என் மலர்
சினிமா செய்திகள்
- மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒரு நொடி’.
- இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.
அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.குரு.சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் மொழி', 'இவன் தந்திரன்', 'கோடியில் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.

'ஒரு நொடி' படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.
- மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார்.
- 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரில் தவறு இருப்பதாக வைரல் தமிழ் ஆசிரியர் கதிரவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 'தமிழக வெற்றி கழகம்' என்றில்லாமல் 'தமிழக வெற்றிக் கழகம்' என வரவேண்டும் என்று விளக்கமளித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
- பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'ஃபேமிலி ஸ்டார்'.
- இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'கீதா கோவிந்தம்', 'சர்காரு வாரி பாட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'ஃபேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' படப்புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இப்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டும், வாயில் ஆதார் அட்டையுடன் ஓடுவது போல ஒரு சாதாரண நடுத்தரக் கணவரின் வாழ்க்கையை கச்சிதமாக இந்த போஸ்டர் படம்பிடித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
- நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிப்பார் என்று பலர் காத்திருந்தனர்.
- இவர் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எத்தனை நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் இவரது படம் அதையெல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு வசூலை குவிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் விஜய் மீது அன்பு வைத்துள்ளனர்.
இவர் நடிகராக இருந்தாலும் தன் மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். புயலில் பாதித்தவர்களுக்கு நிவாரணம், மாணவர்களுக்கு பாடசாலை என பல உதவிகளை செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தன் படங்களிலும் அரசியல் பற்றி பேச இவர் தவறியதில்லை.

இதன் மூலம் விஜய்க்கு அரசியல் மீது இருந்த ஆர்வம் வெளிப்படையாக தெரிந்தது. மேலும், இளைஞர்களும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பலர் இவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்று காத்திருந்தனர்.
இப்படி எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் நடிகர் விஜய் நேற்று 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன், கட்சி தொடங்கிய முடிவுக்கு பாராட்டுகளும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
- படம் குறித்து படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.
ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.
அந்தவகையில், இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் G.O.A.T திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
- முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-
சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சிம்பு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 48 என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எஸ்.டி.ஆர்.48 போஸ்டர்
இந்நிலையில், சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனல் பறக்க இரண்டு சிம்பு நேருக்கு நேர் பார்த்து நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.#STR48 #BLOODandBATTLE@desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SnqR4dU84x
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2024
- ’லால் சலாம்’ திரைப்படத்தில் தன்யா நடித்துள்ளார்.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியின்போது ஆர்.சி.பி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு இணையத்தில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் தமிழர்களை இழிவுப்படுத்தியவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என நெட்டிசன்கள் சாடி வந்தனர்.

இந்நிலையில், மன்னிப்பு கேட்டு நடிகை தன்யா பாலகிருஷ்ணா சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்.. அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.

சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிரஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது.. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு..." என்று குறிப்பிட்டுள்ளார்.
- தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்திற்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்தார். நாகூரன் படத்தொகுப்பை மேற்கொண்டார். வரலாற்று பாணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
what makes a soldier go rogue? the answer lies in Miller's journey#CaptainMillerOnPrime, Feb 9 @dhanushkraja @priyankaamohan @ArunMatheswaran @gvprakash @NimmaShivanna @sundeepkishan @SathyaJyothi pic.twitter.com/EknEyYNW7O
— prime video IN (@PrimeVideoIN) February 2, 2024
- கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.
சென்னை:
நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.
விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர், நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு @actorvijay அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி… https://t.co/oYP8IfDyxn
— K.Annamalai (@annamalai_k) February 2, 2024
- தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.
- தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார்.
சென்னை:
நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷோபா கூறியதாவது:
தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.
ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு இருக்கிறது.
மதம், சாதி என்பதில் எல்லாம் விஜய்க்கு உடன்பாடு இல்லை.
தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும்
வாகை சூடு விஜய் என தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தபடத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024






