search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன்
    X
    திருப்பரங்குன்றம் முருகன்

    திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு "வேல் எடுக்கும் திருவிழா" ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
    திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் என்றென்றும் வற்றாத காசிக்கு நிகரான கங்கை தீர்த்தம் கொண்ட சுனையும், மலைமேல் குமரருக்கு என்ற தனி சன்னதியும் அமைந்துள்ளது. தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள "வேல்"கொண்டு மலைசார்ந்த பாறையை பிளந்து சுனையை உருவாக்கினார் என்று புராண வரலாறு கூறுகிறது. இதை நினைவூட்டும் வகையிலும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    இந்த திருவிழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 7 கண்மாய்க்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கொண்டாடக்கூடிய திருவிழாவாக போற்றப்படுகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள மகிமை கொண்ட "தங்கவேல்" பல்லக்கு வைத்து மலைமேல் குமரனுக்கு எடுத்துச்செல்லப்படும்.

    அதன்பின் மலை உச்சியில் உள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்தத்தில் வேலுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெறும். மேலும் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்கள் கொண்டு வேலுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்படும்.

    இதனைதொடர்ந்து மலையில் இருந்து வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். பிறகு பழனியாண்டவரின் திருக்கரத்தில்வேல் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து பூப்பல்லக்கில் வேல் புறப்பட்டு கோவிலுக்கு சென்றடையும்.கோவிலின் கருவறையில் இருந்து மலைமேல் குமரருக்கு வேல் எடுத்து செல்லப்படுவதால் அன்று ஒருநாள் கோவிலுக்குள் அபிஷேகம் நடைபெறாது.

    இத்தகைய திருவிழாவானது முதல்முறையாக கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி நடைபெறக் கூடிய மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா 2-வது முறையாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாள் கைப்பாரம் மற்றும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ஆகியவை கிராம திருவிழாவாக நடைபெறும். இந்த தருணத்தில் மலைமேல் குமரருக்கு திருவிழா 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மற்றும் கிராம மக்களிடைய பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×