என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

    திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ( சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

    01. அசிதாங்க பைரவர்‬: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

    “ஓம் ஞான தேவாய வித்மஹே
    வித்யா ராஜாய தீமஹி
    தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
    கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்.”

    02. ‪‎ருரு பைரவர்‬: ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். #ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎#சுக்கிரனின்‬ கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

    “ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் வருஷத் வஜாய வித்மஹே
    ம்ருக ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்.”

    03. சண்ட பைரவர்: சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

    “ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.”

    04. குரோதன பைரவர்: குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

    “ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
    லட்சுமி தராய தீமஹி
    தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.”

    05. உன்மத்த பைரவர்: உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.

    “ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
    தண்ட ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்.”

    06. கபால பைரவர்: கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

    “ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி
    தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.”

    “ஒம் கஜத்வஜாய வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாய தீமஹி
    தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்.”

    07. பீக்ஷன பைரவர்: பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

    “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    ஸர்வானுக்ராய தீமஹி
    தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ காளி ப்ரசோதயாத்.”

    08. சம்ஹார பைரவர்: சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

    “ஓம் மங்களேஷாய வித்மஹே
    சண்டிகாப்ரியாய தீமஹி
    தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்”

    ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
    மஹாதேவி ச தீமஹி
    தந்நோ சண்டி ப்ரசோதயாத்.”

    “ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
    ஸ்வாந வாஹாய தீமஹி
    தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கதிஷணாய தீமஹி
    தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

    காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
    கயிலை மலையானே போற்றி! போற்றி!
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.

    விழாவின் 11-ம் நாளான நேற்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்ட நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது. தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

    வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
    கன்னியாகுமரி வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், யாகசாலை பூஜை, ஹோமம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் புண்ணியாகவாசனம், அஷ்டோத்திர பூஜை, 108 கலசங்களில் புனித நீர் நிரப்பி கலச பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், யாகசாலை பூஜை, ஹோமம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.

    இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் வி.கே.சாய் கிருஷ்ணா, முரளி ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி வெங்கடேஸ்வரசாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள். நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய துணை தலைவர் அனில் குமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், கார்த்திகேயன், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் ஹனுமந்த ராவ், பொதுச்செயலாளர் பானுதாஸ், குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் பத்மேந்திரா சுவாமி, கன்னியாகுமரி வெங்கடேஸ்வர சாமி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா மற்றும் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் பலர் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
    27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் வருமாறு:-

    1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.
    2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
    3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
    4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
    5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
    6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
    7.புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
    8.பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
    9.ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.
    10.மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
    11.பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
    12.உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்-சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
    13.அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
    14.சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
    15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
    16.விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
    17.அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
    18.கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி-சொக்கநாதர் கோவில்.
    19.மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
    20.பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
    21.உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்-  கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
    22.திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
    23.அவிட்டம்:  சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.
    24.சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
    25.பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
    26.உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
    27.ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
    விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர்.
    ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஔவையாருக்கு கடைபிடிக்கப்படும் சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை..

    விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால்  விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள்.

    இரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும் இருந்த பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கிருந்த அடையாளங்களை எல்லாம் சுத்தம் செய்வார்கள். கொழுக்கட்டைகளை மீதமில்லாமல் எல்லோரும் உண்டு விடுவார்கள். அடுத்த நாள் விடிந்ததும் வேறு உணவை உண்பதற்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டைகள் முழுவதையும் உண்டுவிட வேண்டும் என்பது ஐதீகம். பூஜை செய்த பூ எல்லாவற்றையும் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள். குளித்துவிட்டு, நிறை குடத்துடன், மஞ்சள், குங்குமம் சூடி, புது வளையல் அணிந்து வாய் பேசாமல் வீடு வருவார்கள். விரதமிருந்த பிறகு வரும் பகலில் யாருக்கும் எதுவும் தங்கள் கையால் கொடுக்க மாட்டார்கள். இந்த விரதம் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் விரதம் என்றும் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையும், திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தை வரமும் கிடைப்பதுடன், குடும்ப நலமும் மேம்படும் என்பது நம்பிக்கை. பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசியமான நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக் கூட அங்கே அனுமதியில்லை. அவ்வளவு ஏன், அங்கு விநியோகிக்கப்படும் கொழுக்கட்டை பிரசாதத்தைக் கூட ஆண்கள் பார்க்கவோ, உண்ணவோ கூடாது என்பது நடைமுறை. இந்த விரதத்துக்குப் போகக் கூடாது என்று ஆண்கள் தடுத்தால், அந்த ஆணின் கண் பார்வை பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அதுபோலவே இந்த விரதத்தில் எழும்பும் எந்தச் சத்தமும், உரல் சத்தம் உட்பட எதுவும் ஆண்களின் காதுகளில் விழக் கூடாது என்பதும் ஐதீகம்.

    வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    இன்றைய உலகில் பலர் தேடி அலையும் விஷயம் மனநிம்மதி. இந்த நிம்மதிக்காக சிலர் பொருளாதாரத்திற்குப் பின்னால் ஓடுகிறார்கள். சிலர் அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டால் நிம்மதி இருக்கும் என்று அங்கு செல்கின்றார்கள். இன்னும் சிலரோ போதைக்கு அடிமையா கிறார்கள்.

    இப்படி மனிதர்கள் எடுக்கும் முயற்சியில் அவர்களுக்கு மன நிம்மதி கிடைத்து விட்டதா என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

    இதற்கான தீர்வை இறைவன் கூறுகின்றான்: “ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறை நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய வாழ்வு வாழச் செய்வோம்”. (திருக்குர்ஆன் 16:97)

    தூய வாழ்வு என்றால் என்ன? நிம்மதியான சலனங்களுக்கு உள்ளாகாத வாழ்வுதான் அது. பிரச்சினைகள் வரும், சிக்கல்கள் எழும், ஆயினும் மனதில் நிம்மதியை மட்டும் ஒருபோதும் இழக்காத வாழ்வுதான் தூய வாழ்வு.

    நிம்மதி இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணம் எது?

    இழப்புகள்தான். இழப்புகளை சந்திக்கும்போது நிம்மதியையும் இழக்கிறான் மனிதன். அது எந்த இழப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொருளாதார இழப்புகள், பிரியமானவர்களுடைய இழப்புகள், உடல் ஆரோக்கியத்தின் இழப்பு. இப்படி இழப்புகளை சந்திக்கும்போது மனிதன் நிம்மதியையும் சேர்த்தே இழக்கின்றான்.

    இதுபோன்ற வேளைகளில் நிம்மதியை இழக்காமல் இருக்க இஸ்லாம் கூறும் வழிமுறை என்ன தெரியுமா? இறைநம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிப் பிடிப்பதுதான். யாரிடம் உண்மையான, உறுதியான இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர் நிம்மதியை வெகு சீக்கிரம் இழப்பதில்லை.

    இறைநம்பிக்கையின் உட்கருத்து என்ன தெரியுமா? எனக்கு பொருளாதாரத்தை தந்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். பிரியமானவர்களை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். ஆரோக்கியத்தை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். என் வாழ்வில் ஏற்படும் அனைத்து இழப்புகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்திருக்கின்றது என்று யார் உறுதியுடன் நம்புகின்றாரோ அவருடைய உள்ளம் நிம்மதியடைகின்றது.

    அநீதி இழைக்கப்படும் போது மனிதன் கவலைக்கு உள்ளாகின்றான். மக்கள் நம்மை தவறாக விமர்சிக்கும்போது, நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்போதும், மறுமையை நம்பக்கூடிய ஓர் இறைநம்பிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்றால்; “இந்த உலகில் எத்தனை வருடம் வாழ்வோம்? சராசரியாக 60 அல்லது 70 வருடம் தான். மண்ணறை வாழ்க்கை முடிந்த பிறகு மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்புவான். எழுப்பிய பிறகு, ‘நான் நல்லவனா கெட்டவனா’ என்று காண்பிப்பான். அங்கு எனக்கு நீதியை வழங்குவான்” என்று நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை நிம்மதியைப் பெற்றுத்தரும்.

    இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:

    ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்பும் பெறட்டும். பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்படும் மறுமை நாள் வருவதற்கு முன்னால் மன்னிப்பு பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில் அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதி இழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் அவர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். (நூல்: புகாரி)

    இந்த நபிமொழியை ஒருவர் நன்றாக விளங்கிவிட்டால் மனம் கண்டிப்பாக நிம்மதி அடையும். நமக்கு அநீதி இழைக்கக்கூடிய மக்களைப் பார்த்து ஒருவகையில் மகிழ்ச்சி அடையவேண்டும். காரணம், நமக்காக அவரும் நன்மை செய்கின்றார். இந்த எண்ணத்தை வளர்த்தால் நிம்மதி வந்து சேரும்.

    நல்லசிந்தனை நிம்மதியைப் பெற்றுத்தருவது போன்றே நற்செயல்களும் நிம்மதியைப் பெற்றுத் தருகிறது. நற்செயல்களில் மிகவும் மேலானது இறை நினைவுதான். இறைவன் கூறுகின்றான்:

    “அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன”. (திருக்குர்ஆன் 13:28)

    வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    முஹம்மத் முபாரக், திருச்சி.
    சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.
    “நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” (ஏசா. 36:4).

    உங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    சிலர் தங்களுடைய நம்பிக்கையை பணத்தில் வைக்கிறார்கள். பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பணம் பாதாளம் வரை செல்லும், பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்த ஒரு மனிதன் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ, ஒரு நாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது, அவன் தவித்து, துடித்துப் போவான்.

    ஒரு பெரிய செல்வந்தர், “என் நம்பிக்கைஎல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது” என்று பெருமையாக கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத்தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கையிலிருந்து தப்பும்படி பீரோவிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை, நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.

    ஆனால் அவர்களோ, அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். நீ தான் வேண்டுமென்று சொல்லி அவரைப் பிடித்து, அவர்களுடைய காரின் பின்னால் கட்டி, தரையிலே இழுத்து, பிறகு அவரை கொண்டுபோய் ஒரு மரத்திலே தலைகீழாக கட்டி, தொங்க வைத்து, கீழே தீயை பற்றவைத்து கொன்றார்கள். ஆம், அவர் நம்பின பணம் அவரை கைவிட்டது.

    சிலர் தங்களுடைய சரீர பெலத்திலே நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த வீரனாகிய புரூஸ்லி, தன் நம்பிக்கையை எல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து தனது உடம்பையும், நரம்புகளையும் முறுக்கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த சண்டை வீரனாக விளங்கினான்.

    அந்தோ! ஒரு நாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவிலே விஷம் வைக்கப்பட்டிருந்தது. அவன் அதை அறியாமல் புசித்தான். சில நிமிடங்களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.

    இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.

    “நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?” என்று வேதம் கேட்கிறது.

    ஆம், “தேவனே, நீரே என் நம்பிக்கை”.

    தாவீது தன்னுடைய நம்பிக்கையை உலகத்திற்கடுத்த காரியங்களில் வைக்காமல், உலக மனுஷன் மேல் வைக்காமல், தேவன்பேரில் வைத்தார். தேவன்மேல் நம்பிக்கையுள்ளவர்கள் அசைக்கப்படுவதேஇல்லை.

    “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்” என்று தாவீது வேதத்தில் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார் (சங். 7:1).

    பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் பேரில் வையுங்கள்.

    “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

    சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.

    திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும்,

    தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
    உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பொது மற்றும் கட்டண வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த 21-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இதனால் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து விளக்கேற்றி வழிபாடும் செய்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களும் மூடப்பட்டதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருந்தது.

    கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பொது மற்றும் கட்டண வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்தனர்.

    வெளியூரில் இருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    ஜனவரி மாதம் 25-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    25-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வாஸ்து நாள் காலை 10.41 முதல் 11.17 வரை வாஸ்து செய்ய நன்று.
    * தேய்பிறை அஷ்டமி
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - உத்திராட்டதி

    26-ம் தேதி புதன் கிழமை :
     
    * தேய்பிறை நவமி
    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி
    * சந்திராஷ்டமம் - ரேவதி
     
    27-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்த நாள்
    * திருப்பதி ஸ்ரீசுவாதி புஷ்பாங்கி சேவை
    * சுவாமிமலை முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
    * சந்திராஷ்டமம்- அசுபதி

    28-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேய்பிறை ஏகாதசி
    * திருவள்ளூர் வீரராகவர் ஹம்ஸ வாகனம்
    * சந்திராஷ்டமம் - பரணி

    29-ம் தேதி சனிக்கிழமை :

    * சனிப்பிரதோஷம்
    * திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை

    30-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * மாத சிவராத்திரி
    * திருவாடுதுறை, சூரியநாயனார் கோவில் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம் - ரோகிணி

    31-ம் தேதி திங்கள் கிழமை  :

    * அமிர்தயோகம்
    * சர்வ அமாவாசை
    * மதுரை மீனாட்சி வைரக்கீரிடம் சாற்றியருளல்
    * தென்காசி விஸ்வநாதர் லட்சதீப காட்சி
    * நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப காட்சி
    * சந்திராஷ்டமம் -  மிருகசீருஷம்
    தை மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. தை மாதத்தில் (ஜனவரி - பிப்ரவரி) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தை 14 (27.1.2022) வியாழன் தசமி அனுஷம் சித்த காலை 7.30-9

    தை 24 (6.2.2022) ஞாயிறு பஞ்சமி ரேவதி அமிர்த காலை 6-7.30

    தை 25 (7.2.2022) திங்கள் சஷ்டி அசுவினி சித்த காலை 6.30-7.30

    தை 29 (11.2.2022) வெள்ளி தசமி மிருகசீர்ஷம் சித்த காலை 9-10
    திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். கோவில் வளாகம் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிப்படி வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.

    ஏராளமானவர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதனால் கோவில் வளாகம் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது.

    ×