலக்காய் பொடி கலந்த ‘பஞ்ச கஜ்ஜாய பிரசாதம்’ படைக்கப்படுகிறது.

    கோவிலைச் சுற்றிலும், ராவணவன் விநாயகரிடம் சிவலிங்கத்தைக் கொடுக்கும் காட்சி, கயிலையில் சிவன் வீற்றிருக்கும் காட்சி, தேரில் அமர்ந்தபடி அர்ச்சுனுக்கு கிருஷ்ணன் கீதையை உபதேசிக்கும் காட்சி உள்ளிட்டவை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தில் தை மாதம் முதல் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானது. அதே போல் தேரோட்டம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீப விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா என்ற மாவட்டத்தில் பாட்கல் என்ற கிராமத்தில் முருடேஸ்வரர் கோவில் இருக்கிறது.
    ×