என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'.
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் அறிமுகவிழாவில், நடிகர் கமல்ஹாசன், "இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புகொண்டதற்கு முக்கியமான காரணம் நான் அனலாக் பார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன்.

நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. அதனால் ஒரு படத்தில் நெகட்டிவ் ரோல் என்பது மிக முக்கியமானது. அமிதாப் பச்சன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை என்றார். உடனே குறுக்கிட்ட அமிதாப், "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லோரையும் விட சிறந்த நடிகர்" என பாராட்டினார்.
- இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’.
- இந்த தொடரில் அதர்வா, மணிகண்டன், கவுதமேனன் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'மத்தகம்' வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.
- நடிகர் சதீஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’.
- இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
- நடிகர் சந்தானம் தற்போது ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது, நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக 'டிடி ரிட்டன்ஸ்' முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். 'தில்லுக்கு துட்டு' முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

'டிடி ரிட்டன்ஸ்' மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இயக்குனர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
மேலும், இயக்குனர் பிரேம் ஆனந்த் பேசியதாவது, இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானமும், ராம்பாலாவும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானமுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி என்று பேசினார்.
- நடிகர் சார்லி சாப்ளின் - ஊனா ஓ நீல் தம்பதிக்கு பிறந்த குழந்தை ஜோசபின் சாப்ளின்.
- இவர் 'லைம்லைட்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இவரது மனைவியும் நடிகையுமான ஊனா ஓ நீலுக்கு பிறந்த 8 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் ஜோசபின் சாப்ளின். இவர் 1949-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி கலிபோர்னியா மாகாணம் சான்டாமோஸிகா நகரில் பிறந்தார்.

பிரபல நடிகையாக வலம் வந்த ஜோசபின் 1952-ஆம் ஆண்டு சாப்ளின் இயக்கி, தயாரித்து நடித்த 'லைம்லைட்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர்.

74 வயதான ஜோசபின், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் காலமானார். இவரது மறைவை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜோசபின் இறுதி சடங்கில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் வெங்கடேஷ் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்.
- இவர் மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வருகிறார்.
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் (50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி பானுமதிக்கு தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெங்கடேஷ்
இந்நிலையில் வெங்கடேஷ், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதையடுத்து இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கணவர் மீதான கோபத்தில் பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுனராக பணி யாற்றிய மோகன் என்பவர டம் வெங்கடேசின் காலை உடைத்து வீட்டிலேயே இருக்க வைக்க ஆலோசனை கேட்டுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்த நிலையில் கால்களை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் கேட்டதால், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் பா.ஜ.க பற்றி தவறாக பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

துளசி- தமிழ்சங்கு
பா.ஜ.க-வைச் சேர்ந்த 28-வது வார்டு மண்டல தலைவர் மலைசாமி, பா.ஜ.க. கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் கடந்த ஜூன் 15-ந் தேதி இரவு நாகனாகுளம் அருகே வைத்து வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷின் மனைவி பானுமதி (48), ராஜ்குமார் (37), மோகன் (40), வைரமுத்து (38), மலைசாமி (35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தானர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்தனர்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
- இப்படம் விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் 'மாமன்னன்'.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.

'மாமன்னன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் 'வாழை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'வாழை'படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.

77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.
பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அவன் கண்கள் வாளை விட கூர்மையானது' என்று குறிப்பிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மாலைமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "அநீதி". இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷனுக்காக மாலைமலருக்கு அநீதி படக்குழு சிறப்பு பேட்டியளித்தனர். அப்போது நடிகை துஷாரா விஜயனிடம் சார்ப்பட்டா பரம்பரை மாரியம்மா இந்த படத்துல எந்த மாதிரியான ரோல் பண்ணிருக்காங்க என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், வேற மாரியா ஒன்னு பண்ணியிருக்கேன். நான் பண்ண கதாப்பாத்திரத்துலயே இது ரொம்ப வித்யாசமான கதாப்பாத்திரம். இந்த படம் ஒரு வித்யாசமான கேரக்டரா வந்திருக்கு என்றார்.
- 'மாவீரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் 'மாவீரன்' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு காம்போவில் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






